You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும்: நிபுணர் குழு பரிந்துரை
தமிழ்நாடு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் ஊரடங்கை தமிழ்நாட்டில் படிப்படியாகத்தான் தளர்த்த முடியுமென்றும் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய மருத்துவர் குழு தெரிவித்திருக்கிறது.
தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைத்துள்ள மருத்துவக் குழுவினைச் சேர்ந்த நிபுணர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசினா். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎம்ஆரின் துணை இயக்குனர் பிரதீப் கவுர், இந்தக் கூட்டத்தில் டாக்டர் சௌமியா ஸ்வாமிநாதனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜெனீவாவில் இருந்து பங்கேற்றதாகத் தெரிவித்தார்.
சுமார் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்திய இந்தக் குழுவினர், தமிழக அரசுக்கு பல பரிந்துரைகளை அளித்தனர்.
"தமிழ்நாட்டின் மிகப் பெரிய சாதனை என்பது பெரிய அளவில் சோதனைகள் செய்யப்பட்டிருப்பதுதான். பல நாடுகளைவிட அதிக எண்ணிக்கையில் இந்த சோதனைகளை நாம் செய்திருக்கிறோம். இப்படி அதிக சோதனைகளைச் செய்வதன் மூலம்தான் எந்தெந்த மாவட்டங்களில் எந்த அளவுக்கு நோய் பரவியிருக்கிறது என்பது குறித்த ஒரு வரைபடம் கிடைத்தது. அதை வைத்துதான் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எங்கள் கமிட்டியின் முக்கியமான பரிந்துரை, இந்த சோதனைகளின் எண்ணிக்கையை குறைக்கவே கூடாது என்பதுதான். சோதனை நடத்த நடத்தத்தான் நோயின் பரவலை கண்டறியமுடியும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து அச்சப்படக்கூடாது. எங்கு நோய்ப் பரவல் இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் அதனைத் தடுப்பதற்கான வேலைகளைச் செய்ய முடியும்.
நோய் அறிகுறி இருப்பவர்களை நாம் சீக்கிரம் கண்டறிய வேண்டும். இப்போது அறிகுறி வந்து மூன்று நாட்களுக்கு அவர்களை மருத்துவமனைக்குள் கொண்டுவருகிறோம். இந்த கால அளவு அப்படியே நீடிக்க வேண்டும். இன்னும் மேம்பட வேண்டும். அதனால், மற்றவர்களுக்கு நோய் பரவுவது தடுக்கப்படும். இதனால் மரண விகிதம் குறையும்.
தமிழ்நாட்டின் மற்றொரு சாதனை, மரண விகிதம் குறைவாக இருப்பது. இதற்கு முக்கியமான காரணம் நோயாளிகளைச் சீக்கிரம் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுதான். இதனை இன்னும் வலுவாக்க வேண்டும்.
மூன்றாவதாக, தொடர்புகளை கண்டறிதல். ஒரு நோயாளியோடு 15 நிமிடங்களுக்கு மேல் ஒன்றாக இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தகவல் அளிக்க வேண்டும். இந்த வியூகம் சிறப்பாக இங்கே செயல்படுகிறது. முதலில் ஒரு க்ளஸ்டர் ஏற்பட்டது. இதுபோல செயல்பட்டதால், அது முழுமையாக கண்டறியப்பட்டு, குணப்படுத்தப்பட்டது. அதற்கடுத்தபடியாக இப்போது ஒரு க்ளஸ்டர் உருவாகியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு நோயாளியிடமிருந்து கிட்டத்தட்ட 20 தொடர்புகளைக் கண்டறிகிறார்கள். 20 பேருக்கும் நாம் சோதனை நடத்த வேண்டும். அவர்களுக்கு அறிகுறி இருந்த சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
கண்காணிப்பு, சோதனை, தொடர்புகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இதைச் செய்துகொண்டே இருந்தால்தான் இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இது பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் காலகட்டம். நோய் முழுமையாக இல்லாத காலகட்டம் என்று ஒன்று இருக்காது. ஆனால், அலைகள் ஏற்படும். சில நேரம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். சில நேரம் குறையும். நோயாளிகள் அதிகரிக்கும்போது, இந்த வியூகங்களை பயன்படுத்தி, அந்த க்ளஸ்டரை கடுமையாக சோதித்து, அந்தப் பகுதியிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் பிற பகுதிகளுக்கு பரவாது. இம்மாதிரி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நாம் பதற்றமடையக் கூடாது.
ஆனால், நாம் சமூகத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேம்பட வேண்டும். சமூக இடைவெளி சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். வேலை நடக்கும் இடங்களில் இதனை உறுதி செய்ய வேண்டும். எல்லா பணியிடங்களிலும் முகமூடி அளிக்க வேண்டும். யாருக்காவது அறிகுறி இருந்தால், அவர்கள் வேலைக்கு வரக்கூடாது. 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
யாருடைய வீட்டிற்கு அருகிலாவது நோய்த் தொற்று கண்டறியப்பட்டால், அந்த நபர்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. ஊரடங்கை தளர்த்தும்போது படிப்படியாகத்தான் அதைச் செய்ய வேண்டும். ஒரேடியாக திறந்துவிட முடியாது. அப்படிச் செய்தால், பரவல் அதிகமாகும்" என்று டாக்டர் பிரதீப் கவுர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் மக்களைத் தனிமைப்படுத்தி, அவர்கள் சோதனை செய்யப்பட வேண்டுமென்றும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் நிபுணர் குழு கூறியிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: