You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் 102 வயது மூதாட்டி குணமடைந்தார்

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 12 பேரில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் எஞ்சி இருந்த திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து மருத்துவமணையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார்.

    இதைதொடர்ந்து கொரோனா தொற்று பதிப்பு இல்லாத மாவட்டமாக மாறுகிறது சிவகங்கை.

  2. ஆஃப்கன் ஊரடங்கு:உணவு விலை அதிகரிப்பு

    ஆப்கானிஸ்தானில் ஏழு மில்லியன் குழந்தைகள் உணவு இன்றி பசியால் வாடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என `சேவ் தி சில்ரன்` அமைப்பின் செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சர்வதேச சமூகம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பசியால் நோய்யுற்று உயிரிழப்புகளும் ஏற்படும் என சேவ் தி சில்ரன் தொண்டு நிறுவனம் குறிப்பிடுகிறது.

    கொரோனா தொற்று பரவிவரும் இந்த நேரத்தில் குழந்தைகள் நல்ல உணவு உட்கொண்டு தேவையான எதிர்ப்பு சக்தியுடன் இருக்கவேண்டிய இந்த சூழ்நிலையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் அங்கு முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் வேலைவாய்ப்பையும் இழந்துள்ளனர்.

    இதனால் விலை அதிகரித்த உணவை வாங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.

    இந்த மாத தொடக்கத்தில் ஆஃப்கனில் பணிபுரியும் டஜன் கணக்கான தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  3. கொரோனா வைரஸ் மருந்திற்கான ஆய்வு: இந்தியா எப்படி பெரிய பங்கு வகிக்கிறது தெரியுமா?

    கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்க அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து பணியாற்றி வருவதாக நேற்று இரவு, அமெரிக்க உள்துறை அமைச்சரான மைக் பாம்பே கூறினார்.

    கொரோனா வைரஸை சமாளிக்க இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ தெரிவித்திருக்கிறார்.

    இது முற்றிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலான தகவல் இல்லை.

    ஏன் தெரியுமா?

    கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான கூட்டு திட்டத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. .

    டெங்கு, இன்புளூவென்சா, காசநோய் குடலை பதம் பார்க்கும் நோய்கள், ஆகியவற்றை தடுப்பதற்கு இவர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். டெங்குவிற்கான தடுப்பூசிகளை பரிசோதனை செய்யும் திட்டமும் இருக்கிறது.

    ஜெனரிக் மருந்துகளையும், நோய்களைக் குணப்படுத்தும் பல முக்கிய மருந்துகளையும் தயாரிக்கும் பெரிய உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் நோய்களுக்கான மருந்துகளை உருவாக்க ஆறு பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும், போலியோ, நிமோனியா, ரோட்டா வைரஸ், ருபெல்லா என பல நோய்களுக்கான மருந்துகளைத் தயாரித்து வரும் பல நிறுவனங்களையும் கொண்டுள்ள நாடு.

    ஜெனரிக் மருந்துகளையும், தடுப்பூசிகளையும் தயாரிப்பதில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா விளங்குகிறது. உலகளவில் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி தயாரிக்கும் அரை டஜன் பெரு நிறுவனங்கள் இந்தியாவில்தான் உள்ளன. போலியோ, மெனிஞ்சிடிஸ், நிம்மோனியா, ரோட்டா வைரஸ், பிசிஜி, தட்டம்மை, மம்ஸ் எனப்படும் பொண்ணுக்கு வீங்கி, ரூபெல்லா மற்றும் பிற நோய்களுக்கான தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

    கோவிட்- 19 நோய்க்கான மருந்தை உருவாக்க, இந்தியாவில் தற்போது ஆறு பெரும் நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. இதில் ஒரு நிறுவனம் தான், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா. அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை தயாரித்து உலகளவில் விற்பனை செய்வதில் இந்த நிறுவனமே மிகப்பெரியதாகும்.

    தற்போது கோவிட் 19 வைரசுக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகளில் அரை டஜன் இந்திய நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் ஒரு நிறுவனம் தான், உலகத்தின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா. உலகத்திலேயே தடுப்பூசி மருந்துகளை அதிகளவு தயாரிக்கும் நிறுவனமாகவும் விற்கும் நிறுவனமாகவும் விளங்கும் இது விளங்குகிறது.

    53ஆண்டுகள்..1.5 பில்லியன் மருந்துகள்

    தொடங்கப்பட்டு 53ஆண்டுகள் ஆகியுள்ள இந்த நிறுவனம், ஆண்டுதோறும் 1.5 பில்லியன் மருந்துகளை தயாரிக்கிறது.

    53 வருட பழமையான இந்நிறுவனம் ஆண்டுக்கு 1.5 பில்லியன் டோஸ் மருந்துகளை தயாரிக்கிறது.

    இதன் பிரதான இரண்டு ஆலைகள் பூனேவின் மேற்குப்பகுதியில் உள்ளன. மேலும், இந்நிறுவனத்திற்கு, செக் குடியரசு மற்றும் நெதர்லாந்தில் இரண்டு சிறிய ஆலைகளும் உள்ளன. இந்த நிறுவனத்தில் மொத்தமாக ஏழாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

    இந்த நிறுவனம், சுமார் 20 வகையான தடுப்பு மருந்துகளை 165 நாடுகளுக்கு விநியோகிக்கிறது. சுமார் 80% தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    அதில் சில மாத்திரைகள், ஒரு மாத்திரை 35 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. உலகளவில் பார்க்கும்போது, இது மிகவும் மலிவான விலை என கூற முடியும்.

    ஒரு டோஸ் தடுப்பூசி மருந்தை சராசரியாக இந்திய மதிப்பில் சுமார் 35 ரூபாய்க்கு விற்கிறது. இதன்மூலம் உலகிலேயே மலிவான விலைக்கு தடுப்பூசிகளை விற்கும் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    தற்போது, கோடாஜெனிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, ஒரு 'Live Attenuated' மருந்தைத் தயாரிக்க இந்நிறுவனம் முயன்று வருகிறது.

    இத்தகைய மருந்துகள் வைரஸ் மற்றும் பாக்டேரியாவிற்கு எதிராக போராடக்கூடியவை. இந்த மருந்துகளில், நோய் வைரஸ் மிகவும் வலுவிழந்த நிலையிலோ அல்லது அதன் தாக்கம் ஏற்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும். (அதனால், இந்த மருந்தை பயன்படுத்தும்போது, மேலும் நோய் பரவாமல் அல்லது மிகவும் குறைந்த தாக்கத்தைக் கொண்டு பரவும் வகையில் இருக்கும்.)இத்தகைய மருந்தைத் தயாரிக்க, உலகளவில் 80க்கும் அதிகமான நிறுவனங்கள் தற்போது முயன்று வருகின்றன.

    உலகம் முழுவதும் 80-க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்தவகை தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. எந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கிறார்களோ அதே வைரஸை ஆய்வகத்தில் வலுவிழக்கச்செய்து, ஆனால் வைரஸ் உயிருடன் இருக்கும்விதமாக உருவாக்கப்படுவதே 'Live Attenuated' வகை தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ்களின் தீங்கு விளைவிக்கும் பகுதிகள் நீக்கப்பட்டிருக்கும் என்பதால் இந்த தடுப்பூசி மருந்து உடலில் செலுத்தப்பட்ட ஒருவருக்கு அந்த குறிப்பிட்ட வைரஸால் பாதிப்புகள் எதுவும் வராது அல்லது மிக மிக குறைவான பாதிப்புகள் ஏற்படலாம். தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

    "இந்த மருந்தை எலிகள் முதலான விலங்குகள் மீது ஏப்ரல் மாதமே சோதிக்க திட்டமிட்டுள்ளோம். செப்டம்பர் மாதத்தில், மனிதர்கள் மீதான பரிசோதனையைத் தொடங்கி விடலாம் என நினைக்கிறேன்,"என்கிறார் அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அதர் பூனாவாலா.

    ஐக்கிய ராஜ்ஜிய அரசால் நிதியுதவி அளிக்கப்பட்டு, ஆக்ஸ்போட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள மருந்தையும் அதிக அளவில் உற்பத்தி செய்ய இந்நிறுவனமே, அந்த பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது.மூலக்கூறில் மாற்றங்கள் செய்யப்பட்ட மனிதக்குரங்கின் வைரஸ் இந்த புதிய மருந்தின் அடித்தளமாக அமையும். வரும் வியாழக்கிழமை, இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதிக்கும் ஆய்வு தொடங்குகிறது. அனைத்து சரியாக நடந்தால், வரும் செப்டம்பர் மாதத்தில், இந்த மருந்தின் 10 லட்சம் டோஸ்களை உருவாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

    பிரிட்டனில் அரசின் ஆதரவோடு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், அதனை பெருமளவு உற்பத்தி செய்வதற்கு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்துடன் கூட்டு சேர்ந்திருந்திறது பூனாவாலாவின் நிறுவனம். கடந்த வாரம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மனிதர்கள் மீது இந்த தடுப்பூசியை பரிசோதிக்கத் துவங்கியிருக்கிறது. எல்லாம் சரியாக நடந்தால் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரு மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை தயாரிக்கமுடியும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

    பெருந்தொற்றிலிரிந்து நாம் முழுமையாக வெளியேற

    "இந்த பெருந்தொற்றிலிருந்து நாம் முழுமையாக வெளியேற, இந்த ஊரடங்கிலிருந்து வெளியேற நமக்கு இந்த மருந்தின் மேலும் பல லட்சக்கணக்கான டோஸ்கள் தேவை என்பது மிகத்தெளியாக தெரிகிறது," என்று பிபிசியின் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஜேம்ஸ் காலங்கரிடம் கூறினார் பேராசிரியர் ஏட்ரின் ஹில்.

    "இந்த பெருந்தொற்றிலிருந்து நாம் முழுமையாக வெளியேற, முடக்கல நிலையில் இருந்து உலகம் மீண்டெழவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்கு தடுப்பூசி தேவைப்படக்கூடும் என்பது தெளிவாக தெரிகிறது என ஆக்ஸ்போர்டு பல்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட்டை நடத்திவரும் பேராசிரியர் அட்ரியன் ஹில் பிபிசியிடம் தெரிவித்தார்.

    இவர், ஆக்ஸ்போர்டில் ஜென்னர் இன்ஸ்டிட்யூட்டை நடத்தி வருகிறார். இந்த கண்டுபிடிப்பே, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு ஆரம்ப புள்ளியை அளித்தது. பூனாவாலாவின் நிறுவனத்தில் மட்டும், 400-500 மில்லியன் அதிக மருந்துகள் தயாரிப்பதற்கான வசதி இருக்கிறது."எங்களிடம் அதற்கான வசதி இருப்பதால், இதில் முதலீடு செய்தோம்." என்கிறார் அவர்.

    இதனால்தான் இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் முந்துகிறார்கள். பூனாவாலாவின் நிறுவனம் மட்டுமே 400 முதல் 500 மில்லியன் டோஸ் தயாரிக்கும் வல்லமை பெற்றுள்ளது. ''எங்களுக்கு அதிக அளவு தயாரிக்கும் திறன் உள்ளது. அதனால்தான் முதலீடு செய்திருக்கிறோம்'' என்கிறார் பூனாவாலா.

    இது மட்டுமல்ல, ஐதராபாத்தில் இயங்கும் பாரத் பியோடெக் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள ஃபுளூஜென் நிறுவனம் மற்றும், விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, அவர்கள் தயாரித்து வரும் மருந்தை 300 மில்லியன் டோஸ்கள் தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்தியாவின் இந்த நிறுவனம் மட்டுமல்ல, ஐதராபாத்தில் இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் ஃபுளூஜென் நிறுவனம் மற்றும், விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சர்வதேச அளவில் 300 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்தை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    சைடஸ் காடிலியா இரண்டு மருந்துகளைத் தயாரிக்க ஆய்வு செய்து வருகிறது. அதேபோல, பையோலாஜிக்கல் ஈ, இந்தியன் இம்முனோலோஜிஸ்ட், மைனவாக்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களுக்கான மருந்துகளில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    குஜராத்தின் ஜய்டஸ் காடிலா நிறுவனம் இரு தடுப்பூசி பரிசோதனைகளை தயாரிக்கும் பணியில் உள்ளது. ஐதராபாத்தின் Biological E, Indian Immunologicals நிறுவனங்கள் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மின்வாக்ஸ் நிறுவனங்கள் ஒரு தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    "இந்த மருந்தைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்பவர்களையும், அவற்றை தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்குமே இதற்கான பாராட்டுகள் போய் சேரவேண்டும். அந்த நிறுவனங்கள் தரமான முறையில், அதிக மருந்துகளைத் தயாரிக்க முதலீடு செய்கின்றன. இந்த நிறுவனங்களின் தலைவர்கள், தங்களின் வியாபாரத்தைச் சிறப்பாக தொடர்ந்து நடத்தும் அதே வேளையில், உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது, மக்கள் அனைவருக்குமே நல்ல ஒரு எடுத்துக்காட்டு" என்கிறார் உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்.

    தரமான முறையில் தயாரிக்கவும், மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யவும் முதலீடு செய்திருக்கும் தொழில்முனைவோர் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கே பாராட்டுகள் சென்று சேர வேண்டும் என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன்.

    இருப்பினும், விரைவில் கோவிட்-19 தொற்றுக்கான மருந்து சந்தைக்கு வந்து சேரும் என மக்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று துறை வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

    லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் உலக சுகாதாரம் துறையின் பேராசிரியரான டேவிட் நபரோ, 'வரும் சில காலங்களுக்கு' கொரோனாவின் அச்சுறுத்தலைச் சமாளித்தபடியே மக்கள் வாழ்ந்தாகவேண்டும், ஏனென்றால், நோய்த்தொற்றை சரிசெய்யக்கூடிய மருந்து வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் இதுவரை இல்லை என்று கூறுகிறார்.

    வெர்மாண்ட் மெடிக்கல் செண்டர் பல்கலைக்கழகத்தில், ஆய்வாளராக உள்ள டிம் லஹே, 'கொரோனாவிற்காக தயாரிக்கப்படும் மருந்து என்பது, நம் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படவும் செயல்படலாம்' என்ற காரணமும் நமக்கு கவலை அளிக்கக்கூடியதாக அமையலாம் என எச்சரிக்கிறார்.

    உலகளவில் முப்பது லட்சம் மக்களை பாதித்துள்ள கொரோனால் இதுவரை 2.06 லட்சம் மக்கள் மரணமடைந்துள்ளனர். மக்களுக்குப் பாதுகாப்பான ஒரு மருந்து கண்டறியப்பட்டு, அது மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவது என்பதெல்லாம், அதிக காலம் எடுத்துக்கொள்ளும் ஒரு செயல். காரணம், அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை ரசாயன ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும் சோதனை செய்தே மக்களின் பயன்பாட்டிற்கு சந்தையில் விடமுடியும்.

    "ஆனால், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளில், மிகவும் பாதுகாப்பான, நன்கு செயல்படக்கூடிய மருந்தை நிச்சயமாக உருவாக்குவோம்" என்கிறார் பூனாவாலா.

    - சௌதிக் பிஸ்வாஸ், பிபிசி செய்தியாளர்

  4. தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பாக விவாதிக்க தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

  5. அமெரிக்காவில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் எபோலா மருந்து.

    எபோலா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ரெமிடிசிவிர் மருந்தை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தற்போது அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு மட்டும் எபோலா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு அளித்து சோதனை செய்து பார்த்ததில், வைரஸ் பாதிப்பு குறுகிய காலத்திற்குள் குணமடைய உதவுவது தெரியவந்ததாக மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். கீலீட் மருந்து நிறுவனம் தயாரித்த எபோலா மருந்தை, கொரோனா வைரஸ் நோயை முழுமையாக ஒழிக்கும் மருந்தாக கருதவேண்டாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ரெமிடிசிவிர் மருந்து உதவும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மருத்துவ அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

  6. கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு

    ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பிபிசி தமிழுக்கு பேசிய போது உறுதிப்படுத்தினார்.

    பாதிக்கப்பட்ட நபர் உடன் பயணம் செய்த மற்ற மூன்று நபர்களுக்கு நோய் தொற்று இல்லை என்ற போதும் அவர்கள் அடுத்துவரும் 28 நாட்களுக்கு கண்காணிக்க படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    இதனால் பச்சை மண்டலம் என அறிவிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  7. ''கோவிட் 19 போர்வீரர்கள்'' - இந்திய ராணுவம் பெருமிதம்

    “அத்தியாவசிய தேவைகளுக்காக பணியாற்றுபவர்களை கோவிட் 19 போர்வீரர்கள் என இந்திய ராணுவம் குறிப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது, ” என பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  8. கொரோனா வைரஸ் பயம்: சுரங்கம் தோண்டி தப்ப முயன்ற சிறைக் கைதிகள்

  9. கொரோனா வைரஸ்: பஞ்சத்தின் பிடியில் இருக்கும் 5 நாடுகள்

  10. ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

    கிழக்கு டெல்லியின் முகாமை சேர்ந்த 68 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..இதனை அடுத்து அந்த பட்டாலியனை சேர்ந்த 122 ராணுவ வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..

    ஏற்கனவே துணை ராணுவ படையை சேர்ந்த 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஒருவர் குணமடைந்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிடுகிறது.

  11. கொரோனா வைரஸ்: காதல் உன்மதத்தை கடப்பது எப்படி?, கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது

    கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர். இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்? எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா : இந்திய நிலவரம் என்ன?

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2293 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 71 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.

    இந்தியாவில் சனிக்கிழமை காலை 8 மணிவரை 37336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26167 பேர் சிகிச்சை மேற்கொள்கின்றனர். 9950 பேர் குணமடைந்துள்ளனர். 1218 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    இந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 13,867 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து குஜராத் மாநிலத்தில் 5,692 பேரும் தலைநகரான டெல்லியில் 4966 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ராணுவப்படை வீரர்களில் மேலும் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்தும் வீரர்களும் கிழக்கு டெல்லியில் உள்ள படையின் முகாமில் சிகிச்சை பெற்று கொண்டுள்ளனர். இதுவரை இந்த ராணுவப்படையில் இருக்கும் 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிபிஆர்எஃப் வீரர்கள் 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

  13. ஊரடங்கை தளர்த்தும் ஆஸ்திரேலியா

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட சமூக முடக்கத்தை உத்தேசித்த காலகட்டத்திற்கு முன்பே முடிவுக்குக் கொண்டு வர திட்டமிடுவதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.

    கடும் கட்டுப்பாடுகள் விதித்ததன் காரணமாக ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்திருப்பதாகக் கூறுகிறார்கள் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள்.

    மே 11 ஆம் தேதி முதல் சில தளர்வுகளை கொண்டு வரலாம் என முன்பு திட்டமிடப்பட்டிருந்தது, இப்போது அது மே 8ஆக மாற்றப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணங்களில் முன்பே சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பூங்காக்கள், நீச்சல் குளம் ஆகியவை அங்கு திறக்கப்பட்டுள்ளன.

    ஆஸ்திரேலியாவில் 6778 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அண்மைக்காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை சராசரியாக 20 ஆக உள்ளது.

  14. கொரோனா - இதுவரை நடந்த முக்கிய செய்திகள், நேற்று சர்வதேச அளவில் கொரோனா தொடர்பாக நடந்த முக்கிய செய்திகள்

    கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு “உயிர் காக்கும் தடுப்பூசிகள்” கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு, மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று 203 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோவிட்- 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆகியுள்ளது.

    இந்தியாவில் புதிதாக 1993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இன்று மாலை 4 மணியளவில் இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 35,043 ஆக உயர்ந்துள்ளது.

    ஜப்பானில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

    அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    ரஷ்ய பிரதமர் மிஷுஷ்டின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர் புதினுடன் வீடியோ கால் மூலம் பேசிய மிஷுஷ்டின் இந்த தகவலை உறுதி செய்தார்.

    கொரோனா வைரஸின் உச்சத்தை பிரிட்டன் கடந்து விட்டது என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    தெற்காசிய நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கை மாணவர்களை மீட்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக கடந்த 10 நாட்களில் 1065 பேர் இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வரும் மே 4-ஆம் தேதியிலிருந்து பெரும்பாலான தொழில் நிறுவனங்களை திறக்க அனுமதிக்க உள்ளதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  15. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகம் முதல் அமெரிக்கா வரை உலகின் அனைத்து பகுதிகளிலும் நடக்கும் செய்திகளை ஒளி, ஒலி, வரைகலை மற்றும் எழுத்து வடிவத்தில் இந்த பக்கத்தில் பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து மு.நியாஸ் அகமதுவும், பா. காயத்ரி அகல்யாவும் தொகுத்து வழங்குகிறோம்.

    இந்நாள் நல்ல நாளாக அனைவருக்கும் அமையட்டும்.