டோக்யோ ஒலிம்பிக்: வினேஷ் போகாட் தற்காலிக நீக்கம், சோனம் மாலிக்குக்கு நோட்டீஸ்

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பயிற்சியின்போது வினேஷ்போகாட்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. ஒழுங்கீன புகார் விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமது தரப்பு விளக்கத்தை ஆகஸ்ட் 16ஆம் தேதி வழங்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெலாரூஸ் வீராங்கனையுடனான காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தார் வினேஷ் போகாட்.

என்ன பிரச்னை?

டோக்யோ ஒலிம்பிக் பயிற்சிக்காக ஹங்கேரியில் உள்ள பயிற்சியாளர் வல்லர் எகோஸிடம் பயிற்சி எடுத்து வந்தார் வினேஷ் போகாட். அங்கிருந்து நேரடியாக அவர் டோக்யோவுக்கு புறப்பட்டார். அவர் டோக்யோவில் தரையிறங்கியதும் சர்ச்சை தொடங்கியது.

அங்கு விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விளையாட்டு கிராமத்தில் மற்ற இந்திய வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட வினேஷ் போகாட் ஒத்துழைக்கவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

அது மட்டுமின்றி இந்திய அணியின் அலுவல்பூர்வ ஸ்பான்சர் ஆன ஷிவ் நரேஷின் ஜெர்சி ஆடையை அணியவும் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தமது பயிற்சியின்போது நைக்கி சின்னம் பொறித்த ஆடையை அவர் அணிந்தார்.

இது குறித்து பிடிஐ செய்தி முகமையிடம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வட்டாரம் கூறும்போது, "வினேஷ் போகாட்டின் செயல் அப்பட்டமான ஒழுங்கீனம். அதனால், அவர் மல்யுத்த செயல்பாடுகளில் ஈடுபடாத வகையில் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். எனவே உள்நாடு மற்றும் சர்வதேச போட்டிகளில் இந்த நடவடிக்கை அமலில் உள்ள காலத்தில் அவரால் பங்கேற்க முடியாது. இறுதி முடிவு எடுக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும்," என்று தெரிவித்தது.

வினேஷ் போகாட்டின் செயல்பாட்டால், தமது வீரர்களை கூட கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியவில்லையா என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விமர்சனத்தை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு எதிர்கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்புக்கு ஒலிம்பிக் சங்கமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன் இந்திய வீராங்கனைகள் சோனம், அன்ஷு மாலிக், சீமா பிஸ்லா ஆகியோர் தங்கிய அறைகளுக்கு அடுத்த அறையில் தங்க வினேஷ் போகாட் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுடன் தங்கினால் தமக்கு கொரோனா தொற்று பாதிப்பு வரலாம் என்று அவர் அச்சம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஹங்கேரியில் பயிற்சி பெற்ற வீராங்கனை என்பதால், தன்னை இந்திய வீராங்கனை ஆக நினைத்துக் கொள்ளாமல் வெளிநாட்டு வீரரைப் போல வினேஷ் நடந்து கொண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கூறினார்.

பயிற்சி அட்டவணைப்படி இந்திய வீராங்கனைகளுடன் பயிற்சியில் ஈடுபட வேண்டிய நாளில், அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்தது கடுமையான ஒழுங்கீனம் மட்டுமின்றி, ஏற்றுக் கொள்ள முடியாத செயல்பாடு என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வினேஷ் போகாட் இன்னும் தமது நிலையை தெளிவுபடுத்தவில்லை.

காமன்வெல்து போட்டிகள், ஆசிய போட்டிகள் போன்றவற்றில் தங்கம் வென்ற ஒரே இந்திய மல்யுத்த வீராங்கனையாக விளங்கி வருபவர் வினேஷ் போகாட்.

இதேபோல, 19 வயது இந்திய மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக், அலுவல் நடத்தையை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு.

விதிகளின்படி டோக்யோ விளையாட்டு நிகழ்வில் இருந்து தாயகத்துக்கு புறப்படும் முன்பு தமது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகள் நேரில் வந்து வாங்கிச் செல்ல வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரியை அந்த ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளச் செய்துள்ளார் சோனம். இத்தகைய நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கருதியதால் அவருக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

காணொளிக் குறிப்பு, வினேஷ் போகாட்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :