You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கேரளாவில் இன்று தொற்று பாதிப்பு ஏதும் இல்லை

    கேரளாவில் இன்று ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதுவரை கொரோனாவால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502ஆக உள்ளது. இதில் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  2. "நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை"

    மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப் படுத்துவது பற்றிய முடிவை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும் என்று கூறியுள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

    "பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் ஊரடங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோதி முடிவெடுப்பதற்கு முன்பு மாநில முதலமைச்சர்களைக் கலந்தாலோசித்து, அனைவரின் கருத்தைக் கேட்க வேண்டும். மே 17க்கு பிறகு இந்த தடை உத்தரவு நீட்டிக்குமென்றால் மாநிலத்தின் பொருளாதாரம் முழுமையாக அழிந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாநிலத்தில் இப்போதுதான் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளைத் திறந்திருக்கிறோம். இதனால், மாநில வருவாய் குறைந்துவிட்டது. ஆகவே, மத்திய அரசானது நிதி வழங்க வேண்டும் எனக் கேட்டும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

    ஒருபுறம் மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும், இன்னொரு புறம் மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் மாநில அரசு செயல்பட அதற்கான நிதியாதாரத்தை உருவாக்க வேண்டும்," என்றார் நாராயணசாமி.

    "இப்போது மத்திய அரசானது சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலகள் எதுவென அறிவிக்கிறது. ஆனால், இதுகுறித்து அறிவிப்பதற்கு மாநில அரசைக் கலந்தாலோசிக்க வில்லை.

    மாநிலங்களுக்கு மட்டுமே எந்தந்த பகுதிகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று தெரியும்" என முதல்வர் நாராயணசாமி கூறினார்.

  3. மாலை வணக்கம்!

    கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளுக்கு தொடர்ந்து இந்த நேரலையில் இணைந்திருங்கள். நான் அபர்ணா ராமமூர்த்தி.

    தமிழகத்தை பொறுத்தவரை காலையில் இருந்து என்ன நடந்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

    • கோவிட் -19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் தணிகாசலம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
    • தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    • தமிழ்நாட்டில் நாளை மது விற்பனை துவங்குவதால் அதற்கான விரிவான ஏற்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. வயதின் அடிப்படையில் மது வாங்கவிருப்பவர்களுக்கான நேரக் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.
    • திருவண்ணாமலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
    • மதுபானங்கள் மீதான கலால் வரியை 15 சதவீதம் உயர்த்தி உள்ளது தமிழக அரசு. 180 மி.லி மதுபானத்தின் சாதாரண பிராண்டுகளின் விலை 10 ரூபாயும், ப்ரீமியம் பிராண்டுகளின் விலை 20 ரூபாயும் உயரும்.
  4. தமிழ்நாட்டில் மதுக் கடைகளைத் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

    தமிழ்நாட்டில் மதுக் கடைகளைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் மதுக்கடைகளைத் திறக்க இந்த அனுமதி வழங்கப்படுள்ளது.

    ஒரு நபருக்கு ஒரு முழு பாட்டில் அளவுக்கு மட்டுமே மதுவை விற்க வேண்டும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுபானக் கடைகள் மே 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இந்த அறிவிப்பை எதிர்த்து பல பொது நல மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.

    மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மதுக் கடைகளைத் தற்போது திறப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், கொரோனா தொற்று பரவலாகும் எனத் தெரிவித்தனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பல்வேறுமாநிலங்களில் மது விற்பனை துவங்கியிருப்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் மது விற்பனையின்போது கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதற்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிபதிகள், மதுபான கடைகளைத் திறக்க அனுமதிப்பதாகத் தெரிவித்தனர். மேலும், அரசு ஏற்கனவே கூறியிருந்த கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆன்லைனிலும் டாஸ்மாக்நிறுவனம் மதுவை விற்கலாம் எனவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு ஒரு பாட்டில் மதுபானமும் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் வாங்குவோருக்கு இரண்டு பாட்டில்கள் வழங்கலாம் எனவும் தெரிவித்தனர். மொத்தமாக யாருக்கும் மதுவை விற்பனை செய்யக்கூடாது எனவும் அப்படி விற்பனைசெய்யும் கடைகளை மூட வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஒரு நபருக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் வாரத்திற்கு இரண்டு முறையுமே மது விற்பனை செய்ய வேண்டுமென்றும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தனர்.

    ஆனால், ஆன்லைனில் மது விற்பனையைச் செய்ய முடியாது என அரசுத் தரப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  5. சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 788 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வழக்கம்போல் இன்றும் 11 சிங்கப்பூரர்களைத் தவிர பாதிக்கப்பட்ட அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள் ஆவர். நோய் தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 20,198 ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

    இதற்கிடையே சிங்கப்பூரில் உள்ள அனைவருக்கும் 3வது முறையாக முகக் கவசங்களை விநியோகம் செய்ய உள்ளது அந்நாட்டு அரசு. இது முன்பு விநியோகிக்கப்பட்ட முகக்கவசங்களை விட மேம்பட்ட மறுபயனீடு செய்யக்கூடிய முகக்கவசங்கள் என அந்நாட்டின் வர்த்தக தொழில்துறை அமைச்சர் தெரிவித்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

    இந்த மேம்பட்ட முகக் கவசத்தை அணிவோர் எளிதாக சுவாசிக்க முடியும் என்றும்நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடித் திட்டம் நிறைவடையும் வேளையில் இந்தப் புதிய முகக் கவசங்கள் விநியோகிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

  6. தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து 7 வெளிநாட்டவர்கள் தப்பியோட்டம்: மலேசிய போலீஸ் வலைவீச்சு

    மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 6,428 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 45 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 135 கோவிட் 19 நோயாளிகள் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்து நாடு திரும்பி உள்ளனர்.

    "மலேசியாவில் கோவிட் 19 நோயாளிகளில் 73 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,619 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 22 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கோவிட் 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது," என மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிசாம் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

    இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் 7 பேர் தப்பி ஓடிய சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

    தப்பி ஓடிய 7 பேரும் இந்தோனேசியா, வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 7 பேரும் கோலாலம்பூரில் உள்ள சிலாங்கூர் தங்கு விடுதியில் தங்கியிருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மலேசியாவில் உள்ள சட்டவிரோதமாகக் குடியேறிகளை கைது செய்வதில் அரசாங்கம் அவசரப்படக்கூடாது என மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன. பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவதற்கு முன்பாகவே நூற்றுக்கணக்கான சட்டவிரோதக் குடியேறிகளை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டும் இக்குழுக்கள், இத்தகைய கடும் நடவடிக்கைகள் சட்டவிரோதக் குடியேறிகளை தலைமறைவாகச் சென்றுவிட வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே அண்மைய நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்ட 586 சட்டவிரோத குடியேறிகளுக்கு கோவிட் 19 நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் மூத்த அமைச்சர் ஹிமாயில் சபரி தெரிவித்துள்ளார்.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, மதுக் கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதி

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்.

    ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மதுபாட்டில்கள் விற்க உத்தரவு. கடைக்கு நேரடியாக செல்வோருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்கப்படும். மதுபாட்டில்களை ஆன்லைனில் விற்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி.

  8. தணிகாசலம் கைது செய்யப்பட்டது ஏன்?

  9. கொரோனா வைரஸ்: 6 முக்கிய தகவல்கள்

    1. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தேர்வு தெரிவித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 257, 454 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,04,305 ஆகவும் உள்ளது. பலி எண்ணிக்கையில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலவரப்படி 49,391 பேர் கோவிட்- 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

    2. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களுக்குள் இக்குழு கலைக்கப்படும் என துணை அதிபர் மைக் பென்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். உலகிலேயே அதிகமானவர்கள் கோவிட் -19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை சுமார் 12 லட்சம் பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    3. கொரோனா குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நபர் சுட்டுக் கொலை

    கொரோனாவைரஸ் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், அவரை சுட்ட நபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிங் லியூ எனும் அந்த ஆராய்ச்சியாளர் கொரோனா குறித்து பல முக்கியமான விஷயங்களைக் கண்டுபிடிக்கும் இறுதிக்கட்டத்தில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    பீட்ஸ்பெர்க்கில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் அவர் உடல் கிடந்ததாக கூறும் அதிகாரிகள், ஒரு கிலோமீட்டர் தொலைவில் காரில் ஹவோ எனும் நபர் உடல் கிடைத்ததாகவும் கூறுகிறார்கள் போலீஸார். ஆராய்ச்சியாளர் பிங் லியூவௌ சுட்டுவிட்ட்ய் பின் ஹவோவும் தன்னைத்தானே சுட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

    4. ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பை சந்தித்த நாடாக பிரிட்டன் உருவெடுத்துள்ளது.

    இதுவரை அதிகமான உயிரிழப்புகளை சந்தித்த நாடாக இருந்த இத்தாலியில் 29,315 பேர் கோவிட்- 19 தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரிட்டனில் சமீபத்திய நிலவரப்படி 29,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடி அதிகமான உயிரிழப்புக்களை சந்தித்த நாடு ஆகியுள்ளது பிரிட்டன்

    5. கோவிட் -19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் தணிகாசலம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர்,இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார். இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார். தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால்,தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    6. மே 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மதுபானம் விற்பனை செய்யப்பட்ட உள்ள நிலையில் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் மதுபானத்தின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக்-ல் விற்பனை செய்யப்படும் மதுபானம் மீது 15 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.

  10. இரான்: ஒரு லட்சத்தை தாண்டிய நோயாளிகள் எண்ணிக்கை

    இரான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

    கடந்த சில தினங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களில் மீண்டும் அதிகமாகி உள்ளதாக இரான் அரசு கூறி உள்ளது.

    இரானில் 101,650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்து 6418 ஆக உயர்ந்துள்ளது என்கிறார் சுகாதார அமைச்சர்.

    மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இரான் உள்ளது.

    இரானின் உண்மையான நிலை இன்னும் மோசமாக இருக்கலாம் என்றும், இரான் அரசு உண்மையை மறைக்கிறது என்றும் மத்திய கிழக்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  11. Corona : பிளாஸ்மா சிகிச்சை வெற்றி பெற்றதா ?

  12. 90 ஆயிரத்திற்கு மதுபானம் வாங்கிய பெங்களூர்வாசி

    கர்நாடகாவில் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் 45 கோடி ரூபாயாக இருந்த மது விற்பனை இரண்டாவது நாள் 197 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதற்கு மத்தியில் விதிமுறைகளை மீறி தனிநபருக்கு அதிகமாக மது விற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மாநில கலால் துறையின் விதிமுறைப்படி, சில்லறை மது விற்பனை கடைகளில், ஒரு நாளைக்கு, தனி நபர் ஒருவருக்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவை, 2.3 லிட்டரும், பீரை, 18.2 லிட்டரும் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.அதற்கு மேல் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கடைக்காரர் மற்றும் நுகர்வோர் மீது வழக்கு பதிவு செய்யலாம்.

    95 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்கள் வாங்கியதாக, சமூக வலைதளங்களில் ஒரு பில்ல்லின் புகைப் படங்கள் வெளியாகி பரவி வருவதை அடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது

  13. தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஊரடங்கு தடை உத்தரவு மாநில அரசு முடிவு செய்ய வேண்டும்

    மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப் படுத்துவது பற்றிய முடிவை மாநில அரசிடம் விட வேண்டும். மே 17க்கு பிறகு இந்த ஊரடங்கு தடை உத்தரவு நீட்டிக்குமென்றால் மாநிலத்தின் பொருளாதாரம் முழுமையாக அழிந்துவிடும். - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

  15. மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது டி.வி.எஸ்

    இந்தியாவில் முடக்க நிலை மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ஒசூர், மைசூரு மற்றும் நலகர் நகரங்களில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்குவதாக டி.வி.எஸ் நிறுவனம் கூறி உள்ளது.

  16. நாளை துவங்குகிறது மது விற்பனை: யார் எப்போது மது வாங்கலாம்?

    தமிழ்நாட்டில் நாளை மது விற்பனை துவங்குவதால் அதற்கான விரிவான ஏற்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. வயதின் அடிப்படையில் மது வாங்கவிருப்பவர்களுக்கான நேரக் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நாளை காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை கடைகள் திறந்திருக்கும். இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மதுபானங்களை வாங்கலாம். 40 முதல் 50 வயது உடையவர்கள் பிற்பகல் ஒரு மணி முதல் மூன்று மணி வரை மதுபானங்களை வாங்கலாம். 40 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பிற்பகல் மூன்று மணி முதல் ஐந்து மணிவரை மதுபானங்களை வாங்கலாம்.

    ஒவ்வொரு மதுபானக் கடையிலும் இரு கான்ஸ்டபிள்களும் 2 ஊர்க்காவல் படையினரும் இடம்பெற்றிருப்பார்கள். சாத்தியமான இடங்களில் கூடுதல் கவுண்டர்களைத் திறக்கவும் கூறப்பட்டுள்ளது.ஒவ்வொரு டவுனிலும் 2 பறக்கும்படையினரும் ஒவ்வொரு நகரத்திலும் 4 பறக்கும் படையினரும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள்.

    சென்னை நகரை ஒட்டியுள்ள, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  17. கொரோனா வைரஸ்: மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரான் விமான சேவையால் பரவிய தொற்று - பிபிசி ஆய்வு

    இரானின் 'மஹான் ஏர்' என்ற ஒரு விமான நிறுவனம் மூலம் எப்படி மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பதை கண்டறிய பிபிசி ஒரு விசாரணை நடத்தியது. ஆனால் இரானில் கோவிட் 19 வைரஸ் அதிகம் பரவ காரணமாக இருந்த இந்த விமான நிறுவனம் இன்னும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    விமான சேவைகளுக்கு அரசாங்கம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள இந்த நேரத்திலும் எப்படி மஹான் விமானங்கள் மட்டும் இராக், ஐக்கிய அரபு எமிரேட், சிரியா போன்ற நாடுகளிடையே இயங்கியது என்பதை கண்டறிய பிபிசி அரபு சேவை மஹான் விமான நிறுவனத்தில் பணிபுரியும் சிலரிடம் பேசியது. மேலும் விமானத்தை பின்தொடர உதவும் தரவுகளையும் ஆய்வு செய்தது.

  18. ஸ்பெயினில் மீண்டும் அதிகரித்த மரணங்கள் - அவசரநிலையை நீட்டிக்க பிரதமர் கோரிக்கை

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஸ்பெயினில் 244 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமையிலிருந்து முதல்முறையாக 200க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளது தற்போது தான் ஸ்பெயினில் பதிவாகியுள்ளது.

    இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் ஸ்பெயினில் 25,857 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் கோவிட்-19 நோய்த்தொற்று 2 லட்சத்து, 20 ஆயிரத்தி, 325 பேருக்கு (2,20, 325) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரேநாளில் புதிதாக 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே, ஸ்பெயினில் மேலும் சில வாரங்களுக்கு அவசரநிலையை நீட்டிக்க அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரியுள்ளார்.

  19. கொரோனா குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நபர் சுட்டுக் கொலை

    கொரோனாவைரஸ் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், அவரை சுட்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    பிங்லியூ எனும் அந்த ஆராய்ச்சியாளர் கொரோனாகுறித்து பல முக்கியமான விஷயங்களைக் கண்டுபிடிக்கும் இறுதிக்கட்டத்தில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    பீட்ஸ்பெர்க்கில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் அவர் உடல் கிடந்ததாக கூறும் அதிகாரிகள், ஒரு கிலோமீட்டர் தொலைவில் காரில்ஹவோ எனும் நபர் உடல் கிடைத்ததாகவும் கூறுகிறார்கள் போலீஸார்.

    ஆராய்ச்சியாளர்பிங்லியூவௌசுட்டுவிட்ட்ய் பின் ஹவோவும் தன்னைத்தானே சுட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

  20. திருவண்ணாமலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு.

    திருவண்ணாமலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு.

    கொரோனா தொற்று ஏற்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், குணமடைந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 25 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 10 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,, நேற்றுவரை 15 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த 55 வயது பெண் இன்னும் இரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்த நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இவர், கடந்த மாதம் 13ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து 24 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இவருக்குத் தொடர்ச்சியாக 4 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாகச் செய்யப்பட்ட இரண்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என எதிர்மறை முடிவுகள் வந்தது. இதையடுத்து, இவரை கொரோனா பாதிக்கப்பட்ட பிரிவிலிருந்து, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவிற்கு மருத்துவர்கள் மாற்றினர்.

    இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால் பாபு,

    "உயிரிழந்த பெண் முன்னதாக சர்க்கரை மற்றும் இதய நோய் பாதிப்பதால் சிகிச்சை பெற்று வந்தவர். அவருக்கு கொரோனா தொற்று உறுதியான பிறகு, தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், அவருக்கு நோய்த்தொற்று குணமானது இரண்டு தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளில் உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், அவருக்கு இருந்த இதய நோய் பிரச்சினை காரணமாக அவர் தற்போது உயிரிழந்துள்ளார். இது கொரோனா தொற்று காரணமாக நிகழவில்லை. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அவர், இன்னும் சில தினங்களில் வீடு திரும்பவிருந்த நிலையில் தற்போது உயிரிழந்தது வேதனையளிக்கிறது‌," என்று தெரிவித்தார்.