You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அணைக்கப்படுகிறது அமர் ஜவான் ஜோதி - இனி போர் நினைவுச்சின்னத்தில் புதிய ஜோதி

50 ஆண்டுகளாக அமர்ஜவான் ஜோதி எரிவதை அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தி வந்தனர். அதன் அருகே கட்டப்பட்டுள்ள போர் நினைவுச்சின்னத்தில் இனி புதிய ஜோதி ஏற்றப்படவிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

மணிகண்டன் மற்றும் ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. அலங்கார ஊர்தி சர்ச்சை: டெல்லியில் இருந்தவர்கள் 'திருப்பூர் குமரன் யார் என்று கேட்டார்கள்'

    `நிபுணர் குழுவில் உள்ளவர்கள், திருப்பூர் குமரனையே யார் எனக் கேட்டார்கள். சுதந்திர போராட்டத்தில் தென்னகத்தின் பங்களிப்பை டெல்லியில் உள்ளவர்கள் ஏற்பதில்லை' என்கிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

    60-ஆவது குடியரசு தினத்தில் அலங்கார ஊர்தி வடிவமைப்பில் அவர் பங்கேற்றிருந்தார். தற்போது அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தனது கருத்தை அவர் கூறியுள்ளார்.

    "என்னுடைய மாதிரிகளை நிபுணர் குழுவினரிடம் காண்பித்து, திருப்பூர் குமரன் குறித்து தெரிவித்தபோது, `அவர் யார் என்று தெரியாதே?' என்றனர்" என ட்ராட்ஸ்கி மருது பிபிசியிடம் கூறியுள்ளார்.

    2009-ஆம் ஆண்டில் 60-ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்தன. காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தனர்.

  2. போதை பொருள் விற்றதாக ருவாண்டா இளைஞர் கைது

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்றதாக 32 வயதுடைய ருவாண்டா நாட்டைச் சேர்ந்த இஷிம்வே ஸ்டெப்பின்ஸ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட இளைஞர் கல்லூரி படிப்பிற்காக கோவை வந்ததும், விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  3. தமிழக விசைப்படகு மீது மோதிய இலங்கை ரோந்து கப்பல்

    ராமேஸ்வரத்தில் இருந்துமீன்பிடிக்கச் சென்ற தமிழக விசைப்படகு மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் விசைப்படகு மூழ்கி, படகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். உயிருக்கு போராடி வந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

    இலங்கை கடற்படையின் இந்தத் தாக்குதல் சம்பவத்தால் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளின் பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் குறித்து, வருகின்ற 21-ஆம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் மீனவ அமைப்பினரை தமிழக முதலமைச்சர் அழைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  4. ஜல்லிக்கட்டில் காளைகளை தாக்கியவர் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் கைது

    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டின் போது காளை‌‌ மற்றும் அதன் உரிமையாளரை மற்றொரு காளை உரிமையாளர் கம்பால் தாக்கிய சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கல் அன்று கடந்த அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு காளைகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள காளையுடன் வந்திருந்த மதுரை மாவட்டம் கீழ சின்னம்பட்டியைச் சேர்ந்த முத்து மகன் பவுன் என்பவர் தன்னுடைய காளையை வரிசையில் நிற்க வைக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட சிறு நெரிசல் காரணமாக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காளை மேற்படி பவுன் என்பவரின் காளை மீது கொம்பால் குத்தி உள்ளது. இதனால் பவுனின் காளைக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஆத்திரமடைந்த பவுன் என்பவர் அங்கு நின்று இருந்த மற்ற காளை மற்றும் அதன் உரிமையாளரை அருகேயிருந்த கம்பால் தாக்கியுள்ளார்.

    பின்பு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டியின் உறுப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பவுன் என்பவர் மீது பாலமேடு காவல்நிலையத்தில் பிரிவு 11 (1) (a) தமிழ்நாடு விலங்கு வதைச் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்," என மதுரை காவல் கண்காணிப்பாளர் ‌பாஸ்கரன்‌ தெரிவித்துள்ளார்.

  5. பருத்திநூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

    பருத்திநூல் விலையை கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த கடிதத்தில் ஊக வணிகத்தை தவிர்க்க எதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கு பெற நடைமுறையில் இருக்கக்கூடிய விதிமுறைகளை தளர்த்தி 500 பருத்தி பேல்கள் போதுமானது நிபந்தனைகள் கொண்டு வரவும்.

    பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டங்களில் 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவு படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த கடிதத்தில் இடம் பெற்றிருந்தது.

  6. அருந்ததியர் குடியிருப்பு தாக்குதல் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பிக்க மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு.

    திருவண்ணாமலை மாவட்டம் அருந்ததியர் குடியிருப்பு தாக்குதல் தொடர்பாக ஒருவாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட வீரளூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பிணத்தை பொதுப் பாதையில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து பெரும்பாலும் வன்னியர்களை உள்ளடக்கிய இடைநிலைச் சாதியினர் அருந்ததியர் குடியிருப்புக்குள் புகுந்து எல்லா வீடுகள் மீதும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் அருந்ததியர்கள் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.

    இந்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவர் நீதியரசர் பெ.ர.சிவகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து தற்போது சோதனை நடைபெறுகிறது.

  8. ரஷ்யா யுக்ரைனுக்குள் நுழையும் - ஜோ பைடன்

    யுக்ரைனுக்குள் ரஷ்யா நுழையும் எனக் கருதுவதாகவும் எனினும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முழுவீச்சிலான போரை விரும்பவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர் கேட்டபோது, "அவர் உள்ளே நுழைவார் என்பது என் கணிப்பு. அவர் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது" என்றார் பைடன்.

    யுக்ரைன் மீது போர் தொடுப்பதாக வெளியாகும் தகவலை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும் எல்லையோரத்தில் தொடர்ந்து படைகளைக் குவித்து வருகிறது.

    யுக்ரைனை நேட்டோவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது, போலாந்து உள்ளிட்ட நாடுகளில் நேட்டோ நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

  9. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.