You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் புதிதாக 447 பேருக்கு தொற்று - அண்மைய தகவல்கள்
ஜூன் 30-ம் தேதி வரை வழக்கமான ரயில்களில் பயணம் செய்வதற்காக செய்யப்பட்ட எல்லா முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இவர்களுக்கு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
கொரோனா வைரஸ் : ஐரோப்பிய நாடுகளில் என்ன நடக்கிறது?
- பொது முடக்க நிலை காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஃபின்லாந்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முழு பாதுகாப்பை அளிக்க முடியாமல் போகலாம் என ஃபின்லாந்து ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இருந்த போது, தனி நபர் இடைவெளியை பின்பற்றி தற்போது பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை அளிக்கப்படுவதற்கு முன்னதாக 2 வாரங்கள் மட்டும் பள்ளிகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.
- கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கினால், அதனை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரான்ஸின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோஃபி தெரிவித்துள்ளதை ’ஏற்றுக்கொள்ள முடியாது’ என பிரான்ஸ் துணை நிதி அமைச்சர் ஆக்னஸ் பன்னியர் தெரிவித்துள்ளார்.
- ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 89 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் அந்த நாட்டின் மொத்த கொரோனா தொற்று 1,72,239 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் 'R' மதிப்பானது 1.0 என்ற அளவிலிருந்து 0.8 ஆக குறைந்துள்ளதாக அந்நாட்டின் மதிப்புமிகு அமைப்பான ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. ('R' மதிப்பு என்றால் என்ன?)
- மாண்டிநெக்ரோ நாட்டில் கொரோனா முடக்க நிலை விதிகளை மீறியதாக கூறி செர்பிய பழமைவாத ஆயர் மற்றும் 7 கிறிஸ்துவ பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
சென்னையில் அசாம் மாநில தொழிலாளர்கள் கோரிக்கை
சென்னையில் அசாமை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் மாநிலத்திற்கு செல்ல மத்திய அரசும், அசாம் அரசும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவன பிரதிநிதியை வெளியேற்றும் புரூண்டி
உலக சுகாதார நிறுவனத்தின் பிரநிதி மற்றும் மூன்று சுகாதார நிபுணர்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கிழக்கு ஆப்ரிக்க நாடான புரூண்டி உத்தரவிட்டுள்ளது.
இந்த வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்களுக்கு இடையே, வரும் மே 20-ஆம் தேதி புரூண்டியில் பொதுத்தேர்தல் நடந்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் இந்த தேர்தல் தொடர்பான பிரச்சாரங்களில், தனிநபர் இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறிதும் கடைபிடிக்கப்படுவதில்லை.
புரூண்டியில் இதுவரை 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார். ஆனால் அரசு வெளியிடும் கொரோனா தொற்று தரவுகளின் சந்தேகம் இருப்பதாக மனித நேய அமைப்புகள் கூறி வருகின்றன.
Corona Virus 'R' value என்றால் என்ன?
Corona Virus 'R' value: இன்றைய தேதியில் ஒரு நாட்டில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து பிரதமரோ, அதிபரோ கூட எளிதாக தீர்மானிக்க முடியாது. இதன் பின்னணியில் இருப்பது R மதிப்பு. ஏன் இது முக்கியத்துவம் வாய்ந்தது? ஊரடங்கை தளர்த்துவதில் என்னதான் பிரச்சனை? விளக்குகிறது இந்த காணொளி.
இன்று இதுவரை நடந்தது என்ன?
கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று இதுவரை உலககெங்கிலும் இருந்து வெளிவந்த முக்கிய செய்திகளின் சுருக்கம்:
- “கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரயான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
- தென் கொரியாவின் தலைநகரான சோலில் கடந்த ஒரு மாத காலத்தில் இல்லாத அளவுக்கு, அதிகளவிலான மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சீனாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஹேக்கர்கள், கோவிட்-19 தொற்று குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் நிறுவனங்களை இலக்கு வைப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பாகிஸ்தானில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், கூட்டவிலக்க விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காததால் அந்த நாட்டின் சிந்து மாகாணத்திலுள்ள சில சந்தைகள் மீண்டும் மூடப்பட்டன.
- கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு அரிய அழற்சி நோய் ஒன்று ஏற்படுவதாக கவலை எழுந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் உள்ள பல குழந்தைகளுக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நச்சு அதிர்ச்சி நோய்க்குரிய அறிகுறிகளை இது ஏற்படுவதாக தெரிகிறது.
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,722 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், நோய்த்தொற்று பாதிப்பினால் 134 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த பரிந்துரை
தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த வேண்டும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் மருத்துவ குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
மேலதிக தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.
இயல்புநிலைக்கு திரும்பிய நியூசிலாந்து
கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்படும் நியூசிலாந்தில் இயல்புநிலை திரும்பியுள்ளது.
மதுபான விடுதிகளை தவிர்த்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், முடித்திருத்தகங்கள், உணவகங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன.
10 பேர் வரை ஒன்றாக சேர்ந்து சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக அங்கு எந்த புதிய தொற்று பாதிப்பும் உறுதிசெய்யப்படவில்லை.
இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு 900ஐ கடந்தது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார
மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 108 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், 445 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை பன்மடங்கு அதிகரிப்பு
தென் கொரியாவின் தலைநகரான சோலில் கடந்த ஒரு மாத காலத்தில் இல்லாத அளவுக்கு, அதிகளவிலான மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சோல் நகரத்தில் உள்ள பல்வேறு இரவு விடுதிகளுக்கு ஒரே நாளில் சென்ற இளைஞர் ஒருவரின் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் பயணப்பட்ட இடங்களுக்கு வந்த 35,000க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நோய்த்தொற்று பரிசோதனைக்கு மக்கள் முன்வருவதை ஊக்குவிக்கும் வகையில், கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் தகவல்கள் அரசின் தரவுத்தளத்திருந்து நீக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஸ்பெயினில் என்ன நடக்கிறது? ஒரு பிபிசி செய்தியாளரின் வாக்குமூலம்
இந்தியாவில் சிறப்பு ரயில்களில் பயணிக்க 2,34,411 பேர் முன்பதிவு
இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் பயணிப்பதற்கு இதுவரை 2,34,411 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதன் மூலம் 45.30 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது
ஹேக்கர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
சீனாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஹேக்கர்கள், கோவிட்-19 தொற்று குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் நிறுவனங்களை இலக்கு வைப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசி குறித்து ஆராய்ந்து வரும் அமெரிக்க குழுக்களின் தரவுகளை ஹேக் செய்ய சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.சீன அரசாங்கம் இணையம் வழியாக உளவு பார்ப்பதாக, நீண்ட காலமாகவே அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், அதை சீனா மறுத்துள்ளது. தற்போது இந்த கொரோனா தொற்றால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.மற்றும் மற்றொரு பாதுகாப்பு அமைப்பான சிஸாவும் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதில், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக ஆராய்ச்சி நடத்தும் நிறுவனங்கள், ஹேக்கர்களின் இலக்காக இருப்பதால், அவை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மீண்டும் மூடப்படும் சந்தைகள்
பாகிஸ்தானில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், கூட்டவிலக்க விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காததால் அந்த நாட்டின் சிந்து மாகாணத்திலுள்ள சில சந்தைகள் மீண்டும் மூடப்பட்டன.
பாகிஸ்தானில் நேற்று மட்டும் புதிதாக 2,300 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக டான் எனும் உள்ளூரில் செய்தித்தாள் கூறுகிறது.
பாகிஸ்தானில் முடக்க நிலை தளர்த்தப்பட்ட இரண்டே நாட்களில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளதுடன், சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு புதிய நோய்?
கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு அரிய அழற்சி நோய் ஒன்று ஏற்படுவதாக கவலை எழுந்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் உள்ள பல குழந்தைகளுக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நச்சு அதிர்ச்சி நோய்க்குரிய அறிகுறிகளை இது ஏற்படுவதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் விரைவில் நோய் பாதிப்பிலிருந்து குணமடையும் நிலையில், சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 30 வரை அனைத்து ரயில்களுக்கான முன்பதிவும் ரத்து
ஜூன் 30-ம் தேதி வரை வழக்கமான ரயில்களில் பயணம் செய்வதற்காக செய்யப்பட்ட எல்லா முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இவர்களுக்கு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும். அதே நேரம் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ரயில்களும், சிறப்பு ரயில்களும் மட்டும் இயங்கும் என்று ரயில்வேயை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் புதிய சர்ச்சை
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில், மற்றொரு புதிய சர்ச்சை உருவெடுத்துள்ளது.
அந்நாட்டு கொரோனா தடுப்புப் பணிகளை வழிநடத்துபவரும், முக்கிய மருத்துவ ஆலோசகருமான அந்தோனி ஃபசி மற்றும் அதிபர் டிரம்புக்கு இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் தொழில்களை இப்போது திறந்தால், மீண்டும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாகும் என்று அந்தோனி ஃபசி எச்சரித்திருந்தார்.
ஆனால், அந்த எச்சரிக்கையை ஏற்க முடியாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறவே, இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
இது தொடர்பான செனட் உறுப்பினர்கள் முன்பு ஃபசி சாட்சியமும் அளித்துள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மாலை 4 மணிக்கு நிர்மலா சீதாராமன் மீண்டும் பேசுகிறார், பத்திரிகையாளர்களிடம் அடுத்த கட்ட நிதியுதவி குறித்து தெரிவிப்பார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பொருளாதார மீட்புக்கான அடுத்தகட்டத் திட்டங்கள் குறித்து அறிவிப்பார்.
பாதுகாப்பு கவச உடை அணிந்துகொண்டு முடிவெட்டும் தொழிலாளர்
குஜராத் மாநிலம் நாடியாட் நகரில் உள்ள ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் மருத்துவர்கள் பயன்படுத்தும் தனி நபர் பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தும் ஒரு தொழிலாளர்.
கொரோனாவால் உலகளவில் மக்கள் உளவியல் பிரச்சனைகள் ஐ.நா. எச்சரிக்கை
கொரோனா தொற்றால் உலகளவில் மக்கள் உளவியல் ரீதியிலான துன்பத்தை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
மருத்துவ, சுகாதார பணியாளர்களில் தொடங்கி, இத்தொற்றால் வேலை இழந்தவர்கள், தனிமையில் தவிக்கும் முதியவர்கள், என பலரும் மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்துள்ளனர்.
ஆகவே கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள், சமூக மற்றும் மனரீதியாக மக்களுக்கு எவ்வாறு ஆதரவு கொடுப்பது என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.