ஏர் இந்தியா விமானம் மோதிய விடுதியில் இருந்தவர்கள் ஓராண்டாக சந்திக்கும் வேதனை

விமானம் மோதியதில் பிரஹ்லோத்  தாக்கூர்

பட மூலாதாரம், Zoya Mateen

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி மீது ஏர் இந்தியா விமானம் மோதியதில் பிரஹ்லோத் தாக்கூரின் மனைவியும், இரண்டு வயது பேத்தியும் உயிரிழந்தனர்.
    • எழுதியவர், ஜோயா மதீன்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

பிரஹ்லாத் தாக்கூர் காலை கண்விழித்ததும் முதலில் பார்ப்பது அந்தப் புகைப்படங்களைத்தான்.

ஆமதாபாத்தில் உள்ள அவரது சிறிய வீட்டின் பச்சை நிறச் சுவர்களில், பித்தளைப் பாத்திரங்கள் மற்றும் மங்கிப்போன குடும்பப் புகைப்படங்களுக்கு மத்தியில் அந்தப் புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு புகைப்படத்தில் அவரது மனைவி சர்லாபென்னின் முகம் உள்ளது. மற்றொரு புகைப்படத்தில் , வெள்ளை நிற ஆடை அணிந்து புன்னகைக்கும் அவரது பேத்தி ஆத்யாவின் படம் உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்து மோதி விபத்துக்குள்ளான போது, அவர்கள் இருவரும் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் இருந்தனர்.

இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.அவர்களில் 241 பேர் விமானத்தில் இருந்தவர்கள்.

நிலத்தில் இருந்தவர்களில் உயிரிழந்த 19 பேரில் சர்லாபென்னும் ஆத்யாவும் அடங்குவர்.

ஒரு வருடம் கடந்த பின்னரும், அந்த இழப்பு இன்னும் புதியதாகவே உணரப்படுகிறது.

"நான் அவர்களை மிகவும் இழந்து தவிக்கிறேன், புகைப்படங்களைப் பார்க்கும்போது எனக்கு அழுகை வருவது போல் இருக்கிறது" என்கிறார் தாக்கூர்.

விபத்து குறித்த அறிக்கையை புலனாய்வாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் இருந்த பயணிகள் மீதும், அதன் இறுதி நிமிடங்களைச் சுற்றி இன்னும் விடைதெரியாமல் இருக்கும் கேள்விகள் மீதும் மட்டுமே கடந்த ஒரு வருடமாக அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.

ஆனால் ஆமதாபாத்திலோ மற்றொரு கேள்வி நீடிக்கிறது.

ஏர் இந்தியா விமானம்

பட மூலாதாரம், Aditya Dayal

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பொதுவாக, விபத்து நடக்கும் மற்ற இடங்களில் வடுக்கள் காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால் , பிஜே மருத்துவக் கல்லூரியில் துயரம் என்பது நிரந்தரமாகக் குடியேறிவிட்டது.

ஒரு வருடம் கழிந்தும், விமானம் மோதிய அந்த விடுதி கட்டடம் இன்னும் ஆறாத புண் போல அப்படியே நிற்கிறது. அதன் மேல் தளங்கள் வானத்தை நோக்கித் திறந்தபடி பிளந்து கிடக்கின்றன, கான்கிரீட் துண்டுகள் கூர்மையான பாளங்களாகத் தொங்குகின்றன.

மேலும் புகையினால் கறுத்துப்போன ஒரு படிக்கட்டு இருளுக்குள் மறைந்து கிடக்கிறது. சுவர்களில் கரும்புகைக் கறைகள் படிந்துள்ளன, அதே நேரத்தில் சூட்கேஸ்களும் உடைகளும் தூசி, இடிபாடுகள் மற்றும் வளைந்துபோன இரும்புக் கம்பிகளுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன.

சேதமடைந்த இந்த வளாகத்தை இடித்துவிட்டு புதிய விடுதி கட்டும் திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆனாலும், தற்போதைக்கு அதன் இடிபாடுகள் அப்படியேதான் உள்ளன.

ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை தலைக்கு மேல் விமானங்கள் இரைச்சலிட்டுக் கடந்து செல்லும் சூழலில், மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லும் வழியில் இந்த விடுதியைக் கடந்து செல்கிறார்கள்.

பல ஆண்டு காலமாக , இந்தச் சத்தம் சாலையிலுள்ள போக்குவரத்துச் சத்தத்தைப் போல மிகவும் பழகிய சாதாரணமான ஒன்றாக நகரின் பின்னணிச் சத்தத்தோடு கலந்திருந்தது.

ஆனால் விபத்திற்குப் பிறகு இந்தச் சத்தம் முற்றிலும் மாறுபட்ட ஒரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்று தாக்கூர் கூறுகிறார்.

"எப்போதெல்லாம் ஒரு விமானம் கடந்து செல்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் அதே வலியை உணர்கிறோம், நாங்கள் வானத்தை நிமிர்ந்து பார்ப்பது கூட இல்லை'' என்கிறார் தாக்கூர் .

சுவர்களில் கரும்புகைக் கறைகள் படிந்துள்ளன, அதே நேரத்தில் சூட்கேஸ்களும் உடைகளும் தூசி, இடிபாடுகள் மற்றும் வளைந்துபோன இரும்புக் கம்பிகளுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன.

பட மூலாதாரம், Zoya Mateen

அப்போது என்ன நடந்தது?

கடந்த 15 ஆண்டுகளாக, அந்தப் பகுதி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்காக உணவைச் சமைத்து விநியோகிக்கும் சிற்றுண்டி கடையை நடத்தி வந்தது அந்தக் குடும்பம்.

அவர்களுடைய இரண்டு வயதுப் பேத்தி, தன் பாட்டியை விட்டுப் பிரியாமல், தனது பெரும்பாலான நேரத்தை அங்கேயே செலவழித்தாள்.

விமானம் விபத்துக்குள்ளானபோது, உணவுக்கூடத்தில் மதிய உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.

சர்லாபென் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஆத்யா கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, சர்லாபென் ஆத்யாவை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த விமானம் வந்து மோதியது.

மற்றொரு கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தாக்கூர், அனைத்தையும் போட்டுவிட்டு புகை வந்த திசையை நோக்கி ஓடினார்.

இப்போது அவர் சிலவற்றை மட்டுமே நினைவு கூர்கிறார்.

அந்த வெடிப்பு, வெப்பம், சமையலறை முழுவதும் சிதறிக்கிடந்த எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் "சர்லா, சர்லா" என்று தன் மனைவியின் பெயரை அழைத்தபடி, அறை அறையாக அவர் மேற்கொண்ட தீவிரத் தேடல். அது மட்டுமே அவருக்கு நினைவில் உள்ளது.

அவரைச் சுற்றி, உயிர் பிழைத்தவர்கள் இடிபாடுகளிலிருந்து தட்டுத்தடுமாறி வெளியே வந்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் மீட்புக் குழுவினர் புகை மற்றும் இடிபாடுகளுக்கு இடையே போராடிக் கொண்டிருந்ததால் மற்றவர்கள் உள்ளேயே சிக்கியிருந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக, அந்தக் குடும்பத்தினர் வதந்திகளைப் பின்தொடர்ந்தும், தொடர்ந்து கேள்விகளைக் கேட்டும் ஆமதாபாத் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், வார்டுகள் மற்றும் நிவாரண முகாம்களில் தேடிக்கொண்டிருந்தனர்.

ஆறு நாட்களுக்குப் பிறகு, ஒரு மருத்துவமனை பிணவறையில் சர்லாபென்னையும் ஆத்யாவையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

இன்று, தாக்கூர் ஆத்யாவைப் பற்றி நினைக்கும் போது, அவர் வீட்டிற்கு வாங்கி வந்த பிஸ்கட்டுகளையும், அவள் ஓடிவந்ததையும் நினைவுகூர்கிறார்.

அவர் சர்லாபென்னைப் பற்றி பேசும்போது, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு உணவளிப்பதில் கழித்த ஒரு பெண்ணை நினைவுகூர்கிறார்.

"அவர் மிகவும் நல்ல பெண்மணி" என்கிறார்.

தாக்கூரும் அவரது மகளும்

பட மூலாதாரம், Zoya Mateen

படக்குறிப்பு, தாக்கூரும் அவரது மகளும் சர்லாபென் மற்றும் ஆத்யாவின் புகைப்படங்களுடன் நிற்கின்றனர்

தாக்கூர் புகையை நோக்கி ஓடிக்கொண்டிருந்த அதே தருணத்தில், உணவுக்கூடத்திற்குள் இருந்த மாணவர்கள் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முயன்றுகொண்டிருந்தனர்.

அர்மான் கான் பதான் மதிய உணவிற்குத் தாமதமாக வந்தார். அவரது நண்பரான ஆதித்யா தயால், அவரை விட தாமதமாகவே வந்தார்.

காதைப் பிளக்கும் ஒரு சத்தம் கேட்டபோது அர்மான் சாப்பிடுவதற்காக அப்போதுதான் அமர்ந்திருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, கட்டடத்தின் ஒரு பகுதி அவரைச் சுற்றி இடிந்து விழுந்தது, ஒரு மேஜை அவரது கால்களை அழுத்திப் பிடித்தது.

சிலிண்டர்கள் வெடித்து, அறை முழுவதும் தூசி நிறைந்திருந்தது. புதிய வெடிப்புகளால் மீட்புப் படையினர் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உள்ளே சிக்கி மூச்சு விட சிரமப்பட்ட அர்மான், தனது கையால் ஒரு ஜன்னலை உடைத்தார்.

"அங்கு காரிருளாக இருந்தது," என்று நினைவுகூறும் அவர், "எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது"என்கிறார்.

மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டெடுத்த நேரத்தில், ஆதித்யா அந்த இடத்திற்கு வந்தடைந்தார்.

தானும் தனது நண்பர்களும் ஒவ்வொரு நாளும் சாப்பிட்ட அந்த கட்டடத்திற்கு மேலே புகை எழும்புவதை அவர் நினைவுகூர்கிறார். என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முயன்றவாறு மாணவர்கள் நாலாபுறமும் ஓடினர்.

மற்றவர்களுடன் இணைந்து, ஆதித்யா அர்மானை ஒரு மெத்தையில் சுமந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்ற உதவினார்.

ஒரு வருடம் கழித்து, தங்கள் விடுதி அறையில் அமர்ந்திருக்கும் அந்த இரு நண்பர்களும் அன்று மதியம் வந்தடைந்த உடல்களை இன்னும் நினைவு கூர்கிறார்கள்.

பயிற்சி மருத்துவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மரணம் புதிதல்ல. ஆனால் இந்தச் சம்பவத்திற்கு எதுவும் அவர்களைத் தயார்படுத்தியிருக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகியிருந்தன.

அந்த வாசனை, தான் அங்கிருந்து வெளியேறிய பிறகும் நீண்ட நேரம் நீடித்தது. மேலும் இப்போதும் எதிர்பாராத விதமாகத் திரும்பி வருகிறது என்று ஆதித்யா கூறுகிறார்.

"அது எனக்கு வாந்தி எடுக்கும் உணர்வை ஏற்படுத்தியது" என்று ஆதித்யா நினைவு கூர்கிறார்.

 ஆதித்யா, அவரது நண்பன் அர்ஜுன் மற்றும் அர்மன்.

பட மூலாதாரம், Zoya Mateen

படக்குறிப்பு, (இடமிருந்து) விபத்து நடந்த இடத்தில் ஆதித்யா, அவரது நண்பன் அர்ஜுன் மற்றும் அர்மானுடன்.

உதவிய மக்கள்

அவர்களின் உரையாடல் அவர்கள் இழந்த நண்பர்களைப் பற்றித் திரும்புகிறது.

பல சகோதரிகளுக்கு ஒரே சகோதரனாக இருந்த, குடும்பத்தின் அனைத்து நம்பிக்கைகளும் சுமந்திருந்த ஒரு வகுப்புத் தோழனைப் பற்றி அர்மான் குறிப்பிடுகிறார்.

சிலருக்கு, இந்த விபத்தின் தாக்கம் வேறு வழிகளில் தொடர்கிறது.

விமானம் விழுந்தபோது தனது இரண்டு நண்பர்களுடன் ஸ்கூட்டரில் உணவுக்கூடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பிரிஜேஷ், தீக்காயங்களுக்காக இன்னும் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆமதாபாத்தின் கடுமையான வெப்பத்திலும் அவர் பிரஷர் ஆடைகளை அணிந்து கொள்கிறார், மேலும் பாடப்புத்தகங்களின் பக்கங்களைத் திருப்புவதற்குக் கூட சிரமப்படுகிறார். "அது நடந்துவிட்டது, இனி என்ன செய்ய முடியும்?" என்கிறார் பிரிஜேஷ்.

அவர் சில நேரங்களில் அந்த இடிபாடுகளைக் கடந்து செல்கிறார். பல மாணவர்களைப் போலவே, பிரிஜேஷும் அதைத் திரும்பிப் பார்க்காமல் தவிர்க்கும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதை பார்க்கவில்லை என்றால் அந்த கட்டடம் மறைந்துவிடும் என்பது போல பிரிஜேஷ் நடந்துகொள்கிறார்.

ஆனால் அக்கல்லூரியைச் சுற்றி வசிப்பவர்களுக்கு வேறு வழியில்லை.

விபத்து நடந்த அன்று மதியம், சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டில் விஜய் இருந்தபோது, ஒரு வெடிப்புச் சத்தத்தைக் கேட்டார்.

உடனடியாகத் தனது பைக்கில் ஏறி சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தார் விஜய்.

அவர் அங்கு சென்றடைந்தபோது, விமானம் சிதறிக்கிடந்தது, கட்டடம் முழுவதும் தீ வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது.

பல மணிநேரங்களுக்கு, அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் அவசரகாலப் பணியாளர்களுடன் இணைந்து, போர்வைகளையும் தண்ணீரையும் கொண்டு சென்றும், சடலங்களைப் போர்த்தியும், உயிர் பிழைத்தவர்களுக்கு உதவியும் வந்ததால், அந்தப் பகுதி ஒரு மீட்பு மண்டலமாக மாறியது.

அந்தக் காட்சிகள் இன்னும் அவரைத் துரத்துகின்றன.

"நான் எங்கு பார்த்தாலும் நெருப்பு இருக்கிறது, ஒருவரின் தலை, ஒருவரின் கைகள் தெரிகின்றன" என்கிறார் விஜய்.

அர்மான்

பட மூலாதாரம், Zoya Mateen

படக்குறிப்பு, விபத்துக்குப் பிறகு பல நாட்களுக்குத் தான் அலறியபடியே விழித்தெழுந்ததாக அர்மான் கூறுகிறார்.

அடுத்தடுத்த வாரங்களில், நகரத்தின் கவனம் மெதுவாக மாறத்தொடங்கியது. ஆம்புலன்ஸ்கள் கிளம்பின. தொலைக்காட்சி குழுவினரும் சென்றனர். வளாகத்தை ஆட்கொண்டிருந்த அந்த அவசர நிலை மாறி, விபத்திற்குப் பிந்தைய கடினமான சூழலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

பிஜே மருத்துவக் கல்லூரி தொடர்ந்து இயங்க வேண்டியிருந்தது.

பெரும்பாலான சுமை முதல்வர் மீனாட்சி பரிக் மீது விழுந்தது. அவர், மருத்துவக் கல்லூரி ஒரு பேரதிர்ச்சியான துயரத்தைக் கையாண்டு கொண்டிருந்த நிலையிலும், அது தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டியிருந்தது.

கடந்த காலத்தை நினைவுகூரும் முதல்வர் மீனாட்சி பரிக், இது ஒரு தனிப்பட்ட சோகம் அல்ல, மாறாக பல சோகங்கள் ஒன்றாக இணைந்த சோகமான சம்பவம் என்கிறார். பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்கள், காயங்களிலிருந்து குணமடைந்து வரும் மாணவர்கள், அதிக வேலைப்பளுவால் வாடும் அவரது ஊழியர்கள் மற்றும் டிஎன்ஏ முடிவுகளுக்காகக் காத்திருக்கும் குடும்பங்கள் போன்றவை அதில் அடங்கும்.

"எனது ஒரு பகுதி என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது,மறு பகுதி என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முயன்றது"என்று அவர் கூறுகிறார்.

ஒரு உரையாடல் அவரிடம் இன்னும் நீங்காமல் உள்ளது.

தனது மகன், மருமகள் மற்றும் பேத்தியை இழந்த ஒரு நபர், அவர்களின் உடல்களைப் பார்க்கும் வரை அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார். அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை தேவை என்று அதிகாரிகள் விளக்கினர்.

"என் கண்கள் தான் டிஎன்ஏ பரிசோதனை" என்று அவர்களிடம் கூறிய அவர், தன் குடும்பத்தினர் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களைத் தம்மால் அடையாளம் காண முடியும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

அதை நினைவுகூரும் போது ஒரு கணம் தயங்கிய பரிக், "அவரது பக்கமிருக்கும் நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது"என்கிறார்.

காலப்போக்கில், கல்லூரி வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பியது. வகுப்புகள் மீண்டும் தொடங்கின, தேர்வுகள் நடத்தப்பட்டன, புதிய மாணவர்கள் வந்தனர்.

இச்சம்பவத்தின் ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 12 நெருங்கி வரும் வேளையில், உயிரிழந்தவர்களின் நினைவாக ஒரு பிரார்த்தனைக் கூட்டம், ரத்த தான முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டு செல்வது என்பது அந்தத் துயரத்திலிருந்து முழுமையாக மீள்வதற்குச் சமம் அல்ல என்று பரிக் குறிப்பிடுகிறார்.

"நான் அதை முழுமையாகக் கடந்துவிட்டதாக ஒரு கணம் கூட உணரவில்லை, வாழ்க்கையில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் செயல்முறை படிப்படியாக நிகழ்ந்தது" என்று அவர் கூறுகிறார்.

தனது வீட்டிற்குத் திரும்பிய தாக்கூரும் அதையே செய்ய முயல்கிறார்.

அவர் தனது மொபைல் போனை எடுக்கிறார். விபத்து நடப்பதற்கு முந்தைய நாள் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ அதில் உள்ளது. அதனை அவர் அடிக்கடி பார்க்கிறார்.

அதில், ஆத்யா தனது பாட்டிக்கு உணவை ஊட்டுகிறார். சர்லாபென் புன்னகைக்கிறார்.

வெளியே, மற்றொரு விமானம் ஆமதாபாத் வானத்தைக் கடந்து செல்கிறது.

தாக்கூர் நிமிர்ந்து பார்க்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு