ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், பணியில் உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
"உத்தரகாண்டில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், காவல்துறையினர், ராணுவ வீரர் அல்லது துணை ராணுவப் படையினர் பணியின்போது ஏதேனும் ஒரு நடவடிக்கையில் உயிரிழந்தால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்,”என்று கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் திங்கள்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் நவ் பரிவர்தன் யாத்திரையில் பங்கேற்ற கேஜ்ரிவால், தமது கட்சியின் முதல்வர் வேட்பாளரான ஓய்வுபெற்ற கர்னல் அஜய் கொத்தியாலே, இறந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்குவார் என்று தெரிவித்தார்.
உத்தராகண்டில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியளித்தார்.
மேலும், ஆம் ஆத்மி அரசில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அவர் கூறினார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே பரப்புரை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.