“மேற்கு நாடுகளின் தடைகளால் புதின் பதற்றமாக உள்ளார்” – ரஷ்ய முன்னாள் பிரதமர்
புதினும் அவருடைய நெருங்கிய அரசியல் கூட்டாளிகளும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட “பேரழிவுகரமான” பொருளாதாரத் தடைகளின் அளவு குறித்து “பதற்றமாக” இருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் காஸ்யனோவ் கூறியுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
க. சுபகுணம்
வணக்கம் நேயர்களே!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
இன்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய செய்திகள்:
- புதினும் அவருடைய நெருங்கிய அரசியல் கூட்டாளிகளும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட “பேரழிவுகரமான” பொருளாதாரத் தடைகளின் அளவு குறித்து “பதற்றமாக” இருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் காஸ்யனோவ் கூறியுள்ளார்.
- ரஷ்யாவில், அதிபர் விளாதிமிர் புதின், க்ரைமியாவை இணைத்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்வில், லுஷினிகி மைதானத்தில் நிரம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்களிடம் பேசினார்.
- பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கு விளாதிமிர் புதின் ஆற்றிய உரையின் முடிவு நேரத்தில், ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி திடீரென அவருடைய பேச்சைப் பாதி வாக்கியத்தில் துண்டித்துவிட்டு, தேசபக்தி பாடலை ஒளிபரப்பத் தொடங்கியது.
- மேரியோபோல் நகரில் வான்வழித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட திரையரங்கின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாக யுக்ரேனின் மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
- யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
- இந்தப் போர் தொடங்கியதில் இருந்து, கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் யுக்ரேனில் இருந்து போலாந்துக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, போலந்து எல்லைக் காவல் அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
- கீயவின் வடக்குப் பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நான்கு பேர் காயமைடைந்துள்ளதாக அவசர சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- லுவீவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பராமரிப்பு ஆலை இன்று காலையில் தாக்கப்பட்டது. உயிர்சேதம் எவும் ஏற்படவில்லை. லுவீவ் போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது.
- லூவிவில் உள்ள நமது பிபிசி செய்தியாளர் ஜோனா ஃபிஷர், ஷெல் குண்டு தாக்குதல் நடந்த இன்று காலை வரை லூவிவ் “பாதுகாப்பான புகலிடமாக” கருதப்பட்டதாகவும் அதன் முக்கிய வழித்தடங்கள் போலந்து வழியாகச் செல்வதால், “நாட்டிற்குள் ஆயுதங்களை விநியோகிப்பதற்கான பாதையைத் துண்டிக்கும்” ரஷ்ய படைகளின் முயற்சியாக இது இருக்கலாம் என்றும் கூறினார்.
- 1000-க்கும் மேற்பட்ட யுக்ரேனியர்கள் ஒரே இரவில் கீயவ் பகுதியிலிருந்து, பேருந்துகளிலும் கார்களிலும் வெளியேற்றப்பட்டனர்.
- கார்ஹிவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட தீயை அணைத்துக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், அந்தப் பகுதியில் தொடர்ந்து நிகழ்ந்த ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அவசர சேவைகள் நிறுவனம் அறிவித்தது.
- இன்று காலையில் பல்வேறு ஏவுகணைகளால் லுவீவில் உள்ள கட்டடம் ஒன்று தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று நகர மேயர் அவருடைய டெலிகிராம் பதிவில் தெரிவித்தார்.
மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
மேரியோபோல் நகரத்தின் தகர்க்கப்பட்ட திரையரங்கம்

பட மூலாதாரம், Getty Images
மேரியோபோலில் குண்டுவீசித் தகர்க்கப்பட்ட திரையரங்கில் தஞ்மடைந்திருந்த பொதுமக்களில் ஒரு பகுதியினர் இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டதாக மனித உரிமைகள் ஆணையர் லுயுட்மிலா டெனிசோவா தெரிவித்துள்ளார்.
இதுவரை திரையரங்கின் அடித்தளத்தில் தஞ்சமடைந்திருந்த 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், இது இன்னும் உள்ளே சிக்கியிருப்பவர்களில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே என்று அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வரும் யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலோபாய துறைமுக நகரத்தில் 80% கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட திரையரங்கின் சமீபத்திய படங்கள் இவை. இத்தாலிய அரசாங்கம், இதைக் கூடிய விரைவில் மீண்டும் கட்டுவதற்கு முன்வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
மார்ச் 17 வரை 816 பொதுமக்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேனில் மார்ச் 17 வரை குறைந்தது 816 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், 1,333 பேர் காயம் அடைந்துள்ளார்கள் என்று ஐ.நா கூறுகிறது.
ஐ.நா உரிமைகள் அலுவலகத்தின்படி, பெரும்பாலான உயிரிழப்புகள் கனரக பீரங்கிகள், ஷெல் குண்டு தாக்குதல், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் போன்றவற்றால் ஏற்பட்டவை.
மேரியோபோல் உள்ளிட்ட மோசமான பாதிப்பிற்குள்ளான சில நகரங்களில் இருந்து ஐ.நா உரிமைகள் அலுவலகத்தால் தகவல்களைச் சேகரிக்க முடியாததால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.
இலங்கையில் உச்சத்திற்குச் சென்ற அத்தியாவசிய பொருட்களின் விலை
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது. எந்தெந்த பொருள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்ற முழு விவரம்.
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
“மேற்கு நாடுகளின் தடைகளால் புதின் பதற்றமாக உள்ளார்” – ரஷ்ய முன்னாள் பிரதமர்

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் காஸ்யனோவ், அதிபர் விளாதிமிர் புதின் சமாதானப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருப்பதாகத் தான் நம்பவில்லை என்றும் யுக்ரேனிய மக்களுக்கு வசதியாக இருக்கக்கூடிய எந்தத் தீர்வையும் அவர் வழங்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
நடுநிலைமை வாக்குறுதிக்கு அப்பால், அதாவது யுக்ரேன் நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்க விண்ணப்பிக்காமல் இருப்பது உட்பட, க்ரைமியா ரஷ்யாவின் ஒரு பகுதி என்று “அதிகாரப்பூர்வ அங்கீகாரம்” பெற வலியுறுத்துவார் என்று காஸ்யனோவ் நம்புகிறார்.
“இது மிகவும் முக்கியமானது. புதின் க்ரைமியா விஷயத்தில் மிகத் தீவிரமாக உள்ளார்,” என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.
காஸ்யனோவ், 2000 முதல் 2004-ஆம் ஆண்டுக்கு இடையில் பிரதமராக இருந்தவர். இரு தரப்புக்கும் இடையிலான தற்போதைய பேச்சுவார்த்தைகளின் விளைவாக எந்தவோர் ஒப்பந்தமும் ஏற்படாது என்றும், ரஷ்ய படைகள் மீண்டும் ஒன்று கூடுவதற்கு மட்டுமே நேரம் கொடுக்கும் எனச் சந்தேகிப்பதாகக் கூறினார்.
புதினும் அவருடைய நெருங்கிய அரசியல் கூட்டாளிகளும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட “பேரழிவுகரமான” பொருளாதாரத் தடைகளின் அளவு குறித்து “பதற்றமாக” இருப்பதாகவும் தடைகள் இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், "அவர் தொடர்ந்து அடக்குமுறை மற்றும் படையெடுப்பை அதிகரிப்பார் என்று நான் நினைக்கிறேன்,” என்று காஸ்யனோவ் கூறினார்.
விளாதிமிர் புதின் உரையை பாதியில் துண்டித்த ரஷ்ய அரசு தொலைக்காட்சி

பட மூலாதாரம், Reuters
பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கு விளாதிமிர் புதின் ஆற்றிய உரையின் முடிவு நேரத்தில், ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி திடீரென அவருடைய பேச்சைப் பாதி வாக்கியத்தில் துண்டித்துவிட்டு, தேசபக்தி பாடலை ஒளிபரப்பத் தொடங்கியது.
க்ரைமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு நிறைவை, தேசபக்தி உணர்வுடன் கோஷங்கள் எழுப்பி புதின் வரவேற்றார்.
ஆனால், அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே பாடல் ஒளிபரப்பானது.
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு,” காரணமாக பேச்சு தடைபட்டதாகக் கூறினார்.
உரையின்போது, யுக்ரேனில் தொடர்ந்து “வீரமாகப் போரிட்டதாக” ரஷ்ய அதிபர் தனது படைகளைப் பாராட்டினார்.
இந்தியா-வங்கதேசம் எல்லையில் விபத்திற்குள்ளான எல்லை காவல் படை வீரர்கள்
இந்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், இந்தியா-வங்கதேச எல்லையில் தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் இருந்தபோது அங்குள்ள ஒரு நீர்நிலையில், அவர்களின் வாகனம் விபத்திற்கு உள்ளானது. அதில், எல்லைக் காவல் படையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். மேலும், மூன்று வீரர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரைக் காணவில்லை என்றும் ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
“ஓட்டுநர், உதவி ஆய்வாளர் மற்றும் 3 வீரர்களை ஏற்றிச் சென்ற எங்கள் வாகனம் ஒன்று, எல்லையில் ரோந்துப் பணியின்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20-30 அடி ஆழமான நீர்நிலையில் விழுந்தது. அவர்களில் 3 பேர் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவரைக் காணவில்லை,” என்று எல்லைக் காவல் படை அதிகாரி ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
“இனப்படுகொலையில் இருந்து மக்களைக் காக்கவே இந்தப் படையெடுப்பு” – விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், Reuters
ரஷ்யாவில், அதிபர் விளாதிமிர் புதின், க்ரைமியாவை இணைத்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்வில், லுஷினிகி மைதானத்தில் நிரம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்களிடம் பேசினார்.
மைதானம் ரஷ்ய கொடிகளாலும் படையெடுப்பின் அடையாளமான "Z" என்ற எழுத்துகளாலும் நிரம்பியிருந்தது.
அப்போது, யுக்ரேனில் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையை புதின் பாராட்டினார். மேலும், அதன் நோக்கம் உள்ளூர் மக்களை இனப்படுகொலையால் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பாற்றுவதற்காக என்று கூறினார்.
பிரிட்டன் செல்ல விசா அனுமதிக்காக விண்ணப்பித்த 27,000 யுக்ரேன் அகதிகள்

பட மூலாதாரம், Getty Images
வியாழக்கிழமை மாலையில், யுக்ரேன் குடும்பத் திட்டத்தின் கீழ், பிரிட்டன் சுமார் 6,500 விசாக்களை யுக்ரேனிய அகதிகளுக்கு வழங்கியதாக அந்நாட்டின் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை 6,100 விசாக்கள் இதன்கீழ் வழங்கப்பட்டன.
அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, அந்த நேரத்தில் சுமார் 2,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.அதோடு சேர்த்து இதுவரை மொத்தமாக 27,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டன் அரசாங்கம் அகதிகளுக்குத் தங்க இடம் கொடுக்க விரும்பும் மக்களுக்காக, ஒரு தனி நிதியுதவி விசா திட்டத்தையும் நடத்துகிறது. அது தொடங்கப்பட்ட நாளிலிருந்து 100,000 பேர் அதில் பதிவு செய்துள்ளனர்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உருவான அகதிகள் நெருக்கடிக்கு பிரிட்டன் அரசாங்கம் இவ்வளவு வேகமாகவும் அதிகமாகவும் எதிர்செயலாற்றுவதற்காக, அதன் சொந்த அமைச்சர்களிடம் இருந்தே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள்- முழு விவரம்

பட மூலாதாரம், AEROSINT DIVISION PSF
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாம்ஷோரோ என்ற பகுதி குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை (மார்ச் 17) பகல் 12 மணியளவில் அடையாளம் தெரியாத பொருள் வானில் பறந்ததாகவும் அது ஒரு ராக்கெட் அல்லது ஏவுகணையை ஒத்திருந்தது என்றும் அந்த மக்கள் கூறியதாக இந்திய செய்தி முகமையான ஏஎன்ஐ வியாழக்கிழமை நள்ளிரவு அதன் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் ரத்து செய்ய வாய்ப்பு

நிபந்தனை ஜாமினில் வெளி வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2 வாரங்கள் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 14, 16 ஆகிய தேதிகளில் கையெழுத்திட்டார்.
அந்த 2 நாட்களும் கையெழுத்திட வரும்போது அதிக அளவிலான அதிமுக தொண்டர்கள் காவல் நிலையத்திற்கு அவருடன் வந்து தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் திருச்சி கண்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி உள்ளிட்ட அதிமுகவினர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியது, அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
யுக்ரேன்: 23-வது நாள் படையெடுப்பில் இதுவரை நடந்தது என்ன?
யுக்ரேன் மீதான 23-வது நாள் படையெடுப்பில், கீயவ் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி வரை நடந்த நிகழ்வுகள் குறித்த சுருக்கம் உங்களுக்காக...
- விமான ஆலை அழிக்கப்பட்டது: மேற்கு யுக்ரேனில் உள்ள லுவீவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ரஷ்யா பல ஏவுகணைகளை செலுத்தியதிஒல் அதற்கு அருகிலுள்ள விமானம் பழுதுபார்க்கும் ஆலை அழிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். லுவீவ் நகரம், போலாந்து எல்லைக்கு அருகில், ஆயிரக்கணக்கான அகதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாகச் செயல்பட்டு வருகிறது.
- மற்ற நகரங்கள் மீது ஷெல் குண்டு தாக்குதல்: பல முக்கிய நகரங்களும் புதிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. கிழக்கு நகரமான கார்ஹிவில் ஒரு பல்கலைக்கழக கட்டடம் மற்றும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ஷெல் குண்டு வீசப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார், 11 பேர் காயமடைந்தனர். மேலும், தெற்கே கிராமடோர்ஸ்க் மீது நடந்த ஏவுகணை தாக்குதலின்போது இரண்டு பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர். தலைநகர் கீயவில், குடியிருப்புப் பகுதியில் விழுந்த ஏவுகணை வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.
- சுற்றி வளைக்கப்பட்ட மேரியோபோல்: கிழக்கு யுக்ரேனில் உள்ள பிரிவினைவாதிகள், ஆயுதப் படைகளின் உதவியுடன், தெற்கு யுக்ரேனில் உள்ள நகரமான மேரியோபோலைச் சுற்றி வளைக்கிறார்கள் என்று ரஷ்யா கூறுகிறது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
- திரையரங்கு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் மீட்பு: யுக்ரேனின் மனித உரிமைத் தலைவர் மேரியோபோல் நகரில் குண்டுவீசித் தாக்கப்பட்ட திரையரங்கில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்படுவதாகக் கூறுகிறார். ரஷ்யா மீது யுக்ரேன் குற்றம் சாட்டிய இந்தத் தாக்குதலில் இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
- போலாந்திற்குள் நுழைந்த 20 லட்சம் யுக்ரேனியர்கள்: யுக்ரேனில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக போலாந்து எல்லைக் காவலர் கூறுகிறார். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
படங்கள்: தலைநகர் கீயவில் தொடரும் ஏவுகணை தாக்குதல்
இன்று காலையில் யுக்ரேன் தலைநகர் கீயவில் ஏவுகணை வெடித்தது. அந்தக் காட்சியின் சில படங்கள் இங்கே.
ரஷ்ய ஏவுகணையின் சில பாகங்கள் நகரின் வடக்கே இருக்கும் குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார், 19 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Reuters
“ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஒரு கொலைகார சர்வாதிகாரி” – ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசும்போது, யுக்ரேனில் ரஷ்யா நடத்தும் போருக்குத் தனது ராணுவ உபகரணங்களை வழங்க வேண்டாம் என்று வலியுறுத்துவார் எனத் தெரியவந்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கத் தவறியதற்காக சீன அரசை அமெரிக்க அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.
கேபிடோல் ஹில்லில் உள்ள செயிண்ட் பாட்ரிக் தினத்தன்று ஐரிஷ் பாரம்பர்யத்தைக் கொண்டாடும் மதிய உணவின் போது, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், “யுக்ரேன் மக்களுக்கு எதிராக நியாயமற்ற போரை நடத்தி வரும் ஒரு கொலைகார சர்வாதிகாரி,” என்று பைடன் நேற்று குறிப்பிட்டார்.
புதன்கிழமையன்று பைடன் புதினை “போர்க் குற்றவாளி” என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வந்தன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பைடனின் கருத்துகள், “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் மன்னிக்க முடியாதவை” என்றார்.
கல்வியில் பின் தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள்: தமிழக பட்ஜெட்டின் 15 சிறப்பம்சங்கள்
ரஷ்ய தாக்குதலால் நிலத்தடியில் சிக்கிய 1,300 பேர்

பட மூலாதாரம், Azov/Reuters
மேரியோபோல் நகரில் வான்வழித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட திரையரங்கின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாக யுக்ரேனின் மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
யுக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, திரையரங்கு மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டபோது, அதற்குக் கீழே நூற்றுக்கணக்கான மக்கள் நிலத்திற்கு அடியிலுள்ள புகலிடங்களில் தஞ்டமைந்து இருந்தனர்.
ஒரு தொலைக்காட்சி உரையில், மனித உரிமைகள் ஆணையர் லுயுட்மிலா டெனிசோவா, மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் அடித்தளத்தில் இன்னும் 1,300 பேர் இருப்பதாகவும் கூறினார்.
“படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 14,200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” – யுக்ரேன்
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவும் யுக்ரேனும் வெவ்வேறு தரவுகளைக் குறிப்பிடுவதால், இரண்டு தரப்பிலுமான உயிரிழப்புகளைத் துல்லியமாகக் கணக்கிடுவது சவாலாக உள்ளது.
மார்ச் 3-ஆம் தேதி வெளியான தகவலில், 498 வீரர்கள் சண்டையின்போது உயிரிழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்தது. ஆனால், அதற்குப் பிறகு உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெளியிடாமல் அமைதி காத்தது.
இதற்கிடையே, அமெரிக்க அதிகாரிகள் வியாழக் கிழமையன்று ரஷ்ய வீரர்களில், சுமார் 7,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் 14,000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்றும் கூறினர்.
இந்நிலையில், தற்போது ரஷ்ய வீரர்கள் மட்டுமின்றி, ரஷ்யாவின் 450 டேங்கர்கள், 93 விமானங்கள், 112 ஹெலிகாப்டர்களை அழித்துள்ளதாக யுக்ரேன் கூறியுள்ளது.
பிபிசியால் இந்தத் தகவலைச் சரிபார்க்க முடியவில்லை.
தமிழ்நாடு பட்ஜெட் 2022: டெல்டாவில் முன் கூட்டியே தூர் வாரும் பணிகள் - விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
சுமார் 20 லட்சம் யுக்ரேன் மக்கள் இதுவரை போலாந்துக்குத் தப்பியுள்ளனர்
இந்தப் போர் தொடங்கியதில் இருந்து, கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் யுக்ரேனில் இருந்து போலாந்துக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, போலந்து எல்லைக் காவல் அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும், 52,500 பேர் எல்லையைக் கடந்துள்ளதாகவும் புதன்கிழமை இருந்த கணக்கைவிட இது 11% குறைவு என்றும் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரை 19.995 லட்சம் மக்கள் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இதுவரை 7,100 பேர் போலாந்துக்குள் நுழைந்துள்ளனர். வியாழக்கிழமை கணக்கைவிட இது 41% குறைவு என்று எல்லைக் காவல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வார்சா பல்கலைக்கழகத்தின் இடப்பெயர்வு ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர்.மேசியெஜ் டஷ்செக்கின் கூற்றுப்படி, யுக்ரேனில் இருந்து வெளியேறிய மக்களில், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் போலாந்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
