You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேர் பலி, 526 பேர் பாதிப்பு

உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 12,83,929 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி பிபிசி நேயர்களே

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கொரோனா வைரஸ்: சில முக்கிய தகவல்கள்

    தமிழகத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 526.

    கொரோனாவால் 4 பேர் பலியானதை அடுத்து, தமிழகத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்ட வாரியான பட்டியலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக தொடர்ந்து சென்னை இடம்பெற்று வருகிறது. இன்று புதிதாக தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 526 நபர்களில் சென்னையில் 279 நபர்களுக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யலாம் என்றது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது தமிழக அரசு.

    இது தொடர்பாக “எங்கும் வருவோம் உமைத் தடுக்க” என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

    ஊரடங்கு காரணமாக ஆதரவின்றி தவித்து வந்த 3000க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், கோவை ரயில் நிலையத்திலிருந்து பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு சிறப்பு ரயில் மூலம் இன்று அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று 1140 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மூவாயிரத்துக்கும் அதிகமானோர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,881 ஆக உள்ளது. 39, 834 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. பலியானவர்கள் எண்ணிக்கை 1981 ஆக உள்ளது.

    சமுத்திர சேது, வந்தே பாரத் மிசன் ஆகிய திட்டங்கள் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

    177 பயணிகளுடன் ஒரு சிறப்பு விமானம் மலேசியாவிலிருந்து திருச்சியை நோக்கி புறப்பட்டது, 700 இந்தியர்களுடன் ஐ.என்.எஸ் ஜல்ஷ்வா கப்பல் கொச்சியை நோக்கி புறப்பட்டது.

    சர்வதேச அளவில்

    கொரோனாவால் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்குகிறது.

    மாலை நிலவரப்படி 39 லட்சத்து 61 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 13 லட்சத்து 34 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    பலியானவர்களின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், அதற்கு அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளது.

    அமெரிக்காவில் 77 ஆயிரம் பேரும், பிரிட்டனில் 31 ஆயிரம் பேரும் பலியாகி உள்ளனர்.

    இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 844 ஆக உள்ளது. அங்கு ஊரடங்கை மீறியதாக இதுவரை 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் இன்று கோவிட் 19 நோயிலிருந்து 65 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இதுவரை 75 விழுக்காடு கோவிட் 19 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், அந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 108ஆக அதிகரித்துள்ளது.

    உலகமே கொரோனாவின் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடித்துக் கொண்டிருக்க பெலாரூஸ் நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கூட்டி ராணுவ அணிவகுப்பு நடந்துள்ளது.

    கொரோனா பெருந்தொற்று தொடர்பான எந்த ஆலோசனைகளையும் பெலாரூஸ் அதிபர் அலெக்ஸாண்டர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    அவர் கொரோனா அச்சத்தை மனநல கோளாறு என்று வர்ணித்தார். அதுமட்டுமல்ல கொரோனா காரணமாக நாட்டை முடக்குவது பொருளாதாரத்தை சிதைக்கும் என்றார்.

    இந்த சூழலில் இரண்டாம் உலகப் போரின் 75ஆம் ஆண்டு நினைவு தினத்தை ராணுவ அணிவகுப்புடன் அந்த நாடு கொண்டாடி உள்ளது.

    இந்த ராணுவ அணிவகுப்பில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்று மருந்துகளை கலந்து ஒரு கலவையை உருவாக்கி உள்ளனர். இந்த மருந்து கலவை நல்ல பலன்களை தருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    இண்டெர்ஃபெரோன் பீடா 1 பி, ஒபினவிர் - ரிடோனவிர் மற்றும் ரிபாவிரின் ஆகிய மருந்துகளைக் கலந்து கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருக்கும் நோயாளர்களுக்கு வழங்கி உள்ளனர்.

    வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்க்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் என கூறி உள்ளார்.

    வட கொரியாவுக்கு தேவையான உதவிகளை சீனா செய்ய தயார் என ஷி ஜின்பிங் கூறியதாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    கொரோனா சீனா வென்றதற்கு வாழ்த்துகள் என வட கொரிய அதிபர் கிம் சீன அதிபருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு ஷி ஜின்பிங் நன்றி தெரிவித்ததாக க்ளோபல் டைம்ஸ் நாளிதழ் கூறுகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் ரஷ்யாவில் 10, 817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198, 676 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவை எதிர்க்கொள்ள ரஷ்யாவில் அமைக்கப்பட்டிருக்கும் பணிக்குழு ஓரிரவில் அங்கு 104 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக தெரிவிக்கிறது.

    கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

  3. கொரோனா போராளிகள்: கெளரவிக்க நீலநிறத்தில் மிளிரும் சிங்கப்பூர் கட்டடங்கள்

    சிங்கப்பூரில் இன்று புதிதாக 753 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு இதுவரை 22,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் அரசு அறிவித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக 230 நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒர்க் பெர்மிட்டில் இருப்பவர்கள் பணியிடத்திலும் தங்குமிடத்திலும் விதிமுறைகளை மீறியதற்காகவும் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவை மீறியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

    இத்தகவலை சிங்கப்பூர் மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியிலிருந்து அந்நியத் தொழிலாளர்களை அவ்வப்போது கைபேசி காணொளி வசதி மூலம் மனிதவள அமைச்சு அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். மேலும் தங்கு விடுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    இதன்மூலம் விதிமுறைகளை மீறியோர் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 21 பேரின் வேலை பர்மிட் ரத்து செய்யப்பட்டதுடன் அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய நிரந்தரமாகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கோவிட் 19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னிலை ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக சிங்கப்பூர் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நாட்டிலுள்ள சில முக்கிய கட்டடங்கள் நீல நிறத்தில் மிளிரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், உணவு விநியோக ஊழியர்கள் ஆகியோரின் உழைப்பைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளதாக சிங்கப்பூரர்கள் கருதுகின்றனர்.

    இதையடுத்து ஸீ இட் ப்ளூ (See It Blue) என்ற இயக்கத்தை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்த இயக்கமானது இங்கிலாந்தில் தொடங்கி பின்னர் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. மனநல விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த இயக்கம் செயல்பட்டு வருவதாகவும், இனி வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் சிங்கப்பூரின் முக்கியக் கட்டடங்கள் நீல நிறத்தில் மிளிரும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  4. கொரோனா: சர்வதேச அளவில் நடந்தவை என்ன?

  5. கோவிட் 19: கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? - TimeLine Story

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியவுடனே இது குறித்த தகவலை சீனா முழுவதுமாக வெளிப்படுத்தியதா எனவும் அந்த நேரத்தில் சீனா என்ன செய்தது எனவும் அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகள் கேள்வியெழுப்பியுள்ளன.

    கொரோனா வைரஸை முதலில் கண்டறிந்ததிலிருந்து சீனா என்ன சொன்னது என்ன செய்தது என்பதன் கால வரைப்பட விளக்கம்:

    டிசம்பர் 1:லன்செட் என்ற மருத்துவ சஞ்சிகையின் தகவல்படி, முதன் முதலில் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் கவனத்துக்கு வந்தது. ஆனால் வைரஸ் முதலில் நவம்பர் மாதமே தோன்றி விட்டது என பரவலாக நம்பப்படுகிறது.

    டிசம்பர் 27:சார்ஸ் போன்ற ஒரு நோய் பற்றிய தகவலை ஹூபே மாகாணத்தில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர்கள் சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது.

  6. மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரிக்கும் பாதிப்பு

    மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் இன்று கோவிட் 19 நோயிலிருந்து 65 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

    இதுவரை 75 விழுக்காடு கோவிட் 19 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், அந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 108ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில்தான் வைரஸ் தொற்று அதிகமாகக் காணப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று அடையாளம் காணப்பட்ட 54 பேரில் 45 பேர் வெளிநாட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து நாட்டில் உள்ள அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

    இதற்கிடையே மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து சுகாதார அமைச்சு தினமும் அறிக்கை வெளியிட்டு வந்தது. மேலும் அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான தகவல்களையும் விளக்கங்களையும் அளித்து வந்தார்.

    கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி முதல் நேற்று வரை அவர் ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் செய்தியாளர் சந்திப்பை நடத்தி வந்தார். இந்நிலையில் முதல்முறையாக சுகாதார அமைச்சு இன்று நேரடிச் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை.

    பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மே 12ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகக்கூடும். மலேசியாவில் தற்போது பெரும்பாலான வணிக நடவடிக்கைகளுக்கு பெருமளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

  7. வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

    ஊரடங்கு காரணமாக ஆதரவின்றி தவித்து வந்த 3000க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், கோவை ரயில் நிலையத்திலிருந்து பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு சிறப்பு ரயில் மூலம் இன்று அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.

    கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக கோவையில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    இதனால், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

    கடந்த இரண்டு மாதங்களாக வருவாய் இல்லாததால் மீண்டும் சொந்த மாநிலங்களுக்கு கிளம்பிச்செல்ல பல தொழிலாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    கோவையில் பணிபுரிந்து வந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    இதன் முதற்கட்டமாக, நேற்று இரவு 1140 பீகார் மாநிலத் தொழிலாளர்கள், கோவையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இன்று மட்டுமே, மூன்று ரயில்களில் 3000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணிக்கு, 1140 வடமாநில தொழிலாளர்களோடு கோவையிலிருந்து பீகாருக்குச் சிறப்பு ரயில் கிளம்பியது. மாலை 4.30 மணிக்கு மற்றொரு ரயிலில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 1140 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இன்று இரவு, மேலும் 1140 தொழிலாளர்களோடு உத்தரபிரதேசத்திற்கு மற்றொரு சிறப்பு ரயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அடுத்தடுத்த நாட்களில், பீகார், ஜார்கண்ட், அசாம் மாநிலங்களைச் சேர்ந்த மற்ற தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  8. இலங்கையில் ஊரடங்கு சட்டம்: 50,000 பேர் கைது

    இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000த்தை எட்டியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

    இதன்படி, 50,338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக தொடர்பாளர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தது.

    அத்துடன், ஊரடங்கு சட்டத்தை மீறி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 13,064 வாகனங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

    இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட ஆரம்பித்திருந்த நிலையில், அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

    இந்தநிலையில், இடைக்கிடை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

    எனினும், இலங்கையில் அதிவுயர் அச்சுறுத்தல் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த காலப் பகுதியில் போலீஸ் அனுமதியின்றி வெளியில் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், ஊடகவியலாளர் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு மாத்திம் தமது அடையாளஅட்டையை காண்பித்து செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியது.

    இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாத பின்னணியில், பகுதி பகுதியாக நாட்டை திறப்பதற்கான திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  9. தமிழகத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

    தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 526ஆக உயர்ந்துள்ளதால்.

    மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த மே 4ம் தேதி முதல் தினமும் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.

    அதிக எண்ணிக்கையில் கொரோனா சோதனை செய்யப்படுவதால் தொற்று இருப்பவர்கள் கண்டறியப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துவருகிறார்.

    அதேநேரம், கொரோனா தொற்றுக்கு ஆளான 6535 நபர்களில், கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட தொற்றுதான், 1,867 நபர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு காரணம் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

    கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், பணியாளர்கள் மத்தியில் சமூக இடைவெளி இல்லாமல் போனதும், அவர்களிடம் இருந்து பிறருக்கு பரவியது உள்ளிட்ட காரணங்களால் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் நான்கு நபர்கள் இறந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மாவட்ட வாரியான பட்டியலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாகத் தொடர்ந்து சென்னை இடம்பெற்று வருகிறது. இன்று புதிதாக தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 526 நபர்களில் சென்னையில் 279 நபர்களுக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 219 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1824ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 25 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றும், இதுவரை அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 70 நபர்களில் 69 நபர்கள் குணமடைந்துவிட்டனர் என்றும் ஒருவர் இறந்துள்ளார் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 10க்கும் குறைவான நபர்களுக்கு தொற்று இருப்பதால், அந்த இரண்டு மாவட்டங்களிலும் கண்காணிப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

  10. “எங்கும் வருவோம் உமைத் தடுக்க” - கமல்ஹாசன்

  11. கொரோனாவை கட்டுப்படுத்தும் மூன்று மருந்துகளின் கலவை

    ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்று மருந்துகளை கலந்து ஒரு கலவையை உருவாக்கி உள்ளனர். இந்த மருந்து கலவை நல்ல பலன்களை தருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    இண்டெர்ஃபெரோன் பீடா 1 பி, ஒபினவிர் - ரிடோனவிர் மற்றும் ரிபாவிரின் ஆகிய மருந்துகளைக் கலந்து கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருக்கும் நோயாளர்களுக்கு வழங்கி உள்ளனர்.

    இந்த மருந்து நல்ல பலனைத் தந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த புதிய ஆய்வானது மெடியல் சஞ்சிகையில் வெளியாகி உள்ளது.

  12. கொரோனாகாலத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பு

    கொரோனா பெருந்தொற்று தொடர்பான எந்த ஆலோசனைகளையும் பெலாரூஸ் அதிபர் அலெக்ஸாண்டர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் கொரோனா அச்சத்தை மனநல கோளாறு என்று வர்ணித்தார். அதுமட்டுமல்ல கொரோனா காரணமாக நாட்டை முடக்குவது பொருளாதாரத்தை சிதைக்கும் என்றார்.

    இந்த சூழலில் இரண்டாம் உலகப் போரின் 75ஆம் ஆண்டு நினைவு தினத்தை ராணுவ அணிவகுப்புடன் அந்த நாடு கொண்டாடி உள்ளது.

    இந்த ராணுவ அணிவகுப்பில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஆனால், பல ஐரோப்பிய நாடுகள் இந்த நினைவு தினத்தை அனுசரிக்கவில்லை.

  13. கொரோனா வைரஸ்: உலகத்தையே உருக வைத்த ஒரு காதல் கதை

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

    சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை அமைக்க நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

  15. தென் கொரியா: இரவு கிளப் மற்றும் பார்கள் முடக்கம்

    தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள பார்கள் மற்றும் இரவு கிளப்புகள் சென்று வந்த பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே பார்கள் மற்றும் இரவு கிளப்புகள் சென்று வந்தவர்களைப் பின்தொடர்ந்து அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிவதில் தென் கொரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சனிக்கிழமை அன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதுவரை தென் கொரியாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 18 பேரில், 17 பேர் இரவு கிளப்ஒன்றுக்கு சென்று வந்த 29 வயது நபருடன் தொடர்பிலிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் தென் கொரியாவில் உள்ள இரவு கிளப்புகள் மற்றும் பார்கள் மூடப்பட்டுள்ளன.

    தென் கொரியாவில் கொரோனாவைரஸ் பரிசோதனைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைரஸ் பாதிப்பு இருக்குமோ என சந்தேகிக்கப்படும் நபர்களையும் மிகதீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தென் கொரியா மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. தற்போது அங்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகிறது.

  16. ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு: தமிழக அரசு

    பொது ஊரடங்கிற்கு பின் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில்உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, ஊரடங்கு காலத்தால் பின்னடைவை சந்தித்திருக்கும் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழு, தமிழக பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து 3 மாத காலத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  17. கோவிட் 19 : உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸால் அச்சுறுத்தலா?

    உடல் பருமனாக இருப்பது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

    இந்த நிலையில், உடல்பருமன் உடையவர்களுக்கு மற்றவர்களை விட கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது எப்படி சாத்தியம்?

    இந்த கேள்விக்கான பதிலையும், ஆதாரத்தையும் கண்டறிவதற்கு எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

  18. தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி

    தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளில் ஒருபகுதியாக தேநீர் கடைகள் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

    தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரத்திற்கு தனியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தனியாகவும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தளர்வுகள் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  19. கொரோனா வைரஸ்: தொலைவில் உறவுகள் - காதல் உன்மத்தத்தை கடப்பது எப்படி?

    கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர்.

    இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்?

    எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள்.