'பிகாரை விட தமிழ்நாட்டில் பாதிக்கும் குறைவு': இந்தியாவில் குழந்தைப் பேறு குறைவதால் காத்திருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் மக்கள் தொகையை நிலையாக பராமரிக்கத் தேவையானதை விட குறைந்து விட்டதாக, சமீபத்தில் வெளியான மாதிரிப் பதிவு முறை புள்ளிவிவர அறிக்கை 2024 (SAMPLE REGISTRATION SYSTEM STATISTICAL REPORT 2024) கூறுகிறது. இந்த அறிக்கையை பொதுப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டது.
அதன்படி, 2024-ஆம் ஆண்டில் தேசியளவில் இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 ஆக உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகையை நிலையானதாக பராமரிக்கத் தேவையானதை விட (replacement), அதாவது மொத்த கருவுறுதல் விகிதம் 2.1க்கும் கீழே குறைந்துள்ளது. எளிமையாக சொல்வதானால், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள் தொகை தன்னைத்தானே நிலையாக ஈடுசெய்து கொள்வதற்குத் தேவையான அளவை விட மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது.
மொத்த கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையாகும்.
தற்போது வெளியான ஆய்வறிக்கையின்படி, மொத்த கருவுறுதல் அதிகமாக உள்ள மாநிலங்களில் பிகார் மாநிலம் (2.9) முதலிடத்தில் உள்ளது. மிக குறைவான கருவுறுதல் விகிதமாக டெல்லியில் 1.2 ஆக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.3 என்ற அளவில் உள்ளன.
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் கடந்த பல பத்தாண்டுகளாகவே குறைந்துவந்துள்ளது. 1971-1981ம் ஆண்டு காலகட்டத்தில் கருவுறுதல் விகிதம் 5.2-லிருந்து 4.5 ஆக குறைந்தது. மேலும் இந்த விகிதம் 1991-2024 காலகட்டத்தில் 3.6லிருந்து 1.9 ஆக குறைந்துள்ளது.
தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியைத் தாண்டிவிட்டது. ஐ.நா கூற்றுப்படி 2023-ஆம் ஆண்டிலேயே மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் குறைவது ஆரோக்கியமான விஷயம் என நிபுணர்கள் கூறினாலும், அதனால் வரவிருக்கும் தசாப்தங்களில் பல கடும் சவால்கள் காத்திருப்பதாக சில நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

என்ன காரணம்?
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்ததற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறுகிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்.
"உலக நாடுகள் பலவற்றில் ஒருசில தசாப்தங்களுக்கு முன்பே இதுபோன்று மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. இது ஆபத்தான பல விளைவுகளை ஏற்படுத்தியும் வருகிறது. இந்தியா போன்ற மிகவும் சமத்துவமற்ற, ஏற்றத்தாழ்வு நிறைந்த நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கல்வி செலவு அதிகமாதல் போன்றவை கருவுறுதல் விகிதம் குறைவதற்கு காரணங்களாக உள்ளன. வளர்ச்சி எல்லோரையும் சென்றடையவில்லை." என்கிறார் அவர்.
இவைதவிர, சூழலியல் பிரச்னைகளாலும் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது என தெரிவிக்கிறார் சாந்தி. "கல்வி, பணி வளர்ச்சி போன்றவையும் வீடு உள்ளிட்ட தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது போன்றவையும் இதற்கு காரணிகளாக உள்ளன."
மொத்த கருவுறுதல் விகிதம் குறையும் போது இந்தியாவின் மக்கள் தொகை குறையுமா?
கருவுறுதல் விகிதம் குறைந்ததன் தாக்கம் என்னவாக இருக்கும்?
நிச்சயம் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள்தொகை குறையும் என்றாலும் அது உடனடியாக நிகழாது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும், 2050-2060 ஆண்டுகளில் இதன் தாக்கத்தைக் கண்கூடாக காணலாம் எனக்கூறும் அமலோற்பவநாதன், அதனால் ஏற்படக்கூடிய சாத்தியங்களையும் பட்டியலிட்டார்.
அமலோற்பவநாதன் முந்தைய திமுக ஆட்சியில் மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தவர்.
"நாங்கள் முந்தைய ஆட்சியில் தமிழ்நாடு அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்தோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை 2030-ம் ஆண்டுக்குள் மொத்த கருவுறுதல் விகிதம் 1.1 என்ற நிலையை அடைந்து அப்படியே நிலைப்பெற்றுவிடும். அப்படியென்றால், ஒரு பெற்றோருக்கு ஒரு குழந்தை. குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தால் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்," என்கிறார் அமலோற்பவநாதன்.

பட மூலாதாரம், AFP via Getty Images
இதன் தாக்கங்களாக, பல துறைகளில் வேலைகளை செய்வதற்கான மனித வளங்களுக்கான பற்றாக்குறை எற்படும் என்கிறார் அவர். குழந்தைகள் நலனை விடுத்து முதியோர் நலனில் அக்கறை செலுத்தும் வகையிலான கொள்கைகளை அரசுகள் தழுவ வேண்டியதற்கான தேவைகளையும் வலியுறுத்துகிறார்.
'முதியோர் எண்ணிக்கை அதிகமாகும் போது சுகாதார பிரச்னைகள் அதிகமாக இருக்கும். முதியோர் இல்லங்கள் அதிகமாகும். உதாரணமாக, நம்முடைய போக்குவரத்தே மாறக்கூடும். உதாரணமாக, சக்கர நாற்காலியை இயக்குவதற்கு ஏற்ப சாலை போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டியிருக்கும். முதியோர் சம்பந்தப்பட்ட பார்வை, செவி சார்ந்த பிரச்னைகள் அதிகமாகும். ஆனால், இவற்றை கவனித்துக் கொள்வதற்கான இளைய தலைமுறையின் எண்ணிக்கை குறைந்துவிடும்" என்கிறார்.
இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்தால் என்ன ஆகும்?
அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களை கவனித்துக் கொள்வதற்கான இளைஞர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்க மாட்டார்கள், உதாரணமாக மருத்துவமனைகளில் செவிலியர்கள் கூட இருக்க மாட்டார்கள் என்கிறார் அமலோற்பவநாதன்.
அதே சமயத்தில், இந்த தாக்கங்கள் உடனடியாக நிகழக்கூடியது அல்ல என்றும் தெரிவிக்கிறார் அவர்.
"2030-ஆம் ஆண்டில் மொத்த கருவுறுதல் விகிதம் இன்னும் குறைந்து, 2050-60ம் ஆண்டுகளில் அதன் விளைவுகள் கண்கூடாக தெரியத் தொடங்கும். பின்னர் மீண்டும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போக்கு நிகழும். இதுவொரு சுழற்சியாக இருக்கும். முன்பும் இப்படித்தான் நடந்திருக்கிறது" என்கிறார் அவர்.
இதற்கு ஒத்த கருத்தை கூறும் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத், மருத்துவ துறை வளர்ச்சி காரணமாக வாழ்நாள் அதிகமானதாலும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக கூறுகிறார். இதனால், முதியோர் சார்ந்த சமூக-பொருளாதார, சுகாதார தேவைகள் அதிகமாகும் என வலியுறுத்தும் அவர், 20-40 வயதுடையோரின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறுகிறார். "கடந்த 20 ஆண்டுகளாக இந்த போக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.
கருவுறுதல் விகிதம் குறைவது நல்லதா?
ஆனால், முதியவர்களை மனிதர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் எழுத்தாளர் ஆர்.எஸ். நீலகண்டன். இவர், 'தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு' (South Vs North : India's Great Divide) நூலின் ஆசிரியர் ஆவார்.
"முதியவர்களை மற்றொருவர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பது தவறு. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இணைந்த ரோபோக்கள் உள்ளன. அதிக கருவுறுதல் விகிதத்தை சார்ந்து தற்போது இருக்கும் வாழ்வியல் முறைகள் அல்லாமல், தொழில்நுட்பம் சார்ந்து சுதந்திரமாக இருந்தால் இது ஒரு பிரச்னையல்ல. ஏ.ஐ. சார்ந்த ரோபோக்களுக்கான தேவை அதிகமாகும் போது அது சமூகத்தின் எல்லா மட்டங்களுக்கும் சென்றடையும்." என்கிறார் ஆர்.எஸ். நீலகண்டன்.

ஆனால், பெரும்பாலான துறைகளில் மனித வளத்தையே சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாட்டுக்கு இது மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தும் என்கிறார் சாந்தி ரவீந்திரநாத். "எல்லா உற்பத்திக்கும் இந்தியா மனித வளத்தை சார்ந்தே உள்ளது. இன்னும் வாகனம் ஓட்டுவதற்கு மனிதர்களை நம்பி இருக்கிறோம். விவசாயம் உட்பட பல தொழில்களுக்கு மனித உழைப்பையே நம்பியிருக்கிறோம்."
எனினும், மொத்த கருவுறுதல் விகிதம் குறைவது இந்தியா போன்ற நாட்டுக்கு நல்லதுதான் என்கிறார், ஆர்.எஸ். நீலகண்டன்.
"இது நல்ல விஷயம் தான். இதை நாம் பொருளாதார வளர்ச்சியுடடன் சேர்த்து பார்க்கக் கூடாது. பொருளாதார வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். மக்கள்தொகைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் பொருளாதார வளர்ச்சி. திறன் மற்றும் வளங்களை மேம்படுத்த வேண்டுமே தவிர, மக்கள் தொகையை அதிகரிப்பது தீர்வல்ல" என்கிறார் அவர்.
அவரின் கூற்றுப்படி, இந்தியாவில் பலருக்கும் கல்வி, மருத்துவ வசதிகளை எல்லோராலும் சமமாக அணுகமுடிவதில்லை, அப்படியான சூழலில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ற வளங்களை உருவாக்குவதே தீர்வாக அமையும் என்கிறார்.
"இந்தியாவில் மிகவும் குறைவான மக்கள்தொகை இருந்தால் தான் கடினம். இந்தியாவில் இப்போது 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர். இதில், பாதி இருந்தால் கூட நாம் பல சிறப்பான விஷயங்களை செய்ய முடியும். இப்போது பிறக்கும் குழந்தையின் வாழ்நாள் முழுக்க இதே விகிதம் இருந்தால் 1.4 பில்லியனுக்கு பதிலாக ஒருவேளை இந்தியாவின் மக்கள் தொகை 1.2 பில்லியனாக குறையக்கூடும். அதனால் பெரிய மாற்றம் இருக்காது" என்கிறார் எழுத்தாளர் நீலகண்டன்.
அவரை பொறுத்தவரை, அப்படியே பெரிய மாற்றம் இருந்தாலும் தவறு கிடையாது. "ஏனெனில் இந்தியாவின் அடிப்படை மக்கள் தொகை மிகவும் அதிகம்."
கருவுறுதல் விகிதம் குறைந்துவருவது குறித்து இந்திய அரசு விரிவான ஆய்வு நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
"இந்தியாவில், வெவ்வேறு மாநிலங்களில் இதன் போக்கு எப்படி உள்ளது என்பதை ஆராய வேண்டும். அதற்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்." என வலியுறுத்துகிறார் அவர்.

அதிக குழந்தைகள் பெறுவது தீர்வா?
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் அம்மாநிலத்தில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ.30,000, நான்காவது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ. 40,000 என அம்மாநில அரசு அறிவித்தது.
அதேபோன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் சமீபத்தில் தமிழ்நாட்டில் கருவுறுதல் விகிதம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி, "மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவிக்க வேண்டும். கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கருத்தடையை கடுமையாக செயல்படுத்தி மக்கள் தொகையை குறைத்த தென் மாநிலங்கள், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படுவதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தென்னிந்திய தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
ஆனால், அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அரசியல் ரீதியான காரணம் மட்டுமே என்று கூறும் சாந்தி ரவீந்திரநாத், அது சரியான தீர்வாக இருக்க முடியாது என்றார்.
"குழந்தைகள் கவனிப்பு மையங்கள் போன்றவற்றை அரசே ஏற்படுத்தி, மக்கள் தாங்களே முன்வந்து குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை கொள்கை ரீதியாக எடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்துகிறார்.
ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும்போது பெண்கள் மீதான குடும்ப சுமை குறைந்து அவர்கள் தங்கள் பணி சார்ந்து முன்னேறுவதாக ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறது. ஆனால், "திருமணமானவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இன்னும் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றது. வேலையிலிருந்து வெளியேறி குழந்தைக்காக முயற்சிக்கும் பெண்களும் உள்ளனர். குழந்தை பேறு என்பது இன்னும் பெண்கள் மீதான அழுத்தமாகவே உள்ளது," என்கிறார் சாந்தி ரவீந்திரநாத்.
எனினும், "இன்றைக்கு உலகளவில் பெரும் பிரச்னையாக உள்ள காலநிலை மாற்றத்துக்கு காரணம் மனிதர்களே, அவர்களை ஏன் அதிகம் உருவாக்க வேண்டும்?" என்று வாதிடுகிறார் எழுத்தாளர் நீலகண்டன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































