You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மீண்டும் காற்றில் பறந்த போர் நிறுத்த ஒப்பந்தம்: கைவிடப்பட்ட மக்கள்

"போர் நிறுத்தம் பொய்யானது. துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒரு தரப்பு ஒருபோதும் திட்டமிடவில்லை. அவர்கள் மற்றொரு போர் நிறுத்தம் இருப்பதாகச் சொன்னால் நாங்கள் வெளியேற முயல வேண்டும். "

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. வணக்கம் நேயர்களே!

    மார்ச் 6ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச்செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • யுக்ரேனில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது, அவர்களுடைய மன உறுதியை உடைக்கும் முயற்சி என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
    • டான்பாஸ் பகுதியில் 7 கி.மீட்டருக்கு, பல சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களைக் கைப்பற்றியவாறு முன்னேறியுள்ளதாக ரஷ்யா கூறியது.
    • யுக்ரேன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணம் செலுத்தும் நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகியவை ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறுகின்றன.
    • போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள் 88 விமானங்கள் மற்றும் ஹெல்காப்டர்களை இழந்துள்ளன என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • தெற்குயுக்ரேனில்உள்ளதுறைமுகநகரமானமேரியோபோலில்உள்ளூர்நேரப்படி, காலை 10 மணிமுதல்இரவு 9 மணிவரைதற்காலிகபோர்நிறுத்தம்அறிவிக்கப்பட்டுள்ளது.
    • யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ஈலோன் மஸ்க்கை போருக்குப் பிறகு யுக்ரேனுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்கும் அங்கு வரும் நாளை எதிர்நோக்கி இருப்பதாகக் கூறினார்.
    • இன்று காலையில் போர் நிறுத்தம் மற்றும் புதிய வெளியேற்ற முயற்சியை அறிவித்த மேரியோபோல் நகர சபை, அதற்கான திட்டங்கள் கைவிடப்பட்டதை உறுதி செய்தது.
    • யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், உலகத் தலைவர்களிடம் யுக்ரேன் வானில் “விமானங்கள் பறக்கத் தடை மண்டலம்” அறிவிக்க வேண்டுமென்ற தனது வேண்டுகோளை முன்வைத்தார்.

    பிபிசியின்டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    முகப்பு பக்கத்திற்குஇங்கே கிளிக் செய்யவும்

  2. "மனிதாபிமான பேரழிவின் விளிம்பில் நகரங்கள்" - யுக்ரேன் அதிகாரிகள்

    சுமி மற்றும் மேரியோபோல் நகரங்களின் நிலைமை, “மனிதாபிமான பேரழிவின் விளிம்பில் உள்ளன,” என்று யுக்ரேன் அரசு அதிகாரி ஒருவர் யுக்ரேன்-24 தொலைக்காட்சி சேனலிடம் தெரிவித்தார்.

  3. ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேன் கட்டடங்கள் - தாக்குதலுக்கு முன்னும் பின்னும்

    ரஷ்ய படைகள் யுக்ரேன் தலைநகர் கீயவில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில், நகரத்தின் மீது பல கொடிய வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன.

  4. போலந்தில் அடைக்கலம் புகுந்த மாணவர்கள்

    யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு காரணமாக தவித்த மாணவர்கள் எல்லை நாடுகளில் ஒன்றான போலந்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்நிலையில், போலந்து தலைநகர் வார்தாவிலிருந்து பிபிசி செய்திக் குழு வழங்கும் களநிலவரம்.

  5. மீண்டும் காற்றில் பறந்த போர் நிறுத்த ஒப்பந்தம்: கைவிடப்பட்ட மக்கள்

    மேரியோபோலில் நடக்கவிருந்த மக்கள் வெளியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்த கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளன.

    சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரத்திலிருந்து 200,000 மக்களை வெளியேற்றத் தொடங்கலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தது.

    மேரியோபோலில் இருந்து ஸாப்போரீஷியாவிற்கு வெளியேறும் பாதையைத் திறப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்னர், “தாக்குதல் மீண்டும் தொடங்கியதாக” அந்த அமைப்பு கூறுகிறது.

    ரஷ்யாவும் யுக்ரேனு குடிமக்களை வெளியேற்ற கொள்கையளவில் ஒப்புக்கொண்ட்ன. ஆனால், வெளியேற்ற எப்படி நடைபெறும் என்பதை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியது.

    குறிப்பாக, நேரம், இருப்பிடங்கள் மற்றும் வெளியேற்றும் வழிகள், யாரெல்லாம் வெளியேற்றப்படலாம், பொதுமக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி, உதவிகளைக் கொண்டுவர முடியுமா என்பன போன்றவற்றில் இரண்டு தரப்பினரும் உடன்படவில்லை என்று கூறியது.

    செஞ்சிலுவை சங்கம் இரண்டு தரப்புக்குமான பேச்சுவார்த்தை வசதி செய்யலாம், ஆனால், இரண்டு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு, அதைச் செயல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிப்பவராக இருக்க முடியாது.

    இரு தரப்பும் ஓர் உடன்பாட்டை எட்டினால், அதை மதிப்பதும் செயல்படுத்துவதும் அவர்களுடைய பொறுப்பு. போர் நிறுத்தத்திற்கு மேலும் முயற்சி செய்ய, செஞ்சிலுவை சங்கத்தின் குழுக்கள் நகரத்தில் இருப்பதாகவும் கூறியது.

  6. “நாங்கள் கொல்லப்பட வேண்டுமென விரும்புகிறீர்கள்” – நேட்டோவை சாடிய யுக்ரேன் அதிபர்

    யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், உலகத் தலைவர்களிடம் “விமானங்கள் பறக்கத் தடை” என்ற தனது வேண்டுகோளை முன்வைத்தார்.

    அதில், “நாங்கள் மக்கள். எங்களைப் பாதுகாப்பது உங்கள் மனிதாபிமானக் கடமையாகும். அது உங்களால் முடியும்,” என்று கூறினார்.

    மேலும், “நீங்கள் அதைச் செய்யாவிட்டால், எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக விமானங்களை வழங்கவில்லை என்றால், ஒரேயொரு முடிவு மட்டுமே இருக்க முடியும். நாங்கள் மெதுவாகக் கொல்லப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்” என்றார்.

    யுக்ரேன் வானில் பறக்கத் தடை மண்டலம் அமைக்கும் யோசனையை நேட்டோ நாடுகள் இதுவரை நிராகரித்துள்ளன. அதாவது, அந்த வான்பகுதியில் காணப்படும் ரஷ்ய விமானங்களுடன் நேரடியாகச் சண்டையில் ஈடுபடுவது, தேவைப்பட்டால் அவற்றைச் சுடுவது என்று அர்த்தமாகும்.

    அது, ரஷ்யாவுடன் மோதலைத் தூண்டும் என்று நேட்டோ நாடுகள் வாதிடுகின்றன.

  7. “நாங்கள் நகரிலிருந்து வெளியேறத் தயாராக இருந்தோம். ஆனால் மீண்டும் தாக்குதல் தொடங்கியது”

    மேரியோபோலில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது. இரண்டு தரப்பினரும் மீண்டும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர்.

    நேற்று முதல் முயற்சி தோல்வியடைந்த பிறகு, ஆறாவது மாடி குடியிருப்பில் தனது தாத்தா பாட்டிகளைக் கவனித்துக் கொள்ளும் 27 வயதான தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டாளர் மாக்சிம், இந்த நாள் நம்பிக்கையுடன் தொடங்கி, விரக்தியில் முடிந்ததாக பிபிசியிடம் கூறினார்.

    “என்னால் முடிந்தவரை வேகமாக, எனக்கும் என் தாத்தா பாட்டிக்கும் தேவையான உடைகள், உணவு மற்றும் எங்களிடம் மிச்சமிருந்த தண்ணீருடன் நான்கு பைகளை என் காரில் அடைத்தேன்.

    நான் காரை ஓட்டுவதற்குத் தயாரான போது, மீண்டும் ஷெல் தாக்குதல் தொடங்கியது. எங்களுக்கு அருகில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அனைத்தையும் என்னால் முடிந்தவரை வேகமாக மாடிக்குக் கொண்டு சென்றேன். அங்கிருந்து நகரத்திலிருந்து புகை எழுவதைப் பார்த்தேன். மக்கள் செல்ல வேண்டிய ஸாப்போரீஷியா நெடுஞ்சாலையில் இருந்து அந்தப் புகை எழும்பிக் கொண்டிருந்தது.

    போர் நிறுத்தம் இருப்பதாகக் கேள்விப்பட்டதால், பலர் ஷெல் தாக்குதலில் இருந்து தப்பித்து வெளியேறுவதற்காக நகர மையத்திற்குள் வந்தனர். அவர்களை வெளியே அழைத்துச் செல்ல பேருந்துகளும் வந்தன. ஆனால், மீண்டும் ஷெல் தாக்குதல் தொடங்கியபோது, அவர்களால் தங்களுடைய தங்குமிடங்களுக்குத் திரும்ப முடியவில்லை.

    எனவே நாங்கள் பலரை குடியிருப்பிற்குள் அழைத்துச் சென்றோம். அவர்கள் நகரின் இடதுபுறத்தில் இருந்து வந்தவர்கள். அது அழிக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். அனைத்து வீடுகளும் எரிகின்றன. யாராலும் தீயை அணைக்க முடியவில்லை. தெருக்களில் ஏராளமான சடலங்கள் கிடக்கின்றன.

    எங்களிடம் பாட்டில் தண்ணீர் தீர்ந்துவித்து. குழாய்கள் அணைக்கப்படுவதற்கு முன்பு நான் குளியல் தொட்டியில் நிரப்பிய தண்ணீர் தான் மிஞ்சியுள்ளது. எரிவாயு மட்டும் இன்னும் வேலை செய்கிறது. நாங்கள் அதில் குளிக்கும் தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம்.

    இன்று காவல்துறை கடைகளைத் திறந்து, இங்குள்ளவர்களுக்கு உணவு மற்றும் பானம் இல்லாததால் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லுமாறு மக்களிடம் சொன்னார்கள். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கொஞ்சம் மிட்டாய், மீன் மற்றும் சில பானங்களை எடுத்துக் கொண்டனர்.

    போர் நிறுத்தம் பொய்யானது. துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒரு தரப்பு ஒருபோதும் திட்டமிடவில்லை. அவர்கள் மற்றொரு போர் நிறுத்தம் இருப்பதாகச் சொன்னால் நாங்கள் வெளியேற முயல வேண்டும். ஆனால், அது உண்மையாக இருக்குமா என்று எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை நாம் மறைந்திருப்பதே நல்லதாக இருக்கலாம்” என்று மாக்சிம் கூறினார்.

  8. போர் காரணமாகப் பிரிய வேண்டிய சூழலில், இந்திய கணவரும் யுகேனிய மனைவியும்

    யுக்ரேனிய பெண்ணைத் திருமணம் செய்த இந்தியர் ஒருவர் 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியைப் பிரிந்து வருவது குறித்த தன் கவலையை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

    கீயவில் இருந்து வெளியேறி தற்போது வீவில் உள்ள நண்பருடன் தங்கியிருக்கும் ககன், “நான் ஓர் இந்தியக் குடிமகன். என்னால் இந்தியாவுக்குச் செல்ல முடியும். இந்தியர்கள் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்ப்படுகிறது. என் மனைவி 8 மாதம் கர்ப்பிணி. போலந்துக்குச் செல்கிறார். என்னால் குடும்பத்தை விட்டுச் செல்ல முடியாது. நாங்கள் தற்போது வீவில் உள்ள நண்பருடைய வீட்டில் தங்கியுள்ளோம்,” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

  9. ரஷ்யாவின் ஷெல் குண்டுதாக்குதல் மக்களை வெளியேறவிடவில்லை

    இன்று காலையில் போர் நிறுத்தம் மற்றும் புதிய வெளியேற்ற முயற்சியை அறிவித்த மேரியோபோல் நகர சபை, அதற்கான திட்டங்கள் கைவிடப்பட்டதைத் தற்போது உறுதி செய்துள்ளது.

    ரஷ்ய ஷெல் குண்டு தாக்குதல்கள் பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதைச் சாத்தியமற்றதாக்கி விட்டதாக நகர சபை கூறியுள்ளது.

    நகரம் தற்போது ஐந்தாவது நாளாக, தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது. அதோடு, உணவு மற்றும் குடிநீர் வேகமாகத் தீர்ந்து வருகிறது.

  10. சண்டைக்குத் தயாராகும் ஸாப்போரிஷியா மக்கள், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட், பிபிசி தெற்கு ஐரோப்பிய செய்தியாளர்

    கிழக்கு மற்றும் தெற்கில் முன்னணியில் இருப்பதால், ஸாப்போரிஷியா பதற்றமாக உணர்கிறது. அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் பல அடுக்குகளுக்கு பலத்த பாதுகாப்புச் சாவடிகள் உள்ளன.

    சனிக்கிழமையன்று, கடுமையான ஊரடங்கு சட்டம் அமலுக்கு வர ஒரு மணிநேரமே இருந்த நிலையில், பாதுகாப்பு சேவைகள் எங்களுடைய அடையாளத்தை உறுத்தி செய்யும் வரை மணல் மூட்டைகளுக்குப் பின்னால் இருண்ட நடைபாதையில் இருந்த உள்ளூர் காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

    “நாங்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறிய அதிகாரி மன்னிப்பு கேட்டுவிட்டு, எங்களை விடுவித்தார். வெளியே தெருவிளக்குகள் எரியாததால், சுற்றியிருந்த கட்டடங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. இந்த நகரத்தில் மாலை 7 மணிக்க்குப் பிறகு வெடிகுண்டுகளில் இருந்து தப்பிப்பதற்கான பதுங்கு இடங்களுக்கு ஓடுவோரைத் தவிர வேறு யாரும் வெளியே அனுமதிக்கப்படுவதில்லை.

    இன்று காலை, திறந்திருந்த சில கடைகளில் அந்தப் பகுதி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். நாங்கள் அவர்களில் ஒருவரா என்பதைச் சரி பார்க்க எங்களைக் கடந்து சென்ற கார் ஒன்று அதன் வேகத்தைக் குறைத்தது. அடுத்த சிறிது நேரத்தில் திடீரென கூச்சலிட்டபடி வந்த காவலர்கள் கைகளை உயர்த்தும்படி கட்டளையிட்டு எங்களை இழுத்துச் சென்றனர். 3 ஆயுதமேந்திய அதிகாரிகள் வேனை சுற்றி வளைத்து, நாங்கள் யார் என்பதை நான் விளக்குவதற்குள் தங்கள் ஆயுதங்களை நேரடியாக எங்களை நோக்கிக் காட்டினர்.

    ஆனால், நகரம் எதிர்க்கவில்லை.

    நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் போருக்கு முன் இருந்த விளம்பரப் பலகைகள் இப்போது விளாதிமிர் புதின் மற்றும் அவருடைய படைகளுக்கான செய்திகளுடன் ஒட்டப்பட்டுள்ளன. சில “ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கான” செய்திகள். சில வெள்ளைக் கொடியை அசைத்து சரணடையுமாறு வீரர்களை அழைக்கின்றன.

    ரஷ்ய அதிபர் அவருடைய படைகள் மற்றும் டேங்கிகள், மக்களை விடுதலை செய்ய வந்தவர்களைப் போல் அணுகப்படுவார்கள் என்று எதிர்பார்த்தால், அவர் தவறாகக் கணக்கிட்டுவிட்டார் என்றுதான் அர்த்தம்.

  11. "ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே தாக்குதலை நிறுத்துவோம்" - புதின்

    யுக்ரேன் தாக்குவதை நிறுத்த வேண்டும், ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் அப்போதுதான் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தும் என துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானிடம் தொலைப்பேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார் என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    யுக்ரேனை வான், கடல்,நிலம் என அனைத்து வழிகளிலும் ரஷ்யா தாக்கி வருகிறது. இதனை சிறப்பு ராணுவ நடவடிக்கை என புதின் கூறுகிறார். மேலும் நாட்டை நாஜிக்கள் அற்ற நாடாக மாற்ற இது தேவை என எந்த ஆதாரமும் இல்லாமல் குறிப்பிட்டார்.

    அதேபோல ரஷ்ய அதிபர் புதின் யுக்ரேன் படையெடுப்பு திட்டமிட்டது போல நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    ஆனால் மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரஷ்ய படைகள் எதிர்ப்பார்த்தது போல முன்னேறி செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    அதேபோல பேச்சுவார்த்தைக்கு வந்த யுக்ரேன் பிரதிநிதிகள் மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என புதின் தெரிவித்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.

  12. 11-வது நாளாகத் தொடரும் படையெடுப்பு: யுக்ரேனில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

    இப்போதுதான் எங்களுடன் இணைகிறீர்கள் எனில், உங்களுக்காக படையெடுப்பின் 11-வது நாளான இன்று இதுவரை நடந்தவற்றில் சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றிய சுருக்கம், உங்களுக்காக...

    • முற்றுகையிடப்பட்டிருக்கும் தெற்கு நகரமான மேரியோபோலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றும் முயற்சிகள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றன. உள்ளூர் நேரப்படி, 12 மணிக்கு மக்களை வெளியேற்றுவதற்கான புதிய பாதை திறக்கப்படும் என்று யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது களத்தில் எந்தளவுக்கு நடக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
    • நேற்று ரஷ்ய தாக்குதல்களால் திட்டமிடப்பட்ட வெளியேற்றப் பாதையில் மக்கள் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.
    • துறைமுக நகரமான ஒடெஸ்ஸா மீது ஷெல் தாக்குதல் நடத்த ரஷ்ய படைகள் தயாராகி வருவதாக யுக்ரேன் அதிபர் எச்சரித்துள்ளார்.
    • கருங்கடலில் இருந்து யுக்ரேனைத் துண்டிக்கும் நோக்கத்தோடு, ரஷ்யா தெற்குப் பகுதியில் கவனம் செலுத்துவதற்கான அறிகுறிகள் இருப்பதாக யுக்ரேனின் உயர் பாதுகாப்பு அதிகாரி கூறினார்.
    • ஆனால், கீயவின் வடமேற்குப் பகுதியிலும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. தலைநகருக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நகரமான இர்பின் பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது.
    • கிழக்கில், கார்ஹிவ் மற்றும் சுமி ஆகிய நகரங்கள் மீண்டும் குண்டுவீச்சுகளுக்கு ஆளாகியுள்ளன.
    • கடந்த 10 நாட்களில் யுக்ரேனில் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறி, அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று ஐ.நா அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.
    • பிரிட்டன் துணைப் பிரதமர் டொமினிக் ராப், “மோதல் பல ஆண்டுகளுக்கு இல்லாவிட்டாலும் பல மாதங்களுக்கு நீடிக்கக் கூடும்” என்று கூறியுள்ளார்.
    • ரஷ்யாஇவ்ன் செயல்பாட்டு தலைமையகத்துடன் பிரிட்டன் அரசாங்கம் நேரடித் தொடர்பில் உள்ளதாகவும் ரஷ்ய படைத் தலைவரைச் சந்திக்கக் கோரியுள்ளதாகவும் பிரிட்டன் பாதுகாப்புப் படைத் தலைவர் கூறியுள்ளார்.
  13. “யுக்ரேனில் கண்ணீரும் ரத்த ஆறுகளும் ஓடுகின்றன” - ரஷ்யாவை கண்டித்த போப் ப்ரான்சிஸ்

    யுக்ரேன் மோதல், “ஒரு ராணுவ நடவடிக்கை அல்ல, அது ஒரு போர்,” என்று போப் ப்ரான்சிஸ் கூறியுள்ளார். மேலும், யுக்ரேனை “தியாகி நாடு” என்று கூறியவர், “அங்கு கண்ணீர் மற்றும் ரத்த ஆறுகள் ஓடுகின்றன,” என்றார்.

    யுக்ரேனின் ராணுவமயமத்தை இல்லாமல் ஆக்குவதற்காகத் தொடங்கப்பட்ட “சிறப்பு ராணுவ நடவடிக்கை” என்று யுக்ரேன் மீதான படையெடுப்பைப் பற்றி வலியுறுத்தும் ரஷ்ய அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வ கருத்தைக் கண்டிக்கும் வகையில் அவருடைய கருத்துகள் உள்ளன.

    கடந்த வாரம் ரஷ்யா-யுக்ரேன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு போப் வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

  14. மேரியோபோலில் இருந்து வெளியேற புதிய வெளியேற்றப் பாதை

    தென்கிழக்கு துறைமுக நகரமான மேரியோபோல் நகரத்தின் அதிகாரிகள், அங்கு சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் புதிய போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.

    மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சி ஒரு மணி நேரத்திற்கு முன்பு தொடங்கியது. ஆனால், பேருந்துகள் மற்றும் கார்கள் நகரத் தொடங்கிவிட்டனவா என்பதை எங்களால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

  15. ரஷ்ய படைகளுக்கு நடுவே நகரைவிட்டுத் தப்பிக்க முயலும் மக்கள்

    கீயவ் நகருக்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள இர்பின் நகரம், சமீபத்திய நாட்களில் ரஷ்ய மற்றும் யுக்ரேனிய படைகளின் சண்டையில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.

    இது ஹோஸ்டோமல் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. குடியிருப்பு கட்டடங்களும் சாலைகளும், பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால் பெரிதும் சேதமடைந்துள்ளன. யுக்ரேனிய படைகள் ரஷ்ய முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்த பாலங்களையும் தகர்த்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சனிக்கிழமையன்று எடுக்கப்பட்ட படங்கள், மக்கள் தப்பியோட முயலும்போது, உடைந்த கட்டைகளுக்கு நடுவே ஒரு பாலத்தைக் கடப்பதைக் காட்டுகிறது.

    ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ரயில்கள் தப்பிக்கும் வழியாக இருக்கின்றன. ஆனால், நகரம் தொடர்ந்து குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளது. அதோடு, இர்பினில் இருந்து வெளியேறும் பாதையில் உள்ள ரயில் பாதையின் ஒரு பகுதியை ரஷ்ய படைகள் தகர்த்துவிட்டதாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  16. போருக்கு எதிராகப் போராடியதால் நூற்றுக்கணக்கான ரஷ்ய மக்கள் கைது

    ஓ.வி.டி-இன்ஃபோ என்ற கண்காணிப்புக் குழுவின் தகவல்படி, 21 ரஷ்ய நகரங்களில் 600-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்ரேனில் போருக்கு எதிராக ரஷய் மக்களை ஆர்ப்பாட்டம் செய்ய அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிப் பிரமுகர் அலெக்ஸெய் நேவெல்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    உள்ளூர் ஊடக ஆதாரங்களை மேற்கோள் காட்டிய கண்காணிப்புக் குழு, சைபீரிய நகரமான நோவோசிபிர்ஸ்கில் 200-க்கும் மேற்பட்டோர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.

    உள்ளூர் நேரப்படி, மதியம் 2 மணிக்கு, நேவெல்னி மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்பர்க் நகரங்களின் முக்கிய சதுக்கங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார்.

    ரஷ்யாவில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் பெருமளவிலான மக்கள் கூட்டங்களைக் காவலில் வைப்பது வழக்கமாகிவிட்டது. 11 நாட்களுக்கு முன்பு யுக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து, போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குறைந்தது 8,000 பேர் ரஷ்யாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஓ.வி.டி-இன்ஃபோ கூறுகிறது.

    சனிக்கிழமை அன்று தொடங்கிய யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான உலகளாவிய போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன.

  17. "தமிழ்நாடு அரசை யுக்ரேன் சென்று மீட்டு வரச் சொல்லுங்கள்" - எல்.முருகன்

    "தமிழ்நாடு அரசு அமைத்த குழு மாணவர்களை மீட்டுக்கொண்டு வந்துவிட்டதா? சென்று மீட்டு வரச் சொல்லுங்கள்," இந்திய அரசு இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு.

  18. யுக்ரேன் வருமாறு ஈலோன் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்த அதிபர் ஸெலன்ஸ்கி

    யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ஈலோன் மஸ்க்கை போருக்குப் பிறகு யுக்ரேனுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்கும் அங்கு வரும் நாளை எதிர்நோக்கி இருப்பதாகக் கூறினார்.

    மஸ்க் தனது நிறுவனத்தின் செயற்கைக் கோள் அடிப்படையிலான இணைய சேவையுடன் இணைக்கும் ஸ்டாலிங்க் இணைய முனையங்களை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வாரத்தில் மேலும் கூடுதலாக அனுப்ப உறுதியளித்துள்ளார்.

    தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய தாக்குதல்களுக்கு நடுவே, யுக்ரேனின் இணைய அணுகலைப் பாதுகாக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

  19. "ரஷ்யாவுடனான போரைத் தவிர்க்க விரும்புகிறோம்" – பிரிட்டன் பாதுகாப்புத் தலைவர்

    போர் தீவிரமடையாமல் இருக்க யுக்ரேன், ஐரோப்பா மற்றும் உலக மக்களுக்கு பிரிட்டன் கடன்பட்டுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்புத் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் பிபிசியிடம் தெரிவித்தார்.

    யுக்ரேன் மக்கள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதை ஏற்றுக்கொண்டவர், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரை பிரிட்டன் விரும்பவில்லை என்றும் கூறினார்.

    மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டமைப்பான நேட்டோவில் அங்கம் வகிக்கும் பிரிட்டன், யுக்ரேனிய வான்பரப்பில் ரஷ்யா பறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பதாக அந்த நாட்டின் அதிபர் வொலோதிமிர் ஸ்லென்ஸ்கி தனது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது ரஷ்ய படைகளுடன் நேரடியாகச் சண்டையில் இறங்கும் வகையிலான கூட்டணிக்கு வழிவகுக்கும்

    ஆனால், படையெடுப்பு ரஷ்யாவிற்கு நேர்மறையானதாக இல்லை என்றும் பிரிட்டனின் எதிர்வினை சரியானது என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் சர் டோனி கூறினார்.

  20. “ரஷ்ய ராணுவ தலைமையோடு நேரடித் தொடர்பில் உள்ளோம்” – பிரிட்டன்

    ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் குறித்து பிரிட்டனும் நட்பு நாடுகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரிட்டன் பாதுகாப்புப் படைத் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் தெரிவித்துள்ளார்.

    “நாம் அமைதியாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும். எனவே, அதிபர் புதினின் வினோதமான, அபத்தமான கருத்துக்கு நாம் அவசரப்பட்டுச் செயல்படக் கூடாது,” என்று அவர் பிபிசியிடம் பேசியபோது கூறினார்.

    “பிரிட்டன், உலகின் மிகப் பெரிய ராணுவக் கூட்டணியான நேட்டோவின் ஒரு பகுதியாகும். அணுஆயுத தடுப்பு சக்தியைக் கொண்டுள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார்.

    “நாம் தயாராக உள்ளோம். அதிபர் புதினை எதிர்கொள்ளும் நம் திறனில் அபார நம்பிக்கையுடன் இருப்போம்,” என்று கூறியவரிடம், ரஷ்யா யுக்ரேனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறதா என்பது குறித்த விவரங்கள் தெரியுமா எனக் கேட்டதற்கு, அதைப் பற்றி விவரமாகச் சொல்ல விரும்பாத அவர், அணுசக்தி அபாயம் சாத்தியமானால் “எச்சரிக்கை அறிகுறிகள்” இருக்கும் என்றார்.

    பிரிட்டன் இன்னும் ரஷ்யாவுடன் தொடர்பு கொள்கிறதா என்று கேட்டபோது, அவர் மாஸ்கோவின் செயல்பாட்டு தலைமையகத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் அந்தத் தொடர்பு ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கப்படுவதாகவும் கூறினார்.

    மேலும், அவர் சமீபத்தில் ரஷ்ய ராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் உடனான சந்திப்பைக் கோருவதற்கு அந்தத் தொடர்பைப் பயன்படுத்தியதாகவும், பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.