இந்தியா முழுக்க திமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் பலவீனமடைகிறதா? பாஜகவின் உத்திகள் காரணமா?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோதி பெற்றுள்ளார் என்று ஜூன் 10ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது.

அரசாங்கமே உருவாக்கி முன்னிலைப்படுத்திய ஒரு சாதனை இது என்று கூறி காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை விமர்சித்தது. இருப்பினும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், பிரதமர் மோதியின் தலைமை இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

"காங்கிரஸ் இல்லாத இந்தியாவை" உருவாக்கும் முழக்கத்துடன் இந்த அரசியல் பயணம் தொடங்கியது. இப்போது ஒரு புதிய கேள்வி எழுந்துள்ளது: பிராந்திய அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் குறைந்து வரும் ஒரு சூழலை நோக்கி இந்தியா நகர்கிறதா?

முன்பெல்லாம், மத்தியில் ஆட்சி அமைக்க தேசிய கட்சிகளுக்குப் பெரும்பாலும் பிராந்திய கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. டெல்லியில் யார் ஆட்சிக்கு வருவது என்பதைத் தீர்மானிப்பதில் பிராந்திய கட்சிகள் முக்கியப் பங்காற்றின. ஆனால் இன்று அரசியல் சூழல் மாறி வருவதாகத் தெரிகிறது.

மகாராஷ்டிரா, பிகார், பஞ்சாப், உத்தர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல பிராந்திய கட்சிகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. சில கட்சிகள் உட்கட்சிப் பிளவுகளைச் சமாளித்து வருகின்றன. வேறு சில கட்சிகளோ வாக்காளர்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கைத் தக்கவைக்கப் போராடுகின்றன.

சில மாநிலங்களில், பிராந்திய கட்சிகள் வலுவான தலைமைத்துவப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. வேறு சிலவற்றில், அவற்றின் அமைப்புரீதியான வலிமை பலவீனமடைந்துள்ளது. இந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படும் மற்றும் விவாதிக்கப்படும் விதம் மாறி வருவதால், அவற்றின் அரசியல் செல்வாக்கும் குறைந்து வருவதாகத் தெரிகிறது.

இதுவொரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது: பிராந்திய கட்சிகள் தங்கள் சொந்தத் தவறுகள், உட்கட்சிப் பிரச்னைகள் மற்றும் அரசியல் உத்திகள் காரணமாகப் பலவீனமடைந்து இருக்கின்றனவா? அல்லது தேசிய அரசியல் மாறி வருவதாலும், அதிகாரம் மேலும் மையப்படுத்தப்படுவதாலும் அவற்றின் பங்கு சுருங்கி வருகிறதா?

இதுவொரு பெரிய அரசியல் மாற்றமாக இருந்தால், மற்றொரு கேள்வியும் எழுகிறது: இந்திய அரசியல் எந்தப் புதிய திசையை நோக்கி நகர்கிறது?

இந்த விஷயம் வாரம் முழுவதும் முக்கிய விவாதப் பொருளாக இருந்ததைத் தொடர்ந்து, பிபிசி ஹிந்தியின் 'தி லென்ஸ்' வாராந்திர நிகழ்ச்சியிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

'கலெக்டிவ் நியூஸ்ரூமின்' இதழியல் துறை இயக்குநர் முகேஷ் ஷர்மா, திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகரிகா கோஷுடன் இதுகுறித்துப் பேசினார்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் சிவசேனாவின் (ஷிண்டே பிரிவு) தலைமை தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர் அபிஷேக் வர்மாவும் இது தொடர்பான தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இவர்களுடன் இந்த விவாதத்தில், பல தசாப்தங்களாக பாஜக மற்றும் இந்துத்துவா அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நிலஞ்சன் முகோபாத்யாயாவும் பங்கேற்றார்.

திரிணாமுல் காங்கிரஸ்: பிரச்னைக்குக் காரணம் வெளிப்புற அழுத்தமா அல்லது உட்கட்சி பலவீனமா?

திரிணாமுல் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என்ன?

தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் அழுத்தத்தின் காரணமாகவே கட்சியை விட்டு வெளியேறுகிறார்களா அல்லது கட்சியின் கொள்கைகள் மீதான அவர்களின் பிடிப்பு வலுவாக இல்லை என்பதை இது காட்டுகிறதா? இவற்றுடன், எம்.எல்.ஏ, எம்.பி. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சி தவறு செய்துவிட்டதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

பாஜக கையாளும் உத்திகளே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சாகரிகா கோஷ் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, திரிணாமுல் காங்கிரஸின் தலைவர்களைக் குறிவைக்கவும், அவர்களைக் கட்சியை விட்டு வெளியேறச் செய்யவும் பாஜக மத்திய புலனாய்வு அமைப்புகள், பணம் மற்றும் அரசியல் அழுத்தங்களைப் பயன்படுத்துகிறது.

அதோடு, "எம்.பி.க்கள், எம்.எல்.ஏ வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் கட்சி எந்தத் தவறும் செய்யவில்லை" என்று அவர் நம்புகிறார்.

அதுகுறித்துப் பேசிய சாகரிகா கோஷ், "கட்சியை விட்டு வெளியேறிய எம்.பி.க்கள் மூன்று மற்றும் நான்கு முறை எம்.பி.க்களாக இருந்தவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாகக் கட்சியின் தலைமையுடன் தொடர்பில் இருந்தவர்கள். கட்சி முன்பைப் போலவே இப்போதும் வெற்றி பெற்றிருந்தால், அவர்கள் இப்படி கட்சியை விட்டு வெளியேறியிருப்பார்களா? அப்படி நடந்திருக்காது என்றே நான் கருதுகிறேன். இப்போது கட்சி தோல்வியடைந்ததால், அவர்கள் கட்சிக்குத் துரோகம் இழைத்துள்ளனர். இது அவர்களின் தார்மீக பலவீனத்தைக் காட்டுகிறது," என்றார்.

அதேவேளையில், அமைப்பு மற்றும் தலைமைத்துவம் தொடர்பான சில சிக்கல்கள் கட்சிக்குள் இருப்பதாகவும் சாகரிகா கோஷ் ஒப்புக்கொண்டார்.

"கட்சிக்குள் சுயபரிசோதனையும் சீர்திருத்தங்களும் அவசியம், இது கட்சித் தலைமைக்கும் தெரியும். இரண்டு உள்வட்டக் கூட்டங்களில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.

மேலும், அந்தக் கூட்டங்களில் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த விவாதங்களின் மூலம் தீர்வு கிடைக்கும் எனத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுபுறம், மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை சிவ சேனாவின் (ஷிண்டே பிரிவு) தேசிய ஒருங்கிணைப்பாளரான அபிஷேக் வர்மா ஏற்கவில்லை.

தங்கள் தரப்பில் இணையுமாறு நிர்பந்திப்பதற்காகவே மத்திய அமைப்புகள் விசாரணைகளை நடத்துவதாக நம்பக்கூடாது என்று கூறிய அவர், அப்படி நடப்பதாகத் தான் கருதவில்லை என்றும் ஒருவேளை அப்படி ஏதாவது நடந்தாலும், அதை எதிர்கொள்ள சுதந்திரமான நீதித்துறை உள்ளது என்றும் கூறினார்.

உதாரணத்திற்கு, "அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்பான கலால் வரி (excise) வழக்கு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை," அவர் குறிப்பிட்டார்.

அந்த வழக்கில் கேஜ்ரிவால் மற்றும் பிறர் தொடர்பாகக் கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் கருத்துகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, "மேற்கு வங்க அரசியலைப் பொறுத்தவரை, திரிணாமூல் காங்கிரஸில் தற்போதைக்கு ஒரு பெரிய பிளவு ஏற்படுவது மிகவும் கடினம்" என்று மூத்த பத்திரிகையாளர் நிலஞ்சன் முகோபாத்யாய் கருதுகிறார்.

இதுகுறித்துப் பேசிய முகோபாத்யாய், "மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஒன்றிணைந்திருந்தால், இந்தப் பிளவு ஏற்பட்டிருக்கும். மாநிலங்களவையிலும்கூட, மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களை திரட்ட முடியவில்லை. அதனால்தான் மூன்று எம்.பி.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்," என்று குறிப்பிட்டார்.

பிராந்திய கட்சிகளுக்குச் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் என இரண்டும் இருப்பதாக விளக்கிய அவர், "அடுத்த பத்து நாட்களில் திரிணாமூல் காங்கிரஸின் உண்மையான நிலைமை இன்னும் தெளிவாகத் தெரிய வரும்" என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள பிராந்திய கட்சிகளின் தனித்துவமான அடையாளம்

பாஜக தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிராந்தியக் கட்சிகளால் தங்கள் தனித்துவமான அரசியல் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பதுதான் தற்போதைய கேள்வி. அதேபோல, ஒத்த அரசியல் கருத்துகளைப் பின்பற்றுவதன் மூலம், சிவசேனா (ஷிண்டே பிரிவு) போன்ற தனது கூட்டணிக் கட்சிகளின் இடத்தை பாஜக காலப்போக்கில் கைப்பற்றிவிடுமா என்ற முக்கியமானதொரு கேள்வியும் எழுகிறது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலஞ்சன் முகோபாத்யாய், "பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரே மாதிரியான அரசியல் ஆதரவுத் தளத்தைக் கொண்டிருக்கும் இடங்களில், பாஜக படிப்படியாக அந்த இடத்தை ஆக்கிரமித்து, தனது கூட்டணிக் கட்சியின் செல்வாக்கைக் குறைத்துவிடுகிறது" என்றார்.

மகாராஷ்டிராவை உதாரணமாகக் காட்டிய முகோபாத்யாய், "அங்கு பாஜக மெல்ல மெல்ல சிவசேனாவை பலவீனப்படுத்தியது. இன்று ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பெயரளவில் மட்டுமே உள்ளது," என்று கூறினார்.

இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (ஷிண்டே பிரிவு), பாஜகவை ஓர் அச்சுறுத்தலாகக் கருதவில்லை.

சிவசேனா (ஷிண்டே பிரிவு) தேசிய ஒருங்கிணைப்பாளரான முனைவர் அபிஷேக் வர்மா அதுகுறித்து விளக்கியபோது, "பாஜகவும் சிவசேனாவும் ஒரே மாதிரியான கொள்கைகளை (குறிப்பாக இந்துத்துவம் மற்றும் தேசியம் சார்ந்தவை) கொண்டுள்ளதாக" குறிப்பிட்டார். இதனால், அவர்கள் "ஒருவரையொருவர் போட்டியாளர்களாகப் பார்ப்பதில்லை; மாறாக, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் கூட்டாளிகளாகவும், 'அண்ணன்-தம்பி' போன்ற உறவுமுறையைக் கொண்டவர்களாகவும்தான்" அவர்கள் தங்களைக் கருதுவதாக அபிஷேக் வர்மா விளக்கினார்.

அடல் பிஹாரி வாஜ்பேயி பாஜகவை வழிநடத்திய காலத்தில் இருந்து இது மாறுபட்டது; அக்காலத்தில் மகாராஷ்டிர அரசியலில் சிவசேனாவே "அண்ணன்" (மூத்த கூட்டாளி) கட்சியாகக் கருதப்பட்டது.

இந்த உறவுமுறை மாற்றத்தை முனைவர் அபிஷேக் வர்மா ஒரு "தேர்தல் சமன்பாடு" என்று விவரித்தார்.

மேலும் விவரித்த அவர், "சில நேரங்களில் எங்கள் பலம் (எண்ணிக்கை) அதிகமாக இருக்கும், சில நேரங்களில் பாஜகவின் பலம் அதிகமாக இருக்கும். தேர்தல் கணக்கீடுகள் அப்படித்தான் செயல்படுகின்றன. கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இடங்களும் பொறுப்புகளும் தீர்மானிக்கப்படுகின்றன" என்றார்.

எதிர்காலத்தில் பிராந்திய கட்சிகளின் நிலைத்தன்மை குறித்துப் பேசிய அவர், இந்த விவகாரம் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இதன் ஒரு பகுதியாகவே உத்தர பிரதேசத்தில் நிஷாத் கட்சியுடன் (NISHAD) கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நேரங்களில் பிராந்திய கட்சிகள் பிளவுபடுவது மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்த கேள்விகள் பற்றிப் பேசிய அபிஷேக் வர்மா, "விதிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தலைவர்களோ அல்லது குழுக்களோ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்பினால், அதில் யாருக்கு என்ன ஆட்சேபனை இருக்க முடியும்? மற்றவர்களைப் பற்றி நாங்கள் கருத்து சொல்ல முடியாது, ஆனால் நாங்கள் எங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை," என்று கூறினார்.

கடந்த 2022இல் சிவசேனா பிளவுபட்ட பிறகு, பாஜக கூட்டணியின் ஆதரவுடன் ஷிண்டே பிரிவு மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்து வரும் பிராந்திய கட்சிகளின் செல்வாக்கும் ஜனநாயகமும்

கடந்த 2014இல் பாஜக முன்னெடுத்த "காங்கிரஸ் இல்லாத இந்தியா" என்ற பிரசாரம், தற்போது 2026ஆம் ஆண்டுக்குள் பிராந்திய கட்சிகளும் பலவீனமடையக்கூடிய ஒரு சூழலை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.

கடந்த 1980கள் முதல் இந்துத்துவ கொள்கை சார்ந்த கட்சிகளின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் நிலஞ்சன் முகோபாத்யாய், இந்தக் காலகட்டத்தின் அரசியல் சூழல் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

"தன்னுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் அமைப்பை வலுப்படுத்தும் வகையிலான அரசியலை பாஜக பின்பற்றுவதில்லை," என்று முகோபாத்யாய் கூறுகிறார்.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை (JDU) உதாரணமாகக் கொண்டு அவர் இதை விளக்கினார். "அங்கு, நிதிஷ் குமாரின் பிம்பத்தைப் பயன்படுத்தித் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பாஜக ஜே.டி.யு-வை முந்திச் சென்று முதல்முறையாகத் தனது முதலமைச்சரை அமர்த்தியது. எதிர்காலத்தில், ஜே.டி.யு தலைவர்கள் பாஜகவில் இணையலாம் அல்லது அந்தக் கட்சி மிகச் சிறிய அரசியல் சக்தியாகச் சுருங்கலாம்," என்று அவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள், தேசிய அளவில் பாஜகவின் வளர்ந்து வரும் வலிமையைக் காட்டுவதாகவும் அவர் கருதுகிறார்.

தமிழ்நாடு குறித்துப் பேசிய முகோபாத்யாய், "திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இப்போது அது பாஜகவை நோக்கி நகருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி நடந்தால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜகவின் நிலை வலுவடையும்; மேலும் அரசியல் செயல்பாடுகளில் பல மாற்றங்கள் காணப்படலாம்," என்று கூறினார்.

பிராந்திய கட்சிகள் பெரும்பாலும் ஒரு தனித் தலைவரை மையமாகக் கொண்டே தங்கள் அரசியலை அமைத்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட முகோபாத்யாய், அந்த விஷயத்தில் பாஜகவும் பெரிதாக வேறுபட்டு இருக்கவில்லை என்றார்.

"பிராந்திய கட்சிகள் ஒரு முகத்தை மையமாக வைத்து அரசியல் செய்வதைப் போலவே, பாஜகவும் செயல்படுகிறது. பாஜகவை பொறுத்தவரை, மோதி தான் முக்கிய முகமாக இருக்கிறார். அப்படியிருக்க, பிற கட்சிகள் மட்டுமே குடும்ப அரசியல் அல்லது தனிநபர் தலைவர்களைச் சார்ந்திருப்பதாகவும், பாஜக கொள்கை அடிப்படையில் மட்டுமே செயல்படுவதாகவும் கூறிக்கொள்வது தவறானது," என்று அவர் கூறினார்.

மேலும், அடல் பிஹாரி வாஜ்பேயி காலத்தில் பாஜக அமைப்பு சார்ந்த அரசியலில் அதிக கவனம் செலுத்தியதாகவும், அப்போது பல்வேறு தலைவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

முகோபாத்யாயின் கூற்றுப்படி, "நரேந்திர மோதி தலைமையின் கீழ் இந்தச் செயல்பாட்டு முறை மாறியுள்ளது; அதாவது, வாஜ்பேயி காலத்தில் கட்சிக்குள் பல்வேறு கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட அளவுக்கு இப்போது அளிக்கப்படுவது இல்லை."

பாஜக-வின் அரசியலில் கூட்டணிக் கட்சிகளின் பங்கு

நிலஞ்சன் முகோபாத்யாய் 2013இல் நரேந்திர மோதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். பாஜக-வுக்கும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் இடையிலான உறவு குறித்த பிரதமர் மோதியின் அணுகுமுறையை அவர் ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறார்.

முகோபாத்யாயின் கூற்றுப்படி, "அந்தப் புத்தகத்துக்கான நேர்காணலின்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது ஏன் என்று நான் அவரிடம் (மோதியிடம்) கேட்டேன். அப்போது, 'எங்களுடன் இருப்பதன் மூலம் தங்களுக்கு ஏதேனும் பலன் கிடைக்கும் என்று உணரும்போது மட்டுமே கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைகின்றன' என்று அவர் தெளிவாகக் கூறினார்."

கூட்டணிகள் குறித்த நரேந்திர மோதியின் புரிதல் என்பது முற்றிலும் நடைமுறை மற்றும் பலன் சார்ந்த உறவை அடிப்படையாகக் கொண்டது என்பதை இது காட்டுவதாக முகோபாத்யாய் கூறுகிறார்.

கடந்த 2014ம் ஆண்டில் பலரும் எதிர்பார்த்ததைவிட பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அவரது கூற்றுப்படி, "2014 முதல் 2019 வரையிலான பாஜக ஆட்சிக் காலங்களில், அக்கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்திலும் அதே போக்கு தொடர்ந்தது."

மேலும், "2024இல் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெறாதபோது, அந்தக் கட்சி இனி தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகம் கலந்தாலோசித்து, அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை" என்று முகோபாத்யாய் கூறுகிறார்.

இதற்கான ஒரு காரணம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிறார் அவர். "இதன் மூலம் பாஜக மீண்டும் வலுவான அரசியல் நிலையை அடைந்தது." அவரது கருத்துப்படி, முன்பு இருந்ததைவிட பாஜக குறைவான இடங்களையே பெற்றிருந்தாலும், அது இப்போதும் 2014இல் செயல்பட்டதைப் போலவே செயல்பட்டு வருகிறது.

மோதிக்கு பிறகான பாஜக: தலைமைத்துவம் குறித்த கேள்விகள்

பிரதமர் நரேந்திர மோதி நாளை ஓய்வு பெற்றாலோ அல்லது வரும் ஆண்டுகளில் அரசியலில் இருந்து விலகினாலோ, பல பிராந்திய கட்சிகளில் தற்போது காணப்படும் சவால்களைப் போன்றதொரு தலைமைத்துவ சிக்கலை பாஜக எதிர்கொள்ள நேரிடுமா?

தற்போதைய நிலையில், தனது வாரிசு யார் என்பதைத் தீர்மானிக்கவோ அல்லது அதைத் தெளிவாக அறிவிக்கவோ பிரதமர் மோதியால் இயலும் எனத் தோன்றவில்லை என்று, பத்திரிகையாளர் நிலஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.

மேலும் பேசிய அவர், "மோதியின் தலைமைத்துவக் காலம் முடிவுக்கு வந்த பிறகு, பாஜக ஒரு முக்கிய மாற்றுக் கட்டத்துக்குள் நுழையும். இந்த மாற்றம் திட்டமிட்ட முறையில் நிகழாவிட்டால், கட்சியின் மீது மீண்டும் வலுவான செல்வாக்கைச் செலுத்த ஆர்எஸ்எஸ் (RSS) முயலக்கூடும்," என்று குறிப்பிடுகிறார்.

முகோபாத்யாயின் கருத்துப்படி, அத்தகைய சூழலில் பாஜக-வுக்குள் ஏற்படப்போகும் தலைமைத்துவப் போட்டி அல்லது மாற்றங்கள் எத்தகையதாக இருக்கும் என்பது காலப்போக்கில்தான் தெரிய வரும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு