You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலின் பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி. இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும். இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.

    • தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
    • சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பாராட்டிப் பேசியிருப்பது இந்தியாவில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
    • இன்னும் சில நாள்களில் ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
    • சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநருக்கான 30 காலி பணியிடங்களுக்கு 28,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றதாக, ரயில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
    • பிரேசிலின் பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. அடுத்த சில நாள்களில் ரஷ்யா யுக்ரேனைத் தாக்க வாய்ப்பு: ஜோ பைடன்

    இன்னும் சில நாள்களில் ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

    வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யா யுக்ரேனைத் தாக்குவதற்கான ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

    யுக்ரேன் எல்லையில் ரஷ்யா படைகளைத் தொடர்ந்து குவித்து வருவதைச் சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

    எனினும் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வுக்கு இன்னும் வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேசுவதற்கு உடனடியான திட்டம் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

    இதனிடையே யுக்ரேனைத் தாக்கும் திட்டம் ஏதும் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறிவருகிறது.

  3. விருதுநகரில் குழந்தையை விற்ற தாய் உட்பட 9 பேர் கைது

    விருதுநகரில் குழந்தையை விற்ற தாய் உட்பட 9 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே செவல்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது கணவர் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

    இதனால் வறுமை காரணமாக தனது 1 வயது குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் தனது குழந்தையை விற்க முடிவெடுத்தார். இது குறித்து தனது தந்தை கருப்பசாமியிடம் கூறியுள்ளார்.

    ஈரோட்டை சேர்ந்த கார்த்தி, சிவகாசியை சேர்ந்த செண்பகமூர்த்தி என்ற புரோக்கர்கள் மூலம் குழந்தையை விற்றுள்ளனர். அக்குழந்தையை மதுரையை சேர்ந்த கருப்பசாமி, பிரியா என்ற தம்பதியினர் தங்களுக்கு 20 வருடமாக குழந்தை இல்லாததால் 2லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். ஆனால், சட்டரீதியாக குழந்தையை தத்து எடுக்கவில்லை.

    இது குறித்து விருதுநகர் சைல்ட் லைனுக்கு (1098) சிலர் தகவல் கொடுத்துள்ளனர். சைல்ட் லைன் அதிகாரிகள் விருதுநகர் சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் குழந்தையின் தாயை கைது செய்து விசாரணை செய்ததில், குழந்தையை விற்றதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தை விற்பனை தரகர் மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதியினர் என கலைச்செல்வி, கருப்பசாமி, பிரியா,கார்த்திக், நந்தகுமார், செண்பக ராஜன்,மகேஸ்வரி, மாரியம்மாள் ஆகியோரை விருதுநகர் சூலக்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  4. சவுதி அரேபியாவில் ரயில் ஓட்டுநர் பணி: 30 காலி பணியிடங்களுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

    சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநருக்கான 30 காலி பணியிடங்களுக்கு 28,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றதாக, ரயில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு புனித நகரங்களான மெக்கா மற்றும் மெதினாவுக்கு இடையே அதிவேக ரயில்களை இயக்க வேண்டும்.

    பழமைவாத முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் இத்தகைய பணிகளுக்கு, பெண்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

  5. டெலிகிராம் செயலியில் பகிரப்படும் பெண்களின் நிர்வாணப் படங்கள்: தடுக்க முடியாதது ஏன்? பிபிசி புலனாய்வு

    சமூக ஊடகமான டெலிகிராம் செயலியில், பெண்களின் அந்தரங்க படங்கள் பெருமளவில் பகிரப்பட்டு வருவதை, பிபிசியின் கள விசாரணை கண்டறிந்துள்ளது. இது அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும், மிரட்டவும், அவமானப்படுத்தவும் பகிரப்படுகிறது.

  6. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 'பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்'

    `அரசியல் கட்சிகள் தங்கக் காசு, வெள்ளி கொலுசு, பணம் ஆகியவற்றைக் கொடுக்கும்போது மட்டும் பறக்கும் படைகள் ஒளிந்து கொள்கின்றன. சில இடங்களில் ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையில் விலை பேசுகின்றனர்' என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    தமிழ்நாட்டில் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றும் நோக்கில் ஆளும் தி.மு.கவின் பிரசார முறைகள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக பரிசுப் பொருள்களை வாரியிறைக்கும் பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அ.தி.மு.கவும் பல இடங்களில் பணத்தை வாரியிறைப்பதாகவும் புகார்கள் பதிவாகியுள்ளன.

  7. நேருவை பாராட்டிப் பேசிய சிங்கப்பூர் பிரதமர்

    சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பாராட்டிப் பேசியுள்ளார்.

    இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் பேசும் வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிரும் காங்கிரஸ் தலைவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நேருவை தேவையின்றி விமர்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கான சிங்கப்பூரின் உயர்மட்ட ஆணையர் சைமன் வாங்-கிடம், சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டறிந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  8. பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    பிரேசிலின் பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரியோ டி ஜெனிரோவின் வடக்கில் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள இந்நகரத்தில் மிக கனமழை பெய்தது. இதனால், அங்குள்ள வீடுகள் சேதமாகின, கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள நிலை, “போரை போன்று உள்ளது” என, ரியோ டி ஜெனிரோ ஆளுநர் கிளாடியோ கேஸ்ட்ரோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    30 பேருக்கும் மேல் காணாமல் போயுள்ளதாக தெரிவித்த அவர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இடைவிடாமல் நடப்பதாகவும் தெரிவித்தார்.

    பிரேசிலின் தேசிய சிவில் பாதுகாப்பு கூறுகையில், புதன்கிழமை இரவு 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவித்தது.

    இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  9. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மதுரை நகரின் நீங்காத பிரச்னைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தீர்வைத் தருமா?

      • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
      • பதவி, பிபிசி தமிழ்

    தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்ட இரண்டாவது மாநகராட்சி, மதுரை மாநகராட்சி. இருந்தபோதும் இதற்குப் பின்னால், உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர், திருச்சி போன்ற மாநகராட்சிப் பகுதிகள் வெகுவாக மேம்பட்டுவிட்ட நிலையில், தீராத பிரச்னைகளில் சிக்கித்தவிக்கிறது மதுரை நகரம்.

    மதுரை நகரின் நீங்காத பிரச்னைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தீர்வைத் தருமா என்பது குறித்து இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

  10. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை மாநகராட்சியை மீண்டும் திமுக கைப்பற்ற முடியுமா?

      • எழுதியவர், ஆ விஜயானந்த்
      • பதவி, பிபிசி தமிழ்

    ``வடசென்னையைப் பொறுத்தவரையில் தி.மு.க வெற்றி பெறுவதில் சிரமம் இருக்கப் போவதில்லை. ஆனால், தென்சென்னையைப் பொறுத்தவரையில் சில விஷயங்கள் தீர்மானிக்கக் கூடியவையாக உள்ளன. அங்குள்ள நடுநிலை வாக்குகள், சில சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நிற்பது, கட்சியின் போட்டி வேட்பாளர்கள் போன்றவற்றால் வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    அனைத்து வார்டுகளிலும் தி.மு.க அணியே வெற்றி பெற வேண்டும் முதலமைச்சர் நினைத்தாலும், வெற்றி பெற்று யாரும் வளர்ந்துவிடக் கூடாது என மாவட்ட செயலாளர்கள் நினைக்கின்றனர்" என்கிறார், தென்சென்னையை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர்.

  11. லித்தியம் தயாரிப்பில் கோலோச்சும் சீனா: இந்தியாவுக்கு சிக்கலா??

    கடந்த ஓராண்டில் லித்தியம் உலோகத்தின் விலை நான்கு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஏனெனில், இந்த உலோகம் இல்லாமல் மின்சார கார்களை தயாரிக்க முடியாது. இந்த கார்கள், லித்தியம் மின்கலங்களால் மீண்டும் மீண்டும் ‘சார்ஜ்’ செய்யப்படும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

    லித்தியம் உலோகம் செல்போன்கள், மடிக்கணினிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமிப்பதற்காக பயன்படுத்தவும் திட்டம் உள்ளது.

    எனவே, பல நாடுகளும் பெட்ரோல், டீசலை விடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்கின்றன. எனவே, வருங்காலத்தில் லித்தியம் மின்கலன்களின் பயன்பாடுகள் அதிகரிக்கும்.

    புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவும் சீனாவும் தொழில் ரீதியாக நட்பு நாடுகளாக இருந்தாலும், இரு நாடுகளுக்கிடையே நெருக்கடியும் இருக்கிறது. இந்நிலையில், லித்தியம் மின்கலன்களை அதிகளவில் தயாரிக்கும் நாடாக சீனா இருப்பதால், அதற்கான இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்வது பாதிக்கப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ளது.

  12. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது

    தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (பிப். 19) நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. எனவே, இன்று காலை முதல் தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அனைவரும் தீவிரமாக பரப்புரையில் மேற்கொண்டனர்.

    முக்கிய தலைவர்கள் இன்று எங்கு பரப்புரை மேற்கொண்டனர்?

    திருநெல்வேலியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை மேற்கொண்டார்.

    அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் பரப்புரை மேற்கொண்டார்.

    கடலூர் மாநகராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்.

    திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று முழுவதும் கோவை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முழுவதும் கோவை மாவட்டத்தில் 11 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பரப்புரை மேற்கொண்டார்.

    மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.

  13. முக்கியமான விருதை வென்ற இந்த புகைப்படத்தின் சிறப்பம்சம் என்ன?

    லண்டனில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தால் வழங்கப்படும் இந்தாண்டுக்கான வன உயிரி புகைப்பட கலைஞர் விருதுக்கு, இத்தாலியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ வென்ட்ரமின் தேர்வாகியுள்ளார். இந்த விருதின் வெற்றியாளர், மக்களே இணையம் மூலம் வாக்களிப்பதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கிறிஸ்டியானோ எடுத்த, வட இத்தாலியில் பனியால் உறைந்துபோன சாண்டா குரோஸ் ஏரியின் புகைப்படம் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஏரியின் பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த புகைப்படம், இயற்கையை காப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

    இந்த விருதின் இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற புகைப்படங்களை இங்கே காணுங்கள்:

  14. இந்திய ஜூனியர் ஹாக்கி அணி: பயிற்சி முகாமில் கோவில்பட்டி விவசாயி மகன் அரவிந்த்

      • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
      • பதவி, பிபிசி தமிழ்

    இந்திய ஜுனியர் ஹாக்கி அணிக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த நிஷிதேவ்அருள், அரவிந்த், கவியரசன், திலீபன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என தமிழ்நாட்டில் இருந்து 5 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இவர்களில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டில் அருகே திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் - சீனியம்மாள் தம்பதியின் மூத்த மகன் அரவிந்தும் ஒருவர். அரவிந்தின் தந்தை விஜயராஜ் விவசாய கூலித் தொழிலாளியாக உள்ளார். அவரது தாய் சீனியம்மாள் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்கிறார். அரவிந்த் இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு சென்றது, எங்களது பொருளாதார நிலையைக் கடந்து, பெருமிதமாக இருக்கிறது என்கின்றனர் அவரது பெற்றோர்.

  15. யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவின் கூற்றை நிராகரிக்கும் அமெரிக்கா, பிரிட்டன்

    யுக்ரேன் எல்லையிலிருந்து தங்கள் நாட்டு படைவீரர்கள் திரும்பப் பெறப்படுவதாக ரஷ்யா கூறுவது “தவறானது” என, அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் நேற்று மாலை பேசிய அவர், கடந்த சில தினங்களாக 7,000க்கும் அதிகமான ரஷ்ய துருப்புகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புதிய துருப்புகள் நிலைநிறுத்தப்படுவது புதன்கிழமை வரை தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    அதேபோன்று, பிரிட்டனின் ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பே பிபிசியின் ரேடியோ 4 நிகழ்ச்சியில் கூறுகையில், “மாஸ்கோ அறிவித்ததைப் போன்று, கடந்த 48 மணிநேரத்தில் படைகள் வாபஸ் பெறப்பட்டதை நாங்கள் காணவில்லை. மாறாக, படைகள் யுக்ரேன் எல்லையை நோக்கிச் செல்வதையே காண்கிறோம்” என தெரிவித்தார்.

    முன்னதாக, யுக்ரேன் எல்லையிலிருந்து தங்கள் நாட்டுப் படைகள் வாபஸ் பெறப்பட்டு வருவதாக மாஸ்கோ தெரிவித்து வருகிறது. யுக்ரேன் மீது படையெடுக்க ரஷ்யா தயாராகிவருவதாக மேற்கு நாடுகள் கூறுவது “மிகைப்படுத்தப்பட்டது” என்று மாஸ்கோ கூறியிருந்தது.

  16. திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ரோமானியர்

    கோவையில் திமுகவிற்கு ஆதரவாக ரோமானியர் ஒருவர் பிரச்சாரம் செய்தார்.

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், கோவையில் திமுகவுக்கு ஆதரவாக ரோமானியர் ஒருவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

    தொழில் முறை பயணமாக கோவைக்கு வந்திருந்த ரோமானியரான ஸ்டீபன் என்பவர், மாநகர பேருந்தில் பயணித்திருக்கின்றார்.

    அப்போது பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்வதை கவனித்தவர், தன் நண்பரிடம் இது தொடர்பாக விசாரித்திருக்கிறார். பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டம் அவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தனது நண்பர் மூலம் உள்ளூர் திமுகவினரின் தொடர்பைப் பெற்ற ஸ்டீபன், அவர்களுடன் இணைந்து புல்லட் வாகனத்திலும், பேருந்திலும் சென்று பொது இடங்களில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  17. ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்

    ஓடும் ரயிலில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர் கூறுவதை இந்த காணொலியில் காணுங்கள்.

  18. பட்டேல் முதல் ராமானுஜர் வரை பெரிய சிலைகள் சீனாவில் செய்யப்படுவது ஏன்? இந்தியாவில் முடியாதா?

    இந்தியாவில், தெய்வங்களின் திருமேனிகள் பெரிய அளவில் உலோகத்தால் செய்யப்படுகின்றன. அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவை அளவில் பெரிதாக இல்லை என்பதால் பெரும்பாலும் வீடுகளில் வைக்கப்படுகின்றன.

    அதே சமயம், நூற்றுக்கணக்கான அடி உயர சிலைகளை உருவாக்க சிறப்பு தொழில்நுட்பமும், உள்கட்டமைப்பும் தேவை. இந்தியாவில் கடுமையான உள்கட்டமைப்பு பற்றாக்குறை இருப்பதாக ராஜ்குமார் உடையார் போன்ற சிற்பிகள் கூறுகிறார்கள்.

    பட்டேல் முதல் ராமானுஜர் வரை பெரிய சிலைகள் சீனாவில் செய்யப்படுவது ஏன்? இந்தியாவில் முடியாதா?

    இந்த காணொலியை காணுங்கள்.

  19. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு: அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட 6-8 மடங்கு அதிகம் - ஆய்வில் தகவல்

    இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட ஆறு முதல் 8 மடங்கு அதிகமாக இருக்கும் என, புதன்கிழமை வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ‘டெலிகிராப் இந்தியா’ இணையதளம் தெரிவித்துள்ளது.

    நவம்பர் 2021 தொடக்கத்தில் 30.2 லட்சம் முதல் 30.7 லட்சம் வரையில், கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையின்படி 4,60,000 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு பிரான்சின் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்திய மக்கள்தொகை நிபுணரான கிறிஸ்டோஃப் கில்மோட்டோவால் மேற்கொள்ளப்பட்டது.

  20. கோவையில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை தீவிரம்

    கோவையில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    கோவை மாநகராட்சியில் நூறு வார்டுகளில் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முழுவதும் கோவை மாவட்டத்தில் 11 இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.

    திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று முழுவதும் கோவை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.

    தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தல் வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.