You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் - கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஷ்வரப்பா ராஜினாமா செய்ய முடிவு

கர்நாடகா அமைச்சர் கே.எஸ்.ஈஷ்வரப்பா தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நாளை முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. பாபாசாகேப் அம்பேத்கரின் இரண்டாவது திருமணம் பற்றிய கதை

  2. உ.பி மேலவைத் தேர்தல் - பிரதமர் மோதியின் வாரணாசி தொகுதியில் பாஜக தோற்றது ஏன்?

  3. விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை

    விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் நால்வரும் மதுரை கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஹரிஹரன் உள்ளிட்ட நால்வரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இளம்பெண்னை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவ்வழக்கில் கைதான ஜூனைத் அகமது, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஆணை பிறப்பித்துள்ளார்.

  4. விவசாயம் செழிக்க வேண்டி பொன் ஏர் திருவிழா

    விவசாயம் செழிக்க வேண்டி கோவில்பட்டி அருகே சிங்கிலிபட்டி கல்குமி கிராமத்தில் பொன் ஏர் திருவிழா நடைபெற்றது.

    ஆண்டு முழுவதும் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக சித்திரை மாதம் பிறந்ததும் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி பொன் ஏர் திருவிழா நடத்துவது கிராமப்புறங்களில் வழக்கம்.

    அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள சிங்கிலிபட்டி கல்குமி கிராமத்தில் பொன் ஏர் திருவிழா நடைபெற்றது. அக்கிராம விவசாயிகள் தங்கள் வீட்டு வாசலில் குத்துவிளக்கு ஏற்றி நிறைகுடம் தண்ணீர் வைத்து நவதானியங்களை குவித்து வைத்து விவசாய கருவிகளுக்கும் காளை மாடுகளுக்கும் சந்தனம், குங்குமம் பூசி, மாலையிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.

    அதன் பின்னர், சூரிய வழிபாடு செய்து அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் கிழக்குத் திசையில் உள்ள பொது நிலத்தில் உழவுப் பணிகள் செய்து நவதானியங்களை விதைப்பு செய்தனர். நிறைவாக விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்பி வரும்போது, கிராம எல்லையில் விவசாயிகளை பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர்.

  5. ஆலியாவை கரம்பிடித்த ரன்பீர்

    இந்தியாவின் பிரபல சினிமா கலைஞர்களான நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

  6. ராணுவத்தை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம் - பாகிஸ்தான் ஜெனரல் மேஜர்

    ராணுவத்தை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம் எனவும், ராணுவத்தை விவாதத்திற்கு வெளியே வைக்குமாறும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக மற்றும் பொதுமக்கள் தொடர்பு (PR) பிரிவான ஐஎஸ்பிஆரின் (ISPR) டைரக்டர் ஜெனரல் மேஜர் பாபர் இஃப்திகார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது, ​​​​இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா தலைமையில் கார்ப்ஸ் கமாண்டர் மாநாடு நடைபெற்றது எனவும், அம்மாநாட்டில் பாதுகாப்பு சவால்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

    அனைத்து பங்கேற்பாளர்களும் அரசியலமைப்பின் மேலதிகாரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்த ஒப்புக்கொண்டதாக அவர் கூறுகிறார். மேலும், ஜனநாயகத்தில் அரசியலமைப்புக்கு உட்பட்டு இயங்குவதே அனைத்து அமைப்புகளுக்கும் நல்லது என அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு எதிராக பிராசாரம் செய்யப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முன்னாள் அதிகாரிகளின் போலிச் செய்திகள் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.

    "அடிப்படையற்ற குணநலன் குறித்த விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என அவர் கூறினார். மேலும் இது, "சட்டத்திற்கு புறம்பானது, தார்மீகமற்றது, தேச நலனுக்கு எதிரானது" எனவும் தெரிவித்தார். நீதிமன்றங்களின் முடிவுக்கு விட்டுவிடுவது சிறந்தது என அவர் கூறினார்.

  7. 'பரியேறும் பெருமாள்' தங்கராசுவுக்கு புதிய வீடு கட்டித் தரப்பட்டது

    பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த தங்கராசு இடிந்த நிலையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் புதிய வீடு கட்டித் தரப்பட்டது. இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் அந்த வீட்டை தங்கராசுவிடம் ஒப்படைத்தனர்.

    நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசிப்பவர் தங்கராசு. கடந்த 40 வருடங்களாக தெருக்கூத்து கலைஞராக பெண் வேடமிட்டு ஆடி வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் அப்பாவாக நடித்துள்ளார்.

    பாளையங்கோட்டை மார்க்கெட் வாசலில் எலுமிச்சை வியாபாரம் செய்து வந்த இவர், கொரோனா காலத்தில் வியாபாரம் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளானார். இளங்கோ நகரில் அவர் வசித்து வந்த வீடு மழையில் இடிந்து விழும் நிலையில் இருந்தது.

    இதுகுறித்து செய்தி வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அதிகாரிகளை தங்கராசு வீட்டுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இடியும் நிலையில் இருந்த பழைய வீட்டுக்கு அருகே புதிய வீடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உறுப்பினர்களின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டது.

    புதிதாக கட்டப்பட்ட தங்கராசுவின் வீட்டை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வீட்டை தங்கராசுவிடம் ஒப்படைத்தனர்.

  8. ஆளுநர் தேநீர் விருந்து: திமுக வரவில்லையென்றால் டீ செலவு மிச்சம் - அண்ணாமலை

    தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கவுள்ள தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் புறக்கணிப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

    நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைப்பது தொடர்பாக எந்தக் காலக்கெடுவையும் குறிப்பிடவோ உத்தரவாதம் அளிக்கவோ ஆளுநர் முன்வராத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "ஆளுநரின் தேநீர் விருந்துக்கு திமுக வரவில்லையென்றால் டீ செலவு மிச்சம்" என தெரிவித்துள்ளார்.

  9. 24 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன்? ஒரு 'போராளி'யின் உண்மைக் கதை

  10. ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் - கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஷ்வரப்பா ராஜினாமா செய்ய முடிவு

    கர்நாடகா அமைச்சர் கே.எஸ்.ஈஷ்வரப்பா தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நாளை முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அம்மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஷ்வரப்பா மீது குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஈஷ்வரப்பா தான் தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் என, ஊடகத்தினர் சிலருக்கு வாட்சப்பில் தகவல் அனுப்பிவிட்டு, பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.

    பெல்காவி மாவட்டத்தில் உள்ள ஹிண்டல்கா ஊராட்சியில் சாலை பணிகளுக்கு 4 கோடி ரூபாயை விடுவிக்க அமைச்சர் ஈஷ்வரப்பா "40 சதவீத கமிஷன் கேட்டதாக" அவர் முன்னதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

    ஆனால், முறையான அரசு ஒப்புதல் இல்லாமலேயே அவர் சாலை பணிகளை மேற்கொண்டதாக, அமைச்சர் பதில் தெரிவித்திருந்தார்.

    மேலும், "நான் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் கூறினால் அவ்வாறே செய்வேன்" எனவும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நாளை முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் வழங்க உள்ளதாக, கே.எஸ்.ஈஷ்வரப்பா தெரிவித்துள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நாளை முதலமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளேன். எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

  11. வரலாற்று மர்மம்: அசாமில் கிடைத்த மணல் கல் ‘மர்ம’ ஜாடிகள்

    அசாம் மாநிலத்தில், பண்டைய காலத்தில் இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படும் பிரமாண்ட "மர்ம" ஜாடிகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதுகுறித்த காணொளி:

  12. ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்த ஈலோன் மஸ்க்

    ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க் முன்வந்துள்ளார்.

    முன்னதாக, ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால், நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகக்குழுவில் இணைய ஈலோன் மஸ்க் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஈலோன் மஸ்க் முன்வந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அந்நிறுவனத்திற்கு ஒவ்வொரு பங்குக்கும் 54.20 டாலர்கள் செலுத்துவதாகக் கூறியுள்ளார். அதன் மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலர்கள் ஆகும்.

    மேலும், தன்னுடைய இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், "ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரராக என்னுடைய பொறுப்பை மறுயோசனை செய்ய வேண்டிவரும்" என அவர் தெரிவித்துள்ளார்.

  13. பொருளாதார நெருக்கடியால் சிக்கலை எதிர்கொள்ளும் யாழ்ப்பாண மீனவச் சமூகம்

  14. யுக்ரேன் தாக்கியதாக கூறப்படும் போர்க்கப்பல் - மிதக்கும் நிலையில் உள்ளது என ரஷ்யா அறிவிப்பு

    ரஷ்யாவின் ஏவுகணை தாங்கிய மோஸ்க்வா போர்க்கப்பல், யுக்ரேன் தயாரித்த நெப்டியூன் ஏவுகணையால் குண்டுவெடிப்புக்கு உள்ளானதாக, யுக்ரேன் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கப்பலில் இருந்த வெடிமருந்துகள் தற்போது வெடிக்கவில்லை.

    அந்த கப்பல் தற்போது மிதக்கும் நிலையில் உள்ளது. ஏவுகணையின் முக்கிய ஆயுதக் கிடங்கு சேதமடையவில்லை.

    கப்பலில் இருந்த பணிக்குழுவினர் அருகிலுள்ள கருங்கடல் கடற்படை கப்பல்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அக்கப்பலை துறைமுகத்திற்கு கட்டி இழுத்துச் செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கப்பலில் தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், யுக்ரேனின் நெப்டியூன் ஏவுகணை தாக்கிய பின் அக்கப்பல் மூழ்க ஆரம்பித்துவிட்டதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    அக்கப்பல் மிகுந்த சேதமடைந்திருப்பதாகவும், தாக்குதல் காரணமாக அக்கப்பலில் தீப்பற்றியதாகவும் தெற்கு ராணுவ தளபதி வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கு சென்ற ரஷ்ய மீட்புக் கப்பல்களும் தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்து வெடிமருந்துகள் வெடித்ததால் செல்ல முடியவில்லை எனவும், மோசமான வானிலை காரணமாக அக்கப்பல் கவிழ்ந்து மூழ்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  15. காந்தியை நான் மகாத்மாவாக பார்க்கவில்லை - அம்பேத்கர்

    "காந்தியை நான் மகாத்மாவாக பார்க்கவில்லை" - அம்பேத்கர் 1955இல் பிபிசி வானொலிக்கு அளித்த நேர்காணலில் காந்தி குறித்து பல கசப்பான கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

  16. திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை - லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

    ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கக்கோரி, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக செல்கிறது. இந்த பகுதியில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் வன விலங்குகள் அதிகளவில் உயிரிழக்கும் நிலையில், திம்பம் மலைப்பாதையில் 22 கி.மீ. தூரத்திற்கு இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க மாவட்ட நிர்வாகம் கடந்த 2019-ம் ஆண்டு தடை விதித்தது.

    இந்த தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றமும் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. பல தரப்பிலிருந்தும் இதற்கு ஆட்சேபனை எழுந்த நிலையில் உயர் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை திருத்துவதாக ஒப்புக் கொண்டது.

    கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வழங்கிய திருத்தப்பட்ட தீர்ப்பில் வேக கட்டுப்பாட்டுடன் இலகுரக வாகனங்கள் மற்றும் காய்கறி, பால் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

    ஆனால், 12 சக்கரம் மற்றும் அதற்கு அதிகம் உள்ள வாகனங்கள், 16.2 டன்னுக்கு அதிக எடை உள்ள வாகனங்கள் செல்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வன ஆர்வலர்கள் வரவேற்றுள்ள நிலையில், லாரி உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

  17. இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

    "லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    இன்று தன் தமிழக, கேரளா கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  18. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரத்தை எட்ட வேண்டும் - பிரதமர் மோதி

    இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்த தலைவர்கள் குறித்த ஆவணங்கள், தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடங்கிவைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "புதிய எண்ணஙக்ளையும் புதுமைகளையும் புகுத்த நமது ஜனநாயகம் நம்மை ஊக்குவிக்கிறது. அரசியலமைப்பு ஜனநாயகத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதில் இந்த நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் பங்காற்றியுள்ளனர்" என தெரித்தார்.

    மேலும், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரத்தை எட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    "அடுத்துவரும் ஆண்டுகளில் இந்த அருங்காட்சியகத்தில் யாருடைய பெயர் இடம்பெற்றாலும், அவர்கள் புதிய இந்தியாவின் சக்தியையும் பலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.

    ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த 25 ஆண்டுகளில் புதிய உயரத்தை எட்டும் வகையில் நாம் செயலாற்ற வேண்டும்" என தெரிவித்தார்.

    அருங்காட்சியகத்தை திறந்துவைப்பதற்கு முன்னதாக, அதற்குள் செல்வதற்கான முதல் டிக்கெட்டை பிரதமர் நரேந்திர மோதி வாங்கினார்.

  19. தமிழர்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள் - புத்தாண்டில் வீதியில் இறங்கி போராட்டம்

  20. “அரசமைப்புச் சட்டத்தை கொளுத்துவேன்” அம்பேத்கர் ஏன் இப்படி பேசினார் தெரியுமா?