You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஜெயக்குமாரின் பிணை மனு தள்ளுபடி: சென்னை நீதிமன்றம்

தேர்தல் விதிகளை மீறியதாகவும் வன்முறையை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மறுத்து விட்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. "யுக்ரேனிய பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்"- ராஜ்நாத் சிங்

    "யுக்ரேனிய பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்," என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கருத்து கூறிய அவர், "ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் பைடனுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்று நான் நம்புகிறேன். சர்வதேச அளவில் அமைதி நிலைநாட்டப்படுவதையே இந்தியா விரும்புகிறது" என்று தெரிவித்தார்.

  2. உள்ளாட்சி தேர்தல்: நெல்லை பணக்குடி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்

    திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட பணக்குடி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    நான்காவது வார்டான பணக்குடியில் மொத்தம் 68.03 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதில் அதிமுக வேட்பாளர் உஷா மற்றும் பாஜக வேட்பாளர் மனுவேல் இருவருமே தலா 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றி வேட்பாளரை அறிவிக்க குலுக்கல் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    அதன்படி நடந்த குலுக்களில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  3. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதல் முறையாக தேர்தலை சந்தித்த திருப்பூர் மலை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக தேர்தலை சந்தித்த திருப்பூர் மலை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்திமலை பகுதியிலுள்ள குருமலை, மேல் குருமலை, பூச்சி கொட்டாம்பாறை மற்றும் திருமூர்த்தி மலை கிராமங்கள், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்துள்ளன.

    சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்த கிராமங்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளி பேரூராட்சியின் கீழ் உள்ள 16வது மற்றும் 17வது வார்டுகளுடன் சேர்க்கப்பட்டன.

    இந்த நிலையில், குறிப்பிட்ட வார்டுகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் செல்வன், வாணிஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

    நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் இந்த கிராம மக்கள் வாக்களித்துள்ள போதிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் இதுநாள்வரை இவர்கள் வாக்களித்ததில்லை.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, கடலூர் மாநகராட்சியில் திமுக முன்னிலை

    கடலூர் மாநகராட்சிக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கிறது.இந்த மாவட்டத்தில் ஒரு‌ மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்தது.

    இதன் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. கடலூர் மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற 45 வார்டுகளில் 33 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

    இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 24 வார்டுகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றன.

    கடலூரை மாநகராட்சியாக அறிவித்த பின்பு இங்கு முதல் முறையாக நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

  5. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த சமீபத்திய தகவல்கள்

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது: பிரிட்டன்

    யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று பிரிட்டன் கூறியுள்ளது.

    ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை பிரிட்டன் விதிக்கும் என அந்நாட்டு சுகாதாரத் துறை செயலர் சஜித் ஜாவித் கூறியுள்ளார்.

    "யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என முடிவுக்கு வரலாம்" என ஸ்கை நியூஸிடம் அவர் கூறினார்.

  7. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முன்னிலை

    தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள 101 மாநகராட்சி வார்டுகளில் 84 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிமுக 9 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும் மற்றவை 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன

    இதே போல் நகராட்சி வார்டுகளில் அறிவிக்கப்பட்ட 469-இல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் 328 வார்டுகளிலும் அதிமுக 90 வார்டுகளிலும் வென்றிருக்கிறது. தேமுதிக 3 வார்டுகளையும், பாஜக 4 வார்டுகளையும் மற்றவை 62 வார்டுகளையும் பெற்றிருக்கின்றன.

    முடிவுகள் அறிவிக்கப்பட்ட 2,242 பேரூராட்சி வார்டுகளில் திமுக 1449 வார்டுகளையும் அதன் கூட்டணி கட்சிகள் 106 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. அதிமுக 385 வார்டுகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாஜக 29 இடங்களையும், தேமுதிக 7 இடங்களை கைப்பற்றியிருக்கிறது.

  8. திட்டக்குடி நகராட்சியை கைப்பற்றிய திமுக

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியது

    திட்டக்குடியில் உள்ள மொத்தம் 24 வார்டுகளில் திமுக12 வார்டுகள், அதன் கூட்டணி கட்சியான தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி 1 வார்டு, விசிக 1 வார்டுகளிலும், சுயேச்சை 5 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

  9. வணக்கம் நேயர்களே!

    நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை எம். மணிகண்டன் மற்றும் நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நானும் இணைந்து வழங்க உள்ளேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  10. தொண்டாமுத்தூர் பேரூராட்சி: எஸ்.பி.வேலுமணி தொகுதியை கைப்பற்றிய திமுக

    கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் வென்று திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    தொண்டாமுத்தூர் பேரூராட்சி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

  11. தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: மேயர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

    தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் மேயர் எப்படி தேர்வு செய்யப்படுவார்? என்பதை அறிய இந்த காணொளியை காணுங்கள்:

  12. சென்னை மாநகராட்சி: 136வது வார்டில் 22 வயதான நிலவரசி வெற்றி

    சென்னை மாநகராட்சி 136வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான பி.காம் பட்டதாரி நிலவரசி வெற்றி பெற்றார்.

    நிலவரசி துரைராஜ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "எனக்கு வாய்ப்பளித்த தலைமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் 9 மாத நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது. முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு தொண்டர்களின் தீவிர வாக்கு சேகரிப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

    நிச்சயம் ஒரு முன்மாதிரி கவுன்சிலராக செயல்படுவேன். என் மீது கட்சியும் வாக்களித்த மக்களும் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்" என்றார்.

  13. வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திருநங்கை கங்கா வெற்றி

    வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37வது வார்டில், திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.

    49 வயதான கங்கா, கடந்த 2002 முதல் திமுக உறுப்பினராக இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  14. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக அதிக இடங்களில் வெற்றி

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொடக்க கட்ட முடிவுகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள 42 மாநகராட்சி வார்டுகளில் 34 வார்டுகளை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வென்றிருக்கின்றன.

    இதே போல் நகராட்சி வார்டுகளில் அறிவிக்கப்பட்ட 208-இல் திமுக 153ஐ திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வென்றிருக்கின்றன. அதிமுக 44 இடங்களில் வென்றிருக்கிறது. தேமுதிக ஒரு இடத்தில் வென்றிருக்கிறது.

    முடிவுகள் அறிவிக்கப்பட்ட 1,368 பேரூராட்சி வார்டுகளில் திமுக 897 வார்டுகளையும் அதன் கூட்டணி கட்சிகள் 67 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. அதிமுக 272 வார்டுகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாஜக 16 இடங்களையும், தேமுதிக 5 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது.

  15. கடலூர் மாநகராட்சியின் முதல் நான்கு வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி

    கடலூர் மாநகராட்சியின் முதல் 4 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    கடலூர் மாநகராட்சி 1வது வார்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த புஷ்பலதா மற்றும் 4வது வார்டில் அக்கட்சியை சேர்ந்த சரிதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

    அதேபோன்று, 2வது வார்டில் திமுகவை சேர்ந்த கீதா குணசேகரன் மற்றும் 3வது வார்டில் அக்கட்சியை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

  16. துவாக்குடி நகராட்சி: 22 வயதான சுயேட்சை பெண் வேட்பாளர் வெற்றி

    திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் 22 வயதான ஸ்னேகா 496 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இதில், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் 22 வயதான ஸ்னேகா 496 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

  17. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: அதிக இடங்களில் திமுக வெற்றி

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொடக்க கட்ட முடிவுகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள 10 மாநகராட்சி வார்டுகளில் 9 வார்டுகள் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வென்றிருக்கின்றன.

    இதே போல் நகராட்சி வார்டுகளில் அறிவிக்கப்பட்ட 36-இல் திமுக 20-ஐயும் காங்கிரஸ் கட்சி நான்கையும் வென்றிருக்கின்றன. அதிமுகவுக்கு 6 வார்டுகள் கிடைத்திருக்கின்றன.

    முடிவுகள் அறிவிக்கப்பட்ட 541 பேரூராட்சி வார்டுகளில் திமுக 307வார்டுகளையும் காங்கிரஸ் 22 வார்டுகளையும் கைப்பற்றியிருக்கின்றன. அதிமுக 70 வார்டுகளைக் கைப்பற்றியிருக்கிறது.

  18. சேலம் மாவட்டம்: இடங்கணசாலை நகராட்சியில் 3 இடங்களில் பாமக வெற்றி

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில் மூன்று இடங்களில் பாமக வெற்றி வெற்றி பெற்றுள்ளது.

    1வது வார்டில் அக்கட்சி வேட்பாளர் மணி, இரண்டாவது வார்டில் மாதேஷ், 3வது வார்டில் மூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

  19. திருச்சி : துவாக்குடி நகராட்சி, கூத்தைப்பார், சிறுகமணி பேரூராட்சி வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி

    திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி1வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெயந்தி 339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.2வது வார்டில் 338 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஸ்டீபன் ராஜ் வெற்றி பெற்றுள்ளார்.3வது வார்டில் மதிமுக வேட்பாளர் மோகன் பெரிய கருப்பன் 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கூத்தைப்பார் பேரூராட்சி வார்டு 1ல் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் கவிதா 284 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இரண்டாவது வார்டில் மதிமுக வேட்பாளர் உண்ணாமலை 408 வாக்குகள் பெற்று வெற்றி வெற்றுள்ளார்.

    சிறுகமணி பேரூராட்சி 1 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் குமதவள்ளி தங்க வேல் 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

  20. கடலூர் மாநகராட்சி: ஸ்ட்ராங் ரூம் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்

    கடலூர் மாநகராட்சி வாக்கு எண்ணும் மையத்தின் ஸ்ட்ராங் ரூம் சாவி தொலைந்ததால், வாக்கு எண்ணிக்கையை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

    கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் அமைக்கப்பட்ட 152 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், கடலூர் மாநகராட்சியின் வாக்கு எண்ணும் மையமான செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.

    இதனிடையே, இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய வாக்கு எண்ணிக்கை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறையின் (Strong Room) சாவி தொலைந்ததால் தாமதமானது. இதனால் அந்த அறையின் சாவியை அதிகாரிகள் தேடினர்.

    இந்நிலையில், சாவி கிடைக்காததால் பூட்டை அறுத்து அறையை திறந்தனர். இதனையடுத்து வாக்கு எண்ணும் பணியை தொடங்கினர்.