பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு: 'போராட்டத்தைக் கைவிடவில்லை; பேரணி மட்டுமே தற்காலிக வாபஸ்'

போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று (அக்டோபர் 15) அமைச்சர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, சென்னையில் அக்டோபர் 17ம் ஒருங்கிணைத்திருந்த விமான நிலைய எதிர்ப்பு நடை பயணம் மற்றும் பேரணியை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஏகனாபுரம் கிராமத்தில் 80 நாட்களை கடந்து நடைபெற்றுவரும் மாலை நேரப் போராட்டம் தொடர்வதாகவும், அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான் அந்த போராட்டம் பற்றி கிராம மக்கள் முடிவுசெய்வார்கள் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட எட்டு போராட்டக்காரர்கள் அரசின் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இருப்பதால், சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத்தை நோக்கி செல்லும் மக்கள் எதிர்ப்புப் பேரணி மட்டும் தற்காலிகமாக கைவிடப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள பரந்தூரில் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனை அடுத்து, விமான நிலையம் அமைப்பதற்குத் தேர்வான ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் 81வது நாளை இன்று எட்டியுள்ளது. பல்வேறு வடிவங்களில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக, அக்டோபர் 17ம் தேதி சென்னையில் சட்டமன்றத்தை நோக்கி கிராமமக்கள் நடைபயணமாக வந்து பேரணி நடத்துவது என்று முடிவு செய்திருந்தனர். அந்த பேரணி மட்டும் தற்போது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விவசாய நிலம்

ஊடகங்களிடம் பேசிய, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பின் செயலாளர் சுப்பிரமணியன், ''ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அமைச்சர்களின் பேச்சு வார்த்தை எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. எங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி கூறினார்கள். நல்ல தீர்வு விரைவில் எட்டப்படும் என்றும் உத்தரவாதம் தந்ததால் எங்களது பேரணியை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளோம். தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவை பொறுத்து எங்களுடைய அடுத்த கட்ட முடிவு அமையும்,''என்றார்.

பேச்சுவார்த்தையில் கிராம மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்ததாகக் கூறிய அவர், ''13 கிராம மக்கள் எவ்வளவு பாதிப்புகளை சந்திப்பார்கள் என அமைச்சர்களிடம் எடுத்து சொன்னோம். விமான நிலையம் வந்தால், கிராமங்களின் புவியில் அமைப்பு எப்படி மாறும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், ஏகனாபுரம் கிராம பஞ்சாயத்து அழிக்கப்படும் என்பதால் எங்கள் கிராம மக்கள் தங்களின் அடையாளத்தை இழக்க நேரிடும் என தெரிவித்தோம். எங்கள் முகவரி தொலைந்துபோகும் என்று தெரிவித்தோம். எங்கள் கருத்துகளை அமைச்சர்கள் உள்வாங்கிக்கொண்டார்கள். நல்ல தீர்வை தருவதாக கூறியுள்ளார்கள் என்பதால் தற்காலிகமாக பேரணியை நிறுத்திவைத்துள்ளோம்,''என்றார்.

ஏரி

பிபிசி தமிழிடம் பேசிய போராட்டகுழுவை சேர்ந்த கதிரேசன், சென்னையில் சட்டமன்றத்தை நோக்கி செல்லும் போராட்டம் மட்டும்தான் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.

''அக்டோபர் 17ம் தேதி நடைபெறுவதாக இருந்த பேரணியை மட்டும்தான் நாங்கள் கைவிட்டுள்ளோம். தினமும் மாலை நேரத்தில் எங்கள் கிராமத்தில் நடைபெறும் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைத்து கருத்துகளை அமைச்சர்கள் கேட்டுள்ளனர். அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளனர் என்பதால்தான் பேரணியை கைவிட்டுள்ளோம். விமான நிலையம் எங்கள் கிராமத்தில் அமையாது என்று சொன்னால் மட்டும்தான் கிராமத்தில் போராட்டம் நிறுத்தப்படும்,'' என்றார்.

காணொளிக் குறிப்பு, சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண் - அதிரடிக் காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: