நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல நாடுகள் முடங்கியுள்ள சூழலில், நியூஸிலாந்து, இத்தாலி, அமெரிக்கா என பல நாடுகளில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதேவேளை, இந்தியாவில் மே 3-க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா?
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
போர்ச்சுகல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை மே இரண்டாம் தேதி முதல் அன்று முடிவுக்கு வரும் என்று அந்நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டிசோசா அறிவித்துள்ளார்.
எனினும் இது ஒருநாள் வைரஸ் தொற்று பரவுவதற்கான முடிவு கிடையாது என்று எச்சரித்துள்ள அவர் பொருளாதார நடவடிக்கைகள் மெதுவாக மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
24 ஆயிரத்து 322 பேர் கோவிட்- 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள போர்ச்சுக்கல் நாட்டில் 948 பேர் உயிரிழந்துள்ளனர்;
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நெதர்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 அதிகரித்து 38,416 ஆக உள்ளது. இதுவரை அங்கு 4,566 பேர் உயிரிழந்துள்ளனர்.
மே நான்காம் தேதி முதல் தங்கள் நிறுவனத்தின் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அமெரிக்காவின் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க விமான சேவை நிறுவனம் ஒன்று இவ்வாறு முகக் கவசங்களை கட்டாயமாக்குவது இதுவே முதல் முறை.
ரஷ்யாவில் புதிதாக 1411 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 93, 558 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு கோவிட்- 19 தொற்றின் காரணமாக 867 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 528 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 14,951 ஆக அதிகரித்துள்ளது.
இன்று நண்பகல் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு இத்தகவலை வெளியிட்டது. இன்று பதிவான சம்பவங்களில் 8 பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் என்றும் மற்ற அனைவரும் தங்கு விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் அந்த அமைச்சு உறுதிபடுத்தியது.
சிங்கப்பூரில் சற்றேறக்குறைய 3,23,000 அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 12,183 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 3.77 விழுக்காடாகும்.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,095 என்றும், 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள சுகதார அமைச்சு, வைரஸ் தொற்று இருந்த போதிலும் வேறு காரணங்களால் 4 நோயாளிகள் இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் வைரஸ் தொற்றுப் பரிசோதனையை சிங்கப்பூர் அரசு அதிகரித்துள்ளது. இதுவரை 21 ஆயிரம் தொழிலாளர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 75 நோயாளிகள் குணமடைந்திருப்பதாக நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,851, நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,032.
தற்போது 1,719 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 36 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 69 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் வாரத்தில் அல்லது மே மாத மத்தியில் மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்குக் குறையக்கூடும் என டாக்டர் நூர் ஹிஷாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் மக்கள் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முழுமையாகப் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாம் இவ்வாறு குறிப்பிடுவதாக அவர் கூறினார்.
"மலேசியா தற்போது கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்திலிருந்து மீண்டுவரும் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை விரைவில் ஒற்றை இலக்கத்துக்குக் குறையக்கூடும். பொதுமக்களின் ஒத்துழைப்போடு பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது," என்றார் நூர் ஹிஷாம்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, செறுவல்லூர், புலியூர்சாலை, பளுகல் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில்சாலையின் ஒரு பகுதி தமிழக பகுதியாகவும் மற்ற பகுதி கேரளப் பகுதியாகவும் உள்ளது.
கேரளாவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் தமிழக போலீசார் திடீரென தமிழகத்திலிருந்து கேரளாவை இணைக்கும் கிராமப்புறச் சாலைளை தடுப்பு வேலிகள் அமைத்ததுடன் அந்த வழிகளையும் மண் கொட்டி குவித்து சாலைகளை முற்றிலுமாக அடைத்துள்ளனர்.
இதனால் அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட செல்ல முடியாமல் தமிழகப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழக அரசுதடுப்புகளை நீக்கி உரிய கண்காணிப்புடன் மக்களை அத்தியாவசிய பொருட்கள் வாங்க கேரளப் பகுதிக்கு அனுமதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிரான்சில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஒரு மாத காலத்தில் 62 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் எட்வார்டு ஃபிலிப் தெரிவித்துள்ளார். மே 11ம் தேதி முதல் ஊரடங்கு விதிகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்துவதற்கான திட்டத்தை ஃபிலிப் இப்போது வகுத்து வருகிறார்.
இந்தத் திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பின்னர் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.
இதுவரை சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 842 பேர் கோவிட்- 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டில் 23 ஆயிரத்து 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உடையவர்களின் எண்ணிக்கை 2058ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 809ஆக இருந்த நிலையில், இன்று 902ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பவர்களில் 80 பேர் ஆண்கள். 41 பேர் பெண்கள்.
கொரோனோவிலிருந்து குணமடைந்து 27 பேர் வெளியேறியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,128ஆக உயர்ந்துள்ளது. 68 வயது நபர் ஒருவர் இன்று தனியார் மருத்துவமனையில் இந்நோயால் உயிரிழந்துள்ளார். ஆகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை25ஆக உயர்ந்திருக்கிறது.
இன்று நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 12 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கள்ளக்குறிச்சியில் 3 பேரும் நாமக்கல் மாவட்டத்தில் இருவரும் காஞ்சிபுரத்தில் ஒருவரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நோயாளிகள் யாரும் இல்லை.
ஒரு தருணத்தில் பெரும் எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளைக் கொண்டிருந்த ஈரோடு மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவந்த அனைவரும் குணமடைந்த நிலையில், அம்மாவட்டம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் 16ஆம் தேதியன்று முதன்முதலாக கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அப்போதிலிருந்து அந்த மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்தது.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 70ஐத் தொட்டது.இருந்தபோதும் ஈரோட்டிலிருந்த நோயாளிகள் தொடர்ந்து குணமடைந்துவந்தனர். இந்த 70 பேரில் 60 வயது முதியவர் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.
இந்த நோயாளிகள் அனைவருமே பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தனர். இவர்கள் படிப்படியாக குணமடைந்து வெளியேறிய நிலையில், இன்று இறுதியாக நான்கு பேர் குணமடைந்து வெளியேறினர்.
ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக இந்த மாவட்டத்தில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பதால், அங்கு எந்த கொரோனா நோயாளியும் தற்போது இல்லை.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் ஒடிஷா, மங்களூரூ மற்றும் ஹைதராபாத்தில் இருந்து 500கிமீ முதல் 800 கி.மீ வரை தங்களது சொந்த ஊரான யானம் பகுதிக்கு நடந்தே வந்த எட்டு கூலித் தொழிலாளிகளை ஆந்திர-புதுச்சேரி எல்லையில் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சரும், யானம் பகுதி சட்டமன்ற உறுப்பினருமான மல்லாடி கிருஷ்ணாராவ், எல்லையில் இருப்பவர்களை 24 மணி நேரத்திற்குள் உள்ளே அனுமதிக்க மறுத்தால் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, அமைச்சர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.ஒடிஷா, மங்களூரூ மற்றும் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்த எட்டு தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் முடக்கப்பட்ட காரணத்தால் சொந்த ஊருக்குத் திரும்ப, 500-இல் இருந்து 800 கிமீ தூரம் வரை 15 நாட்களுக்கு மேலாக நடந்தே ஆந்திர மாநில எல்லையால் சூழப்பட்டுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட யானம் பகுதிக்கு வந்துள்ளனர்.
ஆனால் யானம் பிராந்திய நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் எல்லைப் பகுதியிலே தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு உள்ளே வர முடியாமலும், திரும்பி செல்ல முடியாமலும் கடந்த இரண்டு நாட்கள் எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில தங்கியுள்ளனர்.
ஒடிஷா மாநிலத்திலிருந்து வந்த தொழிலாளி வைசாக் வெங்கடேஷ் கூறும்போது, "வேலை முடக்கப்பட்டதால் எங்களால் அங்கே தங்க முடியாமல், ஒடிஷாவை விட்டு வெளியேறினோம். தொடர்ந்து அங்கிருந்து 20 நாட்களாக நடந்து சொந்த ஊரான யானம் வந்து சேர்ந்தோம். ஆனால் எங்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து யானம் பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா கூறுகையில், "யானம் பகுதிகளில் கொரோனா தொற்றினால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து உள்ளே வரும் நபர்கள் மூலமாக நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், எல்லைகள் முடக்கப்பட்டு யாரும் உள்ளே வர அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளிமாநிலத்தில் இருந்து இங்க வந்த நபர்களை மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தியுள்ளோம். அரசு உத்தரவு கொடுத்தால் மட்டுமே அவர்கள் உள்ளே அனுமதிப்போம்," எனத் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சரும், யானம் பகுதி சட்டமன்ற உறுப்பினருமான மல்லாடி கிருஷ்ணா ராவ் , "புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்திலிருந்து வரும்போது, அவர்களைத் தனிமைப்படுத்த அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 14 நாட்களிலிருந்து 20 நாட்களுக்கு மேலாக நடைப்பயணமாகச் சொந்த ஊர்களுக்கு வந்தவர்களை வீட்டிற்கு நேரடியாக அனுப்ப வேண்டாம். ஆனால், பரிசோதனைக்கு உட்படுத்தித் தனிமைப்படுத்தாமல் அவர்களைத் திருப்பி அனுப்புவது எந்த விதத்தில் நியாயம். அவர்களால் திரும்பிச் செல்லவும் முடியாது," என்றார்.
"தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்" - ட்விட்டரில் கமல் ஹாசன்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்தை தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினா ரத்து செய்துள்ளது.
அடுத்த நான்கு மாதங்களுக்கு விமான டிக்கெட் விற்பனையில் ஈடுபடக்கூடாது என்றும் அந்த நாட்டின் அதிகாரிகள் விமான போக்குவரத்து நிறுவனங்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த நடவடிக்கையால் விமானப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களின் வேலைகளை இழப்பார்கள் என்று அந்த துறையினர் தெரிவிக்கின்றனர்.
மார்ச் மாதம் முதல் வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் வர ஏற்கனவே அர்ஜென்டினா தடை விதித்துள்ளது.
சுமார் நான்காயிரம் பேர் கோவிட் 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் இதுவரை 192 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும்விதமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு பொதுமக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு செயல்பட்டுவந்த பூ மற்றும் பழச் சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஒரு சிலருக்கு கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அங்கு செல்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தபோதும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு அங்கு குவிந்தபடி இருந்தனர். இதனால், கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அங்குள்ள வியாபாரிகளுடன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், காவல்துறை ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தின. நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையின் முடிவில், அங்கு நடந்துவரும் சில்லறை விற்பனையை முழுவதுமாக தடைசெய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் யாரும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு செயல்பட்டுவந்த பூ மற்றும் பழச் சந்தை மாதவரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோயம்பேட்டிற்கு காய்கறிகளையும் உணவு தானியங்களையும் ஏற்றிவரும் வாகனங்கள் மாலை ஆறு மணியிலிருந்து பத்து மணிக்குள் சரக்குகளை இறக்கிவிட்டு புறப்பட்டுவிட வேண்டும்.
அதிகாலை முதல் காலை ஏழரை மணி வரை சில்லறை வியாபாரிகள் அங்குவந்து காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம்.
சென்னை முழுவதும் மாநகராட்சி மைதானங்களில் நடந்துவரும் காய்கறிச் சந்தைகளும் வண்டிகள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர், கிளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் சுமார் 5 கோடியே 8 லட்சம் மக்கள் தங்களது நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து உள்ளதாக இன்டர்நேஷனல் டிஸ்பிளேஸ்மெண்ட் மானிட்டரின் சென்டர் எனும் சர்வதேச அமைப்பு ஒன்றின் அறிக்கை கூறுகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்காலிகக் குடியிருப்புகளிலும் போதிய சுகாதாரமற்ற முகாம்களிலும் குடியிருப்பதால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அவர்களுக்கு புதிதாக ஒரு பேரபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் நெரிசலான குடியிருப்புகளில் அவர்கள் வசிப்பதால் கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான சமூக விலகல் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை அங்கு அமல்படுத்துவது மிகவும் கடினமானது என்று அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த 10 முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,435 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் செவ்வாய் மாலை தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து 934 ஆகியுள்ளது என அந்த அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுவரை 6,869 பேர் குணமடைந்துள்ளனர். 21,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பேர் 62 இறந்துள்ளனர், 1,543 பேருக்கு கோவிட்-19 தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 62 பேர் இறந்துள்ளனர். ஒரே நாளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பது இதுதான் அதிகம்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்துள்ளவர்கள் விகிதம் 23.3% ஆக உள்ளது.
இந்தியா முழுவதும் 17 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.
மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இதுவரை இந்தியாவில் பதிவான 934 மரணங்களில் 741 பேர் மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் இறந்துள்ளனர்.
கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக 10.9 நாட்கள் ஆவதாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நேரப்படி இன்று மதியம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடைசி 24 மணி நேரங்களில் 301 உயிரிழந்துள்ளனர். இது திங்களன்று வெளியிடப்பட்ட தரவுகளில் கூறப்பட்டிருந்த 331 எனும் எண்ணிக்கையை விடவும் குறைவு.
தற்போது ஸ்பெயின் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23, 822 ஆக உள்ளது.
அந்த நாட்டில் புதிதாக 1,308 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதையும் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கோவிட்-19 தொற்றின் காரணமாக உண்டாகும் மரணங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதையொட்டி ஸ்பெயின் தற்போது ஊரடங்கைப் படிப்படியாக் தளர்த்தி வருகிறது.
சுமார் ஆறு வார காலத்துக்கு பிறகு 14 வயதுக்கும் குறைவான குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறி விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா நினைத்திருந்தால் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போதே, அதனை தடுத்து நிறுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் பின்னணியில், இயற்கை தூய்மையாகி வருகின்றமையை எண்ணி பலரும் மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர்.
தமது வீடுகளில் ஒரு மாதத்திற்கு மேல் முடங்கியிருந்த பலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது வெளியில் சென்ற நிலையில், இயற்கையை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.வீதியோரங்களில் இதுவரை பூக்காத மரங்கள் பூத்து குலுங்குவதை அவதானிக்க முடிகின்றது. புற்கள் அழகாக வளர்ந்து தூய்மையாக இருப்பதை காண முடிகின்றது.
வீதிகள் தூசியின்றி தூய்மையாக இருப்பதை பார்க்க முடிகின்றது.தமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத பல இயற்கை சுவாரஸ்யங்களை தற்போது காண முடிகின்றது என பலரும் கூறி வருவதை கேட்க முடிகின்றது.இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக காற்று மாசு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதென இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி இதனை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.நாட்டில் கடந்த 20 வருட கால வரலாற்றில் காற்று மாசு வீதம் வெகுவாக குறைவடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாக கருத முடிகின்றது என அவர் தெரிவித்தார்.
கொரோனா உலகம் முழுவதும் மக்களை வீட்டிலேயே முடக்கி வருகிறது. போர் நிகழ்கிற பகுதிகளில், பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும், தற்போது குறைந்தது 100 கோடிக்கும் அதிகமான மக்களும் அதை உணர்ந்திருக்கிறார்கள். சரி, கொரோனாவால் உலகம் அடைந்த நன்மை என்ன?
கொரோனா பெருந்தொற்று குறித்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு அதற்காக மருத்துவ உபகரணங்களை வாங்கப் பிரிட்டன் அரசு தவறியது பிபிசி பனோரமா புலனாய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பிரிட்டனில் பரவ தொடங்கிய சமயத்தில் அதனை எதிர்கொள்வதற்கான போதுமான மருத்துவ கையிருப்புகள் இல்லாமல் இருந்துள்ளது.
மருத்துவ உபகரண கையிருப்பு திட்டமானது 2009 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால்,அதில் காணாமல் போன பொருட்களை வாங்க அரசு தவறவிட்டுவிட்டது என பிபிசி பனோராமா சுட்டுக்காட்டி உள்ளது.
குறிப்பாக இது குறித்து அரசு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டிய போதும், அரசு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கவில்லை என்கிறது பிபிசி பனோரமா.
தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் பிரிட்டனில் தேசிய சுகாதார பணியாளர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக பனோரமா கூறுகிறது