You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிப்பூரில் நிலச்சரிவு - ராணுவத்தினர் உள்பட 18 பேரின் சடலங்கள் மீட்பு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பிரதேச ராணுவப்படை வீரர்கள் உட்பட பலர் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இது வரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 18 பேர் வரை இறந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. புதையண்ட மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
- ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்டு தஞ்சாவூர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டு காணாமல்போன பைபிள் ஒன்று லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
- "நூபுர் ஷர்மா மொத்த இந்தியாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- இலங்கையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- நடப்பாண்டு ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1.44 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டை விட 56 சதவீதம் அதிகம்.
- ஜிஎஸ்டியில் கடுமையான பிறவிக் குறைபாடுகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இது மேலும் மோசமாகிவிட்டது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் கோபமும் வெறுப்பும் நிறைந்த சூழல் ஏற்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதற்கு மோதி, அமித் ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ் இதை உருவாக்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
- சென்னையில் வரும் 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மணிப்பூர் நிலச்சரிவு: 18 சடலங்கள் கண்டுபிடிப்பு - மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை தீவிரம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பிரதேச ராணுவப்படை வீரர்கள் உட்பட பலர் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்குள்ள நோனி மாவட்டத்தில் உள்ள ஆற்றில் இருந்து உடல்களை எடுக்க அகழ்வுப்பணிகளை மேற்கொள்ளும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை இரவு துபுல் யார்டு ரயில்வே கட்டுமான தளத்திற்கு அருகே 107ஆவது பிரதேச ராணுவ படையணியின் முகாம் உள்ளது. அங்குதான் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்ப்டடுள்ளது. ஏற்கெனவே சம்பவ பகுதியில் இருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 15 பேர் ராணுவ சிப்பாய்கள் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் அரசு அதிகாரிகள் கூறுகையில், வழக்கமாக நிலச்சரிவு ஏற்படும்போது இடிபாடுகளின் குவியல்களுக்கு அடியில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். அதனால் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.
மணிப்பூர் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.எம்.கான் பிபிசியிடம் பேசுகையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடம் ஈரமான மண் வளம் கொண்ட பகுதி என்பதால் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள்.
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் பிபிசியிடம் பேசுகையில், குப்பைகள் மண் சேறு போல இருப்பதால், பெரிய இயந்திரங்களைக் கொண்டு மீட்புப் பணியை திறம்பட செய்ய இயலவில்லை. நாளை மற்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கு மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயம். அப்படி நடந்தால் மீட்பு பணி முற்றிலுமாக நிறுத்தப்படும் சூழல் உள்ளது என்று கூறினார்.
இந்த நிலையில், 20 மீட்டர் கொள்ளளவு கொண்ட இடிபாடுகளில் ஆட்களைக் கண்டறிய வெளிநாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் கனமழையின் போது இந்த நுட்பம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார்.
இந்த பகுதியில் நடைபெற்று வந்த ரயில்வே திட்டத்தில் வெளியூர் தொழிலாளர்களும் பணிபுரிந்ததாக உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர். அவர்களின் பெயர்கள் அல்லது ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே, உள்ளூர் அரசு நிர்வாகம் கூறுவதை விட காணாமல் போனவர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோபி நூற்பாலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்
கோபியில் உள்ள தனியார் நூற்பாலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில் செயல்படும் ஒரு தனியார் நூற்பாலையில் 150 க்கும் மேற்பட்ட ஒடிஷா,ஜார்கன்ட் உள்ளிட்ட வடமாநில ஆண்களும் பெண்களும் பணி செய்து வருகின்றனர் .
கடந்த சிலதினங்களுக்கு முன்னர் இங்கு பணிபுரிந்து வந்த ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் காணாமல் போனதாக வடமாநிலத்தொழிலாளர்கள் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனைத்தொடந்து புகாரின் மீது வழக்கு பதிவு செய்து காணாமல் போன தொழிலாளி கசரப் எனபவரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆலை நிர்வாகம் காணாமல் வட மாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறி, அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்டவடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை ஆலை நிர்வாகம் பணிக்கு திரும்ப கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் செல்லவில்லை. இதையடுத்து, நூற்பாலை நிர்வாகம் உள்ளூர் வேலையாட்கள் சிலரைக்கொண்டு ஆலையை தொடர்ந்து இயக்கி வந்துள்ளனர்
இதையடுத்து, வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆலை நிர்வாகம் நடத்திய பேச்சு வார்த்தையில் கலைந்து சென்றனர் .
200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கருவிகள் தயாரிக்கும் கேரளா கிராமத்தினர்
லண்டனில் கண்டறியப்பட்டுள்ள தமிழின் முதல் பைபிள் - 2005ல் காணாமல் போனது
ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்ட, தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல்போன பைபிள் லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் காட்சியகத்தில் தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2005ஆம் ஆண்டில் அந்தப் புத்தகம் காணாமல் போனது.
தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் உள்ள ஒரு சேகரிப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள சாக்ஸோனியில் பிறந்த பார்த்தலோமியோ ஸீகன்பால்க், 1706ஆம் ஆண்டு செப்டம்பரில் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார். விரைவிலேயே அங்கு ஒரு அச்சகத்தை நிறுவிய அவர் தமிழ் மொழி, இந்திய மதம், கலாச்சாரம் குறித்த புத்தகங்களை வெளியிட்டார்.
கடந்த 175ல் புதிய ஏற்பாடு இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இது அங்கிருந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அங்கிருந்த பாதிரியார்களில் ஒருவரான ஸ்வார்ட்ஸ் பாதிரியா், தஞ்சாவூரின் அரசராக இருந்த துளஜி ராஜா சரபோஜியிடம் இதன் பிரதி ஒன்றைக் கொடுத்தார். இந்தப் பிரதி, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தஞ்சாவூரில் இருந்த சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
டைனோசர்களின் பிறப்புறுப்பும் உடலுறவும் - விலகாத மர்மங்களுக்கான சில பதில்கள்
'ஜிஎஸ்டியில் பிறவிக் குறைபாடு: 5 ஆண்டுகளில் மேலும் மோசம்' - ப.சிதம்பரம்
ஜிஎஸ்டி ஐந்தாவது பிறந்தநாளை "கொண்டாடுகிறது. ஆனால், கொண்டாட எதுவும் இல்லை. ஜிஎஸ்டியில் கடுமையான பிறவிக் குறைபாடுகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது இன்னும் மோசமாகிவிட்டன என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், 'தற்போது நடைமுறையில் உள்ளது ஜிஎஸ்டி என்று அழைத்துக்கொள்ளப்படுவது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு திட்டமிட்டதல்ல. இதை காங்கிரஸ் தெளிவுபடுத்த விரும்புகிறது.
ஜிஎஸ்டி 2.0 அவர்களின் (பாரதிய ஜனதா கூட்டணி) 2019 தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஜிஎஸ்டியில் மோசமான பிறவிக் குறைபாடுகள் இருக்கிறது. இது கடந்த 5 ஆண்டுகளில் மோசமாகிவிட்டது.' என்றார்.
மேலும், 'ஜிஎஸ்டி சட்டங்களும் அவற்றை செயல்படுத்தும் விதமும் "பொருளாதாரத்தை சிதைத்துவிட்டன" என்றும், இதை மாற்ற காங்கிரஸ் கட்சி முயற்சிக்கும்.' என்றார்.
பணமதிப்பு நீக்கம் இந்த அரசின் முதல் "துக்ளக் பாணி'' என்றும், சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டாவது. இரண்டுமே பொருளாதாரத்தை பாதித்துள்ளது. என்றார் ப.சிதம்பரம்.
இந்தியாவில் ஜிஎஸ்டி 56 சதவீதம் அதிக வசூல் - ஜூன் மாதம் ரூ. 1.44 லட்சம் கோடி
நடப்பாண்டு ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1.44 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டை விட 56 சதவீதம் அதிகம் வசூலாகியுள்ளது.
இந்தி்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்திருப்பதாவது, '2022ம் ஆண்டு ஜூன் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருவாய் ரூ. 1.44 லட்சம் கோடியாக உள்ளது.
இதில், மத்திய ஜிஎஸ்டி ரூ.25,306 கோடி மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடியாக உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.75,887 கோடி, செஸ் வரி ரூ.11,018 கோடி. கடந்த ஏப்ரல் மாத வசூல் ரூ.1,67,540 கோடியாக இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக 2022 ஜூன் மாதத்தில் 2-வது அதிகபட்ச ஜிஎஸ்டி மொத்த வசூல் ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.92,800 கோடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது மொத்த ஜிஎஸ்டி வருவாய் 56% அதிகமாகியுள்ளது.' என்று தெரிவித்துள்ளார்.
புதிய தொழிலாளர் சட்டம் 2022: பணிநேரம் முதல் பிஎஃப் வரை இனி என்ன ஆகும்?
'இந்தியாவில் கோபமும் வெறுப்புமான நிலை' - ராகுல் காந்தி
இந்தியாவில் கோபமும் வெறுப்பும் நிறைந்த சூழல் ஏற்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தியின் அலுவலகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி அங்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முன்னதாக ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்தியாவில் கோபமும் வெறுப்பும் நிறைந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை, பிரதமர், உள்துறை அமைச்சர், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் இந்த நிலையை உருவாக்கியுள்ளனர். இது இந்திய மக்களின் நலனுக்கு எதிரானது.' என்றார்.
மேலும், 'வெறுப்பு, ஆத்திரத்தில்பிரச்சனைகளை தீர்ப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை. சமூகங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தி, மக்களை ஒன்றிணைப்பதை தொடர்ந்து செய்வோம்.' என்றார்.
தேனியில் முறைகேடாக பட்டா: வட்டாட்சியர் பிணை மனு தள்ளுபடி
பெரியகுளத்தில் அரசு நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வட்டாட்சியர் பிணை வழங்க கோரிய மனுவை வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரூ. 700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம், அதிமுக பிரமுகர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்டோருக்கு முறைகேடாக பட்டா மாற்றப்பட்டதாக, அன்னப்பிரகாஷ், பெரியகுளம் ஆர்டிஓ ஆனந்தி, ஜெயப்பிரதா, வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணை வட்டாட்சியர் மோகன்ராம் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்க கோரி வட்டாட்சியர் மோகன்ராம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன், முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், 'தலைமறைவான அதிகாரியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, 'எத்தகைய சிறப்பு விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுமக்களுக்கு மேலான சேவையை வழங்குவது இல்லை. குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் இருப்பது போல் தெரிகிறது. அரசின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை' எனக் கூறி வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பரவல் எண்ணிக்கை 2,000ஐ கடந்துள்ளது -அமைச்சர் மா. சுப்பிரமணியன்
உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் 5 பேர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்?
இந்தியாவில் இன்று முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை தெரியுமா?
திரெளபதி முர்மூவுக்கு ஆதரவு தர ஷரோமணி அகாலி தளம் முடிவு
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மூவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக ஷிரோமணி அகாலி தளம் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் சண்டீகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீக்கிய சமூகத்தினருக்கு இழைத்த அட்டூழியங்களுக்காக நாங்கள் ஒருபோதும் காங்கிரஸுடன் செல்ல மாட்டோம் என்று கூறினார்.
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியம்: பொது நல வழக்கு தள்ளுபடி
தூத்துக்குடி, புளியங்குளம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்கக் கோரிய வழக்கில், இது அரசின் கொள்கைகொள்கை முடிவு எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த குமரகுருபரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "பழமை வாய்ந்த பாண்டியராஜன் கோவிலில் பூசாரியாகவும், விவசாயமும் செய்து வருகிறேன். ஆதிச்சநல்லூர் அகழாய்வு இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் பழங்கால பாரம்பரியம் தொடர்பான விவரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் சான்றாக உள்ளது.
சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரும், பழமையான பாண்டியராஜா கோவிலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்காக தேர்வு செய்த இடம், அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அகழாய்வு நடந்த இடத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்படுவதை தொல்லியல் துறையின் விதிகள் உறுதிப்படுத்துகிறது. அருகிலேயே அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 500 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அருங்காட்சியகம் அமைக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே புளியங்குளம் கிராமத்தில் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வு, 'இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது' எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
சென்னையில் வரும் 4ம் தேதி உலக முதலீட்டாளர் சந்திப்பு - தங்கம் தென்னரசு
சென்னையில் வரும் 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " உலக அளவில் திறன் மேம்பாட்டில் தமிழ்நாடு உந்து சக்தியாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் 94, 975 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலம் 2.25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
132 தொழில் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 78 நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இன்னும் பல உலகளாவிய நிறுவனங்களின் முதலீட்டுகளை பெறும் வகையில் வரும் 4ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் மூலம் மேலும் பல நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம், புதிய வேலை வாய்ப்பு ஏற்படும்.'' என்றார்.
ராக்கெட்ரி: நம்பி விளைவு - திரைப்படம் எப்படி இருக்கிறது?
"நூபுர் ஷர்மாவின் பேச்சு மொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது" - உச்ச நீதிமன்றம்