5 மாநில தேர்தல் நிலவரம் உடனுக்குடன் உங்களுக்காக...
தேர்தல் நடந்த 5 இந்திய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய, மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த ஆட்சி நிர்வாகம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த வெற்றி என்று கூறியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
க. சுபகுணம்
தேர்தல் நடந்த 5 இந்திய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதனுடன் ஒரு நேரலை உரையாடல்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை கையில் எடுத்துச் செயல்பட்டார். அவர் தற்போது, "மக்களின் முடிவுதான் முக்கியம்," என்று கட்சியின் மோசமான தோல்வி குறித்துப் பேசியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரேயோர் இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று, ஒரேயோர் இடத்தில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 91 இடங்களில் வெற்றி பெற்று 162 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது மொத்தம் 253 இடங்களைக் கைப்பற்றும். சமாஜ்வாதி கட்சி, 23 இடங்களில் வெற்றி பெற்று, 88 இடங்களில் முன்னிலையோடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், "ஜனநாயகத்தில் மக்களின் வாக்குகள் முக்கியம். நம்முடைய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கடுமையாக உழைத்தனர். ஓர் அமைப்பை உருவாக்கினர். மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடினர். ஆனால், எங்களால் கடின உழைப்பை வாக்குகளாக மாற்ற முடியவில்லை. உத்தர பிரதேச மக்களின் முன்னேற்றத்திற்காக, எதிர்க்கட்சியாக இருந்து முழு பொறுப்புடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்," என்று கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமஜ்வாதி கட்சி 2017 தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றாலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
புதிய காற்று வீசுகிறது, புதிய சமாஜ்வாதி வந்து விட்டது என்று அவர் கூறுவது உண்மையாகுமா என்பது தெரியவில்லை. ஆனால் அகிலேஷ் யாதவ் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் செய்த முயற்சிகள், உத்தர பிரதேச தேர்தல் களத்தை கடுமையான போட்டிச் சூழல் நிறைந்ததாக ஆக்கியுள்ளது.
இருந்தும் அவரால் வெல்ல முடியாமல் போகக் காரணம் என்ன?
ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும். தற்போதைய நிலவரப்படி உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. அதேநேரத்தில், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மாநில பாஜக அலுவலகத்தில் பேசியபோது, "உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக ஏழு கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது," என்று கூறினார். மேலும், கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அதை மாநில மக்கள் புறக்கணித்து பாஜகவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததாகவும் கூறினார்.
மேலும், "சாதி மற்றும் குடும்ப அரசியலை மாநில மக்கள் புறக்கணித்துள்ளனர்," என்ற யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் 2.61 கோடி ஏழைகளின் வீடுகளில் கழிப்பறைகள் வழங்கப்பட்டதாகவும் 43.5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாகவும் 1.45 கோடி வீடுகளுக்கு மின்சாரம், 10 கோடி ஏழைகளுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பாக வெற்றி அடைந்த முதல்வர் வேட்பாளர் பகவந்த் மானின் தாயார் ஹர்பால் கவுர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தனது மகனின் வெற்றி குறித்துப் பேசியுள்ளார்.
அவர் அப்போது, "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தன் மகன் முதலமைச்சர் ஆவதைப் பார்த்து அவருடைய தந்தையும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். பகவந்த் மான், முன்னரும் சரியான பாதையிலேயே சென்றார். இப்போதும் சரியான பாதையிலேயே செல்கிறார்," என்று தெரிவித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், "ஏழை, எளிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாஜகவின் மீதும் பிரதமர் மோதியின் நலத்திட்டங்கள் மீதும் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றியே, உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் பிரமாண்ட வெற்றி. யோகி ஆதித்யநாத் நடத்திய ஊழல் இல்லாத, அச்சமற்ற நல்லாட்சிக்கு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்," என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னெளவில் உள்ள பாஜகவின் மாநில அலுவலகத்தில் பேசினார்.
அப்போது, "உத்தர பிரதேசத்தின் அகன்ற பரப்பின் காரணமாக அதன் மீது அனைவருடைய கண்களும் இருந்தன. தனிப் பெரும்பான்மையில் வெற்றி பெற வைத்தமைக்காக மக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். பிரதமர் நரேந்திர மோதி தலைமையின் கீழ் நாம் உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியமைக்கிறோம்," என்று கூறினார்.
ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 5 மணி நிலவரம்.
"சட்டமன்ற தேர்தல் வெற்றி; மக்கள் மனங்களை வென்ற பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்துக்கள்" -அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் பாஜக முன்னிலையில் உள்ளது, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறப் போகிறது.
இதற்கிடையில், அரசியல் செயல்பாட்டாளரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருந்தவருமான யோகேந்திர யாதவ், இந்த தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கின்றன, ஆனால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றும் போராட்டத்திற்குப் பின்னடைவு," என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வெற்றி குறித்து பேசுகையில், "கொரோனாவால் நூற்றுக்கணக்கோர் உயிரிழந்த மாநிலம் உத்தர பிரதேசம். அங்குள்ள கங்கையில் மிதக்கும் உடல்கள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளன. அங்கு மீண்டும் ஆளும் கட்சி வெற்றி பெற்றால் அதற்குப் பின்னால் பெரிய விஷயங்கள் இருக்கின்றன.
இந்த வெற்றிக்கு, பாஜக சில அதிசயங்களைச் செய்ததாகக் கூறலாம் அல்லது எதிர்கட்சிகள் முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிட்டன என்றும் அவர் கூறுகிறார்.
ஊடகங்கள் வழியாக பாஜக மக்களின் இதயங்களில் இடம் பிடித்துவிட்டது. அது எதிர்கட்சிகளின் பலவீனத்தைக் காட்டுகிறது.
யோகி ஆதித்யநாத்தின் வெற்றி, அகிலேஷின் தோல்வி அல்ல
மூத்த பத்திரிகையாளர் ராகுல் தேவ் இந்த முடிவுகளை வித்தியாசமாகப் பார்க்கிறார். உ.பி-யில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாகவும் அகிலேஷ் யாதவ் தோற்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
அவர் தனது ட்விட்டரில், "பாஜகவிற்கு 50 இடங்கள் சமாஜ்வாதி கட்சிக்கு 75 இடங்கள் அதிகரித்துள்ளன. அரசியல் நாற்புறங்களில் இருந்து இப்போது இருமுனைகளுக்குச் சென்றுள்ளது. அதாவது, அறுதிப் பெரும்பான்மை மற்றும் பலமான எதிர்கட்சியைக் கொண்ட அரசாங்கம் என்று ஜனநாயக அமைப்பிற்கு ஆரோக்கியமான சமநிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகு, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜேவாலா, தீவிரமாக சுயபரிசோதனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
இது ஐந்து மாநிலங்களைப் பற்றியது மட்டுமல்ல என்று கூறிய அவர், 2024 மக்களவை தேர்தலுக்காக களத்தில் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார்.
காங்கிரஸ் தொண்டர் முதல் பெரிய தலைவர் வரை சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றார் சுர்ஜேவாலா. மேலும், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
"இந்த நாட்டு அரசியல் மதவெறி, சாதிப் பிரிவினை, இந்து-முஸ்லிம் பிரச்னை ஆகியவை எடுபடுமா அல்லது ஆக்கப்பூர்வமான அரசியல் எடுபடுமா?
நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுத்தோம். ஆனால், வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி எப்போதும் இந்தப் பிரச்னைகளுக்காகப் பாடுபடும்.
சரண்ஜித் சிங் சன்னியின் வடிவத்தில் சுத்தமான மற்றும் மென்மையான தலைமையை வழங்க பஞ்சாப் முயன்றது. ஆனால், நான்கரை ஆண்டுகளாக கேப்டன் அமரிந்தர் சிங்கின் பதவிக்கு எதிரான அலை அதிகமாக இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் மதப் பிரச்னைகளில் இருந்து தேர்தலை மாற்றி அடிப்படைப் பிரச்னைகளில் தேர்தலை நடத்த முயன்றோம். ஆனால், உணர்வுப்பூர்வமான பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
சோனியா காந்தி விரைவில் காரிய கமிட்டி கூட்டத்தைக் கூட்டுவார். தேர்தலில் தோற்றோம், ஆனால் தைரியத்தை இழக்க மாட்டோம். புதிய உத்தியுடன் திரும்புவோம்," என்று சூர்ஜேவாலா கூறினார்.
நீங்கள் இப்போது தான் எங்களுடன் நேரலையில் இணைகிறீர்கள் என்றால், உங்களுக்காக ஐந்து மாநில தேர்தல் நிலவரம் குறித்த ஒரு சுருக்கம்:
நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிக் கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவுள்ளேன்.
பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதையடுத்து கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆம் ஆத்மியின் வெற்றியை 'புரட்சி' என்று கேஜ்ரிவால் அழைக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் ஆம் ஆத்மி கட்சி தேசிய சக்தியாக உருவெடுத்துள்ளது என்றும் வருங்காலத்தில் காங்கிரஸுக்கு மாற்றாக இந்தக் கட்சி அமையும் என்றும் ராகவ் சத்தா கூறியுள்ளார்.
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசியபோது, "தேசிய அளவில் காங்கிரஸுக்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சி அமையும். கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளால் மட்டுமே பாஜகவுக்குச் சவால் விட முடியும்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் இணை-பொறுப்பாளர் ராகர் சத்தா, "நாடு முழுவதும் இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி மாதிரியை நோக்கியுள்ளது. பஞ்சாப் மக்கள் கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்," என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் போன்ற பாரம்பர்ய கட்சிகளின் சகாப்தம் பஞ்சாபில் முடிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் இதுவரை 54 இடங்களில் வெற்றி பெற்று 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்று, 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தராகண்ட், உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஐந்து மாநிலங்களிலும் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரானராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில், “மக்களின் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வென்றவர்களுக்கு வாழ்த்துகள்.
கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக, காங்கிரஸ் கட்சியினருக்கு என்னுடைய நன்றிகள்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் பற்றி விவரிக்கும் 10 புகைப்படங்கள் கொண்டு அவர் கடந்து வந்த அரசியல் பாதையை தொகுத்து வழங்கியுள்ளோம்.