You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 'பண்பட்ட மனிதர்' மல்லிகார்ஜுன கார்கே நரேந்திர மோதி, அமித் ஷாவுக்கு சவாலான தலைவராக முடியுமா?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"தில் மிலேன் நா மிலேன், ஹாத் மிலா கே சலோ." (இதயம் சேர்கிறதோ இல்லையோ, கைகளை கோர்த்துக்கொண்டு செல்லுங்கள்)
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பை ஏற்கும் கடினமான பொறுப்புக்கு மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் முன்மொழியப்பட்டபோது இந்த பழமொழி அவரது மனதில் தோன்றியிருக்கலாம். காந்தி குடும்பத்தின் ஆசியுடன் அவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
அவரது நெருங்கிய நண்பர் மறைந்த தரம் சிங், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முதல் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்க, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதைக் குறிக்கும் வகையில், 2004 மே 24 அன்று இந்த செய்தியாளரிடம் அவரே கூறிய அதே பழமொழிதான் இது.
தரம் சிங், மல்லிகார்ஜுன கார்கே, தற்போது காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக உள்ள ஹெச்.கே. பட்டீல் ஆகியோர், தமது ஆட்சிக் காலத்தை முடிக்கவிருந்த முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறையிலிருந்து கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் உள்ள மற்றொரு அறைக்கு (தற்போது மறைந்த) விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம் இறுதியாக பேசுவதற்கு சென்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு 'அஜாதஷத்ரு' (எதிரிகளே இல்லாதவர்) என வர்ணிக்கப்படும் தரம் சிங் தலைமை வகித்தால் மட்டுமே ஆட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி. தேவ கௌடா ஆதரவு தெரிவிப்பார் என்பதே இதில் தெளிவான செய்தியாகும். தன்னை ஏன் தேவ கவுடா ஆதரிக்க மாட்டார் என்பதை தெளிவாக அறிந்திருந்தார் கார்கே.
கார்கேவின் ஆளுமையை உணர்த்தும் வகையில் மேற்கூறப்பட்ட பழமொழியில் பல பொருள்கள் உள்ளன. ஒரு முடிவை உங்கள் மனம் ஏற்கிறதோ, இல்லையோ, அதன்படி செயல்படுங்கள் என்பதுதான் அந்த பழமொழி உணர்த்தும் பொருள்.
"அமைப்பு ரீதியாகவும் கொள்கைத் தலைமை ரீதியாகவும்" மோசமான நெருக்கடியை கட்சி சந்தித்துவரும் சமயத்தில், தன்னைப் போன்ற விசுவாசியை தேர்ந்தெடுப்பதைவிட நேரு குடும்பத்திற்கு "வேறு எந்த வாய்ப்பும் இல்லை" என்பதை கார்கே அறிந்திருந்தார்.
தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துள்ள யதார்த்தமான மனிதர் கார்கே. மாநில அரசியலில் இருந்து மக்களவை, பின்னர் மாநிலங்களவை என இந்திய அரசியலில் உயர்ந்துள்ள கார்கே, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான பலம்மிக்க பாஜகவிடமிருந்து தான் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து நன்கு அறிந்துள்ளார்.
அடி மட்டத்திலிருந்து தலைவர் வரையிலான பயணம்
கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தில் அடிமட்ட கட்சி நிர்வாகியாக இருந்து கட்சியின் தலைவர் பதவியை நோக்கி செல்லும் இவரது உயர்வு, "கட்சிக்கு உழைப்பவருக்கு கிடைத்துள்ள பெருமை" என பார்க்கப்படுகிறது. இது, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான உறுதியான செய்தி என கட்சியிலுள்ள பலரும் நம்புகின்றனர்.
"அவர் கட்சியின் பல நிலைகளில் இருந்து இந்நிலைக்கு வந்தவர். கட்சி கண்ணியமாக செயல்படுவதற்கு அவரால் உறுதியாக பங்களிக்க முடியும். கொள்கை வலு கொண்ட அவரால் மோதி - அமித்ஷாவின் கட்சி அமைப்பை எதிர்க்க முடியும்," என, கர்நாடக சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
சற்றே பின்னோக்கி 1970ம் ஆண்டுக்கு சென்றால், ரமேஷ் குமார் மற்றும் கார்கே இருவரும் 1969ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக பிளவுபட்டபோது உருவான இ.காங்கிரஸ் அணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேவராஜ் அர்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.
கல்புர்கியில் உள்ள ஒரு ஆலையில் தொழிற்சங்கத்தில் இருந்த கார்கேவை உயர்சாதியினர் அதிகம் வசிக்கும் குர்மித்கல் தொகுதியில் போட்டியிடுமாறு அர்ஸ் வற்புறுத்தினார். 1972ம் ஆண்டிலிருந்து அத்தொகுதியில் இருந்து 9 முறை தொடர்ந்து கார்கே வெற்றி பெற்றார். அத்துடன் சிதாபூர் தொகுதியிலிருந்து ஒருமுறை என 10 முறை வெற்றி பெற்று, "சொல் இல்லடே சர்தார்" என்ற பெயரை பெற்றார். இதன் பொருள் தோல்வி காணாத சர்தார் என்பதாகும்.
"அவர் புத்திசாலியான நிர்வாகி. அர்ஸ் முதல் எஸ்.எம்.கிருஷ்ணா வரை பல அரசாங்கங்களில் பல துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். அதிகாரிகளிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளும் கார்கேவுக்கு என தனிப்பட்ட எண்ணங்களும் உண்டு. தனக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருப்பார். எந்த அதிகாரியும் அவரை ஏமாற்ற முடியாது. முதலமைச்சராகும் தகுதி கொண்ட அவர், மூன்று முறை அந்த வாய்ப்பில் தோல்வியடைந்துள்ளார்," என, தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2009ம் ஆண்டில் முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கே, டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அமைச்சரானார். இந்த பதவிக்காலத்தில்தான், ஹைதராபாத்-கர்நாடகா பகுதி மக்கள் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு பெறுவதற்கு வசதியாக அரசியலமைப்புத் திருத்தம் 371 (ஜே) நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கான பிரசாரத்தை அவர் நடத்தினார். 2014 மக்களவை தேர்தலில் வென்ற அவர், மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார். ஆனால், 2019 தேர்தலில் தோற்றார்.
"அரசியலில் வளர்வதற்கு சாத்தியம் உள்ள தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தலைவர்களில், கர்நாடகாவில் மிகவும் புத்திசாலியாக கார்கே தனித்து நிற்கிறார்," என, இரு தசாப்தங்களுக்கு முன் இந்நிருபரிடம் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.ஹெச்.ரங்கநாத் தெரிவித்துள்ளார்.
மோதி - ஷாவுக்கு கார்கே சவாலாக இருப்பாரா?
"தலித் சாதியில் இருந்து வந்து அரசியலில் உயர்ந்துள்ள கார்கே, தன் பெயரை கெடுத்துக்கொள்ளவில்லை. அனைத்து சமூகத்தினரிடமும் நியாயமாக நடந்துகொண்டுள்ளார். ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அவருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தாலும் கட்சித் தலைவராக பணியாற்ற முடியுமா என்று சொல்ல முடியாது," என, அரசியல் ஆய்வாளர் இந்துதாரா ஹொன்னபுரா பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
கார்கேவை தலைவராக கட்சி தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தியா முழுமைக்குமான ஒரு செய்தி இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். "கட்சியில் சலசலப்புகளைத் தணிப்பதிலும், கட்சியில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான பதற்றத்தைக் குறைப்பதிலும் அவர் மிகவும் திறமையானவர். மற்றவர்களுடன் சண்டையிடும் நபர் அல்ல அவர்," என அரசியல் விமர்சகர் கே பெனெடிக்ட் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
கட்சியில் சீர்திருத்தங்களை கோரி உருவான அதிருப்தி தலைவர்களின் ஜி23 குழுவில் இருந்த சிலரும் கார்கேவுக்காக வேட்பு மனுவில் கையெழுத்திட்டபோது, பெனெடிக்டின் கருத்து பிரதிபலித்தது. ஆனந்த் ஷர்மா, முகுல் வாஸ்ணிக், பூபேந்தர் எஸ் ஹூடா ஆகியோர் ஜி 23 குழுவில் இருந்தவர்கள். ஏ.கே.ஆண்டனி, அசோக் கெலாட், திக்விஜய சிங் மற்றும் தாரிக் அன்வர் ஆகியோர் தீவிரமான நேரு குடும்ப விசுவாசிகள் ஆவர்.
ஆனால், கார்கே தெற்கிலிருந்து வந்தவர் என்பதும் கட்சி எதிர்கொள்ளும் பிரச்னை. அவருடைய தலித் தகுதி உதவும், ஆனால், வட மற்றும் தென்னிந்திய அரசியல் வேறானவை. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி சிதைந்துள்ள உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் அரசியல் வேறு.
"அவர் ஒழுக்கமானவர், நிதானமானவர், அடிமட்டத்திலிருந்து மேலெழுந்த அரசியல்வாதி. அவரை யாரும் சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. ஆனால், காங்கிரசை புதுப்பிப்பதில் கட்சியில் நிலவும் வெற்றிடத்தை கார்கேவால் முழுமையாக நிரப்ப முடியாது. வேறு யாராலும் முடியாது, ஆனால் தேசிய அளவில் கட்சிக்கு ஒரு புதிய முனைப்பைக் கொடுக்கக்கூடிய ஒருவரின் சுறுசுறுப்பை அவரால் சுமக்க முடியாது" என, அரசியல் விமர்சகர் பூர்ணிமா ஜோஷி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
மோதி - அமித்ஷாவுக்கு சவாலாக இருப்பார் என்ற ரமேஷ் குமாரின் மதிப்பீட்டை ஜோஷி ஏற்றுக்கொள்ளவில்லை. "மோதி - அமித்ஷாவுக்கு நிச்சயமாக அவர் ஒரு சவால் அல்ல. காங்கிரஸுக்கு அவர்களின் (மோதி - அமித்ஷா) மொழியில் பேசக்கூடிய, தந்திரமான, பாஜகவின் யுக்தியாலேயே அவர்களை வீழ்த்தக்கூடிய ஒருவர் தேவைப்படுகிறார். ஆனால், கார்கே மிகவும் பண்பான நபர்," என்கிறார் ஜோஷி.
"மோதி-அமித்ஷா அமைப்புக்கு கார்கே ஈடு கொடுக்கக்கூடியவர் அல்ல. சோனியா - ராகுல் காந்தி காங்கிரசின் கலாசாரம் வித்தியாசமானது. கார்கே ஒரு மென்மையான நபர். பிரதமர் வேட்பாளருக்கு தரூர் சிறந்த வேட்பாளர். ஆனால், காங்கிரஸ் தலைவருக்கு அல்ல. கட்சி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதன் வாயிலாக கார்கே கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்த்து சண்டை புரிய வேண்டும்," என ஜோஷி கருத்தை பெனெடிக்ட் ஒப்புக்கொள்கிறார்.
"ஆனால் சொல்ல முடியாது. மக்கள் அவருக்கு (கார்கேவுக்கு) சாதகமாக இருக்கலாம், ஏனென்றால் அவர்கள் இரு தரப்பையும் ஒப்பிடுவார்கள். அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார், ஜோஷி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்