You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

உத்தர பிரதேசம்: அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் கூட்டணியை உறுதிப்படுத்தியது பாஜக

மக்களவை தேர்தலிலும் அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் நாங்கள் அணி சேர்ந்தோம். அதே வழியில் இப்போது சட்டசபை தேர்தலிலும் களம் காண்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விக்னேஷ். அ and ஜோ மகேஸ்வரன்

  1. ஜனவரி 19ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,இத்துடன் இந்த நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம்.

    எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 35 பேர் இறப்பு

    தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் உயிரிழந்தனர்.

    மொத்தம் 26, 981 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனா சிகிச்சையில் இருந்த 17,456 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதுவரை மொத்தம் 1,70,661 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா தொற்று 30,14,235 ஆகவும் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 37,073 ஆகவும் உயர்ந்துள்ளது.

    இன்று ஒரு நாளில் மட்டும் மொத்தம் 1.44 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 144 பேர் உட்பட தமிழ்நாட்டில் மொத்த ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 241. இதில் 231 பேர் குணமடைந்துள்ளனர்.

  3. நீலகிரியில் உயிரிழக்கும் விலங்குகள்: மின்துறைக்கு அபராதம் விதித்த தீர்ப்பாயம்

    நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் மின்சாரத் துறையின் அலட்சியத்தால் வன விலங்குகள் உயிரழந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் ரூ.75 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

  4. இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம்: இந்திய தலையீட்டைக் கோரும் இலங்கை தமிழ் எம்.பி.க்கள்

    இலங்கையில் அந்நாட்டு அரசு உறுதியளித்தபடி தமிழர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்தும் விஷயத்தில் ஆளும் கோட்டாபய ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என்று அங்குள்ள இலங்கை தமிழ் எம்.பிக்கள் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    இது தொடர்பாக இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கூட்டாக கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ் மொழிக்கான சம உரிமை வழங்குதல் போன்ற அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளை அமுல்படுத்த தவறுவது, மாகாண சபைகளுக்கான அதிகாரங்களையும், அதன் கீழ் வரும் நிறுவனங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது போன்ற பிரச்னைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

    மேலும் இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துவது மற்றும் 1987ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக அமுல்படுத்துதல், இலங்கையில் தமிழர்கள் வாழக் கூடிய இடங்களில் பாதுகாப்பும் சம வாய்ப்பினையும் வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் உறுதிப்படுத்த இந்திய பிரதமர் மோதி, இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தமிழ் எம்.பி.க்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

  5. பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்து 3 பெண்கள் உயிரிழப்பு

    தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டம் புதிய மதனகோபாலபுரம் கம்பன் நகரில் வசித்து வரும் வைத்தியலிங்கம் என்பவரது வீட்டிற்கு அருகில் மாட்டுக் கொட்டகை உள்ளது.

    இதை மாற்றி கடை அமைப்பதற்காக இன்று காலை சுமார் 11.00 மணியளவில், கப்பி மண்ணை மாட்டு கொட்டகையின் சுவர் (ஹாலோபிளாக்) ஓரம் கொட்டியுள்ளனர்.

    இன்று மாலை வைத்திய லிங்கத்தின் மனைவி ராமாயி (44), அவருடைய அம்மா பூவாயி( 70), வைத்திய லிங்கத்தின் அண்ணன் மனைவி கற்பகம்( 55) மூவரும் மாட்டு கொட்டகையின் கிழக்குப் புற சுவற்றுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, கொட்டகையின் உள்ளே கொட்டியிருந்த கப்பி மண்ணின் பாரம் தாங்காமல் , பக்கவாட்டுச் சுவர் இடிந்து அருகே மூவரின் மீதும் விழுந்துள்ளது.

    உடனே அவர்கள் மூவரையும் அவசரஊர்தி வாகனம் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமாயி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். கற்பகம், பூவாயி ஆகிய இருவரும் மருத்துமனையில் உயிரிழந்தனர். இது குறித்து பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  6. உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவிப்பு

    உத்தராகண்ட் மாநிலத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார் முன்னாள் முதல்வரும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான திரிவேந்திர சிங் ராவத்.

    தமது முடிவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக அவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

    அந்த கடிதத்தில், “மாநிலத்தில் தலைமை மாறிவிட்டதால், முதல்வர் புஷ்கர் சிங் வடிவில் இளைஞர்களின் தலைமை மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில், 2022 சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. நான் ஏற்கெனவே எனது உணர்வுகளைத் தெரிவித்துள்ளேன். நான் ஒரு கட்சிக்காரன், தாம்ஜி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக எனது முழு நேரத்தையும் செலவிட விரும்புகிறேன். எனவே தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்று திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

  7. உத்தர பிரதேச தேர்தல்: அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய பாரதிய ஜனதா

    உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில், அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக 403 இடங்களில் போட்டியிடுகிறது.

    இது குறித்து அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புதன்கிழமை அனுப்ரியா படேல் மற்றும் சஞ்சய் நிஷாத் ஆகியோருடன் கூட்டாக செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டார்.

    ஆனால், இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் பங்கீடு செய்யப்படும் போன்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

    இந்த செய்தியாளர் சந்திப்பின்போது "மக்களவை தேர்தலிலும் அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் நாங்கள் அணி சேர்ந்தோம். அதே வழியில் இப்போது சட்டசபை தேர்தலிலும் களம் காண்கிறோம் என்று நட்டா தெரிவித்தார்.

  8. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – ஒரே கட்டமாக நடத்த கட்சிகள் கோரிக்கை

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

    தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. .

    இந்நிலையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைக் கூட்டம் மாநில தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில், அ.தி.மு.க., தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், ''தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்,'' என்று அதிமுகவின் பொள்ளாசி ஜெயராமன், திமுகவின் கிரிராஜன் மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க நிர்வாகிகள் தனித்தனியாக தெரிவித்தனர்.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 21 அல்லது 22ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், தற்போது கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாய்மொழியாகக் கோரினார். இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், அது குறித்து முடிவெடுக்கப்படுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.

  9. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா – 2022க்கு பின்னர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2022ம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, விம்பிள்டன் இரட்டையர் முன்னால் சாம்பியனான இவர், 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் சானியா தோல்வியடைந்தார். இதன் பிறகு கூறிய சானியா மிர்சா, "இது எனது கடைசி சீசன் என்று நான் முடிவு செய்துள்ளேன். இந்த சீசனை தொடர முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை." என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

    35 வயதான மிர்சா, 2005 ஆம் ஆண்டு WTA ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.

  10. டெல்லிக்கு பஞ்சாப் பதிலடி கொடுக்கும் - சரண்ஜித் சிங் சன்னி

    மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமான வரி மற்றும் பிற ஏஜென்சிகள் மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

    ''இந்த மாநிலங்களில் புரட்சி தொடங்கி விட்டது. டெல்லி (எங்களை) அடக்க முயற்சிக்கிறது. ஆனால் பஞ்சாப் பதிலடி கொடுக்கும்,'' என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

    மேலுcd, ''பிரதமர் மோதியின் பெரோஸ்பூர் பயணத்தை மறந்துவிடாதீர்கள்’ என அமலாக்கத்துறை கூறியதாக எனக்கு தெரிய வந்ததுள்ளது. இந்த சோதனை ‘பழிவாங்குவதை’ காட்டுகிறது. என்னை சிக்க வைப்பதற்காக, எனது மருமகன் 24 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.'' என்றும் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் நெருங்கிய உறவினரான பூபேந்திர சிங் வீடு மற்றும் அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. தேர்தலைக் கருத்தில் கொண்டு தன்னை குறி வைத்து நடத்தப்படும் சோதனை என்று சரண்ஜித் சிங் நேற்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

  11. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு யாருக்கெல்லாம் வாய்ப்பு?

    இந்திய – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் முடிந்த, சில நாட்களில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.

    இதையடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

    தலைமைக்கு ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், அஸ்வின் உள்ளிட்டோர் பெயர்கள் பேசப்படுகின்றன. ஆனால், யாருக்கு வாய்ப்பு என்பது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  12. உத்தர பிரதேச தேர்தல்: யாருக்கும் ஆதரவில்லை – விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகெய்த்

    உத்தர பிரதேச தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்று பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகெய்த் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, பாரதிய கிசான் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்திற்கு பின்னர் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகெய்த் கூறுகையில், ''விவசாயிகள் போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் விவசாயிகளைப் பற்றி சிந்திக்கிறார்கள். இந்தத் தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவளிக்க மாட்டோம்,'' என்றார்.

  13. ஓசூரில் தமிழக விவசாயிகள் போராட்டம் - மேக்கேதாட்டு அணைக் கட்ட எதிர்ப்பு

    காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சிகளை முற்றிலும் தடுத்து நிறுத்தக் கோரி தமிழக விவசாயிகள் ஓசூரில் போராட்டம் நடத்தினர்.

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினரின் மேக்கேதாட்டு முற்றுகை வாகனப் பேரணி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூரில் நேற்று தொடங்கியது.

    தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் சென்றடைந்தனர். ஓசூரில் இருந்த் மேக்கேதாட்டு நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அங்கே சாலையில் அமர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் குறித்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சட்டவிரோதமாகவும் அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் கட்சியினர், மேக்கேதாட்டு அணை கட்டக் கோரி, பாதயாத்திரை நடத்துகின்றனர்.

    இதற்கு, தமிழ்நாட்டில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மவுனமாக இருப்பதை ஏற்க முடியாது. போராடிப் பெற்ற காவிரி உரிமையைப் பறிக்கும் செயலை தடுக்க, அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சிகளை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார்.

  14. கொரோனாவின் கவலைக்குரிய திரிபுகள்

    ஒமிக்ரான் திரிபை போலவே கொரோனாவின் புதிய திரிபுகள் இன்னும் உருவாக வாய்ப்புண்டு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

    இதுவரை ஐந்து திரிபுகள் 'கவலைக்குரிய திரிபுகள்' என்று உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

  15. ரஷ்ய படையெடுப்பு அச்சம்: அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஐரோப்பா பயணம்

    உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளின்கன் ஐரோப்பா விரைந்துள்ளார்.

    உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    முன்னதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார் ஆண்டனி பிளின்கன்.

    வரும் வெள்ளிக்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவையும் ஜெனிவாவில் அவர் சந்திக்க இருக்கிறார்.

    உக்ரைன் உடனான எல்லையில் படைகளை தொடர்ந்து அதிகரித்து வரும் ரஷ்ய, அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி வருகிறது.

  16. "கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை "

    உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவை "நெருங்கக் கூட இல்லை" என்று உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ், புதிதாக ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரான் திரிபு லேசனாது மற்றும் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்கியுள்ளது என்ற அனுமானத்திற்கு எதிராக எச்சரித்தார்.

    சில ஐரோப்பிய நாடுகளில் புதிய நோயாளிகள் அதிகமாகப் பதிவானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

  17. உத்தர பிரதேச தேர்தல்: பா.ஜ.கவில் இணைந்த முலாயம் சிங் மருமகள்

    உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜ.கவில் இன்று இணைந்தார்.

    உத்தர பிரதேச பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகினர்.

    சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னியிலையில் பா.ஜ.கவினர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், அகிலேஷ் யாதவ் உறவினரான அபர்ணா யாதவ் தற்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.

    டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தர பிரதேச துணை முதலமைச்சர், கேசவ் பிரசாத் மவுரியா, மாநில பா.ஜ.க தலைவர் ஸ்வதேந்ர தேவ் சிங் ஆகியோர் முன்னிலையில் அபர்ணா பா.ஜ.கவில் இணைந்தார்.

    பா.ஜ.கவில் இணைந்த பின்னர் அபர்ணா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தேசம்தான் எனக்கு முதன்மை. ஆகையால் பிரதமர் மோதியின் பணிகளை பாராட்டுகிறேன். பா.ஜ.கவிற்கு என் நன்றிவை தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்றார்.

  18. கோயம்புத்தூரில் குடோனுக்குள் புகுந்துள்ள சிறுத்தை – பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ள வனத்துறை

    கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை தேடும் பணி 3வது நாளாக நடைபெற்று வருகிறது.

    கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் கடந்த 16-ம் தேதி சிறுத்தை ஒன்று வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதைக் கண்டு, அச்சமடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள குடோனில் புகுந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சிறுத்தையை பிடிக்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  19. கன்னியாகுமரியில் அடர்வனத்தில் பிறந்த குழந்தை, பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

    கன்னியாகுமரி மாவட்டத்தில் யானை நடமாட்டம் மிகுந்த, அடர்ந்த வனப் பகுதியில், நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் 48 மலையோர கிராமங்களில், பழங்குடி காணி இன மக்கள் வசித்து வருகின்றனர்.

    விளாமலை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலேகா என்பவருக்கு நேற்று நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது கணவர் சுபாஷ் 108க்கு தகவல் தெரிவித்தார். பேச்சிப்பாறை பகுதியில் இருந்த ஆம்புலன்ஸ் உடனடியாக விளாமலைக்கு விரைந்தது.

    ஸ்ரீலேகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற, போது, யானைகள் நடமாட்டமிகுந்த, அடர்ந்த வன பகுதியில் பிரசவ வலி அதிகமானதால், ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை நிறுத்தினார். அவசர கால மருத்துவ உதவியாளர் சரஸ்வதி விரைந்து முதலுதவி அளித்தார்.

    இதில், அப்பெண்ணுக்கு அங்கேயே ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருவரையும் சேர்த்தனர்.

  20. இந்தியாவில் மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா – ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 2.82 லட்சம் ஆக உயர்ந்துள்ளது

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2, 82, 970 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் 441 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக இந்திய அளவில் கொரோனா தொற்று குறைந்து வந்தது. இந்நிலையில், ஒரு நாள் தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1, 88, 157 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை 18, 31 லட்சமாக உள்ளது. தினசரி தொற்று விகிதம் 15.13 விழுக்காடாக உள்ளது.

    நாடு முழுவதும் மொத்த ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 8, 961 ஆக உள்ளது.

    நேற்றைய தினம் ஒரு நாள் கொரோனா தொற்று 2, 38, 018 உயிரிழப்பு 310 என்று பதிவாகியது. தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.