அலங்கார ஊர்தி சர்ச்சை: டெல்லியில் இருந்தவர்கள் 'திருப்பூர் குமரன் யார் என்று கேட்டார்கள்' - ஓவியர் ட்ராட்ஸ்கி மருது

பிரசுரிக்கப்பட்டது

` நிபுணர் குழுவில் உள்ளவர்கள், திருப்பூர் குமரனையே யார் எனக் கேட்டார்கள். சுதந்திர போராட்டத்தில் தென்னகத்தின் பங்களிப்பை டெல்லியில் உள்ளவர்கள் ஏற்பதில்லை' என்கிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

60-ஆவது குடியரசு தினத்தில் அலங்கார ஊர்தி வடிவமைப்பில் அவர் பங்கேற்றிருந்தார். தற்போது அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தனது கருத்தை அவர் கூறியுள்ளார்.

"என்னுடைய மாதிரிகளை நிபுணர் குழுவினரிடம் காண்பித்து, திருப்பூர் குமரன் குறித்து தெரிவித்தபோது, `அவர் யார் என்று தெரியாதே?' என்றனர்" என ட்ராட்ஸ்கி மருது பிபிசியிடம் கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டில் 60-ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்தன. காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தனர்.

`இந்தியா 75' என்ற தலைப்பின்கீழ் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளின் சார்பாக குடியரசு தினத்தன்று அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாநிலங்களிடம் இருந்து ஊர்திக்கான கருப்பொருள், மாதிரிகள், விளக்கம் ஆகியவற்றைப் பெறும் வேலைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கின.

அதில், விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் மாதிரிகளை காட்சிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், வ.உ.சிதம்பரனாருக்கு பதிலாக பாரதியாரை முன்னிலைப்படுத்தவும் அடுத்ததாக வேலு நாச்சியார், வ.உ.சி ஆகியோர் வருவதுபோல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய பாதுகாப்புத் துறையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த சுற்றுகளில் தமிழ்நாட்டின் முன்மொழிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒருகட்டத்தில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ` அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பித்து மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களை செய்தோம். நான்காவது கூட்டத்துக்கு அழைக்காமல் அதுகுறித்து எந்தத் தகவலும் தெரிவிக்காமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து எனது வருத்தத்தை பிரதமருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தேன். தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சரின் கடிதத்திலும் எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், ` மாநில அரசின் சார்பில் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறும். மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்' எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகையில், "2014, 2017, 2019, 2020, 2021 என ஐந்து முறை தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. மாமல்லபுரம் சிற்பக் கலை, அய்யனார், திருவள்ளுவர் எனக் காட்சிப்படுத்தினோம். இந்த ஆண்டு 75 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்ததைக் குறிப்பிடும் வகையில் ஊர்திகள் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வேலுநாச்சியாருக்கும் வ.உ.சிக்கும் பாரதிக்கும் மரியாதை கொடுக்கவில்லை என்பது பொய்யானது. இவர்கள் அரசியலை வியாபாரமாக வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேலுநாச்சியார் பிறந்தநாள் வந்தபோது பிரதமர், தமிழில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க சார்பில் சிவகங்கைக்குச் சென்று விழா நடத்தினோம். இவை எதையும் தி.மு.க செய்யாது. நிபுணர் குழு எடுத்த முடிவை அரசியலாக்கலாமா?'' எனக் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், "விடுதலைப் போராட்டத்தின் தென் பகுதி மக்களின் பங்களிப்புகளை டெல்லியில் உள்ளவர்கள் ஏற்பதில்லை. அவர்கள் திருப்பூர் குமரனையே யார் எனக் கேட்டார்கள்'' என ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பேசியுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"இந்தியாவின் 60 ஆவது குடியரசு விழாவின்போது நடந்த சம்பவம் இது. அப்போது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் என்னிடம், `அறுபதாவது சுதந்திர ஆண்டு என்பதால் நம்முடைய திருப்பூர் குமரனைக் காட்சிப்படுத்துவோம்' என்றனர். இதையடுத்து, மாதிரிகளை தயார் செய்து கொண்டு டெல்லி சென்றேன். அப்போது என்னுடன் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் வந்திருந்தார். பொதுவாக, நாம் மாதிரிகளை கொண்டு செல்லும்போது அது ஃபைபரா.. பிளாஸ்டிக்கா எனப் பார்ப்பார்கள். இரண்டு பாலங்களைக் கடந்து செல்லும் என்பதால் அது இடித்துவிடக் கூடாது என்பதை முக்கியமாகப் பார்ப்பார்கள்" என்றார் ட்ராட்ஸ்கி மருது

"என்னுடைய மாதிரிகளை நிபுணர் குழுவினரிடம் காண்பித்து, திருப்பூர் குமரன் குறித்து தெரிவித்தபோது, `அவர் யார் என்று தெரியாதே?' என்றனர். இத்தனைக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கு இருந்தார்கள். அந்தக் குழுவில் சுதிர்கார் என்ற டெல்லி கார்ட்டூனிஸ்ட் ஒருவரும் இருந்தார். அவர்களின் கேள்விக்கு நான் பதில் அளித்துப் பேசியபோது, `தமிழ்நாட்டில் வந்து பாருங்கள், தேசியத் தலைவர்கள் பெயர்களில் கட்டடங்களும் தெருக்களும் இருக்கும். இந்த ஊர்வலம் வருவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் திருப்பூர் குமரன் யார் என்ற விவரம் தெரியவரும்' என்றேன். அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. எந்த அரசாங்கமாக இருந்தாலும் தென்பகுதியில் இருந்து பங்களிப்பு வருவதை டெல்லியில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது தெரிந்தது'' என்கிறார்.

"நாங்கள் வடிவமைத்த மாதிரியில் திருப்பூர் குமரனை நிராகரித்துவிட்டு, நாட்டுப்புறக் கலைகள் தொடர்பான மாதிரியை எடுத்துக் கொண்டனர். அந்தக் குழுவில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இருந்தனர். அந்தக் குழுவின் முன்னால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தனது மாநிலத்தின் சிறப்புகளை விளக்கிக் கூறினால், அவருக்கு ஆதரவாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிபுணர் பேசுவார்."

"இதில் என்னை அதிர்ச்சியூட்டிய சம்பவம் என்னவென்றால், தொடக்கத்தில் இருந்து கடைசி வரையில் நிபுணர் குழுவில் இருந்த ஒரே ஒரு நபர் மட்டும் நாற்காலியில் மிக அலட்சியமாக உட்கார்ந்தபடியே இருந்தார். நாங்கள் பேசி முடித்த பிறகு இறுதியாக அந்த நபர் தமிழில் பேசினார். அவர் என்னிடம், `நீங்கள் ருக்மணி தேவி அருண்டேலை கொண்டு வரலாமே?' என்றார். அப்போதுதான் அவர் யார் என்பது புரிந்தது. அவர் எங்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை. அவர் ஏற்கெனவே ஒரு முன்முடிவில் இருந்ததும் தெரியவந்தது'' என்கிறார் ட்ராட்ஸ்கி மருது.

தொடர்ந்து பேசிய மருது, `` இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றும் ஊழியர்களிடம், `திருப்பூர் குமரனை யார் என்று கேட்டுவிட்டார்களே?' என ஆதங்கப்பட்டேன். அதற்கு அவர்களோ, `இதுகூட பரவாயில்லை சார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரதியாரை வடிவமைத்துக் கொண்டு சென்றிருந்தோம். யார் இவர் என குழுவில் இருந்த ஒரு நபர் கேட்டார்' என வேதனைப்பட்டார். இங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அடிப்படையிலேயே டெல்லியில் உள்ளவர்கள், தென்பகுதிகளின் சிறப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை'' என்கிறார்.

மேலும், `` நான் சென்று வந்த பிறகு ஓசூரில் நடந்த த.மு.எ.ச கூட்டத்தில் இதைப் பற்றிச் சொன்னேன். `நாம்தான் அறுபதாம் ஆண்டு சுதந்திர விழாவைக் கொண்டாடுகிறோம். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை' என்றேன். இதற்கு ஆள்வது பா.ஜ.கவா, காங்கிரஸா என்பது முக்கியமில்லை. அவர்களோடு நம்மால் சண்டையிட முடியாது. நாமும் ஓர் அங்கம் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: