You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான விளக்கம்
கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
தற்போதைய செய்தி என்ன?
கொரோனா வைரஸ் குறித்த சமீபத்திய செய்திகளை புதிய நேரலைப் பக்கம் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
புறநகருக்கு சென்று மதுபானம் வாங்கினால் கைது
சென்னையை சேர்ந்தவர்கள் புறநகருக்கு சென்று மதுபானம் வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், "நாளை மே - 7 அன்று பல்வேறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் மதுபானக்கடைகள் திறக்கப்பட உள்ளது.
குறிப்பாக சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட உள்ளது.
இம்மூன்று மாவட்டங்களில் உள்ளோர் மட்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி மதுபானக்கடை அமைந்துள்ள பகுதியில் வசிப்போர் "வசிப்பிட அடையாள அட்டை" யுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் செல்லலாம்.
மதுபானக்கடைக்கு சம்பந்தமில்லாத சென்னை மாநகர் போன்ற பகுதியிலிருந்து வந்து மதுபானம் வாங்க முயற்சித்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்,சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்படுவார்கள்"
இவ்வாறு தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் தெரிவித்துள்ளார்
கொரோனாவால் மன அழுத்தமா? நீங்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்?
கொரோனா தொற்று காரணமாக நம் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நம் தினசரி வேலைகளிலும் பல்வேறு மாற்றங்கள். நாள் முழுக்க வீட்டிலேயே இருப்பதால் இரவு சரியாக தூங்க முடியவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.
ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்
கொரோனா வைரஸ்: இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரானா தொற்றின் எண்ணிக்கை. தேசிய அளவில் அதிகரிக்கும் மரணங்கள். சர்வதேச நிலவரம் என்ன?
இரானில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் பாதிப்பு
இரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101,650ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,418 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இரான் விளங்குகிறது.
பிபிசி அரபு சேவை நடத்திய விசாரணையில் விமான பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்திலும் அந்நாட்டின் மஹான் ஏர் விமான சேவை, பயணிகளுடன் விமானத்தை இயக்கியது தெரியவந்துள்ளது. இதுவே அந்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பரவவும் காரணமாக அமைந்துள்ளது.
கொரோனா வைரசின் முதல் கட்டத்தை கடந்துவிட்டதாக ஜெர்மனி அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவலின் முதல் கட்டத்தை கடந்துவிட்டதாக ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்னும் நீண்ட தூரம் கடக்க வேண்டியிருக்கிறது என்றும் மெர்கல் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனியில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சமூக விலகல் கட்டுப்பாடுகள் ஜுன் 5ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த தரவுகளை கணக்கிடும் ராபர்ட் கோச் நிறுவனத்தின் சமீபத்திய தரவுகள் சற்று மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
ஆனால், கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மீண்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெளத்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரதமர் மோதி
நாளை நடைபெற உள்ள புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய கலாசார அமைச்சகம், சர்வதேச பெளத்த கூட்டமைப்புடன் இணைந்து காணொளி காட்சி வாயிலாக வழிபாட்டு நிகழ்வு ஒன்றை நடத்த இருக்கிறது.
இதில் உலகளவில் உள்ள பெளத்த சமயத்தின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விரைவில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்
இந்தியாவில் விரைவில் சில விதிமுறைகளுடன் போக்குவரத்து சேவைகள் தொடங்க முயற்சிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மக்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பதால் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்தை தொடங்குவதற்கான தேவை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளர்.
கடலூரில் 95 நபர்களுக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 324ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 95 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், இதுவரை 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், 161 நபர்களின் பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.
தமிழ்நாட்டில் அஞ்சத்தக்க அளவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று, முரளீதரன் காசிவிஸ்வநாதன், பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4829ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 324 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
இன்று 31 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1516ஆக உள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 3,275ஆக உள்ளது.
விரிவாக படிக்க: ஒரேநாளில் சென்னை - 324, அரியலூர் -188; அதிர்ச்சியில் தமிழகம்
அரியலூரில் இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 34ஆக இருந்தது. ஆனால், இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 222ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை அரியலூரில் இந்நோய்த் தொற்றிலிருந்து 6 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,391ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,457 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
14,183 பேர் இதுவரை இத்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 33,514 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12.2 கோடி இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர்
இந்தியாவில் ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 12.2 கோடி மக்கள் வேலை இழந்துள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனத்தின் தரவுகள் கூறுகிறது.
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 27.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவிக்கிறது.
அமெரிக்காவை விட இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை நான்கு மடங்கு அதிகம் உள்ளதாக இந்த புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசு வேலைவாய்ப்பின்மை தரவுகளை வெளியிடாது என்றாலும், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிடும் தரவுகள் பரவலாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
விழுப்புரத்தில் 2 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்ட இரண்டாம் நிலை பெண் காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த காவலர்கள் இருவரும் விழுப்புரம் காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், காவலர் பயிற்சி பள்ளியில் இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பதை அறிந்ததும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவலர்கள் இருவரையும் தற்போது சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்பிலிருந்த பெண் காவலர்களை தற்போது தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் இருந்த குடியுரிப்பு பகுதிகளில் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 160க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடலூரில் 28 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 257ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.