You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் கடந்த 21ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தி வந்த நிலையில், அது முழுமையாக வியாழக்கிழமை கரையைக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நிவர் புயல் - அச்சுறுத்தல் நீங்கியது : பிபிசி நேரலை பக்கம் நிறைவு

    கடந்த ஐந்து நாட்களாக நிவர் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு நீடித்து வந்த அச்சுறுத்தல், அது வலுவிழந்து முழுமையாக கரையை கடந்ததன் மூலம் நீங்கியிருக்கிறது.

    எனினும், புயல் கரையை கடந்த போதும் அதன் பிறகும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்யும் பணியை தமிழக அரசும் புதுச்சேரி அரசும் முடுக்கி விட்டிருக்கின்றன.

    இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிவரை "பிபிசி தமிழ்" சிறப்பு நேரலை பக்கத்தில் பல்வேறு தகவல்களை வழங்கி வந்தது.

    இத்துடன் இந்த நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம்.

    இந்த பக்கத்தில் இணைந்திருந்ததற்காக நன்றி.

  2. நிவர் புயல் வலுவிழந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்

    அதி தீவிர புயல் நிவர், புதன்கிழமை 11.30 மணி முதல் வியாழக்கிழமை 2.30 மணிக்கு இடையே தீவிர புயலாக வலுவிழந்து முழுமையாக கரையை கடந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சென்னையில் இன்று காலை 4.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவிழக்கும்" என்று அவர் கூறினார்.

    இதன் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் வீசக்கூடும். புயல் இன்னும் தமிழக பகுதியிலேயே இருக்கிறது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  3. நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்தது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

    வங்க கடலில் உருவான நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துள்ளதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    அதி தீவிர நிலையில் இருந்த நிவர் புயல், தற்போது தீவிர புயலாக வலுவிழந்து நிலப்பகுதியில் கரையை கடந்துள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் அதிகாலை 4 மணியளவில் கூறினார்.

    புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் நிலப்பகுதியை எட்டியது. புயல் முழுவதும் கரைப்பகுதியை எட்டி விட்டதால் அது முழுமையாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    11.30 மணி முதல் 2.30 மணி வரையிலான நேரத்தில் இந்த புயல் முழுமையாக நிலத்தில் கரையை கடந்திருக்கிறது என்று தன்னிடம் வானிலை மைய அதிகாரிகள் குறிப்பிட்டதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

  4. நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருகிறது

    நிவர் புயல் தீவிர நிலையாக வலுவிழந்த நிலையில், அதன் மையப்பகுதி புதுச்சேரியில் கரையை கடந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கு முன்பாக புதுச்சேரி, காரைக்கால், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் பெய்து வந்த மழையின் வேகமும் குறைந்து காணப்படுகிறது.

    அதி தீவிர நிலையில் புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் புயலின் முன்பகுதி கரையை தொட்ட நிலையில், அதன் மையப்பகுதி 2.30 மணிக்கு கரையை அடைந்தபோது தீவிர நிலை ஆக வலுவிழந்தது.

    வானிலை மையம் கடைசியாக வெளியிட்ட தகவலின்படி புயலின் வேகம் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் கரையை கடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதே வேகத்தில் புயலின் மையப்பகுதி புதுச்சேரியில் கரையை கடந்து வருகிறது.

    புயல் வலுவிழந்ததையடுத்து தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மரக்காணத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையேதான் இந்த மையப்பகுதி கரையை கடந்துள்ளது. எனவே இந்த புயல் கரையை கடக்கும் திசை செய்யூர் நோக்கி போகலாம் என கருதப்படுகிறது. எனினும், அது காற்றின் திசையைப் பொறுத்து அமையும்.

    இனி இந்த புயலின் பின் பகுதி கரையை கடந்த பிறகுதான் அதன் தன்மைக்கு ஏற்ப இனி மழை எந்த அளவுக்கு பொழியும் என்பது தெரிய வரும்.

    முன்னதாக, விழுப்புரம் பாஞ்சாலம் பகுதியில் பலத்த காற்று காரணமாக சாலையில் பல இடங்களில் விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  5. நிவர் புயல்: தமிழகம், புதுச்சேரியை மிரட்டிய இயற்கை சீற்றம் - கள புகைப்பட தொகுப்பு

    நிவர் புயல் வியாழக்கிழமை அதிகாலையில் கரையை கடக்கும் நிலையில், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களின் முக்கிய சாலைகள் புதன்கிழமை பிற்பகலுக்குப் பிறகு வெறிச்சோடிக் காணப்பட்டன.விரிவாக படிக்க:

  6. "நிவர் புயல் அதி தீவிர நிலையில் இருந்து தீவிர புயலாக வலுவிழப்பு"

    நிவர புயல் அதி தீவிர நிலையில் இருந்து தீவிர நிலையாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதன்கிழமை இந்த புயல் தீவிர நிலையில் இருந்து அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து 20 கி.மீ தூரத்தில் புயலின் முன் பகுதி கரையை தொட்ட நிலையில், அதன் கண் பகுதியான புயலின் மைய சுழல் காற்றின் வேகம் காரணமாக கரையை கடப்பது தாமதமாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

    இந்த நிலையில், இந்த புயல் அதி தீவிர நிலையில் இருந்து தீவிர நிலையாக வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  7. "நிவர் புயல் கரையை கடப்பது தாமதமாகும்" - வானிலை ஆய்வு மையம்

    நிவர் புயல் கரையை கடப்பது மேலும் தாமதமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரிக்கு வடகிழக்கே 20 கி.மீ மற்றும் சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் தற்போது கரையை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. அதி தீவிர புயலின் வேகம் 16 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

    புயலின் மையப்பகுதி நகரும் தன்மை மிகவும் தாமதமாவதால் அது கரையை கடக்க கூடுதலாக 3-4 மணி நேரம் ஆகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயலின் கண் பார்வை சுழலும் நிலையில் காற்றின் திசை எதிர்ப்புறமாக இருப்பதால் இந்த தாமதம் ஏற்படுவதாக வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  8. நிவர் புயல்: 20 மாவட்டங்களில் மிதமான மழை - அமைச்சர் உதயகுமார்

    நிவர் புயல் கரையை கடந்து வரும் வேளையில், அதன் தாக்கம் காரணமாக மழை பொழியும் சாத்தியம் உள்ள மாவட்டங்களின் விவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலை தமிழக பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

    வியாழக்கிழமை காலை 2.10 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இனியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்று தெரிவித்தார்.

    மேலும் அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

    தமிழகம் முழுவதும் நிவர் புயலையொட்டி 3,000 தற்காலிக முகாம்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் கடலூர் மாவட்டத்தில் புயல் தாக்கத்துக்குப் பிந்தைய நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

  9. நிவர் புயல்: 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

    நிவர் புயல் கரையை கடந்து வரும் வேளையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    புதுச்சேரியில் கன மழை தொடரும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  10. நிவர் புயல்: விழுப்புரத்தில் வீட்டுச்சுவர் விழுந்து பெண் உயிரிழப்பு

    விழுப்புரம் மாவட்டம் கோனூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (37) உயிரிழந்தார்.

    நிவர் புயல் கரையை கடக்கும் வேளையில், அதன் தாக்கம் காரணமாக பெய்த கன மழை மற்றும் சூறைக்காற்றுக்கு மத்தியில் ராஜேஸ்வரியின் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் ராஜேஸ்வரி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

  11. நிவர் புயல்: சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை

    நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்து வரும் வேளையில் சென்னை, மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

    சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர பகுதி குடியிருப்புகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

    கடலூர் - புதுச்சேரி சாலையில் பல இடங்களில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை ஊழியர்களும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

  12. "மக்கள்-அதிகாரிகள் ஒத்துழைப்போடு புயலை எதிர்கொண்டோம்" - அமைச்சர் உதயகுமார்

    அதி தீவிர நிவர் புயலை மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்போடு எதிர்கொண்டுள்ளதாக தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அதிகாலை 1 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் ஒத்துழைப்புடனும், அர்ப்பணிப்புடன் கூடிய அதிகாரிகள் துணையுடனும் 100 சதவீத அளவுக்கு புயலை எதிர்கொண்டுள்ளதாக கூறினார்.

    சேதாரத்தின் நிலவரம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து நிலவரத்தை கேட்டு வருவதாகக் கூறிய அவர், சாலையில் விழும் மரங்களை ஒரு மணி நேரத்துக்குள்ளாக அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இரவிலேயே பழுதுபார்ப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதய குமார் கூறினார்.

  13. "நிவர் புயலின் கண் பகுதி புதுச்சேரியை கடக்க 1-2 மணி நேரமாகும்"

    "நிவர் புயலின் கண் பகுதி புதுச்சேரியை கடக்க 1-2 மணி நேரமாகும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது.

    சென்னையில் இருந்து தெற்கு - தென்மேற்கு திசையில் 110 கி.மீ, புதுச்சேரியில் இருந்து கிழக்கே 30 கி.மீ, கடலூரில் இருந்து கிழக்கு வடகிழக்கே 45 கி.மீ தூரத்தில் புயலின் மையப்பகுதி மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மணிக்கு 16 கி.மீ வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வருகிறது.

    மழை பொழிவைப் பொறுத்தவரை, நவம்பர் 25ஆம் தேதி காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை, கடலூரில் 227 மி.மீ, புதுச்சேரியில் 187, காரைக்காலி் 84, சென்னையில் 89, நாகப்பட்டினத்தில் 62 என்ற அளவில் மழை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  14. கடலூரில் பெரிய பாதிப்பு ஏற்படாதது மகிழ்ச்சி: சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி

    புயல் கரையை கடந்து வரும் நிலையில், கண் பகுதியாக கருதப்படும் மையப்பகுதி கடந்து வருதவாக கருதுகிறோம். இந்த நேரத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாதது மகிழ்ச்சி என்று சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுவரை எங்களுக்கு கிடைத்த தகவலின்படி கடலூரில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் சேதம் அடைந்ததாக தகவல் இல்லை என்று அவர் கூறினார்.

    10, 15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அவற்றை அகற்றி வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்கள், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளதாக சந்திரசேகர் சகாமூரி தெரிவித்தார். இதுவரை 53 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  15. கடலூர், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கன மழை

    கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்த இடங்களில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    கடலூரில் மின்சாரம் துண்டிப்பால் பல்வேறு பகுதிகள் இருளில் முழ்கியுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

    நெடுஞ்சாலைகள் வழியாக இந்த நகரங்களுக்கு வரும் வாகனங்கள் செங்கல்பட்டு சோதனைச்சாவடி பகுதியேலேயே காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  16. நிவர் புயல்: தற்போது எங்கு மையம் கொண்டிருக்கிறது?

    நிவர் புயல் நிலவரம்: கடலூருக்கு 50 கி.மீ, புதுச்சேரிக்கு 40 கி.மீ, சென்னைக்கு 115 கி.மீ தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கிறது.

    மணிக்கு 15 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

    தற்போது புயலின் முன்பகுதி கரையை தொட்டிருக்கிறது. கண் பகுதி கரையை தொட இன்னும் 3 மணி நேரம் ஆகும்.

    புயல் கரையை கடந்து முடிக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் வீசும்.

    புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை நாகப்பட்டினத்தில் 62 மி.மீ, காரைக்காலில் 84 மி.மீ, கடலூரில் 163 மி.மீ, புதுச்சேரியில் 149 மி.மீ, சென்னையில் 89 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. சென்னையில் மிதமான அளவுக்கு மழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  17. "நிவர் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்கும்"

    அடுத்த ஒரு மணி நேரத்தில் புதுச்சேரிக்கு வடக்கே 34 கி.மீ தொலைவில் உள்ள கடலோர நகரான மரக்கணம் அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

    இந்த புயல் முழுமையாக கடந்து செல்ல 3 முதல் 4 மணி நேரம் ஆகும். மேலும் அடுத்த இரண்டு தினங்களுக்கு புதுச்சேரி உட்பட வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என புவியரசன் கூறியுள்ளார்.

  18. புதுச்சேரியில் பலத்த மழை, நகர் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு

    புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

  19. சென்னை, காஞ்சிபுரத்தில் கன மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

    சென்னையில் தற்போதுவரை 8 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இரவு முழுவதும் மழை பொழியும் என்பதால் மழை அளவு மேலும் உயரும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரத்தில் கன மழை மட்டுமின்றி அதி கன மழைக்கான எச்சரிக்கை ஏற்கெனவே விடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி ஆகியவற்றில் கன மழை பொழிய வாய்ப்பிருக்கிறது.

    வாழை மரம், பப்பளி மரங்கள் போன்றவை கன மழை, பலத்த காற்று காரணமாக சாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று புவியரசன் கூறியுள்ளார்.

  20. நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தூரத்தில் கரையை கடக்கத்தொடங்கியது

    நிவர் புயல் புதன்கிழமை இரவு 10.50 மணியளவில் புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தூரத்தில் அதி தீவிர புயலாக கரையை கடக்கத் தொடங்கியிருக்கிறது.

    இதன் காரணமாக புதுச்சேரி, கடலூர், மரக்காணம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    புயல் கரையை முழுமையாக கடக்க குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகும்.