Ind vs Nz: இந்தியா 97 ரன்கள் முன்னிலை: டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியுமா?

பிரசுரிக்கப்பட்டது

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் மூன்றாவது நாளின் முடிவில் 97 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்திய அணி.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 28 முதல் நடந்து வருகிறது.

கிரிஸ்ட் சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா 10 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தும், நியூசிலாந்து 10 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தும் தங்கள் முதல் இன்னிங்ஸை முடித்து கொண்ட நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி.

ஆட்ட நேர இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டம் நிறைவடைந்தது.

இந்த தொடரில் இந்திய அணி சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் நியூசிலாந்து பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசினார். நியூசிலாந்து அணி சார்பாக அவர் 9 ஓவர் பந்து வீசி 3 விக்கெட் எடுத்து 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

முதல் இன்னிங்ஸில் ஓரளவு ஆடிய ப்ரித்வி ஷா, புஜாரா ஆகியோர் கூட இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் ஹனுமா விஹாரி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களத்தில் உள்ளனர். இன்னும் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் குறைந்த பட்சம் 180 ரன்களாவது எடுத்தால் மட்டுமே இந்திய அணி தோல்வியைத் தவிர்க்கப் போராட முடியும் என்ற கருத்து நிலவுகிறது.

தற்போது 97 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்திய அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் ஏற்கனவே தோற்றதால் இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: