நிகாத் ஜரீன்: உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை

குத்துச்சண்டை மகளிர் உலக சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகத் ஜரீன் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, சித்துவுக்கு ஓராண்டு சிறை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 1988ம் ஆண்டு சாலையில் ஏற்பட்ட தகராறில் சித்து தாக்கியதில் ஒருவர் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கின் சீராய்வு மனுவை விசாரித்து இந்த தீர்ப்பை வழங்கியது ஏ.எம்.கன்வில்கர், எஸ்.கே.கௌல் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச். 2018ம் ஆண்டு இந்த வழக்கில் சித்து குற்றவாளி என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சிறைத் தண்டனையை ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    1988 டிசம்பர் 27ம் தேதி நடந்த இந்த தகராறில் அப்போது கிரிக்கெட் வீரராக இருந்த சித்து குர்னாம் சிங் என்பவரை தாக்கியதாகவும் பிறகு அவர் இறந்துவிட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் பாட்டியாலா செஷன்ஸ் நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஆனால், மேல் முறையீட்டு மனுவில் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் சித்துவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் வேண்டுமென்றே தாக்கி காயமேற்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில் 2018ல் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. குடும்பத்தினர் இதை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சித்து கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், சித்து கொலை அல்லாமல் மரணம் விளைவிக்க காரணமாக இருந்ததாக ஒரு பிரிவின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்று குடும்பத்தினர் கோரியதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

  2. தூத்துக்குடி காவல் நிலையத்தில் பெண் துன்புறுத்தல் - எஸ்.ஐ, 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்

    பெண்கள் மீதான தாக்குதல்

    பட மூலாதாரம், Getty Images

    காவல் நிலையத்தில் பெண்ணைத் தாக்கி, துன்புறுத்திய குற்றச்சாட்டில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது வீட்டில் கடந்த 4ம் தேதி, 10 பவுன் தங்க நகை மாயமானது. இது தொடர்பாக, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுமதி (40) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, கடந்த 7ம் தேதி பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய மூவரும் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மூவரும் சுமதியை கடுமையாக தாக்கி, துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து கடந்த 11ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜியிடம் சுமதி புகார் அளித்தார். விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல், மேல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல், பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 15ம் தேதி பெண் காவலர்கள் மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும், தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவிட்டார். முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலையையும் பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

  3. யுக்ரேன் போரால் உலகம் உணவு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் - எச்சரித்த ஐ.நா

  4. பேரறிவாளன் - வைகோ சந்திப்பு

    வைகோ - பேரறிவாளன் சந்திப்பு

    பட மூலாதாரம், MDMK

    படக்குறிப்பு, வைகோ - பேரறிவாளன் சந்திப்பு

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் பேரறிவாளன் இன்று சந்தித்து பேசினார்.

    இந்திய முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தார். இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரத்த உச்சநீதிமன்றம், அவரை விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.

    இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன், அற்புதம் அம்மாள் உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.

    அப்போது, வைகோவின் மகனும் மதிமுக தலைமை நிலையச் செயலாளருமான துரை வைகோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை பேரறிவாளன் நேற்று சந்தித்தார்

  5. இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்றதாக 40 பேர் கைது

  6. கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு - விசாரணைக்கு மதுரா நீதிமன்றம் அனுமதி

    மதுராவில் கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி சர்ச்சையில் மசூதியை அகற்றக் கோரும் வழக்கை விசாரணைக்கு ஏற்க மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி சர்ச்சை குறித்து கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர வாதிகளுக்கு உரிமை இல்லை என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. கீழ் நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது என்று நீதிமன்றம் தற்போது கூறி, முந்தைய உத்தரவிற்கு தடை விதித்துள்ளது என்று வழக்குரைஞர் முகேஷ் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. சிதம்பரம் பொன்னம்பலம் ஏற அனுமதி - அறநிலையத் துறை

    சிதம்பரம் நடராஜர் கோயில்
    படக்குறிப்பு, சிதம்பரம் நடராஜர் கோயில்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனப்படும் பொன்னம்பலம் மீது ஏறி பக்தர்கள் வழிபட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை என்று கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை ஏற்று கனகசபை மீதேறி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    'தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கீழே நின்று தரிசனம் செய்யும் போது, சிற்றம்பல மேடை மீது நிற்கும் பக்தர்களால் இடையூறு ஏற்படுவதால், அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டிருந்தது. மேலும் சிற்றம்பல மேடை மீது பணம் வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட சிலரை மட்டும் அனுமதிப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனால் கோயிலுக்கு வரும் மக்கள் மற்றும் நிர்வாகத்தின் நலன் கருதி கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை மீது யாரையும் அனுமதிக்க கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதாக' இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் நிர்வாகத்தில் தெரிவித்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முற்பட்டபோது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர். இதுதொடர்பான வழக்கு சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது.

    அதனைத் தொடர்ந்து கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய, கோயில் தீட்சிதர்கள் தடை விதித்ததை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.என் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடுத்தார்.

    இதையடுத்து சிதம்பரம் கோயிலில் தொன்று தொட்டு பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் படி, பக்தர்கள் தரிசனம் செய்திட அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத்துறை ஆணையிட்டுள்ளது.

  8. இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் - ரணில் விக்ரமசிங்க

    ரணில் விக்ரமசிங்க

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் எதிர்வரும் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று (19) அறிவித்தார்.

    இதன்படி, மக்களுக்கு நாளாந்தம் உணவை பெற்றுக்கொள்வதற்கு கடும் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

    உலகம் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாகவும், அதற்கு முகம் கொடுக்க தாம் தயாராகி வருவதாகவும் அமெரிக்க நிதி அமைச்சரை மேற்கோள்காட்டி ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார்.

    இவ்வாறு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளதாக அவர் சபையில் குறிப்பிட்டார்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவு கிடைக்காமல் போவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

    எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ''எதிர்வரும் இரண்டு வருடங்களில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம். அதற்கான நகர வேலைத்திட்டம் இருக்க வேண்டும். கிராமிய வேலைத்திட்டம் இருக்க வேண்டும். அது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. எதிர்வரும் போகத்திற்கு தேவையான உரத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எமக்கு டொலர் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் விவசாய போகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். விவசாய இயந்திரங்களுக்கு டீசலை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம். எனினும், பெரும் போகத்திற்கு முழுமையாகவே உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையான காலப் பகுதி தொடர்பிலேயே எமக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது" என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

  9. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை எம்.ஆர்.ஷோபனா தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  10. இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேர் கைது

    இலங்கை

    பட மூலாதாரம், SRI LANKA NAVY MEDIA

    இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வேறொரு நாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேர், இருவேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய கடற்பரப்பில் புதன்கிழமையன்று (மே 18ஆம் தேதி) நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    மட்டக்களப்பு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நீண்ட நாள் மீன்பிடி படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

    இதையடுத்து, கடற்படையினர் குறித்த படகை சுற்றி வளைத்து, சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

    இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட படகில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடொன்றிற்கு பயணிக்க முயற்சித்தவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறுகிறது.

    ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு பேரும், 12 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 17 ஆண்களும், பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    களுவாஞ்சிகுடி கடற்பரப்பில் நடத்தப்பட்ட மற்றுமொரு சுற்றி வளைப்பில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

    இந்த சுற்றி வளைப்பில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இருவரும், 20 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட 17 ஆண்களும், 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆட்கடத்தல் செய்பவர்கள் அடங்குவதுடன், சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேருமாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

  11. ஞானவாபி மசூதி பற்றி வாரணாசி நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கவேண்டாம்: உச்ச நீதிமன்றம்

    ஞானவாபி மசூதி பற்றி வாரணாசி நீதிமன்றம் ஆணை ஏதும் பிறப்பிக்கவேண்டாம் என்றும் நாளை வெள்ளிக்கிழமை இது பற்றி தாங்கள் விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாரணாசி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட வீடியோ சர்வே அறிக்கை வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. காசிவிஸ்வநாதர் கோயில் - ஞானவாபி மசூதி வளாகத்தில் மே 14, 15, 16 தேதிகளில் நடத்தப்பட்ட வீடியோ சர்வே அறிக்கையை சிறப்பு வழக்குரைஞர் ஆணையர் விஷால் சிங் தாக்கல் செய்தார் என்று இந்து தரப்பு வழக்குரைஞர் மதன் மோகன் யாதவ் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

  12. வேண்டாத கழிவுப்பொருட்களை கலைப்பொருளாக மாற்றும் இவர் யார்?

    வீணானது என்று தூக்கி எறியப்படும் பொருட்களிலிருந்து அலங்கார பொருட்கள் செய்து வருகிறார் நெல்லையைச் சேர்ந்த திம்மராஜு. கடந்த 10 ஆண்டுகளாக இதைச் செய்து வரும் அவருக்கு, எங்கிருந்து தொடங்கியது இந்த யோசனை? தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.

    காணொளிக் குறிப்பு, உங்களுக்கு கழிவுப்பொருள் இவருக்கு கலைப்பொருள்
  13. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு

    சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று மேலும் ரூ. 3.50 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்மூலம், தற்போது ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,003 ஆகவுள்ளது.

    இம்மாதம் 7 ஆம் தேதி, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது.

    அதற்கு முன்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. நெல்லை கல்குவாரி விபத்து - ஐந்தாவது நபர் சடலமாக மீட்பு, பிரபுராவ் ஆனந்தன்

    நெல்லை கல்குவாரி விபத்து

    திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்தவர்களில், ஐந்தாவது நபர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், ஆறாவது நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் குவாரியில் கடந்த 14ம் தேதி சனிக்கிழமை இரவில் திடீர் பாறைச்சரிவு ஏற்பட்டது.

    இதில் ஆறு தொழிலாளர்கள் கல்குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    மாலையில் மூன்றாவதாக ஆப்பரேட்டர் செல்வம் மீட்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இரண்டாம் நாள்,திங்கட்கிழமை காலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தேடத் தொடங்கிய நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பின் இரவில் ( லாரி கிளீனர் ) முருகனை சடலமாக மீட்டனர். இதனால் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.

    தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் ஐந்தாவது நபரின் உடல், பாறை குவியலுக்குள் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. மீட்கப்பட்ட நபரின் உடையில் இருந்து எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம், மணிபார்ஸ், அவர் அணிந்திருந்த உடை இவற்றை கொண்டு உறவினர்கள் சடலமாக மீட்கப்பட்டவர் செல்வகுமார் என உறுதி செய்தனர்.

    கல்குவாரியில் சிக்கி இருக்கும் ஆறாவது நபர் ராஜேந்திரனை, மீட்கும் பணி ஐந்தாவது நாளாக இன்று காலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  15. முள்ளிவாய்க்காலில் எங்கும் காணப்படும் ராணுவத் தடுப்புகள், துணிச்சலான பெண்கள் - செய்தியாளரின் குறிப்பு

    முள்ளிவாய்க்கால்

    முள்ளிவாய்க்காலில் வசித்தால் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருப்பதாகத்தான் பொருள்.

    பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு அருகிலேயே சிறியதும் பெரியதுமாக பல ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இவை தவிர சிறிய கண்காணிப்புக் கோபுரங்களும் ஆங்காங்கே உண்டு.

    இத்தகைய கட்டுப்பாடுகளால் ராணுவத்துக்குத் தெரியாமல் பெரிய கூட்டங்களைச் சேர்க்கவோ, பயணம் மேற்கொள்ளவோ இங்கிருப்பவர்களால் இயலாது.மேலும் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

  16. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை காலை தீர்ப்பளித்தது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.
    • மத்தியப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    • மாநில மின் உற்பத்திக் கழகங்கள் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும் என்று இந்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் பாஸ்கரராமன் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது.
    • இலங்கையில் முள்ளிவாய்க்கால் போர் நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இலங்கை நெருக்கடியை பயன்படுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு குழு அழுத்தம் தர முயற்சிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்ட நிவாரணப் பொருட்கள் புதன்கிழமையன்று அனுப்பி வைக்கப்பட்டன.தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.