நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை மாநகராட்சியை மீண்டும் திமுக கைப்பற்ற முடியுமா? - கள நிலவரம் சொல்வது என்ன?

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றுவது தொடர்பாக தி.மு.க, அ.தி.மு.க இடையே நேரடிப் போட்டி நிலவினாலும், உள்கட்சி மோதல், போட்டி வேட்பாளர்கள் என தி.மு.கவுக்கு சவாலான தேர்தலாக பார்க்கப்படுகிறது.

`` தேர்தலில் வாக்களிப்பவர்களில் நாற்பது சதவீதம் பேர் பின்தங்கிய வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள்தான். இவர்களுக்கு தி.மு.கவின் திட்டங்கள் எதுவும் சென்று சேரவில்லை'' என்கிறது அ.தி.மு.க. என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓரிரு நாள்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் பலவும் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன. கோவை உள்பட பல மாவட்டங்களில் வாக்காளர்களைக் குளிர்விக்கும் வகையில் வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ், பணம் என சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக விநியோகம் நடக்கிறது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் மனுவாக அனுப்பி வருகின்றனர். இருப்பினும், மாநகராட்சிகளை முழுமையாக வெல்ல வேண்டும் என்ற நோக்கில் தி.மு.கவும் தங்களது பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய இடத்தில் அ.தி.மு.கவும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

சென்னை மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை என்பது 66,72,103 ஆக உள்ளது. இதில் 46 லட்சம் பேர் சென்னையின் மையப்பகுதியில் வசித்து வருகின்றனர். இதுதவிர 20 லட்சம் பேர் மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் புதிய மேயரை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.

பட்டியலின முதல் பெண் மேயர் யார்?

இதில், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி என்பது பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால், சென்னை மாநகராட்சியின் பெண் மேயராகப் பதவியேற்கப் போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதன்படி, 16 வார்டுகள் பட்டியலின பொதுப் பிரிவினருக்கும் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 28, 31, 46, 47, 52, 53, 59,70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196 ஆகிய வார்டுகள் எஸ்.சி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 32 வார்டுகளில் இருந்து வெற்றி பெறக் கூடிய பட்டியன பெண், மேயராக வரவிருக்கிறார்.

தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில் 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தி.மு.க 167 வார்டுகளிலும் காங்கிரஸ் 16 வார்டுகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 வார்டுகளிலும் சி.பி.எம் 5 வார்டுகளிலும் சி.பி.ஐ, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் தலா 3 வார்டுகளிலும் போட்டியிடுகிறது.

வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.கவின் பாணி சரியா?

அ.தி.மு.க அணியைப் பொறுத்தவரையில் த.மா.கா, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 198 வார்டுகளில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவற்றை முன்வைத்து அ.தி.மு.கவினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ஜ.கவை பொறுத்தவரையில், தென்சென்னை உள்பட படித்தவர்கள் அதிகம் உள்ள இடங்கள், இந்து வாக்குவங்கி நிரம்பியுள்ள பகுதிகள் ஆகியவற்றை மையமாக வைத்து அவர்களின் பிரசாரம் அமைந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு செய்து வரும் பணிகள், தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது ஆகியவை பா.ஜ.க பிரசாரத்தின் ஓர் அங்கமாக உள்ளது.

இவர்களைத் தவிர, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பா.ம.க, தே.மு.தி.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளும் உள்ளூரில் செல்வாக்கானவர்களை அடையாளம் கண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

போட்டி வேட்பாளர்களால் பாதகமா?

இதில், அ.தி.மு.கவின் வேட்பாளர் தேர்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உள்ளூர் செல்வாக்கு, பணபலம், மக்களுக்கு நன்கு அறிமுகமான இளைஞர்கள் என களமிறக்கியுள்ளனர். இது பல வார்டுகளில் தி.மு.கவின் சாதாரண வேட்பாளர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்துள்ளது. `அ.தி.மு.க வேட்பாளர்களின் பணபலத்தால் பின்தங்கிவிடுவோமோ?' என்ற அச்சமும் அவர்களுக்குள் இருக்கிறது. இதுதவிர, தி.மு.கவில் சீட் கிடைக்காத பலரும் போட்டி வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

அந்தவகையில், திருவொற்றியூர் ஆதிகுருசாமி உள்பட கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிடும் நூறுக்கும் மேற்பட்டோரை தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், கட்சியை விட்டே நீக்கி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஆனால், `இவர்களில் சிலர் நாளை வெற்றி பெற்று வந்தால் உடனே தி.மு.கவில்தான் சேர்க்கப்படுவார்கள். இது அப்பட்டமான நாடகம்' என்றும் தி.மு.கவினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதுதவிர, தி.மு.கவின் மாவட்ட செயலாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன.

உள்கட்சி மோதலால் திணறும் தி.மு.க?

`` வடசென்னையைப் பொறுத்தவரையில் தி.மு.க வெற்றி பெறுவதில் சிரமம் இருக்கப் போவதில்லை. ஆனால், தென்சென்னையைப் பொறுத்தவரையில் சில விஷயங்கள் தீர்மானிக்கக் கூடியவையாக உள்ளன. அங்குள்ள நடுநிலை வாக்குகள், சில சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நிற்பது, கட்சியின் போட்டி வேட்பாளர்கள் போன்றவற்றால் வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் தி.மு.க அணியே வெற்றி பெற வேண்டும் முதலமைச்சர் நினைத்தாலும், வெற்றி பெற்று யாரும் வளர்ந்துவிடக் கூடாது என மாவட்ட செயலாளர்கள் நினைக்கின்றனர்.

இவர்களில் சிலர் அ.தி.மு.கவுடன் நெருக்கமாக உள்ளதால் சில வார்டுகளில் டம்மி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். மற்ற பகுதிகளிலும் இதே சூழல்தான் நிலவுகிறது. பத்து ஆண்டுகள் வட்டச் செயலாளராக இருந்தவர்கள், பொறுப்புக்கு வர வேண்டும் என நினைக்கின்றனர். அதில் வேட்டு வைக்கும் வேலைகள் நடந்துள்ளன. முதலமைச்சர் முகத்தை வைத்துத்தான் வாக்குகள் சேகரிக்கும் வேலைகள் நடக்கின்றன'' என்கிறார், தென்சென்னையை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர்.

``பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் இருந்ததால், களநிலவரம் தி.மு.கவுக்கு சாதகமாக உள்ளதா?'' என எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த தி.மு.க வேட்பாளர் கண்ணனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` ஆட்சியில் உள்ளவர்களால்தான் வளர்ச்சிப் பணிகளை செய்து தர முடியும் என மக்கள் நினைக்கின்றனர். இந்த ஆட்சி நன்றாக உள்ளது என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. கடந்த பத்து வருடங்களாக அ.தி.மு.க எதையும் செய்து தரவில்லை. ஒவ்வொரு தெருவிலும் பிரச்னைகள் உள்ளன. அதனை சரிசெய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலைகளில் அ.தி.மு.கவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களின் பணபலத்தைத் தாண்டி தி.மு.க வெற்றி பெறும். உள்கட்சி நிர்வாகிகளும் கடுமையாக தேர்தல் வேலை பார்க்கின்றனர்'' என்கிறார்.

இருதரப்பிலும் சரி செய்தோம்

``போட்டி வேட்பாளர்களால் பாதிப்பு ஏற்படுகிறதா?'' என வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு வார்டுகளிலும் மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன், மயிலை த.வேலு ஆகியோர் கூட்டணிக் கட்சி எனப் பார்க்காமல் அவர்களின் வேட்பாளர்களாகவே நினைத்து உழைக்கின்றனர். பணப் பிரச்னை, செயல்பாட்டில் உள்ள குறைபாடு ஆகியவற்றையும் சரிசெய்து கொடுக்கின்றனர். இது மகிழ்ச்சியை கொடுக்கிறது'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` வி.சி.க சார்பில் சில இடங்களில் போட்டி வேட்பாளர்கள் இறங்கினர். தி.மு.க தரப்பிலும் போட்டி வேட்பாளர்கள் இருந்தனர். பல இடங்களில் நாங்கள் வாபஸ் பெற்றுவிட்டோம். அவர்களும் வாபஸ் பெற்றனர். உள்ளூரில் உள்ள கட்சியினர் ஆர்வத்தில் அவ்வாறு செய்தனர். இரு தரப்பிலும் பேசித்தான் செயல்படுகிறோம். எங்களின் தனித்தன்மை பாதிக்காத வகையில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். வி.சி.கவின் தென்னை மரச் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் தி.மு.க ஆர்வம் காட்டுவது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது'' என்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் வாடிக்கைதான்

`` சென்னை மாநகராட்சியில் அதிகமான இடங்களில் தி.மு.க வென்று மேயர் பதவியைப் பிடிக்கும். காரணம், கடந்த எட்டு மாதகால ஆட்சியால் மக்கள் அடைந்துள்ள நன்மைகள். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த சில நாள்களாக மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வாக்குறுதியானது, நல்ல மாறுதலை ஏற்படுத்தியுள்ளது'' என்கிறார், தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசன்.

`` சீட் கிடைக்காததால் போட்டி வேட்பாளர்கள் நிற்பது தி.மு.கவுக்கு பாதகம் இல்லையா?'' என்றோம். ``உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தரையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கைதான். அவர்கள் வெற்றி பெற்று வந்த பிறகு மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதும் நடந்துள்ளது. ஆனால், கட்சிக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் தேவை என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனர்'' என்கிறார்.

மேலும், `` பிரசாரக் களத்தில் அ.தி.மு.கவை பல இடங்களில் பார்க்க முடியவில்லை. அங்கு வசதியுள்ளவர்கள் மட்டும் பிரசாரம் செய்கின்றனர். சென்னை முழுக்கவே இந்த நிலைமைதான் உள்ளது. அம்பத்தூர், திருவொற்றியூர் உள்பட சில பகுதிகளில் மட்டுமே அ.தி.மு.கவினரை பார்க்க முடிகிறது'' என்கிறார்.

தீர்மானிக்கப் போகும் 40 சதவீத வாக்காளர்கள்

ஆனால், தி.மு.கவின் கூற்றை மறுத்துப் பேசும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், `` தி.மு.கவின் கோட்டையாக இருந்த சென்னையை உடைத்தது 2011 சட்டமன்றத் தேர்தல்தான். 1952 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தி.மு.கவின் கோட்டையாக சென்னை இருந்தது. 49 ஆண்டுகள் கழித்து அதனை ஜெயலலிதா முறியடித்தார். அது மேயர் தேர்தலிலும் எதிரொலித்தது. முதன்முதலாக சென்னை மேயர் பதவியை அ.தி.மு.க பிடித்தது. அந்த வரலாறு இந்தத் தேர்தலில் மீண்டும் எதிரொலிக்கும். ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, 100 ரூபாய் சிலிண்டர் மானியம், நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, பெட்ரோல்-டீசல் மானியம் என தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இவையெல்லாம் அடித்தட்டு மக்களுக்குப் பலன் கொடுக்கும் திட்டங்கள். இவை எங்களுக்குப் பிளஸ்ஸாக மாறியுள்ளது'' என்கிறார்.

``சென்னையைப் பொறுத்தவரையில் 52 முதல் 58 சதவீத வாக்குகள்தான் பதிவாகும். அதில் நாற்பது சதவீதம் பேர் பின்தங்கிய வறுமைக்கோட்டுக்குக்கீழ் வசிக்கும் மக்கள்தான். சென்னையில் 40 சதவீத வாக்குகளை இவர்கள்தான் செலுத்துகின்றனர். தி.மு.க கூறிய இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே, தேர்தலில் தி.மு.க படுதோல்வியடையும்'' என்கிறார், பாபு முருகவேல்.

அ.தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா?

`` ஆளும்கட்சி வந்தால் நல்லது நடக்கும் என மக்கள் நினைப்பதாக தி.மு.க சொல்கிறதே?'' என்றபோது,`` இது தி.மு.கவினர் தெரிவிக்கும் பொய். உள்ளாட்சிக்கும் ஆளும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உள்ளாட்சியைப் பொறுத்தவரையில் 70 சதவீத நிதியானது மத்திய அரசிடம் இருந்துதான் வருகிறது. இதற்கும் மாநில ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதேநேரம், இங்கு பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வேலையில்லை. மத்திய அரசு நிதி தர மறுத்தால் நீதிமன்றம் செல்லலாம்'' என்கிறார்.

மேலும், `` இந்தமுறை சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் பத்து சதவீதம் பேர்கூட பழைய கவுன்சிலர்கள் இல்லை. புதிய ஆள்களுக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளோம். அதனால், எங்கள் வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மீண்டும் சென்னை மாநகராட்சியை அ.தி.மு.க வெல்லும்'' என்கிறார்.

ஆளும்கட்சியின் பிரசார பலம், கூட்டணி என தி.மு.கவுக்கு பிளஸ் இருந்தாலும் உள்கட்சி மோதல்கள், போட்டி வேட்பாளர்கள் ஆகியவை சற்று மைனஸாக உள்ளன. உள்ளூர் செல்வாக்கை அடிப்படையாக வைத்து அ.தி.மு.க தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அதே பாணியில் பா.ஜ.க உள்ளிட்ட சிறிய கட்சிகளும் தேர்தல் வேலை பார்க்கின்றன. இதில் நேரடிப் போட்டி என்பது தி.மு.க, அ.தி.மு.க இடையே இருந்தாலும் வெல்லப் போவது யார் என்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: