கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்தால், இந்த பெருந்தொற்று நோயால் ஆஃப்ரிக்காவில் ஒரே ஆண்டில் சுமார் 1,90,000 பேர் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் அடுத்த சில ஆண்டுகளிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
“நோய்த்தொற்று பரவல் வெளிப்படையாக உணரமுடியாத வகையில் இருக்கும்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆஃப்ரிக்க பிராந்திய தலைவர் மட்ஷிடிசோ மோட்டி கூறுகிறார்.
கொரோனா வைரஸின் நிலையற்ற மற்றும் மெதுவான பரவல் முறை ஆஃப்ரிக்காவை மற்ற பிராந்தியங்களிலிருந்து வேறுபடுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆஃப்ரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளான நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, ஐவோரி கோஸ்ட் உள்ளிட்டவை முடக்க நிலையை தளர்த்த தொடங்கியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.