You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளுக்கு வரி விலக்கு - இலங்கை நிதியமைச்சர்

இம்மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்திர கொடுப்பனவாக ரூபா 5000 வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ராணி வேலு நாச்சியாரை வணங்குகிறேன்- பிரதமர் மோதி ட்வீட்

    சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய பிரதமர் மோதி அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமரின் இந்த பதிவை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  2. இந்தியாவில் 15 -18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம்

    இந்தியாவில் 15 -18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

    இவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    2005, 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்தத் தடுப்பூசி பெறத் தகுதியானவர்கள் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவிக்கிறது.

    2004 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு 18 வயதைக் கடந்திருக்கும் என்பதால் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    ஜனவரி 3ஆம் தேதி முதல் 15இல் இருந்து 18க்கும் குறைவான வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது என்றும், ஜனவரி 10ஆம் தேதி முதல் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி சென்ற மாத இறுதியில் அறிவித்திருந்தார்.

  3. 3,000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டி அழித்த தாலிபன்கள்

    தாலிபன் ஆட்சியில் மதுபான விற்பனையை ஒழிக்கும் வகையில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பின்னர், பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3,000 லிட்டர் மதுபானங்களை கால்வாயில் கொட்டியதாக, அந்நாட்டின் உளவுத்துறை பொது இயக்குநரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, உளவுத்துறை பொது இயக்குநரகம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அதன் முகவர்கள், தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை கால்வாயில் கொட்டுவதைக் காண முடிகிறது.

  4. இஸ்ரேலில் ஒமிக்ரான் மூலம் 'சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் வர வாய்ப்பு'

    இஸ்ரேலில் கொரோனாவின் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், அந்நாட்டு மக்கள் தொகையின் பெரும் பகுதியினருக்கு அந்த நோய்க்கு எதிரான எதிர்ப்பு திறன் (சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன்) எட்டுவதைக் காணலாம் என, அந்நாட்டின் சுகாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் நச்மன் ஆஷ் இது தொடர்பாக தெரிவிக்கையில், இதற்கான விளைவை இஸ்ரேல் சந்திக்கும் எனவும், அதற்கு பதிலாக மக்கள் தொகையின் பெரும் பகுதியினருக்கு அந்த நோய்க்கு எதிரான எதிர்ப்புத் திறனை தடுப்பூசிகள் மூலம் பெற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

    இஸ்ரேலில் ஜனவரி இறுதிக்குள் 40 லட்சம் மக்கள் இத்தொற்றால் பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னெட், தனது தற்போதைய கொள்கையால் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைத் தடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

  5. 'இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தவர் சுட்டுக்கொலை'

    இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் ஜம்மு அருகே சுட்டுக் கொல்லப்பட்டுள்தாக இந்திய எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    ஜம்மு மாவட்டத்தில் உள்ள அரினா செக்டர் அருகே இருக்கும் சர்வதேச எல்லையில் இது நிகழ்ந்துள்ளது என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

  6. பதவி விலகிய சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்

    ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோது பதவி நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்ட சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் சில வாரங்களிலேயே பதவி விலகியுள்ளார்.

    அக்டோபரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின் அப்தல்லா ஹம்தோக் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

    பின்னர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பின் மீண்டும் பிரதமரானார்.

    ஆனால், ராணுவத்தின் தலையீடு இல்லாமல் மீண்டும் முற்றிலும் குடிமக்கள் மட்டுமே இருக்கும் அரசு அமைய வேண்டும் சூடான் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் அப்தல்லா ஹம்தோக் பதவி விலகியுள்ளார். இந்த நாடு பேரழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க முயன்றேன்; ஆனால் அதைத் தம்மால் தடுக்க முடியவில்லை என்று, தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் தெரிவித்துள்ளார்.

    இரு ஆண்டுகளுக்கு முன்பு, சூடானை நீண்ட காலம் ஆட்சி செய்துவந்த ஓமர் அல் பஷீர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, ஓர் இடைக்கால அரசு குடிமைத் தலைவர்களைக் கொண்டு நிறுவப்பட்டது.

    அப்போது முதலே குடிமை அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவத்தினர் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.

  7. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குபவர் ஜோ மகேஸ்வரன்.