You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேர் பலி, 526 பேர் பாதிப்பு

உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 12,83,929 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வட கொரியாவுக்கு நன்றி தெரிவித்த சீனா

    வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்க்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் என கூறி உள்ளார்.

    வட கொரியாவுக்கு தேவையான உதவிகளை சீனா செய்ய தயார் என ஷி ஜின்பிங் கூறியதாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    கொரோனாவை சீனா வென்றதற்கு வாழ்த்துகள் என வட கொரிய அதிபர் கிம் சீன அதிபருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு ஷி ஜின்பிங் நன்றி தெரிவித்ததாக க்ளோபல் டைம்ஸ் நாளிதழ் கூறுகிறது.

    வட கொரியாவில் கொரோனா தொற்று எந்த நிலையில் இருக்கிறது என சர்வதேச சமூகத்திற்கு தெரியாது.

    தங்கள் நாட்டில் கொரொனாவே இல்லை என வட கொரியா தொடர்ந்து கூறி வருகிறது. தாங்கள் தொடக்கத்திலேயே கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்திவிட்டதாக அந்நாடு தெரிவிக்கிறது.

    வட கொரியாவில் கொரோனாவே இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்கிறது தென் கொரியா. வட கொரியா தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அண்டைய நாடான சீனாவில் கொரோனா இருக்கும் போது எப்படி வட கொரியாவில் இல்லாமல் இருக்கும் என கேள்வி எழுப்புகிறது.

    தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடாக வட கொரியா பார்க்கப்படுகிறது. அதன் சுகாதார அமைப்புகளாலும் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள முடியாது.

  2. கொரோனா வைரஸ் மருந்து: சித்தர் திருத்தணிகாச்சலம் யார்?, முரளிதரன் காசி விஸ்வநாதன், பிபிசி தமிழ்

    கோவிட்- 19 நோய்க்கு மருந்து இருப்பதாகச் சொன்னதால் தற்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சித்தர் திருத்தணிகாச்சலம். அவரது பின்னணி என்ன?

    சென்னை கோயம்பேட்டின் ஜெய் நகர் பகுதியில் ரத்னா சித்தா ஹாஸ்பிடல் என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை நடத்திவருகிறார் திருத்தணிகாச்சலம். இந்த மருத்துவ மனையில் வேறு சில சித்த மருத்துவர்கள் பணியாற்றுவதாகக் கூறிவந்தாலும், முக்கியமான மருத்துவர் இவர்தான்.

  3. டாஸ்மாக் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது தமிழக அரசு என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

  4. ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் ரஷ்யாவில் 10, 817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198, 676 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவை எதிர்கொள்ள ரஷ்யாவில் அமைக்கப்பட்டிருக்கும் பணிக்குழு ஓரிரவில் அங்கு 104 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக தெரிவிக்கிறது.

    கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

  5. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    கொரோனா தொடர்பான அனைத்து செய்திகளையும் பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து மு. நியாஸ் அகமதும், பா. காயத்ரி அகல்யாவும் தொகுத்து வழங்குகிறோம்.

    நன்றி. இந்நாள் நன்நாளாக அமையட்டும்.

  6. கொரோனா வைரஸ்: இன்று இதுவரை நடந்தது என்ன?

    கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று காலை முதல் மதியம் வரை வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பு:

    • கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்தால், இந்த பெருந்தொற்று நோயால் ஆஃப்ரிக்காவில் ஒரே ஆண்டில் சுமார் 1,90,000 பேர் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் ஊடகச் செயலாளர் கேட்டி மில்லருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
    • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3320 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,662ஆக அதிகரித்துள்ளது.
    • தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலத்துக்கு வெளிமாநிலத்தவர்களை அனுப்புவதற்கான செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்காதபட்சத்தில் தமிழக அரசே ஏற்கும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • மகாராஷ்டிராவில் 714 காவல் துறையினருக்கு கோவிட்-19 தொற்று உண்டாகியுள்ளதாக அந்த மாநிலத்தின் காவல் துறை தெரிவித்துள்ளது.
    • இலங்கையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 835ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் ஒன்பது பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
  7. 40 லட்சத்தை நெருங்கும் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்புகள்

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,40,866ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், கோவிட்-19 பெருந்தொற்று நோயால் இதுவரை உலகம் முழுவதும் 2,74,950 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 12,83,929 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நோய்த்தொற்று பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், உயிரிழப்பில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் இருக்கின்றன.

  8. இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்று அதிகரிப்பு

    இலங்கையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 835ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் ஒன்பது பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இலங்கையில் தற்சமயம் 586 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    மேலும், கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 135 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இலங்கையில் இதுவரை 240 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிவரம் கூறுகிறது.

    இலங்கையில் பாதுகாப்பு பிரிவினர் கீழ் செயல்படும் 41 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 5,532 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவிட்-19 ஒழிப்பு செயலணியின் தலைவரான, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

  9. பிரிட்டனில் வெளிநாட்டு பயணிகளை சுய தனிமைப்படுத்த திட்டம்?

    அயர்லாந்தை தவிர்த்து மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பு தங்களிடம் கூறியுள்ளதாக பிரிட்டனின் விமான சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய விதிமுறை இந்த மாதத்தின் இறுதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

    இதன் மூலம், வெளிநாடுகளிருந்து பிரிட்டனுக்குள் நுழைபவர்கள் 14 நாட்களுக்கு கட்டாய சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டி இருக்கும்.

  10. வெளிமாநில தொழிலாளர்களின் பயணச் செலவை ஏற்கிறது தமிழக அரசு

    தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலத்துக்கு வெளிமாநிலத்தவர்களை அனுப்புவதற்கான செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்காதபட்சத்தில் தமிழக அரசே ஏற்கும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிற மாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளா்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியிட்டது.

    இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  11. புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணீர் கதை

    பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு பயணப்படும் சூரத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், பிரச்சனைகளும் என்னென்ன?

  12. “பாரீசில் முடக்க நிலை தளர்த்தப்படாது”

    பல்வேறு ஐரோப்பிய நாடுகளை போன்று பிரான்சிலும் முடக்க நிலை தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனாலும், தலைநகர் பாரீசில் எவ்வித தளர்த்தவும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தென் கிழக்கு பகுதிகளிலும் முடக்க நிலை தளர்த்தப்படாது என்று அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

    இவ்விரு இடங்களை தவிர்த்து, மற்ற பகுதிகளில் வரும் திங்கட்கிழமை முதல் சில பள்ளிகள் மற்றும் தனிக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

    எனினும் சமூக விலகல் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  13. இலங்கைக்கு மருத்துவ உதவி பொருட்களை அனுப்பிய இந்தியா

    இலங்கைக்கு அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது.

    12.5 டன் எடையுடைய பொருட்களுடனான விசேட விமானமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கையை சென்றடைந்தது.

    இலங்கைக்கு இதற்கு முன்னர் நான்கு முறை இந்தியா சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவிக்கிறது.

    இவ்வாறு கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்களுடன் புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய தூதரர் கோபால் பாக்லே நேற்றைய தினம் இலங்கைக்கு சென்றார்.

    இலங்கையில் நடைமுறையிலுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே அவர் தமது பணிகளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி இதற்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  14. மகாராஷ்டிரா காவல் துறையில் கோவிட்-19 தொற்று

    மகாராஷ்டிராவில் 714 காவல் துறையினருக்கு கோவிட்-19 தொற்று உண்டாகியுள்ளதாக அந்த மாநிலத்தின் காவல் துறை தெரிவித்துள்ளது.

    அவர்களில் 61 பேர் குணமடைந்துள்ளனர்; ஐந்து பேர் இறந்துள்ளனர்.

    இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 19,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  15. இத்தாலியில் 30 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

    ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

    வெள்ளிக்கிழமை அன்று இத்தாலியில் கொரோனாவால் புதிதாக 243 பேர் உயிரிழக்க, அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,201ஆக உயர்ந்துள்ளது.

    கோவிட்-19 நோய்த்தொற்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகம் பேர் உயிரிழந்த நாடாக இத்தாலி விளங்குகிறது.

    பிரிட்டனில் கொரோனா தொற்றால் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தற்போது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லை.

    உலகளவில் கொரோனாவால் இதுவரை அதிகம் பேர் உயிரிழந்தது அமெரிக்காவில்தான். இரண்டாம் இடத்தில் பிரிட்டனும், மூன்றாவது இடத்தில் இத்தாலியும் இருக்கிறது.

  16. சென்னை - மண்டல வாரியான பாதிப்பு

  17. டாஸ்மாக் மது விற்பனை எவ்வளவு?

    கொரோனா ஊரடங்கு சமயத்திலும் 2 நாட்கள்தான் டாஸ்மாக் திறந்திருந்தது. இந்த 2 நாட்களில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

  18. அமெரிக்க துணை அதிபரின் அலுவலருக்கு கொரோனா

    அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் ஊடகச் செயலாளர் கேட்டி மில்லருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வியாழனன்று அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

    உலகிலேயே அதிகமான கோவிட்-19 பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    எனினும் பல்வேறு அமெரிக்க மாகாணங்கள் ஊரடங்கை தளர்த்தி வருகின்றன.

  19. கொரோனா வைரஸ் காலத்திலும் அமேசானில் அதிகரித்த காடழிப்பு

    உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக போராடி வரும் நிலையில், பிரேசிலிலுள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த மாதம் பெரியளவில் காடழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது.

    அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது மற்றும் சுரங்கங்களை தோண்டுவது உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் அப்பகுதியில் ராணுவத்தினரை நிலைநிறுத்தும் திட்டத்தை பிரேசில் அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

    அதாவது, கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் அமேசானில் காடழிப்பு செயல்பாடுகள் 64 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அமேசானில் சட்டவிரோத காடழிப்பு செயல்பாடுகள் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரேசில் அதிபர் சாயீர் போல்சனாரூவின் கொள்கைகளும் சொல்லாட்சிகளும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    எனினும், தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் அவர், அமேசானில் சட்டவிரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ஆயுதமேந்திய படைகள் குவிக்கப்படும் என கடந்த வாரம் அறிவித்தார்.

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் பலி எண்ணிக்கை 1981 ஆனது

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3320 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இன்று காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,662 ஆகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 17,846 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    கோவிட்-19 தொற்று உறுதியானபின் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

    இந்தியாவில் கோவிட்-19 தொற்று காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கையும் 1981ஆக அதிகரித்துள்ளது.

    39,834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.