PBKS vs SRH: பஞ்சாபை இரக்கமின்றி பந்தாடிய ஜேசன் ஹோல்டர் - இருப்பினும் தோல்வி கண்ட ஹைதராபாத்

பஞ்சாப் ஓப்பனர்கள்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, பஞ்சாப் ஓப்பனர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் 2021 சீசனுக்கான 37ஆவது போட்டி நேற்று (செப் 25, சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இப்போட்டி சான்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டி என்பதை விட ஜேசன் ஹோல்டர் மற்றும் பஞ்சாபுக்கு எதிரான போட்டி எனலாம். அந்த அளவுக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பிரமாதப்படுத்தினார் ஹோல்டர். இருப்பினும் ஹைதராபாத் அணியால் போட்டியை வெல்ல முடியவில்லை என்பது தான் வருத்தமான செய்தி.

பஞ்சாப் பேட்டிங் - சரிந்த விக்கெட்டுகள்

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் என இரு முக்கிய பேட்ஸ்மென்களையும் தன் 4ஆவது ஓவரில் வீழித்தி பெவிலியன் அனுப்பினார் ஜேசன் ஹோல்டர்.

அடுத்து வந்த க்ரிஸ் கெயிலை ரஷீத் கானும், கொஞ்சம் பஞ்சாப் அணியின் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்துக் கொண்டிருந்த ஏய்டன் மக்ரமை அப்துல் சமத்தும் வீழ்த்தினர்.

பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களான நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரையும் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் நிலை பெறவிடாமல் வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே குவித்திருந்தது பஞ்சாப்.

ஹைதராபாத்தின் பந்துவீச்சாளர்களில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 19 ரன்களை மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மயங்க் அகர்வால், தீபக் ஹூடா என 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், அப்துல் சமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சொதப்பிய பேட்ஸ்மென்கள் - சிக்ஸர் மழை பொழிந்த ஜேசன்

கேன் வில்லியம்சன்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, கேன் வில்லியம்சன்

126 ரன்களைக் குவித்தால் வெற்றி என்கிற எளிய இலக்கோடு களமிறங்கிய ஹைதராபாத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களான டேவிட் வார்னர் (2 ரன்கள்), கேன் வில்லியம்சன் (1 ரன்), ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

கடந்த முறை டெல்லிக்கு எதிரான போட்டியிலும் டேவிட் வார்னர் வெகு சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. விரித்திமான் சாஹா மட்டுமே 37 பந்துக்கு 31 ரன்களை அடித்து ஹைதராபாத் அணியை நிலை பெறச் செய்தார்.

மணீஷ் பாண்டே (13 ரன்கள்) , கேதர் ஜாதவ் (12 ரன்கள்), அப்துல் சமத் (1 ரன்) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் நிலைபெற்று ரன் குவிப்பில் இறங்கவில்லை.

ஜேசன் ஹோல்டர்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, ஜேசன் ஹோல்டர்

14ஆவது ஓவரில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் தான் ஹைதராபாத்தின் ரன் ரேட்டை அதிகரிக்கத் தொடங்கினார். 29 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். கடைசி வரை தன் விக்கெட்டையும் பறிகொடுக்காமல் விளையாடி ஹைதராபாத்தை ஒரு கெளரவமான ஸ்கோருக்கு நகர்த்தினார் ஜேசன் ஹோல்டர்.

ஹைதராபாத்தின் பேட்ஸ்மென்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிறைய பந்துகளையும் வீணடித்தனர். இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர், கேதர் ஜாதவ் தவிர ஹைதராபாத் அணியில் யாருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 85 சதவீதத்துக்கு மேல் இல்லை.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத்தால் 120 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

மொஹம்மத் ஷமி

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, மொஹம்மத் ஷமி

பஞ்சாபின் அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொஹம்மத் ஷமி, டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சனின் விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை பெவிலியன் அனுப்பினார்.

மணீஷ் பாண்டே, கேதர் ஜதவ், அப்துல் சமத் என ஹைதராபாத்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை பிட்சிலிருந்து வெளியேற்றினார் ரவி பிஷ்னோய்.

ராஜஸ்தான் உடனான போட்டியில் 5 விக்கேடுகளை வீழ்த்திய அர்ஷ்தீப், இப்போட்டியில் விரித்திமான் சாஹாவின் விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாபின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார்.

125 என்கிற குறைந்த ஸ்கோரை மட்டுமே அடித்திருந்தாலும், அதை திறம்பட டிஃபெண்ட் செய்ததில் பஞ்சாபின் இந்த மூன்று பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. ஹைதராபாத் அணி கடைசி இடத்திலேயே தொடர்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :