தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த
பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை கடலோர காவல்
படையினர் பறிமுதல் செய்தனர்.
நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில
பொருட்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் ப்ரீபெய்டு வகையைச்
சேர்ந்த துரையா என்னும் 'சாட்டிலைட் ஃபோன்'களை பயங்கரவாதிகள் எளிதில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகக்
கருதப்பட்டது. இதனால் இந்திய எல்லைக்குள் துரையா சாட்டிலைட் ஃபோன்களை பயன்படுத்த
அரசு தடை விதித்துள்ளது.
அதேநேரத்தில் இந்த ஃபோன்களை மற்ற நாடுகளில்
பயன்படுத்துவதற்குத் தடை இல்லை என்பதால் கப்பல்களில் மாலுமிகள் அவற்றை
வைத்திருப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்திய
எல்லைக்குள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. அதை மீறிப் பயன்படுத்தும்போது
அவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு 'ஓஜாஸ்
பிரைடு' என்ற பார்ஜர் கப்பல் கடந்த 27ஆம்
தேதி வந்தது. இதில் இந்தோனேசியாவை சேர்ந்த 3
பேர், இந்தியாவை சேர்ந்த 6
பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 மாலுமிகள் இருந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து கற்களை மாலத்தீவுக்கு
ஏற்றிச் செல்வதற்காக வந்திருந்த அந்தக் கப்பல், துறைமுகத்தின் வெளிப்பகுதியில்
நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலில் உள்ள ஒரு இன்ஜினில் பழுது
ஏற்பட்டதால் கப்பல் கேப்டன், பார்ஜர் கப்பலின் உரிமையாளர் மற்றும்
முகவரை தொடர்பு கொள்வதற்காக துரையா சாட்டிலைட் ஃபோனை பயன்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதைப் பயன்படுத்தியதன் சிக்னல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப
மையத்தில் பதிவானது.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் உடனடியாக
தூத்துக்குடி கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல்
கொடுத்தனர்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு கடலோர காவல் படையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த பார்ஜர் கப்பலில் தீவிர விசாரணை நடத்தி, தடை செய்யப்பட்ட
சாட்டிலைட் ஃபோனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.