You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இலங்கை தமிழர்கள் விவகாரம்: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு மீண்டும் ஸ்டாலின் கடிதம்

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. அம்பேத்கருடன் பிரதமர் மோதியை ஒப்பிட்ட இளையராஜா

    பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

  2. கோடநாடு கொலை வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை

    கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பந்தமாக தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புதிதாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே காவல்துறையினர் சசிகலாவின் உறவினர் விவேக் உட்பட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    தற்போது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  3. யுக்ரேன் தலைநகர் கீயவில் தாக்குதல்கள் தீவிரமடையும் - ரஷ்யா எச்சரிக்கை

    யுக்ரேன் தலைநகர் கீயவில் ரஷ்யப்படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இத்தகைய தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேற்று ரஷ்யாவின் போர் கப்பலை தாக்கியதாக யுக்ரேன் தெரிவித்திருந்தது. இதனை யுக்ரேனிய "தீவிரவாத தாக்குதல்கள்" அல்லது "நாச வேலைகள்" என தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அதற்கு பதிலடியாக கீயவில் தாக்குதல்கள் தீவிரமடையும் என எச்சரித்துள்ளது.

    கடல் சார்ந்த கப்பல் ஏவுகணைகள் மூலம் கீயவில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கப்பல் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்கும் தொழிற்சாலை ஒன்றை இரவில் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    இத்தாக்குதலால் தொழிற்சாலையின் "உற்பத்தி மற்றும் நீண்ட மற்றும் நடுத்தர தொலைவிலான வான் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பழுதுபார்க்கும் தொழிற்பட்டறைகள் அழிக்கப்பட்டதாக", அந்த அமைச்சகத்தின் டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சில ரஷ்ய நகரங்களை தாக்குவதற்காக எல்லைகளில் யுக்ரேன் ஹெலிகாப்டர்களை அனுப்புவதாக, வியாழக்கிழமை ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது.

    ரஷ்யாவின் இந்த கூற்றை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.

  4. இலங்கையில் வாகனங்களுக்கு இனி எரிபொருள் நிரப்புவதற்கு வரையறை கட்டணம்

    இலங்கையில் இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை வரையறுக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

    இன்று (ஏப். 15) நண்பகல் ஒரு மணி முதல் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிளுக்காக 1,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 1,500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கார், வேன் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சமாக 5,000 ரூபாவிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், லாரி, பஸ் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் வரையறை கிடையாது என பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.

  5. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா 'அகண்ட பாரதம்' ஆக மாறிவிடும் - மோகன் பாகவத்

    "அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா 'அகண்ட பாரதம்' ஆக மாறிவிடும்" என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் என, பிபிசி தமிழின் இந்த முகநூல் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

  6. கொழும்பில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்

    கொழும்பு - காலி முகத்திடலில் 7வது நாளாக தொடரும் தன்னெழுச்சிப் போராட்டத்தில், இன்று முதல் உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளார். 24 மணிநேர உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தம்மிக்க பிரசாத் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''கடந்த சனிக்கிழமை நியாயத்திற்கான நடைபவணி என்ற பெயரில் கட்டுவாபிட்டிய தேவாலயத்திலிருந்து, கொச்சிகடை தேவாலயம் வரை நடந்து வருகைத் தந்தேன். 38 கிலோமீட்டர் தூரத்தை 12 மணித்தியாலங்களில் வந்தடைந்தேன்.

    இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தியே இந்த நடைபவனியை ஆரம்பித்தேன். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 வருடங்கள் ஆகியுள்ளன. எனினும், இந்த தாக்குதலில் உயிரிழந்த 268 பேருக்கும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. அதற்கு நியாயத்தை கோரியே வருகைத் தந்தேன்.

    அதேபோன்று, நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுள்ள மக்களுக்கு நியாயத்தை கோரியே அந்த நடைபவனியை ஆரம்பித்தேன். இந்த இடத்திற்கு வருகைத் தருவதற்கும் அந்த இரண்டு விடயங்களே காரணம். அதுமாத்திரமன்றி, இளைஞர்களும் காரணமாக இருக்கின்றனர். பல நாட்களாக இந்த இடத்திலிருந்து நியாயத்திற்காக போராடி வருகின்றனர்.

    கிரிக்கெட் வீரர் என்ற விதத்தில் முன்னோக்கி சென்ற எனக்கு, இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தோன்றியது. விரைவில் நியாயம் கிடைக்கும் என நம்புகின்றேன்" என தெரிவித்தார்.

  7. மதுரவாயலில் பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு

    மதுரவாயலில் பாஜக பிரமுகர் காருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.

    சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவருடைய கார் தீப்பிடித்து எரிந்தது.

    இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், துணியை பெட்ரோலில் நனைத்து காரின் நான்கு பக்கங்களிலும் துடைத்து உள்ளார். அதன் பிறகு காரை தீ வைத்து கொளுத்துவதும் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு கட்சி ரீதியாக ஏதேனும் முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், நேற்று காலை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவின் போது கோயம்பேட்டில் சிலைக்கு மாலை அணிவித்தபோது விசிக - பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டு பாஜக பிரமுகருக்கு மண்டையில் காயமும் ஏற்பட்டது. இந்நிகழ்வில் சதீஷ்குமாரும் பங்கேற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஏதும் நடந்ததா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  8. கேஜிஎஃப் 2 திரைப்படம்: கொடுத்த வாக்கை காப்பாற்றியதா இரண்டாம் பாகம்?

    நடிகர் யஷ் நடித்து பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? ஊடகங்களின் மதிப்பீட்டில் இத்திரைப்படம் எப்படியிருக்கிறது என்பதை இக்காணொளியில் பார்க்கலாம்:

  9. நரிக்குறவ மாணவி வீட்டில் உணவருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள மாணவி ஒருவரின் வீட்டில் காலை உணவு உட்கொண்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருமுல்லைவாயல் பகுதியில் நரிக்குறவ மக்கள் வசிக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், நரிக்குறவ இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    முன்னதாக, நரிக்குறவ இன மாணவி ஒருவர், முதலமைச்சரை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தார். அவரும் வருவதாக உறுதியளித்திருந்தார்.

    அதன்படி, அம்மாணவி வீட்டுக்கு சென்ற முதலமைச்சர், மாணவியின் வீட்டில் தேநீர் அருந்தி, காலை உணவு உட்கொண்டனர். உணவு உட்கொண்ட முதலமைச்சர், உணவு காரமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், மாணவி ஒருவருக்கு உணவை ஊட்டியும் விட்டார்.

    மேலும், மாணவியின் குடும்பத்தார் முதலமைச்சருக்கு பாசி மணிகள், பூ ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினர்.

  10. என்ஐடி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - காவல்துறை விசாரணை

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடியை சேர்ந்த அவளாசௌமியா தேவி (20) என்ற மாணவி, கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக். சிவில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அவருடன் திருவாரூரை சேர்ந்த தீட்சனா என்ற சக மாணவி ஒருவரும் தங்கி கல்வி பயின்று வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியில் சென்றுள்ளார். அவளாசௌமியா தேவி மட்டுமே விடுதி அறையில் இருந்துள்ளார். இந்த நிலையில், வெளியில் சென்றிருந்த தீட்சனா நேற்று இரவு விடுதிக்கு திரும்பி வந்து அறையை பார்த்தபோது அறைக்கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும், சத்தம் கொடுத்துப் பார்த்தும் திறக்காததால் கொஞ்சம் பலமாக ஓங்கி உதைத்துள்ளார், அப்போது கதவு திறந்துள்ளது.

    உள்ளே அவளாசெளமியா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து தீட்சனா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துவாக்குடி காவல் நிலைய போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் மாணவி ஒருவரை காதலித்து வருவதும், இதனை இரு குடும்பத்தினரும் அறிவார்கள் என்றும் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  11. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை அ.தா.பாலசுப்ரமணியன் வழங்கிக் கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    இலங்கை மற்றும் யுக்ரேனில் இருந்து பல்வேறு செய்தியாளர்கள் வழங்கும் செய்திகளையும், தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்

  12. தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு

  13. சென்னை ஆவடி அருகே விஷவாயு தாக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

    சென்னை ஆவடி அருகே வீட்டில் உள்ள தரை தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வீட்டில் பத்து அடி ஆழமுள்ள குடிநீர் தண்ணீர் தொட்டி உள்ளது. தண்ணீர் தொட்டியில் தேங்கியிருந்த நீரை பணியாட்களை வைத்து நேற்று சுத்தம் செய்து உள்ளனர். இந்நிலையில் சுத்தம் செய்த தண்ணீர் தொட்டியில் மீண்டும் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் பிரேம் குமார் தேங்கியிருந்த நீரை வெளியேற்றுவதற்காக பத்து அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி பிரேம்குமார் தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற அவரது மகன் பிரவீன் குமாரும், அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் பிரமோத், சாரநாத் ஆகியோடும் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். இதனால், மூன்று பேருக்கும் விஷவாயு தாக்கி உள்ளது.

    இதில் தொட்டிக்குள் இருந்த பிரேம்குமார், பிரவீன்குமார் மற்றும் பிரமோத் உயிரிழந்தனர். சாரநாத் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  14. மதுரை கள்ளழகர் தீர்த்தவாரிக்காக செய்யப்படும் தோல் பைகள்

    மதுரை கள்ளழகர் தீர்த்தவாரிக்காக தண்ணீர் கொண்டு செல்லப் பயன்படும் தோல் பைகள் செய்வோர் பற்றிய காணொளி இது.

  15. 35,000 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும் "ராட்சத யானை" வால்நட்சத்திரம்

    இயல்பை விட 50 மடங்கு பெரிய கருப்பகுதியைக் கொண்ட ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    நாசாவின் ஹபிள் தொலைநோக்கி வால் நட்சத்திரத்தின் கருப்பகுதி பனிக்கட்டியின் நிறை சுமார் 500 டிரில்லியன் டன்கள் என்று கண்டறிந்துள்ளது. இது 137 கிலோ மீட்டர் அகலம் கொண்டது.மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

  16. இலங்கை பொருளாதார நெருக்கடி: யாழ்ப்பாண மீனவச் சமூகத்தின் தற்போதைய நிலை என்ன?

  17. யுக்ரேன் மீதான அதிக கவனம் கருப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடு - உலக சுகாதார நிறுவன தலைவர்

    வெள்ளை இன மக்களின் மனிதாபிமான அடிப்படையிலான அவரச உதவிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், இந்த உலகம் கருப்பின மக்களின் தேவைகளுக்கு அளிப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேனுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளில், மிகச் சிறிய அளவே பிற நாடுகளுக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் .

    யுக்ரேனுக்கு உதவுவது மிகவும் முக்கியமாக கருதப்படுவதாகவும், ஏனெனில், அது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஆனால், எத்தியோப்பியாவில் உள்ள திக்ரே மாகாணம், ஏமன், ஆப்கானிஸ்தான் அல்லது சிரியாவில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி அதே கவனத்தைப் பெறுவதில்லை என்றார்.

    "இந்த உலகம் உண்மையில் வெள்ளை இன மக்கள் மீது செலுத்தும் கவனம் போல கருப்பின மக்கள் மீதும் கவனம் செலுத்துகிறதா என்று எனக்குத் தெரியவில்லை", என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

  18. நேயர்களுக்கு வணக்கம்!

    வணக்கம் நான் ஷோபனா எம்.ஆர்.

    இன்றைய நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    • ஆந்திர மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் , ஏழு பேர் உயிரிழந்தனர்.
    • இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீது மத்திய அரசு கடந்த ஆண்டு விதித்திருந்த 11% இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.
    • விருதுநகரில் பெய்த கனமழையின் போது கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்தவர்களின் மீது இடி மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு
    • யுக்ரேன் மேரியோபோல் நகரில், அந்நாட்டை சேர்ந்த 1000 கடற்படை வீரர்கள் தங்களிடம் சரணடைந்து இருப்பதாக ரஷ்யா தெரிவித்தது. ஆனால், யுக்ரேன் இதனை மறுத்துள்ளது.
    • தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கவுள்ள தேநீர் விருந்தினை தமிழ்நாடு முதல்வரும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணிப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
    • ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க் முன்வந்துள்ளார்.
    • கர்நாடகா அமைச்சர் கே.எஸ்.ஈஷ்வரப்பா தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.