You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவிடமிருந்து மேலதிக கடன் பெற எதிர்பார்த்துள்ளோம் - இலங்கை அமைச்சர்
(இன்றைய (மே 3) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்முதலுக்காக கிடைக்கப்பெறும் கடனுதவி தொகைக்கு மேலதிகமாக கடன் தொகையை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை மின்சாரம் மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், "எரிபொருள் கொள்வனவிற்காக செலவாகும் டொலர் பெறுமதி ஒவ்வொரு மாதமும் அதிகரித்த வண்ணம் உள்ளதே தவிர குறைவடையவில்லை. இம்மாதத்திற்கு தேவையான எரிபொருள் இறக்குமதிக்கு 580 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவிற்காக கிடைக்கப் பெற்ற 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 400 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளன. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருளுக்காக கிடைக்கப்பெறும் கடனுதவி தொகையை 750 மில்லியன் டொலர்களாக அதிகரித்துக்கொள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1.2 பில்லியன் டொலர்களை வழங்குவதாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு கிடைக்கப் பெறவில்லை" என்றார்.
"அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை"
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளதாக 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தியா இலங்கைக்கு பல்வேறு உதவி ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது.
நிதி ரீதியாகவும் எரிபொருள் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு வழங்கி வருகின்றது.
அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அந்தவகையில் அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு எதிராக கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என நாம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அது தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை தான், ஆனால், சிறைத்தண்டனை அனுபவிப்பதற்காக எந்த ஒரு இந்திய மீனவரும் இலங்கைக்கு வருவதில்லை. தொழில் செய்வதற்காக அவர்கள் வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும்" என்றார்.
புரட்சிக்கு தமிழர்களும் உறுதுணையாக நில்லுங்கள் - சுமந்திரன்
கொடுங்கோலாட்சியாலர்களை விரட்டியடிக்கும் இன்றைய போராட்டத்தில் ஒதுங்கி நிற்பது முட்டாள்தனமான செயற்பாடு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "இந்த ஆட்சி முடிவுற வேண்டும் என, நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களை பொறுத்தவரையில் எவருமே ஆட்சிபீடம் ஏறக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். 20225 ஆம் ஆண்டு வாக்களிப்பில் தமிழ் மக்கள் கலந்துகொள்ளவில்லை, எனினும் ஏனைய சகல சந்தர்ப்பங்களிலும் ராஜபக்ஷர்களுக்கு எதிராகவே தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
எனவே, நாட்டில் மாற்றங்களுடன் நாம் இணைந்து செயற்பட வேண்டும். அட்டூழியம் ஒன்று இடம்பெறுகின்ற போதும், ஒடுக்குமுறை ஒன்று இடம்பெறுகின்ற போதும் நடுநிலை வகிப்பதோ அல்லது ஒதுங்கி நிற்பது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல. ஆகவே, இன்று இந்த கொடுங்கோல் ஆட்சியை நீக்க வேண்டும் என்ற மக்கள் புரட்சி உருவாகியுள்ளது. அந்த முயற்சிக்கு உறுதுணையாக செயற்பட வேண்டிய பாரிய தார்மீக பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு" என்றார்.
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு - மாவட்டம் முழுவதும் ஷவர்மா கடைகள் மூடல்
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழந்ததாக, குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாவட்டம் முழுதும் ஷவர்மா கடைகள் மூடப்பட்டுள்ளதாக, 'தினத்தந்தி' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் கசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி தேவானந்தா. 16 வயதான தேவானந்தா கரிவெள்ளூர் பகுதியிலுள்ள உயர்நிலை பள்ளியில் பயின்று வந்தார்.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை தனது பள்ளி நண்பர்களுடன் பள்ளிக்கூடம் அருகே அமைந்திருந்த ஐடியல் என்ற குளிர்பான கடையில் தேவானந்தா ஷவர்மா சாப்பிட்டுள்ளார்.
ஆனால், ஷவர்மா சாப்பிட்ட மாணவி தேவானந்தா உள்ளிட்ட அவருடன் சென்றவர்களுக்கும் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, கசரக்கோடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி தேவானந்தா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கெட்டுப்போன ஷவர்மாவை வாடிக்கையாளர்களுக்கு குளிர்பான கடை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் முகமது தற்போது மத்திய கிழக்கு நாட்டில் உள்ளார். இந்த விவகாரத்தை தொடர்ந்து முகமதுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதேபோல், ஷவர்மாவை தயாரித்த நேபாளத்தை சேர்ந்த நந்தேஷ் ராய் மற்றும் கடையை நிர்வகித்து வந்த அனாஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உணவுக்கடைகள், குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேவேளை, கசரக்கோடு மாவட்டம் முழுவதிலும் உள்ள ஷவர்மா கடைகளை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என திமுக அரசு விரைவில் பெயரை மாற்றும் - ஜெயக்குமார் விமர்சனம்
தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என திமுக அரசு விரைவில் பெயரை மாற்றும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரூ.5 கோடி நில மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் 6-வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலை தேசிய அளவில் பிரபலமானது. காஷ்மீரில் இருப்பவருக்கு கூட தெரியும். கிழக்கு கடற்கரை சாலை என்பதே நல்ல அழகான பெயர். இதற்கு கருணாநிதியின் பெயரை வைக்கின்றனர். புதிய திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைத்துக்கொள்ளவதில் தவறில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்களை மூடிவிட்டு, கருணாநிதி பெயரில் புதிய உணவகத்தை திறக்க திட்டமிட்டுள்ளனர். கூடிய விரைவில் தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என பெயரை மாற்றவும் வாய்ப்புள்ளது" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்