ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் பிறந்தது "2022" - கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களில் அமைதியான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. லண்டன் மற்றும் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், இம்முறை தங்களுடைய பாரம்பரிய வழக்கமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன அல்லது குறைத்துள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. திமுக தலைவர் ஸ்டாலின் நல்லவர் - நடிகர் ராதாரவி பேச்சு, பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

    திமுகவில் அடிமட்டத்திலும் மேல்மட்டத்திலும் இருப்பவர்கள் நல்லவர்கள் என்று ராதாரவி பேசினார்.
    படக்குறிப்பு, திமுகவில் அடிமட்டத்திலும் மேல்மட்டத்திலும் இருப்பவர்கள் நல்லவர்கள் என்று ராதாரவி பேசினார்.

    மதுரை செல்லூர் சாலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில், திரைப்பட நடிகர் ராதாரவி பங்கேற்று பேசுகையில், "திமுகவில் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள். இடையில் இருக்கும் சிலர்தான் சரியில்லாதவர்கள்.

    பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வேண்டியது இல்லை. எங்களைக் கேட்டுத்தான் ஆட்சி நடக்கும். மாநில அரசு மத்திய அரசை நோக்கி, கையேந்திதான் ஆக வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எதிர்க்கக்கூடாது. எதிர்த்தால் எதுவும் நடக்காது" என்றார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்லவர். ஆனால், கருணாநிதி போல் அறிவாளி அல்ல. கருணாநிதி இப்போது இருந்திருந்தால், மத்திய அரசில் இடம் பெற்றிருப்பார்" என்றார்.

    மேலும், "சினிமாத் துறையில் பல்வேறு யூனியன்கள் உள்ளன. அவற்றில் ஒரு யூனியனுக்கு தலைவராக உள்ளேன். என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்க சிலர் முயற்சிக்கின்றனர். பழிவாங்கும் படலமும் நடக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.

  2. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    தமிழ்நாட்டில் இதுவரை 46 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலாளார் மற்றும் மருத்துவம், வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  3. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 1, 270

    இந்தியாவில் மொத்த ஒமிக்ரான் தொற்றாளர்கள் எண்ணிக்கை 1, 270 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. அதிகபட்ச அளவாக மகாராஷ்டிராவில் இதுவரை 450 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டில்லியில் 320, கேரளாவில் 109, குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலங்கானாவில் 62, தமிழ்நாட்டில் 46, கர்நாடகத்தில் 34 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

    பஞ்சாப், இமாச்சல பிரதேசம், மணிப்பூர், லடாக், கோவா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 374 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியுள்ளனர்.

    அதேநேரத்தில், ஒரே நாளில் நாடு முழுவதும் 16,764 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் மொத்தம் 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. கட்டுப்பாடுகளை தளர்த்திய தென் ஆப்ரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் கொரோனா தொற்றின் நான்காவது அலையை கடந்துவிட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எனவே, அங்கு இரவு நேரத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டது.

    இது அதிக வேகமாக பரவினாலும், முந்தைய அலைகளை காட்டிலும் தற்போது குறைவான நபர்களே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் ஒமிக்ரான் தொற்றால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சிறியளவு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதன்முதலாக தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த திரிபு தற்போது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.

  5. புதிய பொருளாதார தடைகள் உறவுமுறையை கடுமையாக பாதிக்கும் - பைடனை எச்சரித்த புதின்

    உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தால் அது இருநாடுகளுக்கு இடையில் உள்ள உறவுமுறை கடுமையாக பாதிக்கப்படும் என, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எச்சரித்துள்ளார்.

    டிசம்பர் 30, 2021 வியாழக்கிழமை, இருநாட்டு அதிபர்களுக்கு இடையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த தொலைபேசி அழைப்பில், புதின், பைடனை மேற்கூறியபடி எச்சரித்தார்.

    அதே அழைப்பில் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் தக்க பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார் ஜோ பைடன். உக்ரைனின் கிழக்கு எல்லையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக, உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ஆனால், ரஷ்ய தரப்போ தன் நாட்டு எல்லைக்கும் தன் துருப்புகளை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக் கொள்ள தங்களுக்கு சுதந்திரமிருக்கிறது என்கிறது, மேலும் உக்ரைன் மீது படையெடுக்க எந்தவித திட்டமும் இல்லை என்றும் மறுத்துவருகிறது.

    உலகின் இரு முக்கிய நாட்டு அதிபர்கள் பேச்சு வார்த்தை நடத்துவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை என்பது நினைவுகூரத்தக்கது.

  6. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பலதுறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன், விஷ்ணுப்ரியா ராஜசேகர்.

    எங்களோடு இணைந்திருங்கள்.