சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நடக்கும் முக்கிய தகவல்களை இந்தப் பக்கத்தில் பிபிசி செய்தியாளர்களான சிவக்குமாரும், நியாஸ் அகமதுவும் தொகுத்து வழங்குகிறோம்.
தமிழகம் முதல் அமெரிக்கா வரை நடக்கும் அனைத்தும் தகவல்களும் இங்கு ஒளி, ஒலி, எழுத்து மற்றும் வரைகலை ஆகிய வடிவங்களில் தொகுத்திருக்கிறோம்.
இந்நாள் நன்னாள் ஆகட்டும்.
நேற்று நடந்த சில முக்கிய தகவல்கள்:
போர்ச்சுகல் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை மே இரண்டாம் தேதி முதல் அன்று முடிவுக்கு வரும் என்று அந்நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டிசோசா அறிவித்துள்ளார். 24 ஆயிரத்து 322 பேர் கோவிட்- 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள போர்ச்சுக்கல் நாட்டில் 948 பேர் உயிரிழந்துள்ளனர்;
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 அதிகரித்து 38,416 ஆக உள்ளது. இதுவரை அங்கு 4,566 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா: மே நான்காம் தேதி முதல் தங்கள் நிறுவனத்தின் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அமெரிக்காவின் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்க விமான சேவை நிறுவனம் ஒன்று இவ்வாறு முகக் கவசங்களை கட்டாயமாக்குவது இதுவே முதல் முறை.
ரஷ்யாவில் புதிதாக 1411 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 93, 558 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு கோவிட்- 19 தொற்றின் காரணமாக 867 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிங்கப்பூரில் நேற்று புதிதாக 528 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 14,951 ஆக அதிகரித்துள்ளது.
மலேசியாவில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 75 நோயாளிகள் குணமடைந்திருப்பதாக நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
தமிழ்நாடு:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, செறுவல்லூர், புலியூர்சாலை, பளுகல் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில்சாலையின் ஒரு பகுதி தமிழக பகுதியாகவும் மற்ற பகுதி கேரளப் பகுதியாகவும் உள்ளது.கேரளாவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் தமிழக போலீசார் திடீரென தமிழகத்திலிருந்து கேரளாவை இணைக்கும் கிராமப்புறச் சாலைளை தடுப்பு வேலிகள் அமைத்ததுடன் அந்த வழிகளையும் மண் கொட்டி குவித்து சாலைகளை முற்றிலுமாக அடைத்துள்ளனர்.