இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன? அதில் உள்ள படத்தை மாற்ற முடியுமா?

    • எழுதியவர், ஹர்ஷல் அகுடே
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் ஆகிய கடவுள் படங்களை இடம் பெற செய்ய வேண்டும் என்று கோரிய புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல அரசியல்வாதிகள் இதே போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

ரூபாய் நோட்டுகளில் புகழ்பெற்ற ஆளுமைகளின் படத்தை அச்சிட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்துள்ளன. மன்னர் சிவாஜி, பாபாசாகேப் அம்பேத்கர் முதல் விநாயக் சாவர்கர், நரேந்திர மோதி ஆகியோரின் புகைப்படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இப்போது இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் புகைப்படம் உள்ளது. லட்சுமி, விநாயகர் ஆகியோரின் படங்கள் ரூபாய் நோட்டின் மற்றொரு புறத்தில் இடம் பெற வேண்டும் என்றும் காந்தியின் புகைப்படம் இப்போது இருப்பது போல தொடர வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் ரூபாய் நோட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் படங்கள் இடம் பெற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. எனினும், ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மாற்றும் எண்ணம் இல்லை என்று, இது போன்ற விவாவதங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்தது.

ரூபாய் நோட்டுகளில் உள்ள புகைப்படங்களை மாற்ற வேண்டும் என தொடர்ச்சியான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் அதில் அரசியல் ரீதியான விவாதங்களும் சூடுபறக்கும். சில நாட்களுக்கு தொடரும் இந்த விவாதம் பின்னர் காணாமல் போய்விடும். அரசியல் தலைவர்களின் கோரிக்கைகளின் படி ரூபாய் நோட்டுகளில் படத்தை மாற்ற முடியுமா?

இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை வடிவமைப்பது யார் மற்றும் அவற்றை அச்சிடுவதற்கு ஒப்புதல் அளிப்பது யார்?

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள், நாணயங்களை அச்சிடுவது யார்?

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் என்று வரும்போது முறையே இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசு ஆகியவை அதிகாரம்படைத்தவையாகும்.

ரூபாய் நோட்டுகள் தொடர்பான அத்தனை விவகாரங்களையும் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கவனித்துக் கொள்கிறது. நாணயங்கள் தொடர்பான பணிகள் அனைத்தையும் இந்திய அரசு கவனித்துக் கொள்கிறது.

உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகளைப் போலவே, ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு, உள்ளடக்கங்களை மாற்றுவதற்கான அதிகாரத்தை ஆர்பிஐ கொண்டிருக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான ஒரு செய்தியின்படி, எந்த ஒரு ரூபாய் நோட்டிலும் வடிவமைப்பை மாற்றுவதற்கு ஆர்பிஐயின் மத்திய குழு மற்றும் இந்திய அரசின் ஒப்புதல் தேவை.

ஆனால், நாணயங்களில் வடிவமைப்பை மாற்றுவதற்கான முடிவு இந்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. 1934ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 22 இதனை குறிப்பிடுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி முதலில் ரூபாய் நோட்டுகளை வடிவமைக்கும், பின்னர் அதனை ஆர்பிஐ மத்திய குழுவுக்கு அனுப்பும். அதன் பின்னர் இந்த வடிவமைப்பு இறுதி ஒப்புதலுக்காக இந்திய அரசுக்கு அனுப்பப்படும்.

2011ஆம் ஆண்டின் நாணய சட்டத்தின்படி நாணயங்களுக்கான முழுமையான அதிகாரம் படைத்ததாக இந்திய அரசு திகழ்கிறது. இந்திய அரசு நாணயத்தை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. பின்னர் அதனை விநியோகிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்திய அரசு அனுப்புகிறது.

ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றை இந்திய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகள் மேலாண்மை துறை நிர்வகிக்கிறது. இந்த துறையானது இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரின் வரம்புக்குக் கீழ் வருகிறது. இப்போது டி.ரவி என்பவர் இந்த துறையின் பொறுப்பாளராக உள்ளார்.

ஆர்பிஐ இணையதளத்தில் உள்ள தகவலின்படி ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றை நிர்வகிப்பதில் ரூபாய் நோட்டுகள் மேலாண்மை துறை கவனம் செலுத்துகிறது. வடிவமைப்பு, அச்சிடுதல் மற்றும் உரிய நேரத்துக்கு ரூபாய் நோட்டுகளை அளிப்பது, மற்றும் விநியோகிப்பது மற்றும் நாணயங்களை விநியோகிப்பது ஆகிய பணிகளில் ரூபாய் நோட்டுகள் மேலாண்மை துறை ஈடுபடுகிறது.

கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் பணியும் ரூபாய் நோட்டுகள் மேலாண்மை துறையே கவனிக்கிறது. ரூபாய் நோட்டுகள், நாணயங்களை மாற்றி தருதல், ரூபாய் நோட்டு சேமிக்கும் இடங்களின் தேவையை கண்காணித்தல், பொதுமக்களுக்கான வாடிக்கையாளர் சேவையிலும் இந்த துறை ஈடுபடுகிறது.

இந்த பணிகளுக்கு இடையே வடிவமைத்தலுக்கான திட்டம், ஆய்வு, நன்றாக திட்டமிட்டப்பட்ட வகையிலான ரூபாய் நோட்டுகள், நாணயங்களை விநியோகித்தல், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி கிழந்த, சேதமான நோட்டுகளை திரும்பப்பெறுதல், அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளும் இந்த துறையின் வழியே மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியானது நாசிக், தேவாஸ் (மத்திய பிரதேசம்), மைசூர் (கர்நாடகா) மற்றும் சல்போனி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மும்பை (மகாராஷ்டிரா), அலிபூர் (கொல்கத்தா), சைபாபாத் (ஹைதராபாத்) மற்றும் நொய்டா (உத்தரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்திய ரூபாயின் வரலாறு

இப்போது இந்திய ரூபாய் நோட்டுகளில் ஒரு புறம் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு முன்பு நமது ரூபாய் நோட்டுகளில் காந்திஜியின் புகைப்படம் இல்லை என்று நாங்கள் சொன்னால்?

ஆம். இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், 1969ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம் பெற்றது.

நாடு விடுதலை அடைந்த சில மாதங்களில் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியாவின் ரூபாய் நோட்டுகளை வடிவமைக்கும்பணி அதற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி 1949ஆம் ஆண்டில் முதன் முறையாக இந்திய அரசு ஒரு ரூபாய் நோட்டை புதிதாக வடிவமைப்பு செய்தது. அப்போதுதான் அதற்கு முன்பு ரூபாய் நோட்டுகளில் இருந்த பிரிட்டன் அரசரின் படம் மாற்றப்பட்டு மகாத்மா காந்தியின் படம் இடம் பெறலாம் என திட்டமிட்டதாக நம்பப்படுகிறது.

அதன்படி ஒரு வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இறுதியாக குழுவானது மகாத்மா காந்தி படத்துக்குப் பதிலாக, ரூபாய் நோட்டுகளில் அசோக தூண் இடம் பெற வேண்டும் என்று ஒப்புதல் அளித்தது.

1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசு ஆனதையடுத்து முதன் முறையாக 2,5,10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2,5 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்ற வெவ்வேறு வண்ணங்களைத் தவிர வேறு ஏதும் வித்தியாசம் கொண்டிருக்கவில்லை. 10 ரூபாய் நோட்டின் பின்புறம் முன்பு உள்ளதைப் போலவே பாய்மரப்படகின் படம் இடம் பெற்றது.

1953ஆம் ஆண்டு புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இந்தி எழுத்துகள் முதன்மையாக இடம் பிடித்தன. ரூபாய் ( Rupee)என்பதன் பன்மை என்னவாக இருக்க வேண்டும் என்று விவாதங்கள் நடைபெற்றன. முடிவில் ரூபாயின் பன்மையாக ரூபாய்கள்(Rupees) இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

1954ஆம் ஆண்டு 1000, 2000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அச்சிடப்பட்டன. இதன் பின்னர் 1978ஆம் ஆண்டு இந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டன.

எனவே, 1978ஆம் ஆண்டு ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதவை ஆகின.

சிங்கம், மான் போன்ற விலங்குகளின் படங்கள் 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. ஆனால், 1975ஆம் ஆண்டு 100 ரூபாய் நோட்டில் விவசாயத் தன்னிறைவு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் இருந்து பறிக்கப்படும் தேயிலை இலைகளின் படங்கள் இடம் பெற்றன.

ரூபாய் நோட்டுகளில் எப்போது மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்றது?

1969ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 100 ஆவது பிறந்த நாளின்போது முதன் முறையாக மகாத்மா காந்தியின் படம் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டது. காந்திஜி அமர்ந்திருந்த வடிவத்தில், அவருக்குப் பின்னால் சேவாகிராம் ஆசிரமம் இருந்தது.

1972ஆம் ஆண்டு ஆர்பிஐ முதலில் 20 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து 1975ஆம் ஆண்டில் 50 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.

1980ஆம் ஆண்டுகளில் புதிய வரிசையிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டன. புதிய படங்கள் இடம் பெற்றன. அந்த நேரத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை.

ஒரு ரூபாய் நோட்டில் எண்ணைய் கிணறு படமும், 2 ரூபாய் நோட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடு தொடர்புடைய ஆர்யபட்டா செயற்கை கோள் படமும் இடம் பெற்றது. 5 ரூபாய் நோட்டில், ஒரு விவசாயி டிராக்டருடன் வயலை உழும் காட்சியைக் கொண்ட படம் இடம் பெற்றிருந்தது.

அதே போல, மயில், ஷாலிமர் பாக் படங்கள் ஆகியவை 10 ரூபாய் நோட்டில் இடம் பெற்றன. கொனார்க் கோயிலின் படம் 20 ரூபாய் நோட்டில் இடம் பெற்றது. 100 ரூபாய் நோட்டில் ஹிராகுட் அணை புகைப்படம் இடம் பெற்றது.

இதற்கிடையே நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சியடையத் தொடங்கியது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தது. எனவே 1987ஆம் ஆண்டில் முதன் முறையாக ஆர்பிஐ 500 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது. மகாத்மா காந்தியின் படம் மீண்டும் இடம் பெற்றது. நமது ரூபாய் நோட்டுகளில் இப்போது போல காந்திஜியின் புகைப்படம் ரூபாய் நோட்டுகளின் முன் பக்கம் இடம் பெற்றது. கூடுதலாக, அசோக தூண் வாட்டர்மார்க்கில் இடம் பெற்றது. ரூபாய் நோட்டின் பின்பக்கம், காந்திஜியின் தண்டி யாத்திரை புகைப்படம் இடம் பெற்றது.

1996ஆம் ஆண்டு புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மகாத்மா காந்தி வரிசையிலான நோட்டுகள் அச்சிடப்பட்டன. வாட்டர் மார்க்கிலும் மாற்றம் செய்யப்பட்டது. பார்வை மாற்றுதிறனாளிகள் அடையாளம் கண்டு கொள்ளும் வகையிலான அம்சங்களுடன் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. முன்பக்கம் இருந்த மகாத்மா காந்தியின் புகைப்படத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

பின்னர் அதே வரிசையில் 2000ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி 1000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

2016ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய ரூபாய் நோட்டுகளில் இரண்டாவது பெரிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மகாத்மா காந்தி படம் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள், 1000 ரூபாய் வரிசை நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன.

அதன் பின்னர் வந்த புதிய நோட்டில் மகாத்மா காந்தி(புதியது) வரிசை நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த நோட்டுகளின் அளவு மாற்றப்பட்டது. சிறிய நோட்டுகளாக , பல்வேறு வண்ணங்களை உபயோகித்து தயாரிக்கப்பட்டன. இதே வரிசையில் 2000 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே 2015ஆம் ஆண்டு புதிய ஒரு ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த நோட்டுகள் அதிக அளவு புழக்கத்துக்கு வரவில்லை. இப்போது 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவதில்லை. அதே நேரத்தில் இதே மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்துக்கு தகுதியானவையாக உள்ளன.

நீண்டகாலமாகவே இந்தியாவில் நாணயங்கள் உபயோகத்தில் உள்ளன. சுதந்திர இந்தியாவின் முதலாவது நாணயம் 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிரிட்டன் அரசரின் அச்சு வடிவம் மாறப்பட்டு அசோக தூண் படம் இரண்டு மூலைகளிலும் இடம் பெற்றது.

தொடக்க காலகட்டத்தின் இந்திய நாணயங்கள் நிக்கலில் தயாரிக்கப்பட்டன. தொடர்ந்து வந்த காலங்களில் அதில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அண்மை காலங்களாக துருப்பிடிக்காத எஃகு மற்றும் குப்ரோ-நிக்கல் ஆகியவற்றில் அச்சிடப்பட்டு வருகின்றன.

2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 பைசா மற்றும் அதற்கு கீழ் உள்ள பைசாக்கள் ரத்து செய்யப்பட்டன. இப்போது 50 பைசா, 1ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் சந்தையில் கிடைக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: