ஆர்.எஸ்.எஸ். பேரணி: லத்தி, ஆயுதம் கூடாது என்ற நிபந்தனையோடு, 3 இடங்களில் எப்படி நடந்தது?

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

நீதிமன்றம், வழக்கு என்று சர்ச்சைகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் இன்று (நவம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி எப்படி நிகழ்ந்தது? என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன?

தமிழ்நாட்டில் பல இடங்களில் காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததை தொடர்ந்து பல கட்ட நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி கடைசியியில் 44 இடங்களில் பலவிதமான கட்டுப்பாடுகளோடு நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தது.

ஆனால், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ். நடத்தி முடித்துவிட்டது. இந்த ஊர்வலங்கள் எப்படி நடந்தன? என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன?

ஊர்வலம் நடந்த நகரங்களுக்கு தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஊர்வலம் நடந்த ஒவ்வோர் இடத்திலும் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

அது பற்றிப் பேசிய அவர், "இந்த பேரணி, கூட்டத்திற்கு உயர் நீதிமன்றம் நிபந்தனைகளை வழங்கியுள்ளது. அதனுடன் காவல் துறையும் சில கட்டுப்பாடுகளை விதித்தது, அவற்றை ஏற்று பேரணி, கூட்டத்தை விதிமுறைக்குள் நடத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்," என்றார்.

போலீஸ் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

1. அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும்.

2. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பேரணி, கூட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

3. மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு, 6 மணிக்குள் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்தையும் முடித்துக்கொள்ளவேண்டும்.

4. பேரணியில் லத்தி, ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது.

5. குழாய் வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. பெட்டி வடிவிலான ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

6. பேரணி செல்லும் வழியிலும், வண்டியிலும் பேனர்கள், பலகைகள் இருக்கக் கூடாது.

7. மத ரீதியான வாசகங்கள், சுலோகங்களை ஊர்வலம், கூட்டத்தில் வாய் மொழியாகவோ அல்லது பதாகைகளிலோ பயன்படுத்தக்கூடாது.

8. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறினார் பகலவன்.

எதற்காக ஊர்வலம்?

நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு, ராமலிங்க அடிகளார் பிறந்து 200வது ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் ஆகியவற்றை ஒட்டி காந்தி பிறந்த நாளில் இந்த ஊர்வலம் திட்டமிடப்பட்டது.

ஆனால், வழக்கு முடிவில் 44 இடங்களில் நிபந்தனைகளோடு ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும், இந்த நிபந்தனைகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மேல் முறையீடு செய்ய முடிவெடுத்தது. ஆனால், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களில் ஏற்கெனவே ஊர்வலத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்ததால், அதன் அடிப்படையில் அங்கே ஊர்வலங்கள் நடந்தன.

எப்படி நடந்தது பேரணி?

கடலூரில் பேரணி, கூட்டம் நடந்த இடங்களில் கடும் போலீஸ் பாதுகாப்பு நிலவியது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சிபுரம் டிஐஜி காந்திமதி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், செங்கல்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பிக்கள் மேற்பார்வையில் மூன்று மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வு இடங்களில் முன்னதாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

கடலூரில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் செல்லும் பகுதிகளில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும் பேரணியில் பங்கேற்போர் தவிர குறிப்பிட்ட நேரத்தில், அந்த சாலைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

கள்ளக்குறிச்சியில் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பேரணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சுமார் 400 பேர் சீருடையுடன் கலந்து பங்கேற்றனர்.

பெரம்பலூரிலும், மாலை 4 மணிக்கு அணிவகுப்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எந்த இடத்திலும் எந்த அசம்பாவிதங்களோ, பதற்றங்களோ இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: