வாழை நாரில் நாப்கின் தயாரிக்கும் தம்பதி - சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் வாழை நாரில் நாப்கின் தயாரித்து வருகின்றனர் சென்னையை சேர்ந்த சக்திவர்ஷினி மற்றும் ஷனத்குமார் தம்பதி.

பிபிசி தமிழுக்காக அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.

"நாங்கள் இருவரும் முதுகலை படிப்பை லண்டனில் ஒன்றாக படித்தோம். அப்போது நிக்கி ஜோடன்ஸ் என்ற பேராசிரியர் தலைமையில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் நாங்கள் இருவரும் ஈடுபட்டிருந்தோம். அந்த ஆராய்ச்சியின் முடிவில் சாதாரண பிளாஸ்டிக் ஜெல்கள் இருக்கும் நாப்கின் பயன்படுத்தினால் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கண்டறிந்தோம். இதற்கு மாற்று என்ன என்பது பற்றி யோசிக்கும் போது எழுந்த எண்ணம் தான் வாழைநாரில் சானிடரி நாப்கின் தயாரிப்பு" என்கிறார் சக்திவர்ஷினி.

இருவரும் படிப்பு முடித்துவிட்டு இந்தியா திரும்பியவுடன் வாழை நாரில் நாப்கின் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவதற்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். கிட்டத்தட்ட 7 வருடங்கள் பல்வேறு கட்ட சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிக்குப் பிறகு தங்களுடைய ஆர்கானிக் சானிட்டரி நாப்கினுக்கு ஒரு வடிவத்தை அவர்களால் கொண்டு வர முடிந்தது.

"வாழைநாரின் மகத்துவம் பல பேருக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறது. அதில் ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம். அதேபோல மற்ற நார்களை காட்டிலும் வாழைநாரில் குளிர்ச்சியும் தண்ணீரை உறிஞ்சும் தன்மையும் அதிக அளவில் இருக்கிறது. சாதாரணமாக இருக்கும் நாப்கின்களில் SAP ஜெல் பயன்படுத்துவார்கள். இதுவும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.

ஆனால், பல பேருக்கு இது ஒத்துக் கொள்வதில்லை. இந்த பிளாஸ்டிக் ஜெல்லுக்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த போது தான் நம்முடைய பாரம்பரியமான வாழைநாரில் தண்ணீரை உறிஞ்சும் திறன் அதிகம் என்பதால் எங்களுடைய தயாரிப்பில் இதை பயன்படுத்தினோம்" என்கிறார் ஷனத்குமார்.

சக்திவர்ஷினி மற்றும் அவரது தோழிகளுக்கு சானிடரி நாப்கின்களால் பல சமயங்களில் அலர்ஜி உண்டாகி இருக்கிறது. ஆனால் வேறு வழி இல்லாமல் சாதாரண நாப்கின்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போது வாழைநார் நாப்கின்களை பயன்படுத்துவதால் அது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடலில் அரிப்பு, அலர்ஜி போன்றவை நீங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

" ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் மாதவிலக்கு காலங்களில் 23 முதல் 24 கிலோ வரை சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். இந்த நாப்கின்களை பயன்படுத்திவிட்டு கழிவுகளாக குப்பையில் சேரும் போது சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. பல இடங்களில் மழை நீர் வடிகால்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இந்த நாப்கின்கள் அடைத்துக் கொள்வதால் மழை நீர் பூமிக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது.

மேலும், சாதாரண சானிட்டரி நாப்கின்களை எரிக்கும் போது வரும் புகையால் காற்று மாசு ஏற்படுகிறது. ஆனால் நாங்கள் தயாரித்துள்ள இந்த வாழைநார் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தி முடித்துவிட்டு நீங்கள் குப்பையில் போட்டாலும் அது 6 மாதத்தில் மக்கி போய் பூமிக்கு உரமாகவும் மாறிவிடும் அன்றைய நாட்களில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வாழை இலையில் தான் சாப்பாடு கட்டி எடுத்து செல்வார்கள். ஏனென்றால் அது எவ்வளவு எளிதில் கெட்டுவிடாது.

அதேபோல் தான் வாழைநாரில் ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அதை பயன்படுத்தும் போது கெட்ட வாடை அடிக்காது. அதனால் தாராளமாக இதை பயன்படுத்தலாம் என்றும் வேதிப்பொருட்கள், வாசனைப்பொருட்கள் இல்லாமல், உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் இந்த வாழைநார் சானிட்டரி நாப்கின்கள் இருக்கும்" என்கின்றனர் சக்திவர்ஷினி மற்றும் ஷனத்குமார் தம்பதியினர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :