ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஜலோரி கேட் பகுதியில் நேற்றிரவு இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணைய சேவையை துண்டித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்றிரவு அப்பகுதியில் ஒரு சமூகத்தினர் பரசுராம் ஜெயந்தியை முன்னிட்டு ஏற்றிய கொடியை, மற்றொரு சமூகத்தினர் அகற்றி தங்கள் கொடியை ஏற்றி, ஒலிபெருக்கியை பொருத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தும், தடியடியும் நடத்தி அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த மோதலில்,காவல் துணை ஆணையர் உட்பட காவல் துறையை சேர்ந்த இருவர் மற்றும் செய்தியாளர் ஒருவர் என மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து திரும்பினர்.
இதையடுத்து, இன்று காலை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஜோத்பூர் காவல் ஆணையர் நவ்ஜோதி கோகாய், "அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையை சேர்ந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம், குறித்து விசாரித்து வருகிறோம்" என தெரிவித்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
"கொடி ஏற்றுவதில் சர்ச்சை எழுந்த நிலையில், இன்று காலை அக்கொடியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தேசிய கொடியை மாவட்ட நிர்வாகம் ஏற்றியது" என சம்பவ இடத்தில் இருந்த பெயர் தெரிவிக்க விரும்பாத செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள மாநில முதலமைச்சர் அசோக் கெலோட், "இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது, அனைவரும் அமைதிகாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.