உத்தரகண்ட் பனிச்சரிவு: `15 அணுகுண்டின் வேகத்தில் இருந்தது` - ஆய்வில் தகவல்

பிரசுரிக்கப்பட்டது

கடந்த பிப்ரவரி மாதம் உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், இமய மலையில் இருந்து ஒரு பெரிய பனி படர்ந்த பாறை பெயர்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த பனிச்சரிவால் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், மேலும் அப்பகுதியில் கட்டுமானத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நீர் மின் நிலையமும் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த பேரழிவை சில காணொளிகள் மூலம் நீங்கள் கண்டிருக்கலாம்.

50 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு சர்வதேச குழு, இந்த பனிச்சரிவை முழுமையாக மதிப்பீடு செய்து என்ன நடந்தது என விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதை பல்வேறு தரவு ஆதாரங்கள், செயற்கைக் கோள் படங்கள், களத்தில் சென்று பார்வையிட்டபோது கிடைத்த விவரங்களை வைத்து சேகரித்து வெளியிட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தின் ரோன்டி சிகரத்தில் சுமார் ஆறு கிலோமீட்டர் உச்சியில் இந்த பேரழிவு தொடங்கியது.

500 மீட்டருக்கும் அதிகமான அகலமும், 180 மீட்டர் தடிமனும் கொண்ட ஒரு பெரிய பனி படர்ந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது.

கிட்டத்தட்ட 27 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவுக்கான பாறைகள், பனிக்கட்டிகள் அந்த ஒரு நிமிட சரிவில் விழுந்தது என ஆராய்ச்சியாளர்கள் குழு கணக்கிடுகிறது.

இந்த பனிச்சரிவில் விழுந்த பாறைகள் மற்றும் பனிப்பாறைகளின் அளவை ஒப்பிட வேண்டுமானால், எகிப்தில் இருக்கும் கீசா பிரமீட் கோபுரங்களை விட 10 மடங்கு அதிகம்.

500 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள அப்பாறை பிளந்து கொண்டு ரோன்டி பள்ளத்தாக்கின் நிலத்தில் விழுந்த போது, அது ஹிரோஷிமா அணுகுண்டை விட 15 மடங்கு அதிக சக்தியை வெளிப்படுத்தியது.

"விழுந்த பனி படர்ந்த பாறையில் 80 சதவீதம் பாறையும், 20 சதவீதம் பனியும் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட வெப்பத்தில், பனிக்கட்டிகள் உருகி நீராகிவிட்டது" என்று விளக்குகிறார் கனடாவின் கல்காரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், அந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவருமான முனைவர் டான் ஷுகர்.

அப்பெரிய பாறை விழுந்த உடன், சுமார் 10 மீட்டர் அகலமுள்ள பாறைகள் வரை சுற்றியுள்ள காடுகளில் சிதறின. அதோடு 20 ஹெக்டேர் காடுகள் நசுங்கின.

பொதுவாக இப்படி விழும் பாறைகள் விழுந்த இடத்திலேயே தான் இருக்கும். ஆனால் பாறைகள், பனிக்கட்டிகள், நீர் என எல்லாம் சேர்ந்து இருந்ததால், அக்கலவை தாழ்வான பகுதியை நோக்கிப் பாய்ந்தது.

மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த அக்கலவை, 15 கிலோமீட்டர் தொலைவில் ராய்னி கிராமத்துக்கு அருகில் இருந்த ரிஷிகங்கா நீர் மின் நிலையத்தை தகர்த்து எரிந்தது.

கிட்டத்தட்ட அந்த பனிச்சரிவால் இறந்த 204 பேரில் பெரும்பாலானவர்கள், நீர் மின் நிலையத்தில் வேலை செய்தவர்கள் அல்லது நீர் மின் நிலையத்தை பார்வையிட வந்தவர்கள். அவர்களை நோக்கி என்ன வருகிறது என்கிற சமிக்ஞை கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.

விபத்து நடந்த போது, அருகிலிருந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என வதந்திகள் எழுந்தன. இமயமலைப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகி, ஏரிகள் உருவாகி இருக்கும். சில நேரங்களில் அந்த ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு திடீரென வெள்ளம் ஏற்படும்.

ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட விபத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், அதற்கு எந்த வித ஆதாரங்களும் இல்லை என மறுக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் இந்த விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாமா என்கிற கேள்வி எழுந்தது.

ஒரே ஒரு விபத்தை வைத்து பருவநிலை மாற்றத்தை காரணமாக குறிப்பிட முடியாது. ஆனால் உலகின் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க, இமய மலைப் பகுதியில் பாறைகள் பெயர்ந்து விழுவது அதிகரிக்கிறது என்பதை மட்டும் குறிப்பிடுகிறார்கள்.

"பனிப்பாறைகள் சுருங்குவது, இமய மலையில் இருக்கும் பெரும்பாறைகளை நிலையற்றதாக்குகிறது. அதோடு பனிப்பாறைகள் படர்ந்திருப்பது குறைவதால், மலைக்கு உட்பகுதியில் இருக்கும் பாறைகளின் நீர் மற்றும் வெப்ப நிலையை மாற்றுகிறது" என ஆராய்ச்சியளர்கள் தங்கள் அறிக்கையில் எழுதி இருக்கிறர்கள்.

"இந்த பாறை சரிவுக்கு குறிப்பிட்டு ஒரு காரணத்தைக் கூறுவது சிரமம். இந்த பிரம்மாண்ட பாறை கடந்த நான்கு ஆண்டுகளாக சில பத்து மீட்டர்கள் மெல்ல சரிந்து வந்திருக்கிறது என்பதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன. துரதிர்ஷ்டவசமாக யாரும் இதை கவனிக்கவில்லை" என்கிறார் இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவர் மற்றும் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் கோள் அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் ஜெஃப்ரி கர்கெல்.

உத்தராகண்டின் உயரமான மலைகளில் வசிக்கும், பணிபுரியும் மக்களுக்கு இது என்ன சொல்ல வருகிறது என்பது தான் இப்போதைய கேள்வி.

அப்பிராந்தியத்தின் இயற்கைச் சூழல் மற்றும் நீர் மின்சாரம் குறித்து கவிதா உபாத்யாய் நிறைய எழுதியுள்ளார். இவர் ஒரு நீரியல் கொள்கை நிபுணர் மற்றும் ஊடகவியலாளர். நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் ஏற்படும் பகுதிகளில் மிகப் பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை கட்டும் போது கூடுதலாக கவனம் எடுத்து சிந்திக்க வேண்டியது அவசியம் என்கிறாரர் கவிதா.

"இப்படி மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைவது இது முதல் முறை அல்ல" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"2012ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கூட அவை சேதமடைந்தன. எனவே இது போன்ற உட்கட்டமைப்புகளை, இத்தனை பலவீனமான பகுதிகளில் நிறுவுவது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். இந்த இடங்களில் கட்டுமானங்கள் கட்டக் கூடாது என நீங்கள் கூறலாம், ஆனால் அரசாங்கங்கள் அதைக் கேட்கப் போவதில்லை. அவர்கள் வேலைகளை வழங்குகிறார்கள், அரசாங்கங்களைப் பொறுத்தவரை, நீர் மின் நிலையம் என்பது புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாற்று எரிபொருளை நோக்கிச் செல்வது ஆகும். ஆனால் நடைமுறை தீர்வுகளைப் பார்த்தால், குறைந்தபட்சம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் முறைகளாவது இருக்க வேண்டும்." என்கிறார் கவிதா.

பிரிட்டனின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலச்சரிவு நிபுணரும் இணை ஆசிரியருமான பேராசிரியர் டேவ் பெட்லி இதை ஆமோதிக்கிறார்.

"சமோலி பேரழிவு உயரமான மலைப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அதிக செலவைக் கோரும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அச்சுறுத்தலை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்பதை சுட்டிக் காட்டுகிறது" என அவர் கூறினார்.

"நிலையான சமயங்களில் கூட எதிர்பார்த்ததை விட அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது, ஆனால் காலநிலை மாற்றத்தால் அந்த பிரச்னை மிகவும் மோசமடையும்.

இந்த அச்சுறுத்தல்களை நாம் சிறப்பாகவும் சரியாகவும் மதிப்பிட வேண்டும் அல்லது இந்த திட்டங்களுடன் தொடர்புடைய மனித, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இழப்புகளை நாம் காண வேண்டி வரும்" என பிபிசியிடம் தெரிவித்தார் பெராசிரியர் டேவ் பெட்லி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :