You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஜெயக்குமாரின் பிணை மனு தள்ளுபடி: சென்னை நீதிமன்றம்

தேர்தல் விதிகளை மீறியதாகவும் வன்முறையை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மறுத்து விட்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. ஹிஜாப் சர்ச்சை: நீதிபதியை விமர்சித்த கன்னட நடிகர் கைது

    கர்நாடகாவில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கான தடைக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித்தை விமர்சிக்கும் வகையில் தமது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

    2020ஆம் ஆண்டில் பதிவான பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில், புகார் அளித்த பெண்ணின் நடத்தை குறித்து நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதை தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட சேத்தன் குமார், “பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மன அமைதியை குலைக்கும் வகையிலான கருத்துக்களை நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் கூறியிருந்தார். இவர்தான், அரசுப் பள்ளிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் அனுமதிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வார். அவருக்கு இது குறித்த போதுமான தெளிவு இருக்கிறதா?” என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நடிகர் சேத்தன் குமாருக்கு எதிராக,“குறிப்பிட்ட பிரிவினரை குற்றம் செய்ய தூண்டுதல்” மற்றும் “அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதித்தல்” உள்ளிட்ட பிரிவுகளில் பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

    சேத்தன் குமார் கைது செய்யப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில் சிலர் காவல்துறை செயல்பாட்டின் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர்.

    தலித் ஆர்வலராக அறியப்படும் சேத்தன் குமார், கர்நாடகாவில் வலதுசாரி இயக்கங்களுக்கு எதிராக நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

    பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, இவர் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  2. யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?

    படையெடுப்பு தொடங்கி விட்டதாக மேற்கத்திய நாடுகள் கூறும் நிலையில், யுக்ரேன் - ரஷ்யா இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ வல்லமை என்ன?

    உலக நாடுகளின் ராணுவ வல்லமையை மதிப்பிடும் 'குளோபல் ஃபயர் பவர்' எனும் இணையதளம் மற்றும் உலக நாடுகள் இடையிலான போர், பதற்றம், புவிசார் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவை குறித்து ஆராயும் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடீஸ் எனும் ஆய்வு நிறுவனத்தின் வருடாந்திரப் பதிப்பான 'தி மிலிட்டரி பேலன்ஸ்' ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பிபிசி இந்த விவரங்களை உங்களுக்கு வழங்குகிறது.

  3. ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: குடிமக்களை கேட்டுக்கொண்ட யுக்ரேன்

    யுக்ரேனில் வாழும் தமது குடிமக்கள் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஏற்கெனவே ரஷ்யாவில் இருக்கும் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் யுக்ரேன் அழைப்பு விடுத்துள்ளது.

    இது தொடர்பாக யுக்ரேனிய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் கோபம் தீவிரமாக உள்ளதால்”, ரஷ்யாவில் உள்ள யுக்ரேன் மக்களுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை ரஷ்யா வழங்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யுக்ரேனின் இந்த அறிவிப்பு, ரஷ்யாவில் வாழும் லட்சக்கணக்கிலான யுக்ரேன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

  4. மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம்

    உதடுகளை 'பிறப்புறுப்பின் எதிரொலி' (Genital echo) என்று அழைக்கிறார்கள் என்று சில மானுடவியலாளர்கள் நினைக்கின்றனர். அவை பெண் பிறப்புறுப்புகளின் வடிவம், நிறம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.

    மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? அறிவியல் கூறும் காரணத்தை விளக்கும் இந்த சுவாரஸ்ய கட்டுரையை வாசியுங்கள்:

  5. யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிற நாடுகள் விதிக்கும் தடைகள் என்ன?

    தங்களைத் தாங்களே 'குடியரசுகள்' என்று அறிவித்துக் கொண்ட, கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிழக்கு யுக்ரேன் பகுதிகளை, தனி நாடுகளாக, செவ்வாயன்று ரஷ்யா அங்கீகரித்துள்ளது. ''அமைதியை காப்பதற்காக'' என்று கூறி அப்பகுதிகளுக்குத் தமது படைகளை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

    இதனால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளன.

    தடைகள் என்றால் என்ன? இதுவரையில் ரஷ்யா மீது போடப்பட்ட தடைகள் என்னென்ன? இனி வருங்காலங்களில் ரஷ்யா எந்தவிதமான தடைகளை எதிர்கொள்ளும் என்பது குறித்த விரிவான கட்டுரையை இங்கே படியுங்கள்:

  6. யுக்ரேன் எல்லைக்கு அருகில் ரஷ்ய படைகள் அதிகரிப்பு: செயற்கைக்கோள் படங்கள்

    அமெரிக்காவில் செயல்பட்டு வரும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மேக்சர் தொழில்நுட்ப நிறுவனம், மேற்கு ரஷ்யாவில் புதிய படைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக, சில செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.

    தெற்கு பெலாரஸில் 100க்கும் அதிகமான ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த பகுதிகள் அனைத்தும், யுக்ரேன் எல்லைக்கு அருகில் உள்ளவையாகும். சமீப நாட்களாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து விரிவான ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது.

    ஆனால், இந்த புகைப்படங்கள் குறித்து ரஷ்யா மற்றும் பெலாரூஸ் ஆகிய நாடுகள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

  7. தமிழ்நாட்டில் "நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் இல்லாமல் நெல் விற்க முடியாது" - விவசாயிகள் புகார்

      • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
      • பதவி, பிபிசி தமிழ்

    தமிழ்நாட்டில் ''நேரடி நெல் கொள்முதலில் எந்தவித தவறும் நடைபெறக் கூடாது என்பதில் அரசு கவனமாகவும் உறுதியாகவும் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் அரசு பொறுத்துக் கொள்ளாது. தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    ஆனால், லஞ்சம் தராமல் பெரும்பாலான நேரங்களில் நெல் விற்க முடியாது என்பதே நிலை என்கிறார்கள் விவசாயிகள்.

  8. இந்தியாவுக்கு விரைவில் வருகை தரும் இலங்கை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ

    இலங்கை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

    நிதி அமைச்சருடன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார சிக்கல் நிலைமையிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

    இதன்படி, இந்தியாவிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்த விஜயம் அமையவுள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவினால் வழங்கப்படும் கடனுதவியின் ஒரு தொகையை பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் இந்த மாத இறுதியில் இந்தியா செல்வார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

    இலங்கை பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளமை பிரதான பிரச்னையாக காணப்படுகின்றது.

    இவ்வாறு ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை காரணமாக, மின்சார உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டு, நாட்டில் தற்போது நாளாந்தம் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.

    இவ்வாறான பிரச்னைகளுக்கு மத்தியிலேயே, நிதி அமைச்சர் இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளார்.

  9. ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடி: தற்போது என்ன நடக்கிறது?

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா?யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடியில் தற்போது என்ன நடக்கிறது?

    • வார இறுதியில் அறிவிக்கப்பட்டதன்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    • நாளை (பிப். 24) ரஷ்ய செயலாளருடன் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க செயலாளர் ஆண்டனி பிளிங்கென் ரத்து செய்துள்ளார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிவிட்டது என அமெரிக்கா கருதுவதால், இந்த சந்திப்பு எவ்வித அர்த்தத்தையும் தராது என, ஆண்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு, “அடுத்த 24 மணிநேரத்தில் நிகழும்” என, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் எச்சரித்துள்ளார்.
    • ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகியவை ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ள நிலையில், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக நிதி மற்றும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
    • ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள், சாதாரண அமெரிக்க மக்களையும் பாதிக்கும் என, அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் எச்சரித்துள்ளார்.
    • ரஷ்யாவின் ஆயுதப் படைகளை வெளிநாட்டிலும் பயன்படுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் புதினுக்கு அதிகாரம் அளித்துள்ளது. ஆனால், பிரிவினைவாதப் பகுதிகளுக்கு ஏற்கனவே படைகள் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

    எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி தொடர்பான அனைத்து சமீபத்திய நிகழ்வுகள், களத்திலிருந்து எங்கள் நிருபர்கள் வழங்கும் பகுப்பாய்வு, நேரடி சாட்சியங்களின் மேற்கோள்கள், சமீபத்திய காணொலி, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறோம்.

  10. பெண் சக்திதான் ஊரக பொருளாதாரத்தின் அடிப்படை: பிரதமர் நரேந்திர மோதி

    ஊரக வளர்ச்சியில் மத்திய பட்ஜெட்டின் தாக்கம் குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது, “அரசின் வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை 100 சதவீத மக்களுக்கு சென்றடையும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

    அதிவேக இணைய இணைப்பு கிராமங்களில் திறன்வாய்ந்த இளைஞர்களை உருவாக்கும்.

    அனைத்து திட்டங்களும் 100% மக்களை சென்றடைய புதிய தொழில்நுட்பத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

    ஊரக பொருளாதாரத்தின் அடிப்படையே பெண் சக்திதான். நிதி சார்ந்த செயல்பாடுகளில் அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகள் குடும்பங்களின் நிதி குறித்த முடிவுகளில் பெண்களின் சிறந்த பங்களிப்பை உறுதி செய்துள்ளது” என பேசினார்.

  11. ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கு தொடுத்த பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல்

    கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில், ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் சகோதரர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதையடுத்து மீண்டும் அமைதியற்ற சூழல் தற்போது அங்கு நிலவி வருகிறது.

  12. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  13. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கட்சிகள் கைப்பற்றிய வார்டுகள் எண்ணிக்கை

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள வார்டுகளில் எத்தனை சதவிகித வார்டுகளை எந்தெந்த கட்சி கைப்பற்றியுள்ளது என்பதன் விவரங்கள்.

    மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் திமுக முறையே 952, 2,360, 4,388 வார்டுகளில் வென்றுள்ளது.

    இந்த எண்ணிக்கை அதிமுகவுக்கு முறையே 164, 638, 1,206 ஆக உள்ளது.

    அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் வென்ற காங்கிரஸ் மாநகராட்சிகளில் 73, நகராட்சிகளில் 151 மற்றும் பேரூராட்சிகளில் 368 வார்டுகளில் வென்றுள்ளது.

    பாஜக முறையே 22,56, 230 வார்டுகளில் வென்றுள்ளது.

  14. இந்தியாவில் கொரோனா நிலவரம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,102 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    278 பேர் இறந்துள்ளனர். 31,377 பேர் குணமடைந்துள்ளனர்.

    இப்போது 1,64,522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவால் 5,12,622 பேர் இறந்துள்ளனர் என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.

  15. தொடங்கிய 22 நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவை

    புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கிய 22 நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    நீட் விலக்கு, மின்துறை தனியார் மையமாதலுக்கு எதிர்ப்பு கூட்டத்தொடர் தொடங்கியதும் திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

    புதுச்சேரியில் 15 சட்டப்பேரவையின் 2வது கூட்டத்தொடர் காலை 9.33 மணிக்கு கூடியது. நீட் விலக்கு, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

    சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கும், பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து சட்டமுன்வரைவுகளுக்கு இசைவு அளிக்கும் நிகழ்வு மட்டும் பட்டியலிடப்பட்டது. அப்போது குறைந்த நேரத்தில் சட்டப்பேரவை நடத்தக்கூடாது, மக்கள் பிரச்னைகள் பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு சபையை நடத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சபாநாயகர் செல்வத்திடம் வலியுறுத்தியது.

    இதனையடுத்து தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

  16. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம், நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக

    புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. சட்டமுன்வரைவுகளுக்கு இசைவு அளிக்கும் நிகழ்வு மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதுச்சேரி சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனிடையே சட்டசபை 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை படி மார்ச் 2-ஆம் தேதிக்குள் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும்.

    இதற்காக இன்று காலை 9.33 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூட்டப்பட்டது.

    நீட் விலக்கு, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

  17. மைனஸ் 30 டிகிடி குளிரில் உடற்பயிற்சி

    லடாக்கில் மைனஸ் 30 டிகிடி குளிரில் காமண்டன்ட் ரத்தன் சிங் சோனல் 60 புஷ்-அப்ஸ் எடுத்த காணொளியை இந்தோ - திபெத்திய எல்லை காவல் படை வெளியிட்டுள்ளது.

    17,500 அடி உயரத்தில், கடும் குளிரில் உடற்பயிற்சி செய்த இவருக்கு வயது 55.

    இந்தோ - திபெத்திய எல்லை காவல் படை இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய துணை ராணுவப் படையாகும்.

  18. தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 60 பேர் பலி

    மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள புர்கினா பாசோவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தற்காலிக தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வெடி விபத்திற்கு முக்கிய காரணமாக அங்கு வைத்திருந்த வெடிபொருள் இருந்ததுதாகவும், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக உள்ளூர் அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியபோது இந்த வெடி விபத்து, அருகே இருந்த மரங்கள் வீடுகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அளவிற்கு மிக பயங்கரமாக இருந்ததாக குறிப்பிட்டனர்.

    புர்கினா பாசோ ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்று.

    இந்த நாட்டில் உள்ள பல சுரங்கங்கள் சர்வதேச நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அனுமதி பெறாத சுரங்கங்களும் இங்கு அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  19. உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல் - நான்காம் கட்ட வாக்குபதிவு

    உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

    59 தொகுதிகள் இன்று தேர்தலை எதிர்கொள்கின்றன.

    விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜக மத்திய அமைச்சரின் மகன் வந்த கார் மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கேரி, தலைநகர் லக்னெள உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

  20. விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களின் வெற்றி எப்படி சாத்தியமானது?

    தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வகையில் சில வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.

    எப்படிச் சாத்தியமானது இது? என்ன செய்தது விஜய் மக்கள் இயக்கம்?