ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்படும் காட்சி
ஏவுகணை தாக்கியதில் ரஷ்ய ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய தருணத்தின் காணொளியை, யுக்ரேன் ஆயுதப்படை பகிர்ந்துள்ளது.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"போர் நிறுத்தம் பொய்யானது. துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒரு தரப்பு ஒருபோதும் திட்டமிடவில்லை. அவர்கள் மற்றொரு போர் நிறுத்தம் இருப்பதாகச் சொன்னால் நாங்கள் வெளியேற முயல வேண்டும். "
க. சுபகுணம்
ஏவுகணை தாக்கியதில் ரஷ்ய ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய தருணத்தின் காணொளியை, யுக்ரேன் ஆயுதப்படை பகிர்ந்துள்ளது.
ஆபரேஷன் கங்கா மூலம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 448 மாணவர்களை யுக்ரேனில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் இன்னும் 236 மாணவர்களை வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும் நாளை 12 விமானங்கள் யுக்ரேனுக்குச் செல்வதாகவும் கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆணையர் முனைவர்.மனோஜ் ராஜன் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
யுக்ரேனின் துணைப் பிதமர்களில் ஒருவரான ஒல்ஹா ஸ்டெஃபானிஷ்யா, பிபிசி ஒன்னில் ஞாயிறு காலை சோஃபி ராவர்த்துடன் பேசினார்.
அப்போது, “யுக்ரேனிய ரானுவம் எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக உள்ளது. இந்தப் படையெடுப்பை மிகுந்த உறுதியோடு யுக்ரேன் எதிர்த்தாலும், இதுவரை போரின் முடிவை நெருங்கவில்லை,” என்றார்.
மேலும், “ரஷ்யாவின் பயங்கரவாதத் திட்டத்தின்” மற்றோர் அலை தொடங்கியுள்ளது என்றவர், “நிலைமை மோசமாகி வருவதாகவும் யுக்ரேனிய நகரங்களில் மருத்துவமனைகள் மற்றும் மழலையர் பள்ளிகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், அதன் வீரர்களின் உயிர்கள் உட்பட ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள், விளாதிமிர் புதினைத் தடுக்கைவ்ல்லை. மாறாக, படையெடுப்பை மேலும் ஊக்குவிப்பதாகக் கூறினார்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் "பயங்கரமான" படையெடுப்பை தோல்வி அடையச் செய்ய முயற்சி மேற்கொள்ளுமாறு, உலகத் தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். அதோடு ரஷ்யாவை எதிர்கொள்ள அவர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதை எளிமையாகப் புரிந்துகொள்ள இந்தக் காணொளியைக் காணுங்கள்.
யுக்ரேனில் இருந்து வெளியேறி கடந்த 10 நாட்களில் அண்டை நாடுகளுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர் என அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் ஃபிலிப்போ க்ராண்டி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பில் விரைவாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடியாக இது மாறியது.
முந்தைய செய்தியின்படி, உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் மேரியோபோல் நகரத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக நகர சபை கூறியுள்ளது. தற்போது, யுக்ரேனில் காலை 11 மணியை நெருங்கிவிட்டதால், ஏற்கெனவே அது தொடங்கியிருக்க வேண்டும்.
ஸாப்போரிஷியாவில் முடிவடைகின்ற, முன்பு திட்டமிடப்பட்ட பாதை வழியாகப் நகரின் மூன்று இடங்களில் இருந்து புறப்படும் பேருந்துகளில் பொதுமக்கள் மேரியோபோலை விட்டு வெளியேற முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தனியார் வாகனங்களும் வெளியேற்றத்தில் இணைந்துகொள்ளலாம். ஆனால், செஞ்சிலுவை சங்கம் தலைமையில் பேருந்துகள் அதற்குப் பின்னால் வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் அனைத்து இருக்கைகளையும் நிரப்ப வேண்டுமென நகர சபை கூறியுள்ளது.
போர் நிறுத்தம் பற்றிய செய்தி நேர்மறையானதுதான். இருப்பினும், சற்று எச்சரிக்கையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். இதேபோன்ற திட்டம் சனிக்கிழமை அன்று, மேரியோபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது விரைவாக நிறுத்தப்பட்டது.
இன்னமும் யுக்ரேனில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக கூகுள் ஃபார்ம் ஒன்றை நிரப்ப வேண்டும் என கூறி அந்த படிவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது யுக்ரேனில் உள்ள இந்திய தூதரகம்.
தெற்கு யுக்ரேனில் உள்ள துறைமுக நகரமான மேரியோபோலில் உள்ளூர் நேரப்படி, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி, 12 மணி முதல் நிர்ணயிக்கப்பட்ட பாதை வழியாக பொதுமக்கள் நகரத்தைக் காலி செய்ய முடியும்.
நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்ட இதேபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடங்கிய குண்டுவெடிப்புகளின் காரணமாக நிறுத்தப்பட்டது.
ஜோசஃப் ஸ்டாலின்தான் நீண்டகாலம் சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிந்தவர். அவருக்கு அடுத்தபடியாக நீண்ட காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராக இருப்பவர், இப்போதைய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். ஸ்டாலினுடைய கடுமையான அணுகுமுறையைப் போலவே, தற்போது புதினின் அணுகுமுறையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடக்கும் மிகப் பெரிய படையெடுப்பாகவும் இப்போது நிகழும் ரஷ்யாவின் யுக்ரேன் படையெடுப்பு கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஜோசஃப் ஸ்டாலின் குறித்த பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில், அவர் எப்படிப் பட்டவர் என்பதை வரலாற்றுப் பார்வையில் பார்ப்பது அவரைப் புரிந்துகொள்ள உதவும்.
யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யா-யுக்ரேன் மோதல் குறித்து தனது தினசரி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிலுள்ள சில முக்கிய தகவல்கள் இங்கே:
யுக்ரேனிய ராணுவம் கூறுவதை பிபிசி சுயாதீனமாகச் சரிபார்க்க முடியாது. யுக்ரேனில் தனது படைகளால் ஏற்பட்ட இழப்புகளின் சில விவரங்களை ரஷ்யா வழங்கியுள்ளது. ஆனால், யுக்ரேனிய எதிர்ப்பின் வலிமையால் அது ஆச்சர்யம் அடைந்துள்ளதாகவும், அதன் விநியோகப் பாதைகள் மற்றும் படைகளின் மன உறுதியில் சிக்கலைச் சந்தித்துள்ளதாகவும் ராணுவ வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
யுக்ரேன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணம் செலுத்தும் நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகியவை ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறுகின்றன. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து, சீனாவிற்கு வெளியே உலகில் 90% க்ரெடிட் மற்றும் டெபிட் பணப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
இந்த நடவடிக்கை சாதாரண ரஷ்யர்களுக்கு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்?
ரஷ்யாவின் முக்கிய வங்கிகள் ஏற்கெனவே தங்கள் வாடிக்கையாளர்களின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட்டுள்ளன. ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து விசா மற்றும் மாஸ்டர்கார்ட் வங்கி அட்டைகளும் ரஷ்யாவில் வழக்கமாகச் செயல்படும் என்று ரஷ்யாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பெரும்பான்மையான அரசு வங்கிகள் மற்றும் நிதி சேவைகளைக் கட்டுப்படுத்தும் ஸிபர்பாங்க், “பணத்தை எடுக்கவும் அட்டை எண்ணைப் பயன்படுத்தின் பரிமாற்றம் செய்யவும் நேரடியாக மற்றும் இணையவழியில் அவற்றைப் பயன்படுத்தி ரஷ்ய கடைகளில் பணம் செலுத்தவும் கார்டுகள் வேலை செய்யும்” என்று கூறியது.
“அவை ரஷ்ய பிரதேசத்தில் தொடர்ந்து வேலை செய்யும். ஏனெனில், ரஷ்யாவில் அனைத்தும் கொடுப்பனவுகளும் ஒரு தேசிய அமைப்பு மூலம் செய்யப்படுகின்றன மற்றும் வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்து இல்லை,” என்று மத்திய வங்கி கூறியுள்ளது.
இருப்பினும், ரஷ்யாவால் வழங்கப்பட்ட மாஸ்டர்கார்ட் அல்லது விசா அட்டைகள் வெளிநாடுகளில் வேலை செய்யாது. மேலும் வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷ்யாவிற்குள் வேலை செய்யாது.
க்ரைமியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், ரஷ்யா-யுக்ரேன் நெருக்கடிக்கு மத்தியில் நிலவும் பதற்றத்தை உணர்ந்து, இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் க்ரைமியாவில் இருந்து இன்று டெல்லி வந்து சேர்ந்ததாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
அவர்கள், க்ரைமியாவில் நிலைமை சாதாரணமாக இருந்தாலும்கூட, ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி வந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். கல்லூரிகள், இந்திய மாணவர்களை இணைய வழியில் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதித்துள்ளதாகவும் மாணவர்கள் கூறினர்.
யுக்ரேனில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற முயற்சி செய்வர் என்று ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில், யுக்ரேனில் இருந்து போர் அகதிகளாக வெளியேறும் மக்களின் நிலை என்ன என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.
ரஷ்யாவின் “தாக்குதலைத் தாங்கிக் கொண்டோம்,” என்று யுக்ரேனிய மக்களிடம் கூறிய அதிபர் ஸெலன்ஸ்கி, மக்களைத் தொடர்ந்து போராடுமாறு வலியுறுத்தினார்.
கீயவின் தலைநகருக்கு வெளியே, 64 கி.மீ நீளத்திற்கு ஒரு பெரிய கான்வாய் நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் யுக்ரேனிய பாதுகாப்பு அதிகாரிகள் தங்களால் இயன்ற அளவுக்கு அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளைத் தாக்கியதாகக் கூறுகிறார்கள்.
யுக்ரேன் படையெடுப்பில் ரஷ்யாவின் நிலைமை என்ன?
யுக்ரேனில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது, அவர்களுடைய மன உறுதியை உடைக்கும் முயற்சி என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தினசரி உளவுத்துறை அறிக்கையில், யுக்ரேனுடைய எதிர்ப்பின் வலிமை ரஷ்யாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. கார்ஹிவ், செர்னிஹிவ் மற்றும் மேரியோபோல் உள்ளிட்ட நகரங்களைக் குறி வைத்து பதிலடி கொடுத்தது.
2016-ல் சிரியாவிலும் 1999-ல் செச்னியாவிலும் ரஷ்ய ராணுவம் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மீது தீவிர ஷெல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு, தற்போதைய ரஷ்யாவின் மூலோபாயத்தை அது ஒப்பிடுகிறது.
யுக்ரேன் ரஷ்யாவின் விநியோகப் பாதைகளைக் குறி வைத்ததன் மூலம், அதன் முன்னேற்றம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
சுமி மற்றும் மேரியோபோல் நகரங்களின் நிலைமை, “மனிதாபிமான பேரழிவின் விளிம்பில் உள்ளன,” என்று யுக்ரேன் அரசு அதிகாரி ஒருவர் யுக்ரேன்-24 தொலைக்காட்சி சேனலுக்கு ஞாயிற்றுக் கிழமை காலை தெரிவித்தார்.
வடக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள அக்திர்கா மற்றும் ட்ரோஸ்டியானெட்ஸ் நகரங்களில் தற்போது மின்சாரம் அல்லது நீர் விநியோக இல்லை என்று அரசாங்க ஆலோசகர் வாடிம் டெனிசென்கோ கூறினார்.
மேரியோபோல் நகரிலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முந்தைய போர் நிறுத்தம், 30 நிமிடங்களுக்குக் குறைவாகவே நீடித்தது. அதற்கு ஷெல் குண்டு தாக்குதல் தொடங்கிவிட்டது என்று யுக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்களைக் கேட்டிருந்தோம்.
எப்படியிருப்பினும், மனிதாபிமான வழித்தடம் ஞாயிற்றுக் கிழமை மீண்டும் திறக்கப்படலாம் என்று கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் டொனெட்ஸ்கில் உள்ள ஓர் அதிகாரியான எட்வர்ட் பாசுரின் கூறியதாக ரஷ்ய இன்டெர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
யுக்ரேன் மீது ரஷ்யா 11-வது நாளாக படையெடுப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்றைய படையெடுப்பு நடவடிக்கைகளில் இதுவரை நடந்தது என்ன?
உங்களுக்காகச் சுருக்கமாக...
நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை லட்சுமிகாந்த் பாரதி வழங்கிக் கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவுள்ளேன்.
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தி வரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் "பயங்கரமான" படையெடுப்பை தோல்வி அடையச் செய்ய முயற்சி மேற்கொள்ள, உலகத் தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அந்த ஆலோசனைகள்:
வரும் திங்களன்று, பிரதமர் அலுவலகத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் டச்சு பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோருடனான சந்திப்புகளின்போது, பிரதமர் போரிஸ் ஜான்சன் இதே கருத்துக்களை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கடுமையான நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் மேற்கு நாடுகளின் தலைவர்களின் கொள்கையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
மேற்கத்திய ஊடகங்கள் இந்தத் தாக்குதல் குறித்த செய்திகளில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவாகவே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகப் மேற்கு நாடுகளை சேராத நிபுணர்கள் கவலை தெரிவித்ததோடு, மேற்கத்தியத் தலைவர்கள் இரட்டைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்கத்திய தலைவர்கள் ரஷ்யாவை வில்லனாகச் சித்தரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. அதே நேரத்தில், தற்போதைய நெருக்கடிக்கு மேற்கு நாடுகளும் பொறுப்பாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடகவியலாளர்களின் வலையமைப்பான அரபு மற்றும் மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் சங்கம், மேற்கத்திய ஊடகங்களின் "இனவெறி" சார்ந்த செய்திகள் குறித்து ஒரு அறிக்கையில் கவலை தெரிவித்தது.