You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் 102 வயது மூதாட்டி குணமடைந்தார்

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் 37 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று பாதிப்பு

    இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதில் 26,535 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    10,018 பேர் குணமடைந்துள்ளனர். 1,223 பேர் உயிரிழந்துள்ளனர்.

  2. கொரோனாவால் மன அழுத்தமா? நீங்கள் நிம்மதியாக தூங்க சில டிப்ஸ் இதோ

    கொரோனா தொற்று காரணமாக நம் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நம் தினசரி வேலைகளிலும் பல்வேறு மாற்றங்கள். நாள் முழுக்க வீட்டிலேயே இருப்பதால் இரவு சரியாக தூங்க முடியவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.

    ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்

  3. உணவு இல்லை - சென்னையில் கூடிய வெளிமாநில தொழிலாளர்கள்

    கொரோனா வைரஸ் ஊரடங்கால் தங்கள் சொந்ந ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பல வெளிமாநில தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தங்களை சொந்த ஊர் அனுப்ப அரசு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி, வெளிமாநில தொழிலாளர்கள் பலர், சென்னை முகப்பேரில் இன்று காலை கூடினர்.

    தங்களுக்கு முறையான கூலி, உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

    நிவாரண உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு திரும்பினர்

  4. இந்தியாவில் மே 4 முதல் மீண்டும் ஊரடங்கு - சில தகவல்கள்

    இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதாக இந்திய அரசு நேற்று அறிவித்தது. அது குறித்த 20 முக்கிய தகவல்கள் இதோ

    • கோவிட்-19 தொற்று மிதமாக மற்றும் குறைவாக உள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை குறியீட்டு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பச்சை மண்டல பகுதிகளில் 50% பயணிகளுடன் பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
    • ஆரஞ்சு மண்டல பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் இருவர் பயணிக்கலாம். சிவப்பு மண்டலங்களில் ஓட்டுநர் மற்றும் ஒருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
    • சிவப்பு மண்டலங்களில் பேருந்து, ஆட்டோ மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க அனுமதி இல்லை. இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே சிவப்பு மண்டலத்தில் பயணிக்க முடியும்.
  5. தமிழகத்தில் மே 17வரை ஊரடங்கு நீடிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

    கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு நீடித்த ஊரடங்கை வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழக அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தனியாகவும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கு தனியாகவும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

  6. ரஷ்ய அமைச்சருக்கும் கொரோனா தொற்று

    ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அங்கு மற்றும் ஒரு அமைச்சருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    ரஷ்யாவின் கட்டுமானத்துறை அமைச்சர் விளாதிமிர் யகுஷெவ், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அத்துறையில் உள்ள துணை அதிகாரி ஒருவரும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    கடந்த வியாழக்கிழமைதான் ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் பேர் கொரோனாவால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  7. அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நரேந்திர மோதி ஆலோசானை

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளதால் உண்டாகியுள்ள பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரண்டாவதாக ஒரு பொருளாதார நிதியுதவி தொகுப்பை அறிவிப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சக அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசித்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

    விமானப் போக்குவரத்து, தொழிலாளர் நலத்துறை, எரிசக்தி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுடன் வெள்ளியன்று ஏற்கனவே பிரதமர் ஆலோசனை நடத்தியிருந்தார். ஊரடங்கால் உண்டாகியுள்ள பொருளாதார பாதிப்புகளை சரி செய்ய 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி தொகுப்பு ஒன்றை ஏற்கனவே மார்ச் மாதம் இந்திய அரசு அறிவித்திருந்தது.

  8. இந்தியாவில் மே 17 வரை விமான சேவைக்கு தடை

    இந்தியாவில் விமான சேவை எப்போது தொடங்கும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

    இந்நிலையில், மே 17ஆம் தேதி வரை உள்ளூர் மற்றும் வெளியூருக்கான விமான சேவைகளை இயக்க வேண்டாம் என அனைத்து தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு பொது விமான போக்குவரத்து துறை உத்தவிட்டுள்ளது.

  9. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு அழைப்பு

    50 வயதுக்குட்பட்ட விருப்பம் தெரிவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை மருத்துவம் சாராத கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

  10. கொரோனா வைரஸ்: சமீபத்திய நிலவரங்கள்

    வணக்கம். நான் அபர்ணா ராமமூர்த்தி. தற்போதுதான் நீங்கள் இந்த நேரலையில் இணைகிறீர்கள் என்றால், கடந்த சில மணி நேரங்களில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறேன்.

    பொது மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை இந்திய அரசு கட்டயமாக்கி உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்ட செயலி இது. நீங்கள் ஒருவருடன் தொடர்பில் இருந்து, அந்த நபருக்கு சில நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தால், அதனை ஆரோக்கிய சேது செயலி உங்களுக்கு தெரியப்படுத்தும்.

    இந்தியாவில் இதுவரை 37,336 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,223 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அட்டவணையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது. வரும் செவ்வாய் கிழமையில் இருந்து பாரம்பரிய சீன மருந்துவ பணியாள்ரகள் செய்லபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முடி திருத்தக் கடைகள், போன்றவை மே 12ஆம் தேதியில் இருந்து செயல்படும்.

    கடந்த வெள்ளிக்கிழமை அன்று 102 வயதான யப் லே ஹாங் என்ற பெண்மணி கொரோனா தொற்றில் இருந்து அங்கு மீண்டு வந்துள்ளார். சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் 17,500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டாலும், 16 மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது.

    தாய்லாந்தில் புதிதாக ஆறு பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. கொரோனாவால் அங்கு இதுவரை 54 பேர் பலியாகி உள்ளனர்.

  11. பிளாஸ்மா சிகிச்சை வெற்றி பெற்றதா ?

    பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? அது கொரோனா வைரசுக்கான தீர்வாக அமைவது சாத்தியமா என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.

  12. ஸ்பெயினில் மக்கள் பொது வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி

    கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் பல வாரங்களுக்கு பிறகு முடக்க நிலை பகுதியளவு தளர்த்தப்பட்டதை அடுத்து மக்களை சாலைகளில் காண முடிகிறது.

    கடந்த மார்ச் மாதம் முதல் ஸ்பெயினில் அமலில் இருந்து வந்த முடக்க நிலை கடந்த வாரம் பகுதியளவு தளர்த்தப்பட்டதன் மூலம் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து பொது வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  13. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடக்குமா?

    இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றின் பரவலால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்திருந்தது. எனினும், மார்ச் மாதம் 11ஆம் தேதி இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.

    இதையடுத்து, வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னணியில் மார்ச் 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டது.

  14. தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கு

    கடலூர், திருவாரூர், அரியலூர், தஞ்சையை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    முழு ஊரடங்கு காலத்தில் மருந்து கடைகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊழியர்களை தவிர வேறு யாரும் வெளியே வர அனுமதியில்லை. மளிகை கடை, காய்கறி கடை, பேக்கரி உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கவும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

  15. கொரோனா வைரஸ்ள் உலகமே இந்தியாவை நம்பி இருக்கிறதா?

  16. தயார் நிலையில் 14 போர் கப்பல்கள்

    வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய குடிமக்களைக் காப்பாற்ற 14 போர் கப்பல்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய கப்பல் படை அதிகாரியான ஜி. அஷோக் குமார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    இந்த 14 கப்பல்களில் 4 மேற்கு கப்பற்படை தளத்திலும் 4 கப்பல்கள் கிழக்கு தளத்திலும் 3 கிழக்கு தளத்திலும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

    மேலும் மும்பை ஐஎன்எஸ் ஆங்ரேவில் 38 கப்பல்படை வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் குணமடைந்துள்ளனர். 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  17. விமான நிலையங்களில் சமூக விலகல் சாத்தியமா?

    விமான நிலையங்களில் சமூக விலகலை கடைப்பிடிப்பது இயலாத காரியமென லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைவர் கூறி உள்ளார்.

    எந்த வகையான பொது போக்குவரத்திலும் சமூக விலகல் கடைப்பிடிக்க முடியாது, அதில் விமானப் போக்குவரத்தும் அடங்கும் என்கிறார் ஹீத்ரோ விமான நிலையத் தலைவர் ஜான் ஹோலன் கே.

    ஆனால் விமான நிலையத்தில் ஸ்கீரினிங் கட்டாயம் செய்ய வேண்டும் மற்றும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    விமான நிலையத்தில் பணிபுரிபவர்களின்பாதுகாப்பிற்காக சமூக விலகல் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஜி.எம்.பி சங்கம் கூறியுள்ளது.

  18. டொனால்ட் டிரம்ப்: சீனாவுடன் சண்டையிட அமெரிக்காவுக்கு இது சரியான நேரமா?

  19. கொரோனா வைரஸ்: ஊரடங்கு நிலைக்கு பிந்தைய மனக்கலக்கத்தை எதிர்கொள்வது எப்படி?

  20. வெளிமாநில தொழிலாளார்களுடன் புறப்பட்ட சிறப்பு ரயில்

    வெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்காக ’ஷார்மிக் சிறப்பு ரயில்’ என்னும் ரயில் அனுப்ப இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

    மாநிலங்களின் தேவைகளை பொறுத்து ரயில் அனுப்பப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. தற்போது நாசிகிலிருந்து லக்னோவிற்கு 839 வெளிமாநில தொழிலாளார்களும் ஷார்மிக் சிறப்பு ரயில் கிளம்பியுள்ளது.