இந்தியா அபார வெற்றி: புள்ளிகள் வரிசையில் முதலிடம்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி லீக் போட்டியில் இலங்கையை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழத்தி, இந்தியா அபார வெற்றிபெற்றுள்ளது.
43.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 265 ரன்களை இந்தியா எடுத்தது.
265 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறந்த அடித்தளம் அமைத்தனர்.
ரோகித் சர்மாக இந்த உலகக்கோப்பையில் ஐந்தாவது சதம் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஒரே உலகக்கோப்பை போட்டி தொடரில் ஐந்து சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இந்தியா 189 ரன்கள் எடுத்திருந்தபோது 103 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்,
இவரோடு பேட்டிங் செய்த ராகுலும் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். ராகுல் 118 பந்துகளை சந்தித்து 111 ரன்கள் எடுத்ததால். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ராகுலின் முதலாவது சதம் இதுவாகும்.
மூன்றாவது ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 41 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுத்து கடைசி லரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரிசாப் பந்த் நான்கு ரன்களே எடுத்தார். இறுதியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஏழு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணியின் மலிங்கா, கசுன் ரஜிதா மற்றும் இசுரு உதானா தலா ஒரு விக்கெட்டுகளை சாய்த்தனர்.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதை தேர்வு செய்தது.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.
அணியின் தலைவர் கருணாரத்னே 10 ரன்களும், குசால் பெரேரா 18 ரன்களும், ஃபெர்ணான்டொ 20 ரன்களும், குசால் மென்டிஸ் 3 ரன்களும் எடுத்திருந்தனர்.
பின்னர் விளையாடிய மேத்யூஸூம், திருமான்னவும் நிதானமாக விளையாடி 100-க்கு மேலான ரன்களை சேர்ந்து எடுத்தனர். இலங்கையின் ரன் குவிப்பு அதிகரிக்க இவர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.
திருமான்ன அரை சதம் கடந்து வெளியேறிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய மேத்யூஸ் சதம் கடந்து 128 பந்துகளை சந்தித்து 113 ரன்களை எடுத்தார்.
50 ஓவர்களின் முடிவில் 264 ரன்கள் எடுத்த இலங்கை, இந்தியாவுக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
முதல் நான்கு விக்கெட்டுகளை சாய்த்ததில் பெரும் பங்கு தோனிக்கு உள்ளது.
விக்கெட் கீப்பராக அற்புதமான கேட்சுகளைப் பிடித்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், மென்டிஸ் விக்கெட்டை ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார்.
சிறப்பாக பந்து வீசிய பும்ரா மொத்தம் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவர் கருணாரத்னேவை வீழ்த்தியபோது, விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியில் பும்ரா இடம்பெற்றார்,
புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், புள்ளிகளின் வரிசையில் தற்போது முதலிடம் பெற்றுள்ளது.