வினேஷ் போகாட்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

வினேஷ் போகாட்
    • எழுதியவர், வந்தனா விஜய்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

இளம் மாணவிகள் உள்ள ஒரு விளையாட்டரங்கம். குட்டையாக வெட்டிய தலைமுடி. 1990களில் வெளியான பாலிவுட் பாடல்களின் பின்னணியில் மல்யுத்த களத்தில் முன்பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்வதில்லை.

லக்னோ நகரில் ஜனவரி மாத குளிரில் ஒரு காலைப்பொழுது. மல்யுத்தப் பயிற்சியைப் பார்க்காதவர்களுக்கு, அது வழக்கத்துக்கு மாறான இடம். அந்த இடத்தைப் பார்த்தால் ஒட்டுமொத்தமாக உற்சாகம் தரும் சூழ்நிலை தெரிகிறது.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் அந்த வளாகத்தில் பயிற்சி பெறும் இளம் மாணவிகளில் ஒருவரான வினேஷ் போகாட் - நேர்காணலுக்காக நாம் தேடி வந்திருப்பவர்.

கனிவான புன்னகையுடன் எங்களைப் பார்த்து கை அசைத்துவிட்டு பயிற்சிக்கு சென்றுவிட்டார். பயிற்சியாளரின் ஒவ்வொரு சொல்லையும் முழுமையாக கவனித்து பயிற்சி செய்கிறார். இடையிடையே பஞ்சாபி பாடல் மற்றும் பாலிவுட் பாடல்கள் என பாடல்களை அவர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.

1994 ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்த அவரை, அவருடைய தாயார் தான் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் உயர்வை நோக்கிய அவருடைய பயணம் துன்பங்கள், விடாமுயற்சி, பிரியம், உழைப்பு, கண்ணீர் என எல்லாம் சேர்ந்த கலவையாக உள்ளது.

மல்யுத்த மேட் மீது அமர்ந்து நேர்காணலுக்கு வினேஷ் தயாரான போது, தாம் ஹரியாணாவில் பிறந்தவர் என்றும், மல்யுத்த வீராங்கனையாக வருவது என்பது ஏற்கெனவே ஏறத்தாழ முடிவாகிவிட்ட விஷயம் என்றும் கூறினார். போகட் குடும்பம் இப்போது புகழ் பெற்றுவிட்டது.

அவருடைய பெரியப்பா மகாவீர் போகட் (டங்கல் புகழ்), தனது கிராமத்தில் தாமே மல்யுத்த வீரராக இருந்தவர். தன்னுடை குடும்பத்தில் அனைத்து மகள்களுக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே மல்யுத்தம் கற்றுக் கொடுக்கத் தொடங்கிவிட்டார் அவர்.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

அவருடைய இரண்டு மகள்கள் (கீதா மற்றும் போகாட் ) மற்றும் மகள் உறவு முறையிலான வினேஷ் ஆகியோர் இவ்வாறு பயிற்சி பெற்றனர்.

ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியாணாவில் ஒரு சிறிய கிராமத்தில், பெண்களுக்கு மல்யுத்தம் சொல்லித் தருவதை நினைத்துப் பார்க்க முடியாது. ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண்களுக்கு மல்யுத்தம் கற்பிப்பது சாத்தியமற்றதாக பார்க்கப்பட்ட காலம் அது.

``2000வது ஆண்டுகளின் தொடக்கத்தில் எங்களுக்கு மல்யுத்தம் கற்பிக்க பெரியப்பா முயற்சி செய்தபோது கிராமத்தில் எல்லோரும் எதிர்த்தனர். எனக்கு வெறும் ஆறு வயது தான் ஆகியிருந்தது. மக்கள் அவரைத் திட்டினார்கள். சகோதரிகளான நாங்கள் தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொண்டு, அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு கிராமத்தில் பயிற்சி செய்தோம். குறைந்தபட்சம் முழுக்கால் சட்டையாவது மகளுக்கு போட்டுவிடு என்று என் அம்மாவிடம் பலர் கூறியது உண்டு. ஆரம்பத்தில் என் தாயும் அவமானமாகக் கருதினார்'' என்று ஹரியான்வி மொழியில் வினேஷ் கூறினார்.

காணொளிக் குறிப்பு, வினேஷ் போகாட்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

இதை நினைவு கூர்ந்தபோது வினேஷின் குரலில் மாற்றம் தெரிந்தது.

``அவர்களுடைய மகள்களுக்கு வேண்டுமானால் கால் முழுக்க ஆடை அணிந்து கொள்ளச் சொல்லுங்கள். என் ஆடையை மாற்றும்படி சொல்லக் கூடாது என்று கூறுங்கள் என என் தாயிடம் நான் அப்போதே கூறுவேன். கிராமத்தில் நான் பயிற்சி பெற்றபோது, யாருக்கும் நான் சளைத்தவள் அல்ல என்ற தைரியம் எனக்கு ஏற்பட்டது'' என்று அவர் தொடர்ந்தார்.

இந்த போராட்ட குணம் தான், தொழில்முறை வாழ்க்கையிலும் வினேஷை தைரியசாலியாக நிற்க வைத்தது.

இருந்தபோதிலும், இவ்வளவு உயரத்தை எட்டியிருப்பது சாதாரண விஷயம் அல்ல.

குழந்தைப் பருவத்தை நினைவுகூர்ந்த வினேஷ் கூறுகிறார்,

``குழந்தைகளாக நாங்கள் பயிற்சியைத் தொடங்கிய முதல் 2 மாதங்கள் விளையாட்டாக போனது. சேற்றில் புரள்வது, படிக்கச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தாதது என போனது. ஆனால், நாங்கள் மல்யுத்த வீராங்கனைகளாக வேண்டும் என பெரியப்பா நினைத்ததும் எல்லாமே மாறத் தொடங்கிவிட்டன.''

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

``குழந்தைகளாக இருந்தாலும் கிராமத்தில் கடுமையான பயிற்சி இருந்தது, தண்டனைகள் இருந்தன. என் பெரியப்பா அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து கொள்வார். எவ்வளவு நேரம் பயிற்சி நடக்கும் என யாருக்கும் தெரியாது. சில நேரங்களில் அது 5 மணி நேரங்கள் கூட நீடிக்கும். பிறகு நாங்கள் பள்ளிக்கூடம் சென்று வகுப்பில் தூங்கிவிடுவோம்!! கவனத்தை திசை திருப்பும் என்பதால், தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொள்ள எங்களுக்கு அனுமதி இல்லை. மல்யுத்தம், சாப்பாடு, தூக்கம் தவிர எங்களுக்கு வேறு வாழ்க்கை இல்லாமல் போனது'' என்று கூறினார்.

போகாட் குடும்பம் பற்றிய புகழ்பெற்ற டங்கல் திரைப்படத்தில் காட்டப்பட்ட வினேஷ் மற்றும் சகோதரிகளுக்கு இது கடினமானதாக இருந்தது.

``பயிற்சியின் போது நாங்கள் தவறு செய்தால், கடுமையாக அடிப்பார். ஹரியாணாவில் பெண் குழந்தைகளை அடிப்பதை நல்ல பழக்கமாகக் கருதுவது இல்லை. ஆனால் என் பெரியப்பா நாங்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார். ஒலிம்பிக் என்றால் என்ன என்று குழந்தைகளான எங்களுக்கு எதுவும் தெரியாது. யார் இந்த ஒலிம்பிக் என்று கேட்கும் அளவுக்கு நான் வெறுப்பாகிப் போனேன். அதை எங்கிருந்தாவது வாங்கி வந்து அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்பேன். ஆனால் எங்களை எதற்காகத் தயார் செய்கிறோம் என்பதை என் பெரியப்பா மட்டுமே அறிந்திருந்தார்'' என்று வினேஷ் கூறினார்.

வினேஷ் போகாட்

ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் வினேஷ் வெற்றி பெறத் தொடங்கியது, 2009ல் முக்கிய போட்டியில் முதலாவது பதக்கம் வென்றதில் இருந்து அந்தப் பயிற்சியின் பலன் தெரியத் தொடங்கியது.

2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது அவருடைய வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அப்போதும் தன் பதின்ம வயதில் இருந்த வினேஷ், சர்வதேசப் போட்டிகளில் களமிறங்குவதை அறிவிக்கும் நிகழ்ச்சியாக அது இருந்தது.

அவருடைய சகோதரிகள் கீதா போகட், பபிதா போகட் ஆகியோர் ஏற்கெனவே காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்றிருக்கின்றனர்.

இந்திய மல்யுத்த விளையாட்டின் புதிய போஸ்டர் பெண்ணாக வினேஷ் மாறினார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் முக்கியமானவராக அவர் இருந்தார்.

ஆனால் காலிறுதிச் சுற்றில் எதிர்பாராமல் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக, வினேஷ் வெளியேற வேண்டியதாயிற்று. ஒலிம்பிக் பதக்கம் என்ற கனவு தகர்ந்து போனது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.

தன் வாழ்வில் மிகவும் கடினமான, இருண்ட காலகட்டமாக அது இருந்தது என்று வினேஷ் கூறினார். மல்யுத்தப் போட்டிக்குத் திரும்ப வர முடியுமா என்று என்னை நானே கேட்டுக் கொண்ட காலம் அது என்று குறிப்பிட்டார்.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

``காயம்பட்ட பல வீரர்கள், அதன் பிறகு காணாமல் போய்விட்டதை நான் பார்த்திருக்கிறேன். விளையாட்டு வீரர் ஒருவருக்கு தீவிர காயம் ஏற்பட்டால், தொழில்முறை விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் என்று பலரும் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். 21 வயதில் என் தொழில்முறை விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது, மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்று நான் நினைத்தேன். அது தினசரி போராட்டமாக இருந்தது. காயம்பட்ட பிறகு மூன்று ஆண்டுகள் நான் என்னுடனே போராடினேன்.''

திடீரென சூழ்நிலை சோகமாகிவிட்டது. சில விநாடிகள் , ஊசியை கீழே போட்டால் அந்த மெல்லிய சப்தம் கூட தெளிவாகக் கேட்கும் அளவுக்கு அமைதி...

அவருடைய கண்கள் குளமாகிவிட்டன. ஆனால் யாரும் கவனிப்பதற்குள் அவர் சுதாரித்துக் கொண்டார்.

காயம் பட்ட நிலையில், ஆட்டத் திறன் குறை்துவிட்ட நிலையில் இருந்து விளையாட்டு வீரர் ஒருவர் எப்படி மீண்டு வர முடியும்?

இந்தக் கேள்விக்கு அவர் அளித்த பதில், வினேஷின் உத்வேகத்தின் பக்கத்தைக் காட்டுவதாக இருந்தது.

``எனக்கும் என் கடவுளுக்கும் இடையிலான போராட்டம் அது. எனக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி யாரிடமும் பேச நான் விரும்பவில்லை. உண்மையில், என்னுடைய பிரச்சினைகளை மற்றவர்களிடம் சொல்லும் பக்குவம் எனக்கு இல்லை. எனக்கு நானே நிறைய பேசிக் கொண்டேன். அப்போது கிடைக்கும் பதில்கள் தான் எனக்கு சிறந்தவையாக இருந்தன. அந்த முடிவுகள் அனைத்தும் நல்லபடியாக அமைந்ததற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.''

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மல்யுத்தப் போட்டிக்குத் திரும்பிய வினேஷ், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற முதலாவது இந்திய பெண்ணாக சாதனை படைத்தார்.

இடைப்பட்ட காலத்தில் மக்கள் அவரை விமர்சனம் செய்தபோது, சர்வதேச போட்டிகளில் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து நிற்க முடியாமல் போனது போன்ற பிரச்சினைகள் எழுந்தன.

ஆனால் அவருடைய மன உறுதியும், புதிய பயிற்சியாளரும், புதிய பயிற்சி உத்திகளும் அற்புதங்களை செய்தன. 2019ல் முதன்முறையாக உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை அவர் வென்றார். அது வெண்கலப் பதக்கம்.

``தோற்றுப் போவதை நான் வெறுக்கிறேன்'' என்று அவர் சொல்வது உண்மையானதாக உள்ளது.

போராடும் குணத்தை தன் தாயாரிடம் இருந்து அவர் பெற்றிருக்கிறார். தன் வாழ்க்கையில் புரிந்த அனைத்து சாதனைகளுக்கும் தன் பெரியப்பா மகாவீர் போகட், தாயார் பிரேமலதா ஆகியோர்தான் காரணம் என்று வினேஷ் கூறினார்.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

உலகின் மிகச் சிறந்த மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவராக ஆவதற்கு வினேஷுக்கு பயிற்சி கொடுத்தார் மகாவீர் போகட். குடும்பத்துக்காக அவருடைய தாயார் பிரேமலதா கடுமையாக உழைத்தார்.

வினேஷ் சிறு குழந்தையாக இருந்தபோது 2003ல் அவருடைய தந்தை கொலை செய்யப்பட்டார். ஹரியான்வி கிராமத்தில் ஆணாதிக்கம் மிகுந்த சூழ்நிலையில், தனித்து நின்று போராடி மகளை வளர்த்தார் வினேஷின் தாய்.

``என் தந்தை உயிருடன் இருந்த வரையில் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நான் பயிற்சி பெறும்போது அவர் வருவார். நான் பயிற்சி பெறுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார். ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட பிறகு, தந்தை கொலை செய்யப்பட்டுவிட்டதால் வினேஷுக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என்று என் தாயாரிடம் கிராம மக்கள் கூறினர். கீதாவும், பபிதாவும் அவர்களுக்கு தந்தை இருந்ததால், மல்யுத்தப் பயிற்சி செய்தனர். நான் ஏதாவது சாதிப்பேன் என்று அவர்கள் நம்பவில்லை. ஆனால், என் தாயார் உறுதியாக இருந்தார். என் மகள் தொடர்ந்து பயிற்சி செய்வாள் என்று கூறினார். பண வசதி அவ்வளவு நல்ல நிலையில் இல்லை. ஆனால் எங்களுக்கு எல்லாமும் கிடைப்பதற்காக என் தாயார் கடுமையாக உழைத்தார்.

``பெரியப்பாவின் பயிற்சி மிகவும் கடுமையானதாக இருக்கும். சில நேரம் எங்களை அடிக்கவும் செய்வார். இதை விட்டுவிட வேண்டும் என்று நான் நினைப்பேன். ஆனால், என் தாயாரை நான் பார்க்கும்போது, இதைச் செய்து காட்ட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். அது என்னை மனதளவில் வலிமையாக ஆக்கியது'' என்று வினேஷ் கூறினார்.

அவருடைய கடும் உழைப்பு, தியாகம் ஆகியவையும், பெரியப்பா தந்த அடித்தள பயிற்சியும் தான் வினேஷை உலக சாம்பியனாக ஆக்கியுள்ளன.

ரோம் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று புத்தாண்டை அவர் தொடங்கியுள்ளார்.

மல்யுத்தம், காயங்கள், பயிற்சிகள் என இவ்வளவு சிரமங்களிலும், அவருடன் பக்கபலமாக ஒருவர் இருக்கிறார்.

கிரேக்க ரோமானிய மல்யுத்த வீரர் சோம்விர் ரத்திக்கு எட்டு ஆண்டுகளாக வினேஷை தெரியும். மல்யுத்தப் போட்டிகளுக்கு இடையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது.

தனது மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக சோம்விர் உள்ளார் என்று வினேஷ் கூறினார். தனக்காக அவருடைய பயிற்சியை தியாகம் செய்துவிட்டதாகத் தெரிவித்தார். இதைச் சொன்னபோது அவருடைய கண்களில் ஒருவித பிரகாசம் மின்னியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2018 ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்று வினேஷ் திரும்பியபோது, டெல்லி விமான நிலையத்தில் சோம்விர் தன் காதலை தெரிவித்துள்ளார். சில மாதங்கள் கழித்து அவர்களுக்குத் திருமணம் நடந்தது.

மல்யுத்தத்தைத் தாண்டி, பாலிவுட் படங்களுக்கு வினேஷ் நேரத்தை செலவிடுகிறார். கடந்த சில ஆண்டுகளில் சில படங்களில் மட்டுமே நடிக்க முடிந்தது என அவர் ஒப்புக்கொள்கிறார்.

அனைத்து சாதனைகளையும் முறியடித்த பாகுபலி மெகாஹிட் திரைப்படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து அவர் மயங்கிவிட்டார். தீபிகா படுகோனே, கங்கனா ராவத், அக்சய்குமார், ரன்வீர்சிங் ஆகியோரை அவர் பின் தொடர்கிறார்.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

வினேஷ் நல்ல சாப்பாட்டுப் பிரியை. ``உலகில் உள்ள அனைத்து உணவுகளையும் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு தான் சாக வேண்டும் என விரும்புகிறேன். உலகம் முழுக்க சுற்றிப் பார்த்து, எல்லா உணவுகளையும் சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று'' என்று சிரித்தபடி அவர் கூறுகிறார்.

ஆகவே, உணவு அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அவருக்கு கோபமும் வருமா?

``ஆமாம் வரும். எனக்கும் கோபம் வரும். கோபத்தில் என்ன செய்வேன் என்றே தெரியாது'' என்று குறும்பாகக் கூறினார் அவர்.

அவருடைய உயர்ந்த கனவு என்ன?

இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வினேஷ் ஒரு விநாடி கூட எடுத்துக் கொள்ளவில்லை. ``வாழ்க்கையில் சிலருக்கு தான் இரண்டாவது முறை வாய்ப்பு கிடைக்கும். எனக்கு காயம் ஏற்பட்ட பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்க எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற என் கனவை டோக்கியோவில் நிறைவேற்றிக் கொள்வேன்'' என்று அவர் பதிலளித்தார்.

சிந்தனைகளில் மூழ்கிவிட்டார் வினேஷ். பாலிவுட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்டத்தைப் போல, நேர்காணலும் முடியும் நேரத்தை நெருங்கிவிட்டது.

வினேஷ் போகாட்டை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காண்போம்.

பிபிசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் உமன் ஆஃப் தி இயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :