ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் பிறந்தது "2022" - கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களில் அமைதியான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. லண்டன் மற்றும் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், இம்முறை தங்களுடைய பாரம்பரிய வழக்கமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன அல்லது குறைத்துள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    புத்தாண்டு 2022 பிறந்ததையொட்டி ஜனவரி 1ஆம் தேதி நேரலை பக்கத்தை பார்க்கஇங்கே சொடுக்கவும்.

  2. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கேப்டனாகும் கே.எல் ராகுல்

    பிசிசிஐ

    பட மூலாதாரம், Twitter/BCCI

    தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு கே.எல்.ராகுலுக்கு வழங்கப்படுவதாக பிசிசிஐஐ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் ரோஹித் ஷர்மா ஒரு நாள் தொடருக்கான அணியின் முழு நேர கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. மேலும் தற்போது காயம் காரணமாக ஒரு நாள் தொடருக்கு அவரால் கேப்டனாக பணியாற்ற முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்த தொடரில் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிறந்தது "2022" புத்தாண்டு

    ஆஸ்திரேலியா புத்தாண்டு

    பட மூலாதாரம், EPA

    படக்குறிப்பு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பிரிட்ஜ் ஆகியவற்றின் பின்னணியில் வருடாந்திர புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வாண வேடிக்கையுடன் 2022 புத்தாண்டு வரவேற்கப்பட்டது. ஆனால், பொது இடங்களில் மக்கள் பெருமளவில் இல்லாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

    உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களில் அமைதியான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன.

    கொரோனா, ஒமிக்ரான் திரிபு பரவலை கவனத்தில் கொண்டு பல நாடுகள் மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளன.

    சிட்னியில் நிகழ்த்தப்பட்ட உலகப் புகழ்பெற்ற வாணவேடிக்கை விண்ணில் கண்கவர் வண்ணங்களில் ஜொலித்தன.

    புத்தாண்டு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மெல்போர்னின் அலெக்ஸாண்ட்ரா கார்டனில் பட்டாசு வெடித்து வரவேற்கப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்களை உற்சாகத்துடன் ரசிக்கும் சிறுமி.

    லண்டன் மற்றும் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், இம்முறை தங்களுடைய பாரம்பரிய வழக்கமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன அல்லது குறைத்துள்ளன.

    மேற்கு வங்க மாநிலத்தின் பார்க் வீதியில் புத்தாண்டை வரவேற்க மக்களில் சிலர் தயாராக இருந்தனர்.

    நள்ளிரவு 11.59 மணி நிறைவடையும்போது மக்கள் புத்தாண்டு முழக்கமிட்டு 2022 ஆண்டை வரவேற்றனர். அங்கு கொரோனா பரவல் காரணமாக மக்கள் பெருமளவில் பொது இடங்களில் இரவில் கூட கட்டுப்பாடு இருந்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், @MKSTALIN TWITTER PAGE

    படக்குறிப்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

    தமிழகத்தில் முன்பைவிட சற்று அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமிக்ரான் திரிபை கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக, இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்:

    • சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
    • மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (எல்கேஜி, யுகேஜி) செயல்பட அனுமதி இல்லை.
    • அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
    • அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

    ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

    • 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.
    • வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
    • உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
    • பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/ Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
    • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
    • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

    என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  5. தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை: மாநில ஆளுநரிடம் புகார் மனு அளித்த அதிமுக தலைவர்கள்

    தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்

    பட மூலாதாரம், AIADMK

    படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்

    தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 5ஆம் தேதி கூடுகிறது. இந்த நிலையில்,அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய்சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    அப்போது தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு நிலவரம், மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகார துஷ்பிரயோகம், அரசு அதிகாரிகள் தற்கொலை, ஆளும் கட்சியினரின் தலையீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாக அதிமுக தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

  6. அஜித்தின் வலிமை படத்திற்கு நிறைய கட்டுப்பாடுகள் - இயக்குநர் ஹெச்.வினோத்

    வலிமை தான் சரியான தலைப்பாக இருக்கும் என்று முடிவெடுத்தாக சொல்கிறார் இயக்குநர்.

    பட மூலாதாரம், BONEY KAPOOR

    படக்குறிப்பு, வலிமை தான் சரியான தலைப்பாக இருக்கும் என்று முடிவெடுத்தாக சொல்கிறார் இயக்குநர்.

    நடிகர் அஜித்குமார் நடித்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் கூறுகையில், "நடிகர்கள் தேதி, திரைக்கதையில் மாற்றம், படப்பிடிப்புக்கான இடம், கொரோனா அச்சத்தால் 100 பேருக்கும் மேல் இருக்கக்கூடாது என நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன.

    ஆனால், இதையெல்லாம் தாண்டி இந்த படம் எடுத்து முடித்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்தான்" என்றார்.

    இயக்குநர் ஹெச்.வினோத் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலை படிக்க இங்கே சொடுக்கவும்.

  7. ஆசிய கோப்பையை வென்ற ஜூனியர் கிரிக்கெட் அணி

    ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது.

    பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரெட்சில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன.

    இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதின. இதில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளராக செல்லக்குமார் எம்.பி நியமனம்

    மேற்கு வங்க மாநிலம் மற்றும் அந்தமான், நிகோபர் தீவுகளுக்கான காங்கிரஸ் பொறுப்பாளராக அக்கட்சி எம்.பி டாக்டர் செல்லக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே தான் வகித்துவரும் ஒடிஷா மாநில பொறுப்பாளர் பணியையும் அவர் தொடருவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

  9. சென்னை மழை பாதிப்பு: ராகுல் காந்தி ஆறுதல்

    சென்னையில் பெய்த பெருமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆறுதல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த சமயத்தில் தமிழக மக்களுடன் நிற்கிறேன். கனமழையால் அன்புக்குரியவர்களை இழந்த மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். தயவு செய்து பாதுகாப்பாகவும் அரசின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. புதுக்கோட்டை துப்பாக்கி சூடு: போலீசாரிடம் ஆர்டிஓ விசாரணை

    போலீசாரிடம் விசாரணை நடத்தும் ஆர்டிஓ பாலதண்டாயுதபாணி
    படக்குறிப்பு, போலீசாரிடம் விசாரணை நடத்தும் ஆர்டிஓ பாலதண்டாயுதபாணி

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நேற்று பயிற்சி செய்தனர்.

    அப்போது, வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இது குறித்து, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ பாலதண்டாயுதபாணி தலைமையில் விசாரணை நடைபெற்றது.

    அப்போது, மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

  11. ஜவுளிக்கு ஜி.எஸ்.டி உயர்வு இல்லை - இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

    ஜவுளிக்கு ஜி.எஸ்.டி உயர்வு இப்போது இல்லை என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் உள்பட பிற மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின்னர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "ஜவுளிக்கான ஜி.எஸ்.டியை பொறுத்தவரை இப்போதைய நிலையே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வுக் குழு, தனது அறிக்கையை பிப்ரவரியில் தாக்கல் செய்யும். இதையடுத்து வரி உயர்வு குறித்து முடிவு செய்யப்படும்." என்று தெரிவித்தார்.

    2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் காலணிகள், ஜவுளிப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி 5% லிருந்து 12% சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவற்றுக்கான வரி உயர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. ஒமிக்ரான்: மும்பையில் ஜனவரி 15 வரை 144 தடை - மகாராஷ்டிரா அரசு

    அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, மும்பையில் ஜனவரி 15 ஆம் தேதி வரை 144 தடையை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

    ஏஎன்ஐ செய்தி முகமையின் தகவலின்படி, மும்பை நகரில் பொது இடங்களில் மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட காவல்துறை தடை விதித்துள்ளது. கடற்கரைகள், திறந்தவெளி பகுதிகள், உலாவும் இடங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள் இதில் அடங்கும்.

  13. சிறுமியை கடத்தி சித்ரவதை - போலி சாமியார் உள்ளிட்ட மூவர் கைது, நடராஜன் சுந்தர்

    சிறுமியை கடத்திய மூவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு
    படக்குறிப்பு, சிறுமியை கடத்திய மூவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு

    விழுப்புரத்தில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்த போலி சாமியார் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி அவரது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு திரும்பவில்லை.

    இது குறித்து 15 ஆம் தேதி சிறுமியின் தந்தை திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசாரின் விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், ஆத்துார் பகுதியில் இருப்பது தெரியவந்தது. காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையிலான போலீசார், ஆத்துார் பகுதியில் இருந்து சிறுமியை நேற்று மீட்டனர்.

    சிறுமியை கடத்திய எடையாத்துாரைச் சேர்ந்த எல்லப்பன் (வயது 39), ஆட்டோ ஓட்டுநர் பிரபு ( 35), சின்ன பையன் (50) மூவர் மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். எல்லப்பன் எடையாத்துார் திண்டிவனம் அருகே உள்ள வேதநாராயணபுரத்தில் போலி சாமியாராக இருந்து அருள்வாக்கு சொல்லி வருபவர் என்று கூறப்படுகிறது.

    திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, "இவர்கள் மூவரும் சிறுமியை அடைத்து வைத்து, கடுமையாக தாக்கியுள்ளனர். வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி இப்போது நலமாக உள்ளார்." என்றனர்.

  14. பிரிட்டன் பேட்டரி நிறுவனத்தை 100 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

    பிரிட்டனைச் சேர்ந்த ஃபரடியன் நிறுவனத்தை 100 மில்லியன் பவுண்டுகளுக்கு இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் நிறுவனம் பிரிட்டிஷ் நிறுவனமான ஃபரடியனை 100 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப் போவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

    ஃபரேடியன் நிறுவனம் சோடியம் அயன் பேட்டரி தொழில்நுட்பம் வழங்கும் பணியை செய்து வருகிறது.

    இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆக்ஸ்போர்டு மற்றும் ஷெஃபீல்டு நகரைச் சேர்ந்த ஃபரடியன், உலகளாவிய பேட்டரி தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது. இது போட்டித்தன்மை வாய்ந்த, உத்தி மற்றும் விரிவான பங்கு வர்த்தக ஆதாரத்தைக் கொண்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. கொரோனா: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் செளரவ் கங்குலி

    செளரவ் கங்குலி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, செளரவ் கங்குலி

    கொரோனா காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி வீடு திரும்பினார்.

    கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் டிசம்பர் 27 ஆம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆக்சிஜன் அளவு 99% இருப்பதாகவும் மருத்துவமனை ஏற்கெனவே கூறியிருந்தது.

    அவருக்கு மோனோக்ளோனல் ஆன்டி-பாடி காக்டெய்ல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மோனோக்ளோனல் ஆன்டி பாடி தெரபி அதிக ஆபத்து பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக கங்குலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அப்போது அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.

    அதன் பிந்தைய சில வாரங்களில் கங்குலிக்கு மீண்டும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்ய நேர்ந்தது.

    சமீபத்தில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதற்காக இந்திய அணிக்கு மருத்துவமனையில் இருந்தபடியே கங்குலி தமது ட்விட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

  16. சென்னை பெருமழைக்கு காரணம் என்ன ? -வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

    சென்னையில் நேற்று பெய்த கன மழைக்கான காரணம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "செயற்கைக்கோள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மழை பெய்வது குறித்து கணித்து அறிவிக்கப்படும். நேற்றைய தினம், காற்றின் மேலடுக்கு சுழற்சி, திடீரென இடம் மாறியது. இதனால், சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இதைக் கணிப்பது சற்று கடினமானது. இந்த நடைமுறைப் பிரச்னையால், நேற்றைய கன மழையைக் கணிக்க முடியவில்லை.

    காற்றின் வேகத்தை துல்லியமாக கணிக்க இயலாது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, சில நேரங்களில் வேகமாக கடந்து விடும். அப்படி நகர்ந்ததால், சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இது மேக வெடிப்பு அல்ல. இந்த கனமழைக்கு மேக வெடிப்பும் காரணமில்லை. மழைப் பொழிவை துல்லியமாக கணிக்க, நவீன உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுகின்றன." என்றார்.

    இந்த மழைக்கு பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதலின் தாக்கம் காரணமா? என்கிற கேள்விக்கு, "தற்போதுள்ள நிலையை மட்டும் வைத்து கணக்கிட முடியாது. சென்னையை விட மாவட்டங்களில் பல முறை கன மழை பெய்துள்ளது. அப்போது இது போன்ற கேள்விகள் எழவில்லை. சென்னையில் பாதிப்பு என்றதும் கேள்வி கேட்கிறார்கள்." என்றார்.

  17. இலங்கை சிறையில் இந்திய மீனவர்களுக்கு ஜனவரி 13ம் தேதி வரை சிறைக்காவல் நீட்டிப்பு, பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

    காவல் நீட்டிப்பால் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் ராமேஸ்வரம் மீனவர்கள்

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு ஜனவரி 13-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 18 ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற 43 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர்.

    இந்த வழக்கு இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. புத்தாண்டு விடுமுறையில் உள்ளதால், இணைய வழியாக வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்களுக்கு வரும் 13-ம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடந்த 14 நாட்களாக சிறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதனால், இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை. எனவே, மீனவர்களிடம் விசாரணை செய்து, அறிக்கையுடன் வரும் 13-ம் தேதி மீண்டும் ஆஜர் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, மீனவர்கள் அனைவரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  18. தமிழ்நாடு ஆளுநரைச் சந்திக்கும் அதிமுக குழு

    தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 5-ம் தேதி கூடுகிறது. இந்நிலையில், அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய்சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

    இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர்.

  19. சென்னையில் விரைவில் நிலைமை சீரடையும் - முதலமைச்சர் உறுதி

    மழை பாதிப்புகளை சீரமைக்க அனைத்து அதிகாரிகளும் உழைத்துக் கொண்டுள்ளனர் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

    பட மூலாதாரம், CMOTamilnadu -Twitter

    படக்குறிப்பு, மழை பாதிப்புகளை சீரமைக்க அனைத்து அதிகாரிகளும் உழைத்துக் கொண்டுள்ளனர் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நேற்று பெய்த திடீர் கன மழையினால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் மற்றும் நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டார்.

    தொடர்ந்து இன்றும் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் கூறுகையில், "நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும்." என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. புத்தாண்டு நல்வாழ்த்துகள்: கண்டிப்பாக நேரில் வர வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

    அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க முதலமைச்சர் வேண்டுகோள்

    பட மூலாதாரம், CMOTamilnadu - Twitter

    படக்குறிப்பு, அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க முதலமைச்சர் வேண்டுகோள்

    "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஜனவரி 1-ம் நாள் என்னை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தமிழ்நாடு் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆறாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருகிற, முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 ஜனவரி 1-ம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட திமுக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பலரும் என்னை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

    எனினும், கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதலமைச்சரான நானும், அந்தக் கடமையை உணர்ந்தவர்களாகக் கழகத்தின் உடன்பிறப்புகளாகிய நீங்களும் இருப்பதால், உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக, முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கண்ணியம் மிக்க திமுக தொண்டர்களாகக் கடமைகளை மேற்கொள்ளுங்கள். அதுவே எனக்கு நீங்கள் வழங்குகிற சிறப்பான புத்தாண்டுப் பரிசாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும், இனி வரும் காலங்களும் திமுகவின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.