You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யா - யுக்ரேன் போரால் செல்லமாய் வளர்த்த சிறுத்தைகளை பிரிந்து தவிக்கும் இந்தியர்
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ரஷ்ய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் யுக்ரேனில், பாதுகாப்பு கருதி ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில், தனது இரண்டு சிறுத்தைகளுடன் பல மாதங்களாக தங்கியிருந்த இந்திய மருத்துவர் தற்போது தனது செல்லப் பிராணிகளான சிறுத்தைகளைப் பிரிந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
இந்தஆண்டின் தொடக்கத்தில் யுக்ரேன் - ரஷ்யா போர் தொடங்கிய பின், கிரிகுமார் பாட்டில் தனது சிறுத்தைகளை விட்டு வர மறுத்துவிட்டார். அவர், செவெரோடொன்யட்ஸ்கில் என்னும் சிறிய நகரத்தில் ஸ்வாவ்டோவ் என்னும் இடத்தில் உள்ள மருத்துவமனையில் எலும்பியல் நிபுணராகப் பணிபுரிந்து வந்தார். இது கிழக்கு யுக்ரேன் பகுதியில் அமைந்துள்ளது.
தற்போது 42 வயதாகும் கிரிகுமார், 2016ஆம் ஆண்டில் யுக்ரேனிய குடியுரிமை பெற்றார். இவர் சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் விலங்கியல் பூங்காவில் இருந்து இந்த இரண்டு செல்லப் பிராணிகளையும் வாங்கினார்.
இவரிடம் ஆண் சிறுத்தையையும், பெண் ஜாக்குவாரும் இணைந்து பெற்ற 'லெப்ஜாக்' என்ற 24 மாத விலங்கும், பெண் ஜாக்குவார் ஒன்றும், 14 மாத கருஞ்சிறுத்தை ஒன்றும் உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பாட்டிலிட ம் பணம் தீர்ந்துபோனது. எனவே அவர் போலாந்து எல்லையை கடந்து ஏதேனும் பணம் சம்பாதித்து தனது பிராணிகளுக்கு உணவு வழங்க முடியுமா என்று பார்த்தார்.
போர் காரணமாக பாட்டில் பணிபுரிந்த மருத்துவமனையை மூடிவிட்டனர். பின் அது வெடிகுண்டு தாக்குதலால் அழிந்துவிட்டது. தற்போது வார்சாவ்வில் உள்ள தங்கும் விடுதியில் பிற அகதிகளுடன் தங்கி வருகிறார் பாட்டில்.
கேர் டேக்கரிடம் சிறுத்தைகள்
இவர் வசித்த ஸ்வாவ்டோவ் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு இணைய சேவை நின்றுவிட்டதாக தெரிவிக்கும் பாட்டில், தற்போது அங்குள்ள விவசாயி ஒருவரிடம் தினமும் தனது செல்லப்பிராணிகள் குறித்து கேட்டறிந்து வருவதாகத் தெரிவிக்கிறார்.
அந்த விவசாயியிடம்தான் தனது செல்லப் பிராணிகளை விட்டுவிட்டு வந்துள்ளார் கிரிகுமார் பாட்டில்.
"அவை என்னை பிரிந்து தவிக்கின்றன. குறிப்பாக லெப்ஜாக் ஒரு வார காலமாக சரியாக உண்ணவில்லை. கருஞ்சிறுத்தை குழப்பத்தில் உள்ளது. நான் அவற்றை பாதுகாக்க விரும்புகிறேன். ஆனால் அதற்கான வழி என்னவென்று தெரியவில்லை," என வார்சாவிலிருந்து பிபிசியிடம் பேசிய பாட்டில் தெரிவிக்கிறார்.
ஒரு பையில் தனது துணிகளுடன் வெறும் 100 அமெரிக்க டாலர்கள், யுக்ரேனின் பணமான ரபல்ஸில் கொஞ்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு யுக்ரேனில் உள்ள தனது வீட்டைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு ஆளானார் கிரிகுமார். இவரின் சேமிப்புகளும் கரைந்துவிட்டன. விவசாய நிலம், இரண்டு அபார்ட்மெண்டுகள், இரு கார்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கேமரா ஆகியவற்றை வெறும் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்கும் சூழல் ஏற்பட்டது.
போர் தொடங்கியதிலிருந்து தனது செல்லப் பிராணிகளுக்கு உணவளிக்க தினமும் 300 அமெரிக்க டாலர்கள் வரை செலவழிப்பதாக தெரிவிக்கும் கிரிகுமார், தினமும் 5 கிலோ இறைச்சி வாங்குவதாகத் தெரிவிக்கிறார்.
"நிலைமை மோசமானது. எனது வீட்டுக்கு அருகிலேயே வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. என்னிடம் பணம் இல்லை, எனவே செல்லப் பிராணிகளை கேர் டேக்கரிடம் ஒப்படைத்துவிட்டு எல்லை கடந்து பணம் சம்பாதித்து வீடு திரும்ப எண்ணினேன்," என்கிறார் கிரி.
பிடித்துவைத்த ரஷ்ய சிப்பாய்கள்
கடந்த மூன்று மாதங்களாக தனது ஃபீரீசரில் போதுமான உணவை வைத்திருந்ததாகவும், கேர் டேகருக்கு இதுவரை மூன்று மாத ஊதியமாக 2,400 அமெரிக்க டாலர்களை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கிறார் அவர். ஆனால் நிலைமை சரியாகவில்லை.
எல்லையில் போர் மண்டலத்தில் 12 மணிநேர மினி பஸ் பயணத்திற்கு பிறகு, ரஷ்ய சிப்பாய்கள் அவரைப் பிடித்து மூன்று நாட்கள் விசாரணை செய்துள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள அறை ஒன்றில் தாம் தங்க வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார் பாட்டில்.
"பேருந்திலிருந்து கண்ணைக் கட்டி என்னை ஒரு பாதாள சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே எனக்கு சூப்பும், ரொட்டியும் கொடுத்து விசாரித்தனர்," என்கிறார் பாட்டில்.
"அவர்கள் எனது அடையாள ஆவணங்களை பார்த்தனர். அது கீயவில் கொடுக்கப்பட்டது என்பதால் நான் யுக்ரேனிய ராணுவத்திற்கு தகவல் வழங்கும் உளவாளியாக இருக்கலாம் என சந்தேகித்தனர்" என்கிறார் அவர்.
'வீடியோக்களை காட்டினேன்'
போரில் தான் எந்த பக்கத்தையும் ஆதரிக்கவில்லை என ரஷ்ய சிப்பாய்களிடம் கிரி சொல்லியிருக்கிறார். மேலும் தான் ஒரு யூட்யூப் சேனல் நடத்துவதாகவும் அதில் தனக்கு 60 ஆயிரம் பின் தொடர்பாளர்கள் இருப்பதாகவும், வீட்டில் தனது செல்லப் பிராணிகளுடன் மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"நான் எனது சேனலின் வீடியோக்களை காட்டினேன்" என்கிறார் பாட்டில்.
என்னை பிடித்துவைத்த மூன்றாம் நாள் அன்று, ரஷ்ய அதிகாரி ஒருவர் வந்து அவரின் மனைவி எனது வீடியோக்களை பார்த்திருப்பதாகவும், நீங்கள் உளவாளியல்ல, விலங்குகள் விரும்பி என்று அந்த அதிகாரி தெரிவித்ததாகவும் கூறும் கிரிகுமார், இன்று 'நன்றாக உறங்குங்கள்' என்றும் கூறியதாக தெரிவிக்கிறார்.
அடுத்த நாள் காலை அவர்கள் கிரிகுமாரை விடுவித்துவிட்டனர். ஆனால் அவரின் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டனர். அதன் பின் அவரின் அடையாளத்திற்கு கடிதம் ஒன்றை கொடுத்தனர் என்கிறார் கிரிகுமார்.
அவரை போலாந்து எல்லையில் விட்டனர். அதன்பின் பயோமெட்ரிக்ஸை பயன்படுத்தியும் தனது கதையை எல்லையில் உள்ள அதிகாரிகளிடம் விளக்கியும் எல்லையைக் கடந்துள்ளார் கிரிகுமார்.
போலாந்து அதிகாரிகள் கிரிகுமாருக்கு 90 நாட்கள் தங்க அனுமதிக்கும் பேப்பர் விசாவை வழங்கினர். அதன்பின் அவர் பேருந்தின் மூலம் வார்சாவிற்கு சென்றார்.
தற்போது தனது சொந்த ஊரில் நிலைமை மோசமாகிக் கொண்டு இருப்பதால் எப்போது அங்கு திரும்பி தனது செல்லப் பிராணிகளைப் பார்க்க முடியும் என்பது தெரியவில்லை என்கிறார். அதேபோல கிரிகுமாருக்கு சொந்த ஊர் ஆந்திரா. அங்கிருக்கும் அவரின் குடும்பத்தினர் இவருக்கு பணம் வழங்கி வருகின்றனர்.
"கீயவில் உள்ள இந்தியத் தூதரகத்தை ஃபோன் மூலமும் வாட்சப் மூலம் சில முறை தொடர்பு கொண்டு எனது விலங்குகளை யுக்ரேனிலிருந்து வெளியேற்ற முடியுமா என்று கேட்டேன். ஆனால் அவர்கள் வன விலங்குகளைக் கையாள்வது இல்லை என்றனர்" என்கிறார் கிரிகுமார்.
சென்ற வாரத் தொடக்கத்தில் வார்சாவில் உள்ள உயிரியல் பூங்காவிற்குச் சென்று போர் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து தனது செல்லப் பிராணிகளைக் காப்பாற்ற வேண்டும் என உதவி கோரினார்.
"எனக்கு எனது செல்லப் பிராணிகள் மீண்டும் வேண்டும். இந்திய அரசு அவற்றை அழைத்து கொண்டு இந்தியாவில் உயிரியல் பூங்காவிலோ அல்லது காட்டிலோ விட்டால் நன்றாக இருக்கும். எனக்கு அவை உயிருடன் இருந்தால் போதும்" என்கிறார் கிரிகுமார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்