You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"சித்தாந்த தெளிவின்மை" - திரிணாமுல் காங்கிரஸ் ஒரே தேர்தலில் சிதறடிக்கப்பட இதுதான் காரணமா?
- எழுதியவர், சுப்ஜோதி கோஷ்
- பதவி, பிபிசி நியூஸ் பங்களா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வந்த சில வாரங்களிலேயே இப்படி வியத்தகு முறையில் சரிந்துவிடும் என்று பலரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
தேர்தலில் கட்சி தோற்றால் அதன் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிடும் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கணித்திருந்தனர், ஆனால் நிகழ்வுகள் இவ்வளவு வேகமாக மாறும் என்று ஒரு சிலர் மட்டுமே கற்பனை செய்திருப்பார்கள்.
உண்மை என்னவென்றால், திரிணாமுல் காங்கிரஸ் பிளவுபட்டிருப்பது மட்டுமல்லாமல், இப்போது அது மூன்று தனித்தனி பிரிவுகளாக உடைந்துள்ளது. பல ஆய்வாளர்கள் இதை "உள்ளிருந்தே ஏற்பட்ட சரிவு" எனக் கூறுகிறார்கள்.
ஒருபுறம், மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் ஒரு தனி பிரிவை உருவாக்கியுள்ளனர்.
ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான இந்த பிரிவு தங்களை "உண்மையான திரிணாமுல்" என்று அழைத்துக் கொள்கிறது. கொல்கத்தாவில், இந்த பிரிவு சட்டமன்றத்தில் ஆளும் பா.ஜ.கவுக்கு முக்கிய எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.
மறுபுறம், டெல்லியில், குறைந்தது 20 மக்களவை எம்.பிக்கள் தாங்கள் பழைய கட்சியை விட்டு விலகி, அதிகம் அறியப்படாத ஒரு சிறிய கட்சியான என்.சி.பி-யில் சேரப்போவதாக சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த இரு தரப்பிற்கும் முற்றிலும் மாறாக, பெயரளவுக்கு மட்டுமே இன்னும் திரிணாமுல் காங்கிரஸின் உயர்மட்ட தலைவராக இருக்கும் மம்தா பானர்ஜி, தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியுடன் அடுத்தகட்ட அரசியல் பயணத்திற்கான ஒரு கடினமான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்.
மேற்கு வங்க ஊடகங்கள் ஏற்கனவே இந்த பிரிவை மம்தா பானர்ஜியின் வீடு அமைந்துள்ள பகுதியின் பெயரைக் கொண்டு, "காளிகாட் திரிணாமுல்" என்று அழைக்கத் தொடங்கியுள்ளன. இந்த காளிகாட் திரிணாமுல் பிரிவில் இப்போது ஒரு சில தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில்,நேற்று வரை மாநிலத்தில் இவ்வளவு பலமாக ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த 28 ஆண்டுகால கட்சி, வெறும் 28 நாட்களில் எப்படி துண்டு துண்டாக சிதறியது என்பதுதான் தற்போது எழும் கேள்வி.
குறிப்பாக, சக்திவாய்ந்தவர், அனுபவம் வாய்ந்தவர், பிரபலமானவர் மற்றும் அரசியல் சாணக்கியத்தனம் மிக்கவர் என்று கருதப்படும் மம்தா பானர்ஜியின் உறுதியான கட்டுப்பாட்டில் இருந்தபோது இவ்வாறு நடந்துள்ளது.
அதேபோல், இந்தப் பிளவைத் தடுப்பதிலும் அவர் ஏன் தோல்வியடைந்தார்?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முயற்சியாக, பிபிசியின் பகுப்பாய்விலிருந்து வெளிவந்த காரணங்களை இந்த அறிக்கை ஒவ்வொன்றாக விளக்குகிறது.
திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் மைய அரசியல்
இந்தியாவின் 'பேரியக்கமான' காங்கிரஸிலிருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதற்கென ஏதேனும் தனித்துவமான அரசியல் சித்தாந்தமோ அல்லது தத்துவமோ இருக்கிறதா என்பதில் எப்போதும் ஒரு தெளிவற்ற நிலையே இருந்து வருகிறது.
மம்தா பானர்ஜியின் கட்சியுடன் ஏதேனும் ஒரு "கொள்கை" இணைக்கப்பட்டிருந்தால், அது வெறும் ஜனரஞ்சகவாதம்தான் மட்டுமே என்று பலர் நம்புகிறார்கள்.
அதாவது, அவர் எப்போதும் குறுகிய காலத்தில் வாக்காளர்களைக் கவரக்கூடிய மக்கள் ஆதரவு பெற்ற கொள்கைகளையே பின்பற்றி, அவற்றையே ஏற்றுக்கொண்டார்.
ரயில்வே அமைச்சராக இருந்தபோது, பொருளாதார நிலவரங்களைப் பொருட்படுத்தாமல், பல ஆண்டுகளாக பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் அவர் தவிர்த்தார். இது அவரது தனிப்பட்ட செல்வாக்கை அதிகரித்தது, ஆனால் பிரதமரின் அதிருப்தியையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
உண்மையில், 1998-ல் திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்டது முதல் 2011-ல் மேற்கு வங்கத்தில் அது ஆட்சிக்கு வரும் வரை, சிபிஐ(எம்) கட்சியை வீழ்த்தி மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே அவர்களுடைய அரசியலின் ஒரே நோக்கமாக இருந்தது.
கட்சியின் ஒவ்வொரு செயல்பாடும் எந்த வழியிலாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே ஒரு இலக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது தான் இப்போது மம்தா பானர்ஜி மிகப்பெரிய விலையைக் கொடுத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என பல பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தொடர்ச்சியாக நான்காவது தேர்தலில் தோல்வியடைந்த உடனே, ஒரு காலத்தில் மம்தா பானர்ஜிக்கு மிகுந்த விசுவாசமாக இருந்த தலைவர்கள் அவரை விட்டு விலகி, வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பதை அவர்களும் உணர்ந்து கொண்டார்கள் என்பதை இது உணர்த்துகிறது.
மம்தா பானர்ஜியும் கூட இதை ஆழமாக புரிந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தது முதல், அவர் ஏன் ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
அதற்குப் பதிலாக, பவானிபூர் தொகுதியில் தனது தோல்வியை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர், "நான் தோற்கவில்லை. நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?" என்று கூறியுள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவர் ஆளுநரிடம் எந்தவொரு ராஜினாமா கடிதத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிற முக்கிய பிராந்திய கட்சிகள் தேர்தலில் தோற்றதற்கான உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.
ஆனால், ஒரு கட்சி தேர்தலில் தோற்றவுடன், கிட்டத்தட்ட உடனடியாகவே மறைந்து போனதற்கான உதாரணங்கள் மிகக் குறைவு.
பாஜகவைப் பொறுத்தவரை, அதன் இந்துத்துவா சித்தாந்தமும், அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன செயல்பாடுகளும், தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் அந்தத் தொய்வில்லாமல் கட்சியைத் தக்கவைத்தன.
அதேபோல், காங்கிரஸ் கட்சி அதன் மைய-இடது அரசியல் தளம் மற்றும் சோசலிச-தாராளமய மரபுகளால் ஆதரிக்கப்பட்டது. இதே தர்க்கம் பெருமளவிற்கு இடதுசாரிகளுக்கும் பொருந்தும்.
அண்டை நாடான வங்கதேசத்தில் கூட, ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு அரசியல் கட்சியாக தடை செய்யப்பட்டபோது, அது சமூக செயல்பாடுகள் மற்றும் சித்தாந்த அடிப்படைகள் மூலம் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது. அது முற்றிலும் மறைந்துவிடவில்லை.
ஆனால் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு, தேர்தலில் தோற்றதால், அரசியலைத் தொடர்வதற்கான பழைய வழிமுறையும் இல்லை, பொதுமக்களுடன் தொடர்பைப் பேணுவதற்கான எந்த அடிப்படையும் இல்லை என திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் திடீரென உணர்ந்தனர்.
எனவே, ஆட்சிக்கு வந்த பிறகு மம்தா பானர்ஜி முதன்முறையாகப் பேசிய 'மா-மாதி-மனுஷ்' (தாய்-மண்-மக்கள்) அரசாங்கத்தின் அடித்தளம் உண்மையில் மிகவும் பலவீனமாக இருந்தது என்பதை நம்புவது கடினமல்ல.
அதேபோல், சபூஜ் சாதி, கன்யாஸ்ரீ, லட்சுமி பண்டார் மற்றும் யுவ சாதி போன்ற திட்டங்களின் தேர்தல்சார் நன்மைகள் காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்துவிட்டன.
மேற்கு வங்கத்தில் சுமார் 41% வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், திரிணாமுல் காங்கிரஸ் இவ்வளவு வேகமாக சிதைந்து போனதற்குக் முக்கியக் காரணம், அது தேர்தல் மைய அரசியலைத் தாண்டி நகரத் தவறியதே ஆகும்.
பாஜகவின் வியூகம்
மே 4 ஆம் தேதி ஏற்பட்ட தேர்தல் தோல்வி மம்தா பானர்ஜியை அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, மேலும் பா.ஜ.க அவரது இந்த பலவீனமான தருணத்தில் அவரைத் தாக்குவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடவில்லை.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, மம்தா பானர்ஜியை இலக்கு வைப்பதற்கு இதுவே சரியான நேரம் என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டது.
திரிணாமுல் காங்கிரஸை உடைப்பது கொல்கத்தாவிலும் டெல்லியிலும் அதற்குப் பயனளிக்கும்.
காளிகாட் திரிணாமுல் பிரிவுக்கு எதிராக கலகம் செய்து தனிப் பிரிவை உருவாக்கிய கொல்கத்தா எம்.எல்.ஏ-க்கள் மற்றும் டெல்லி எம்.பி-க்களுக்கு பா.ஜ.க தீவிரமாக ஆதரவளித்தது ஒன்றும் ரகசியமல்ல.
இந்தப் பிளவுக்கு முன்பு, கிளர்ச்சியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்களின் தலைவரான ரிதாப்ரதா பானர்ஜி, டெல்லியில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரியை "மரியாதை நிமித்தமாக" சந்தித்துப் பேசினார்.
கிளர்ச்சியில் ஈடுபட்ட எம்.பி-க்களின் கூட்டங்கள் பா.ஜ.க தலைவர் பூபேந்திர யாதவின் இல்லத்தில் நடைபெற்றன.
டெல்லியில், இந்த முழு செயல்பாட்டையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மறைமுகமாகக் கண்காணித்தார் என்று கூட சொல்லப்படுகிறது.
ஆனால், கொல்கத்தாவிலும் டெல்லியிலும் திரிணாமுல் கட்சியை பிளவுபடுத்துவதற்கு பாஜக ஏன் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டது என்பதுதான் தற்போது எழும் கேள்வி.
மம்தா பானர்ஜி ஒரு நிர்வாகியாக இருப்பதை விட ஒரு எதிர்க்கட்சித் தலைவராக மிகவும் சக்திவாய்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் என்பது தான் இதற்கான பதில்.
மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, எதிர்க்கட்சிக்கான கட்டுப்பாடு மம்தா பானர்ஜியிடமிருந்து ஒரு 'நட்பான' எதிர்க்கட்சிக்கு மாற வேண்டும் என்று பா.ஜ.க இயல்பாகவே விரும்பியது.
உண்மையில், மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவது பாஜகவின் நீண்டகாலக் கனவாக இருந்தது. இந்த இலக்கு எட்டப்பட்டவுடன், பல ஆண்டுகால போராட்டங்களால் பக்குவப்பட்ட மம்தா பானர்ஜி போன்ற ஒரு தலைவரை விட, "ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில்" கவனம் செலுத்தும் ஓர் எதிர்க்கட்சியையே அது விரும்பியிருக்கும்.
ரிதாப்ரதா பானர்ஜி மற்றும் சந்திபன் சஹா போன்ற தலைவர்களை முன்னிறுத்துவதன் மூலம் பா.ஜ.க இந்த நோக்கத்தை அடைய முயன்றது.
இந்த செயல்பாட்டில், திரிணாமுல் காங்கிரஸின் மலர் சின்னமோ அல்லது நிதி ஆதாரங்களோ கிடைத்தால், அது அவர்களுக்குக் கூடுதல் பலமாக அமையும்.
டெல்லியில் திரிணாமுல் கட்சியை உடைத்ததன் பின்னணியில் உள்ள கணக்கு, மோதி அரசாங்கத்தை மேலும் வலுப்படுத்துவதே ஆகும்.
240 இடங்களைப் பெற்றதால், 2024 பொதுத் தேர்தலில் பாஜகவுக்குத் தெளிவான பெரும்பான்மை கிடைக்காமல் போனது. இதன் விளைவாக, மோதியின் மூன்றாவது அரசாங்கத்தின் இருப்பு தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனதா தளம் (யுனைடெட்) போன்ற கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திருந்தது.
இத்தகைய சூழ்நிலையில், திரிணாமுல் எம்.பி-க்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோரைப் பிரித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளிக்கும் ஒரு புதிய குழுவை உருவாக்க பா.ஜ.க முயன்றது, இதன் மூலம் மக்களவையில் அரசாங்கத்தின் பலம் 300-க்கும் அதிகமாக உயரக்கூடும்.
டெல்லியில், ககோலி கோஷ் தஸ்திதார், சுதீப் பானர்ஜி மற்றும் சதாப்தி ராய் போன்ற எம்.பி-க்களை முன்னிறுத்தி பா.ஜ.க இந்த இலக்கை அடைந்தது.
இதன் விளைவாக, திரிணாமுல் கட்சியின் சிதைவு கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய இரு இடங்களிலும் பா.ஜ.க-வுக்கு ஒரு "சாதகமான " சூழ்நிலையாக மாறியது.
இருப்பினும், சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கலகக்காரர்களை பாஜக முறைப்படி தனது கட்சியில் இன்னும் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே, மம்தா பானர்ஜியுடன் இருக்கும் ஒரு சில தலைவர்களில் ஒருவரான கல்யாண் பானர்ஜி, சில நாட்களுக்கு முன்பு பிபிசியிடம் பேசுகையில், "இவர்களில் எத்தனை பேரை பாஜக தன் கட்சியில் சேர்த்துக் கொள்கிறது என்று பார்ப்போம். நீங்கள் பாருங்கள், அவர்கள் ஒருவரைக் கூடச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்" என்று கூறினார்.
கிளர்ச்சிக் குழுவில் இணைந்தவர்கள் தங்களைத் 'துரோகிகள்' என்றும் 'பேராசை பிடித்தவர்கள்' என்றும் நிரூபித்துவிட்டனர், மேலும் இத்தகைய 'தீய சக்திகள்' வெளியேறுவது இறுதியில் திரிணாமுல் கட்சிக்கு நன்மை பயக்கும் என்பது தான் அவரது வாதமாக இருந்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த, கலகத்தில் ஈடுபட்ட எம்.பி-க்களில் எத்தனை பேருக்கு 2029 தேர்தலில் பா.ஜ.க அவர்களின் தொகுதிகளில் ஆதரவளிக்கும் அல்லது அந்தத் தொகுதிகளை அவர்களுக்காக விட்டுக்கொடுக்கும் என்பதைக் கணிப்பதும் கடினம், இருப்பினும் அதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் வரை நேரம் உள்ளது.
ஆனால், கலகம் செய்த எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் அவ்வாறு செய்வதற்கான துணிச்சலை முக்கியமாக பா.ஜ.க-வின் மறைமுக ஊக்கத்தின் மூலமே பெற்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அபிஷேக் பானர்ஜி
கடந்த சில வாரங்களில் கலகத்தில் ஈடுபட்ட கிட்டத்தட்ட அனைத்து சிறிய, நடுத்தர மற்றும் மூத்த திரிணாமுல் தலைவர்களும் ஒரே விஷயத்தையே கூறியுள்ளனர். அவர்கள் புகார் கூறும் கட்சியின் உள்ளே இருந்த 'மூச்சுத்திணறல் ஏற்படும் சூழலுக்கு' , ஒரே ஒரு நபர் மட்டுமே பொறுப்பு என்பதாகும்.
அந்த நபர் வேறு யாருமல்ல, மம்தா பானர்ஜியின் அன்பு மருமகனும், அவரது அறிவிக்கப்படாத அரசியல் வாரிசுமான அபிஷேக் பானர்ஜி தான்.
பல ஆண்டுகளாக, கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் அவரை முதலில் "இளவரசர்" என்றும், பின்னர் "தளபதி" என்றும் அழைத்தனர். ஆனால், அமைப்பின் உண்மையான தலைமைப் பொறுப்பு படிப்படியாக இந்த தளபதியிடமே மாறிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
உண்மையில், அபிஷேக் பானர்ஜி கார்ப்பரேட் பாணியில் கட்சியை நடத்திய விதம் மற்றும் தன்னைச் சுற்றி ஒரு குறுகிய உள்வட்டத்தை உருவாக்கிய விதம், அடிமட்டத் தொண்டர்களுக்கும் உயர் தலைமைக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்தது.
சில நாட்களுக்கு முன்பு மாநிலங்களவையில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் திரிணாமுல் தலைவர் சுகேந்து சேகர் ராய் பிபிசியிடம் கூறுகையில், "யாரும் நெருங்க முடியாத அளவு ஒரு நபர் முற்றிலும் எட்டாத உயரத்தில் இருந்தார். அவருடன் தொடர்புகொள்வது முற்றிலும் சாத்தியமற்றதாக இருந்தது" என்று தெரிவித்தார்.
அவர் நேரடியாகப் பெயரை சொல்லவில்லை என்றாலும், அபிஷேக் பானர்ஜியைக் குறிப்பிட்டுத் தான் அவர் இவ்வாறு கூறினார்.
அபிஷேக் பானர்ஜி 'எட்டு முதல் பத்து விசுவாசிகளுடன் மட்டுமே வலம் வந்தார்' என்றும், யாராவது பேச முயன்றால் அவரது உதவியாளர்கள் 'உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறீர்களா' எனக் கூறுவார்கள் என்றும் ராய் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
அபிஷேக் பானர்ஜி கட்சியின் அமைப்பு ரீதியான அடித்தளத்தை அடியோடு மாற்றியமைத்தார் என்றும், இது மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தியது என்றும் பல பழைய தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மம்தா பானர்ஜியின் மிகப்பெரிய அரசியல் பலம் என்னவென்றால், அவர் சாமானிய மக்களின் நாடித் துடிப்பைப் புரிந்து கொண்டு, அவர்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் அரசியலாக மாற்றினார் என்பது அவர்களின் கருத்து.
ஆனால் அபிஷேக் பானர்ஜி, கார்ப்பரேட் பாணி ஒழுக்கத்தை திணிக்க முயன்றதில், திரிணாமுல் கட்சிக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கினார்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு, கட்சியின் மூலோபாய முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஐ-பேக் என்ற தேர்தல் ஆலோசனை நிறுவனத்தை அவர் ஈடுபடுத்தினார். இது ஆரம்பத்தில் பலன்களைத் தந்தாலும், பின்னர் அமைப்பிற்குள் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஐ-பேக் நிறுவனத்தின் ஊதியம் பெறும் வல்லுநர்கள் திரிணாமுல் காங்கிரஸைக் கடத்திவிட்டதாக பல தலைவர்கள் பகிரங்கமாகப் புகார் கூறினர்.
எந்தத் தொகுதிக்கு யார் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது முதல், தலைவர்கள் தங்கள் உரைகளில் என்ன பேச வேண்டும் என்பது வரை அனைத்தையும் அந்த ஆலோசனை வழங்கும் நிறுவனமே தீர்மானித்தது.
இவை அனைத்தும் அபிஷேக் பானர்ஜியின் மறைமுக ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் தான் நடந்தன.
மம்தா பானர்ஜியும் இதற்கு ஒப்புதல் அளித்தார். இப்போது, கலகத்தில் ஈடுபடும் தலைவர்கள் இது தங்களது அன்பிற்குரிய மருமகன் மீதான "கண்மூடித்தனமான பாசத்தின்" விளைவு என்று வெளிப்படையாகக் கூறி வருகின்றனர்.
இது தவிர, அபிஷேக் பானர்ஜி மீது ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளன, அவை நிச்சயமாக அவரது தனிப்பட்ட பிம்பத்தை சேதப்படுத்தியுள்ளன.
இந்த வழக்குகளில் பெரும்பாலானவை இன்னும் விசாரணையில் அல்லது நீதிமன்றத்தில் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் அவர்களிடம் வெறும் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டாலும், இந்த கட்டத்தில் அவர்களை "குற்றம் சாட்டப்பட்டவர்கள்" என்று மட்டுமே குறிப்பிட முடியும்.
இருப்பினும், அபிஷேக் பானர்ஜி தனக்கென அத்தகைய ஒரு பிம்பத்தைப் பெற்றுள்ளார், இதனால் பிளவுபட்டுச் செல்லும் தலைவர்கள் அனைவரும் தளபதி என்று அழைக்கப்படுபவர் மீது விரல் நீட்டுவதன் மூலம், தாங்கள் கட்சி மாறுவதை நியாயப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்.
வேறுவிதமாகக் கூறினால், அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் கட்சிக்குள் அத்தகைய ஒரு சூழலை உருவாக்கியுள்ளார், மூத்த தலைவர்கள் தங்களது பிளவுக்கு அவரே முக்கிய காரணம் என்று அவரிடம் கூறுகிறார்கள், மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் தாங்கள் பொதுமக்களின் விமர்சனத்தில் இருந்து தப்பித்துவிடலாம் என்றும் நினைக்கிறார்கள்.
இதனால் , திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மிக விரைவாக மூன்று துண்டுகளாக சிதறிப்போனதற்கான மிகப்பெரிய காரணமாக அபிஷேக் பானர்ஜி இருக்கலாம்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு